Friday, July 7, 2023

"பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும், கிழியலும் பெரிதாகும்." (மத்.9:16)

,"பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும், கிழியலும் பெரிதாகும்." (மத்.9:16)

கடவுளைத் தவிர மற்ற அனைத்தும் வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டவை.

கடவுள் நிறைவானவர். (Perfect)

ஆகையால் அவரால் வளரவோ மாறவோ முடியாது.

இறைமகன் மனிதரைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனவுரு எடுத்தபோது பாவத்தைத் தவிர மற்ற அனைத்து மனித பண்புகளையும் ஏற்றுக் கொண்டார்.

மாறவே முடியாத கடவுள் மனித சுபாவத்தில் மாற்றங்களை ஏற்றுக் கொண்டார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார்.

இயேசு மெய்யாகவே கடவுள்.
Jesus is fully God.

இயேசு மெய்யாகவே மனிதன்.
Jesus is fully Man.

இறைமகன் கடவுள்.

கடவுளால் மாற முடியாது.

இறைமகன் மனிதனாக மாறவில்லை, 

மனிதனாகப் பிறந்தார்.

ஒரு குழந்தை வளர்ந்து வாலிபனாக மாறுகிறது. வாலிபனாக மாறிய பின் அது குழந்தை இல்லை.

இறைமகன் மனிதனாகப் பிறந்த பின்னும் மெய்யாகவே கடவுள். 

கடவுள் பாடுகள் பட்டது மனித சுபாவத்தில்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் குழந்தையாக இருந்தார், மனித சுபாவத்தில்.


கடவுள் வாலிபனாக வளர்ந்தார்,
மனித சுபாவத்தில்.

கடவுள் பாடுகள் பட்டார், மனித சுபாவத்தில்.

கடவுள் மரித்தார், மனித சுபாவத்தில்.

கடவுள் உயிர்த்தார், மனித சுபாவத்தில்.

கடவுள் மனிதனாக பிறந்திருக்காவிட்டால் அவரால் பாடுகள் படவோ, மரிக்கவோ முடியாது.

நமக்காகப் பாடுகள் படவும், மரிக்கவுமே அவர் மனிதனாகப் பிறந்தார்.

இறைமகன் மனிதனாகப் பிறக்குமுன் இருந்த மனித வாழ்க்கையைப் பழைய ஏற்பாடு என்கிறோம்.

இறைமகன் மனிதனாகப் பிறந்தபின் அவரது போதனைப்படி வாழப் படுகின்ற மனித வாழ்க்கையைப் புதிய ஏற்பாடு என்கிறோம்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும்,

நமது பாவங்களுக்காக நாம் செய்யும் பரிகார முயற்சிகள் இறைவன் முன் செல்லுபடியாகவும் (To become valid)

இறைமகன் நமக்காக பாடுகள் பட்டு மரித்தார்.

பழைய ஏற்பாட்டு மக்களும் நோன்பு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருந்த நோன்பு இயேசு சிலுவையில் பலியான பின்பு தான் செல்லுபடி ஆயிற்று.

அதாவது இயேசு சிலுவையில் பலியான பின்பு தான் அவர்களுடைய நோன்பின் விளைவாக விண்ணகம் செல்ல முடிந்தது.

இயேசு சிலுவையில் பலியாகும் வரை பழைய ஏற்பாட்டு நீதிமான்கள் பாதாளத்தில் தங்கள் பாவங்களுக்காக பலியாகப் போகும் இயேசுவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.


இயேசு சிலுவையில் மரித்த வினாடியில் பாதாளத்தில் இறங்கி அங்கு காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு நீதிமான்களுக்கு விண்ணக வாழ்வை அளித்தார்.

அரசின் அனுமதிக்குப்பின் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் தான் செல்லும்.

அதேபோல் தான் மக்களின் நோன்பு இயேசுவின் பலிக்குப் பிறகுதான் செல்லும்.

அருளப்பருடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து, 

"நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.

அருளப்பருடைய சீடர்களும், பரிசேயரும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாண சட்டப்படி நோன்பு இருந்தார்கள்.

அவர்களின் நோன்பு இயேசு சிலுவையில் மரிக்கும்போது தான் செல்லுபடியாகும்.

"உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?"

என்ற கேள்விக்குப் பதிலாக 
இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்." என்றார்.

அதாவது 

மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்போது,

அதாவது இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்,

 அவர்கள் நோன்பு இருப்பார்கள்."

இயேசுவின் சிலுவை மரணம் தான் மனிதனின் எல்லா தவ
 முயற்சிகளுக்கும் பலனை கொடுக்கும்.

இயேசுவின் சிலுவை மரணத்துக்கப்பின்,

அதாவது புதிய ஏற்பாட்டில் அதன் முறைப்படி பலனோடு நோன்பு இருப்பார்கள்.

அவர்கள் இருக்கும் நோன்புக்கு பாவ மன்னிப்பும், விண்ணகத்தில் சம்பாவனையும் கிடைக்கும்.

அருளப்பரின் சீடர்களும், பரிசேயர்களும் உண்மையான முறைப்படி நோன்பு இருந்திருந்தாலும் அவற்றுக்கும் இயேசுவின் மரணத்திற்கு பின்பு தான் பலன் கிடைக்கும்.

இயேசு பழைய ஏற்பாட்டை பழைய ஆடைக்கு ஒப்பிடுகிறார்.

பழைய ஆடைக்கு ஒட்டுப் போட வேண்டுமென்றால் ஒரு பழைய துணியையே பயன்படுத்த வேண்டும்.

பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே அவர்கள் பழைய ஏற்பாட்டின் சட்டப்படி நோன்பு இருந்தார்கள்.

ஆனால் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்ட அவருடைய சீடர்கள் புதிய ஏற்பாட்டில் இரக்கத்தின் சட்டப்படி 
வாழவிருந்தார்கள்.

புதிய ஏற்பாட்டில் இரக்கத்தின் சட்டம் இறையன்பையும், பிறரன்பையும்,

 இயேசுவால் நிறுவப்படவிருக்கும் ஏழு தேவதிரவிய அனுமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டது.

தேவதிரவிய அனுமான வாழ்க்கை 

பாவ மன்னிப்பையும், 
பாவப்பரிகாரத்தையும், 
அதற்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற திருப்பலியையும், 
ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணையையும் 

அடிப்படையாகக் கொண்டது.

இவற்றின்படி வாழ்வதுதான் உண்மையான நோன்பு.


இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்புதான் சீடர்கள் இந்த நோன்பு வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

இதைக் குறிக்கவே இயேசு,

"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்." என்றார்.

நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது இயேசு குறிப்பிட்ட நோன்பு வாழ்க்கை தான்.

உண்ணா நோன்பு இருப்பதுவும் இந்த நோன்பு வாழ்க்கையின் ஒரு அம்சம் தான்.

தேவத்திரவிய அனுமானங்களை பெறாமல் உண்ணா நோன்பு இருந்தால் ஒரு பயனும் இல்லை.

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல்,

பாவத்தோடு உண்ணா நோன்பு இருந்தால் நமது உடல் மட்டுமல்ல ஆன்மாவும் பட்டினி கிடக்கும்.

நோன்பு வாழ்க்கை வாழ்வதே ஆன்மாவுக்கு இறை அருளாகிய உணவை ஊட்டி வளர்ப்பதற்காகத்தான், பட்டினி போடுவதற்காக அல்ல.

பரிசேயர்கள் திருச்சட்டத்தை எழுத்துப் பூர்வமாக பின்பற்றினார்கள்.

வாய் வழியாக உணவை வயிற்றுக்குள் அனுப்புவதற்குப் பெயர் தான் சாப்பிடுதல்.

உணவை அள்ளி வாயில் போட்டு, அப்படியே விழுங்கும் போது நாம் சாப்பிடும் நிகழ்ச்சியை எழுத்துப் பூர்வமாகப் பின்பற்றுகிறோம்.

ஆனால் இப்படிச் சாப்பிடுவதால் நமது வயிற்றுக்கு எந்த பயனும் இல்லை.

நாம் நாம் வயிற்றுக்குள் அனுப்பிய உணவு சீரணம் ஆகாது.

ஆனால் வாயில் போட்ட உணவை நன்றாக மென்று, 

உமிழ்நீரோடு சேர்த்துக் குழைத்து, 

ருசித்து, 

மெதுவாக விழுங்கும்போது நாம் உணர்வுப் பூர்வமாக சாப்பிடுகிறோம்.

உமிழ்நீரோடு உணவை மெல்லும் போதே உணவு சீரணம் ஆக ஆரம்பித்து விடுகிறது.

வயிற்றில் அது எளிதில் சீரணம் ஆகி அதன் சத்துக்கள் நமது உடலோடு கலக்கும்.

நமது உடல் வளர்ச்சி அடையும்.

சாப்பிடுவது இன்பகரமான அனுபவமாக இருக்கும்.

வெறும் எழுத்துப்பூர்வமாக சட்டத்தை அனுசரித்தால் பாவத்திலிருந்து தப்பிக்கலாம்,

ஆனால் புண்ணியத்தை அடைய முடியாது.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் சட்டம்.

ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று திருப்பலி நேரத்தில் கோயிலில் அமர்ந்து,

திருப்பலி முடிந்தவுடன் வீட்டுக்கு வருபவன் சட்டத்தை எழுத்துப் பூர்வமாக அனுசரித்து விட்டான்.

ஆனால் உணர்வு பூர்வமாக திருப்பலியில் தன்னையும் ஈடுபடுத்தி 

குருவானவரோடு சேர்ந்து, திருப்பலியை ஒப்புக்கொடுத்துவிட்டு,

 இறைவன் நினைவோடு வீட்டுக்கு வந்து,

அன்றைய நாளை ஆண்டவருக்காக வாழ்பவன்தான் உண்மையில் திருப்பலியில் கலந்து கொண்டான். 

எழுத்துப் பூர்வமாக மட்டும், அதாவது ஒப்புக்குச் சட்டத்திற்கு கீழ்ப்படிபவன் ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் அடைவதில்லை.

 பரிசேயர்கள் எழுத்துப் பூர்வமாக மட்டும் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்வதில்லை.

இறைவனுக்காக வாழவில்லை.

இதை இயேசு விரும்பவில்லை.

உணர்வுப் பூர்வமாக ஓய்வு நாளில் இறைவனுக்காக, பிறர் பணி செய்து வாழ வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

ஆகவேதான் எழுத்துப் பூர்வமாக மட்டும் பரிசேயர்கள் இருந்த நோன்பை இயேசு புகழவில்லை.

தனது சீடர்கள் தனது மரணத்திற்குப் பின் தனக்காக நோன்பு இருப்பார்கள் என்ற பொருள்பட

"மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்: அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்."

என்று கூறுகிறார்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவுக்காகச் செய்வோம்.

இரக்கத்தின் தேவனாகிய இயேசுவுக்காக நாம் செயல் புரிந்து வாழும் போது,

அவரது இரக்கத்துக்குத் தகுதி உள்ளவர்கள் ஆகிறோம்,

புதுத் துணியைப் புது துணியோடு சேர்த்து தைப்பது போல,

புதிய ஏற்பாட்டில் வாழும் நாம் புதிய ஏற்பாட்டின் தேவனோடு இணைந்து வாழ்வோம்.
.
இவ்வுலகில் ஏற்படும் இணைப்பு நித்திய காலமாக தொடரும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment