(மத்.9:18)
மகளுக்காக வேண்ட வந்த தந்தையின் வேண்டுதலில் இருக்கும் ஆழமான விசுவாசத்தை நினைத்துப் பார்ப்போம்.
இயேசுவிடம் வேண்டுவதற்காக அவன் வரும்போது அவனுடைய எண்ண ஓட்டம் இப்படி இருந்திருக்க வேண்டும்:
"என் மகள் இறந்து விட்டாள்.
எனது வேண்டுதலின்படி இயேசு வருவார்.
இறந்த எனது மகள் மீது கை வைப்பார். எனது மகள் உயிர் பெற்று எழுவாள்."
விசுவாசத்தின் ஆழம் காரணமாக மிக உரிமையோடு இயேசுவிடம் வந்து,
"ஆண்டவரே, இறந்த எனது மகள் மீது கையை வையும்."
என்று வேண்டும்போதே
தனது மகள் உயிர் பெற்று எழுவாள் என்று உறுதியாகக் கூறுகிறான்.
அரசுத் தேர்வு எழுதப் போகும் ஒரு மாணவன் தேர்வுக்கு முன்னால்
இறைவனிடம் இப்படி வேண்டினால் ஆண்டவர் எதிர்பார்க்கும் விசுவாசம் அவனிடம் இருப்பதாக கூறலாம்.
"ஆண்டவரே நான் தேர்வு எழுதப் போகிறேன்.
நீர் என்னோடு வருகிறீர்.
உமது அருகில் அமர்ந்து கொண்டே தேர்வு எழுதுவேன்.
தேர்வில் உறுதியாக வெற்றி பெறுவேன்."
நமது ஒவ்வொரு செயலின் போதும் நமது எண்ண ஓட்டம் விசுவாசம் கலந்ததாக இருக்க வேண்டும்.
"இயேசுவே, நான் இப்போது செய்யப் போகிற செயலின் போது நீர் என்னோடு இருக்கிறீர்.
என்னை வழி நடத்துகிறீர்.
நான் அதன் வழியே நடந்து வெற்றி பெறுவேன்."
இத்தகைய எண்ணங்களோடு வாழ்பவன் வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ்கிறான்.
அதாவது விசுவாசத்தையே வாழ்வாக்குகிறான்.
பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண்ணின் செபமும் இப்படித்தான் இருக்கிறது.
"நான் இயேசுவின் போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று கூறிக்கொண்டே
அவரது போர்வையின் விளிம்பை தொடுகிறாள்.
பூரண குணமடைகிறாள்.
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து,
"மகளே, தைரியமாயிரு: உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்கிறார்.
இயேசுவின் கூற்றிலிருந்து அவர் இப்படிப்பட்ட விசுவாசத்தைத் தான் எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.
நம்மில் அநேகர் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் செலவழித்து செல்கிறார்கள்.
அங்கு ஒரு வாரம் தங்கி வேண்டுகிறார்கள்.
அவர்களுக்கு ஆழமான விசுவாசம் இருந்தால் செலவில்லாமலே வேண்டியது கிடைக்கும்.
"அம்மா, வேளாங்கண்ணி அன்னையே,
எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
நீங்கள் எனக்காக உங்களது திருமகனிடம் வேண்டி,
நான் வேண்டுவதை பெற்றுத் தருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்."
இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இராமல் ஆழமான விசுவாசத்திலிருந்து பிறந்தவைகளாக இருந்தால்
செலவில்லாமல் உள்ளூர்க் கோவிலுக்கு நடந்து சென்று வேண்டினாலும்
வேண்டுதல் உறுதியாக நிறைவேறும்.
பாவூர்சத்திரத்திலிருந்து வேண்டினாலும்,
வேளாங்கண்ணிக்கு சென்று வேண்டினாலும்
வேண்டுதல் ஒன்று தான்.
பலன் தருவது வேளாங்கண்ணிக்கு செல்வதல்ல
விசுவாசத்தோடு வேண்டுவது தான்.
இயேசு எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார் என்ற ஆழமான விசுவாசத்தோடு எதைச் செய்தாலும் அதற்கு இயேசுவின் உதவி உறுதியாகக் கிடைக்கும்.
சிறு குழந்தைக்கு எந்த ஊரில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல,
தாயின் மடியில் இருப்பது தான் முக்கியம்.
நாம் எப்போதும் ஆழமான விசுவாச உணர்வோடு இயேசுவின் மடியில் இருந்து வாழ்ந்தால்
நமக்கு வேண்டுவன எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே நமக்குத் தருவார்.
நாம் கேட்பதற்கு முன்னமே நமக்குத் தேவையானது இன்னது என்று நமது தந்தைக்குத் தெரியும்.
எப்போதும் அவருடைய பிரசன்னத்தில் நாம் வாழ்ந்தால்
நமது தந்தை நமக்குத் தேவையானதைத் தந்து கொண்டேயிருப்பார்.
நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
தந்தையின் நினைவோடு வாழ வேண்டும்.
"என்னோடு எப்போதும் வாழும் என் விண்ணகத் தந்தையே,
என்னை உம்மை விட்டு பிரிய விடாதேயும்.
அதுவே எனக்குப் போதும்."
ஆற்றில் பயணம் செய்பவன் தண்ணீரைத் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை.
எல்லாம் உள்ள இறைவனோடு வாழ்பவன் எதைத் தேடியும் வேறு எங்கும் போக வேண்டியதில்லை.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment