Thursday, July 20, 2023

''பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.12:7)

"தாத்தா, "பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" 

என்று இயேசு கூறியிருக்கிறார்.

பின் ஏன் அவர் தன்னையே சிலுவையில் பலியாக்கினார்?

நாம் ஏன் திருப்பலி காண்கின்றோம்?"

"'உன்னுடைய தாய் உன் மேல் அன்பு காட்டாமல் ஒழுங்காக சாப்பாடு மட்டும் தருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

நீ அவர்களிடம் என்ன சொல்வாய்?"

"அம்மா, எனக்கு சாப்பாடு முக்கியமல்ல, உங்களது அன்பு தான் முக்கியம் என்று சொல்வேன்."

"'அப்படியானால் அம்மா தருகின்ற சாப்பாட்டை வேண்டாம் என்று சொல்லி விடுவாயா?"

"நிச்சயமாக மாட்டேன். அன்புடன் சாப்பாடு தரும்படி கேட்பேன்."

"'கடவுள் இரக்கம் உள்ளவர்,

 அவரது இரக்கத்தின் காரணமாகத்தான் அவர் மனிதனாய்ப் பிறந்து, நமக்காக பாடுகள் பட்டு தன்னையே பலியாக்கினார்.



இரக்கம் இருந்திருக்காவிட்டால் நமக்காக தன்னையே பலியாக்கியிருக்க மாட்டார்.

மாறாக நம்மை தண்டித்திருப்பார்.

மழை முக்கியமா, தண்ணீர் முக்கியமா என்று கேட்டால் என்ன சொல்வாய்?"

"மழைதான் முக்கியம் என்று தான் சொல்வேன்.

மழை பெய்தால் கட்டாயம் தண்ணீர் வரும்.

மழை பெய்யாவிட்டால் தண்ணீர் வராது."

"'இரக்கம் உள்ளவன் தனது நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான்.

ஆகவே இரக்கம்தான் முக்கியம்.

இயேசுவின் அப்போஸ்தலர்கள் இரவும் பகலும் அவருடனே இருந்தார்கள்.

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியதோடு நற்செய்தியை அறிவித்து வந்தார்.

சாப்பாடு யாராவது கொடுத்தால்தான் உண்டு.

ஒரு முறை சாப்பிடாமல் பசியாக இருந்ததால்தான் அத்தி மரத்தில் பழங்களைத் தேடினார்.

இயேசுவுக்கு சாப்பாடு கிடைக்கும் போது அப்போஸ்தலர்களுக்கும் கிடைக்கும்.

இயேசு பட்டினி என்றால் அப்போஸ்தவர்களும் பட்டினி தான்.

ஒரு நாள் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார்.

 அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க,

 அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

பசியாக இருந்த தனது சீடர்கள் மேல் அவருக்கு இரக்கம் இருந்ததால் அவர் சீடர்களைத் தடுக்கவில்லை.

ஆனால் இயேசுவிடமும் அவருடைய சீடர்களிடமும் குறை காண்பதையே குறியாகக் கொண்ட பரிசேயர்கள் அவரை நோக்கி,

 "இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.

சீடர்கள் கதிர்களைக் கொய்ததை அறுவடைக்குச் சமமாக்கி,

"ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.

ஆனால் இயேசு தனது இரக்கத்தின் காரணமாக சீடர்களிடம் எந்த குற்றத்தையும் காணவில்லை.

உண்மையில் சீடர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.

கதிர்களைக் கொய்தது ஓய்வு நாளில் செய்யத் தகாத காரியம் அல்ல.

பரிசேயர்களுக்கு இரக்கம் இல்லாததால் அவர்கள் சீடர்களின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இறைமகன் இயேசு அளவு கடந்த இரக்கத்துடன் செயல்பட்டது போல நாமும் இரக்கத்தோடு செயல்பட வேண்டும்.

நம்மிடம் உண்மையான இரக்கம் இருந்தால் செயல் தானாக வந்து விடும்.

பட்டினி கிடப்பவனை நம்மால் வீணே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அவனது பசியை ஆற்றினால் தான் நமக்கு நிம்மதி கிடைக்கும்.

உலகில் அனேக தீமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நம்மிடம் இரக்கம் இருந்தால் தீமை செய்பவர்களை வெறுக்க மாட்டோம்.

நமக்கு தீமை செய்பவர்களைக் கூட வெறுக்க மாட்டோம்.

இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு நாம் நன்மை செய்வோம்.

உலகில் எண்ணற்ற தீமைகள் நடந்து கொண்டிருந்தாலும் கடவுள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் அவரது அளவு கடந்த இரக்கம் தான்.

தீமை செய்பவர்கள் திருந்துவதற்கு கால அவகாசம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 நாம் மற்றவர்களிடமிருந்து இரக்கத்தையே எதிர்பார்க்கிறோம்.

நாம் மற்றவர்களுக்குத் தீமை செய்தால் அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

எல்லோரிடமும் இரக்கமும் மன்னிக்கும் குணமும் இருந்தால்

உலகில் காலப்போக்கில் தீமைகள் மறைந்துவிடும். 

அளவு கடந்த இரக்கம் உள்ளவராக இருந்ததால் தான் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது நிலைக்கு காரணமானவர்களை மன்னிக்கும் படி தந்தையிடம் வேண்டினார்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள் தான்.

ஆகவே தந்தையிடம் வேண்டினார் என்றாலும்,

 அவர்களை மன்னிக்க 
தானே தீர்மானித்து விட்டார் என்றாலும் ஒரே பொருள் தான்.

இயேசுவின் வேண்டுதல் வெறுமனே ஒப்புக்காக செய்யப்பட்டது அல்ல.

முழு மனதோடு செய்யப்பட்டது.

பாவ மன்னிப்புக்கான சிலுவைப் பலியின்போது செய்யப்பட்டது.

ஆகவே அவரது மரணத்திற்கு காரணமான அனைவரும் மன்னிக்கப்பட்டிருப்பர் என்று நம்பலாம்.

அதற்குத் தேவையான உத்தம மனஸ்தாபம் அவர்களுக்கு இலவசப் பரிசாக அளிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே நாம் மோட்சத்திற்குச் செல்லும் போது இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்களும் அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பாவிகளாகிய நம் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே இயேசு தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

அவரது மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்தார்.

நாமும் திருப்பலியின் போது,

 நமக்கு விரோதமாக தீமை செய்தவர்களை இரக்கத்தோடு மன்னிப்போம்.

அவர்கள் மனம் திரும்ப நம்மையே இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்போம்.

இரக்கம் என்பது பண்பு.
பலி என்பது செயல்.

பலி என்னும் செயலுக்குக் காரணமான இரக்கத்தை இயேசு அதிகம் விரும்புகிறார்.

இயேசுவைப்போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment