Saturday, July 8, 2023

"என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

"என் நுகம் இனிது, என் சுமை எளிது."(மத்.11:30)

ஆன்மீக வாழ்க்கையாக இருந்தாலும் சரி, 

உலகைச் சார்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் சரி 

கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.

இயேசுவைப் பின்பற்றும் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பது ஆன்மீக வாழ்க்கை.

ஆன்மீகப் பயணத்தில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை வேறு வழி இல்லாமல் நாமே சுமக்க வேண்டிய சுமையாக நினைத்துக் கொண்டு பயணித்தால் 
அப்பயணம் மிகவும் கஷ்டமானதாக இருக்கும்.

'வேறு வழி இல்லாமல்' என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு, 

நாமே மனம் உவந்து இயேசுவுக்காக அவற்றைச் சுமந்தால் அந்தச் சுமை நமக்கு ஆன்மீக மகிழ்ச்சியைத் தரும்.

நமது இல்லத்தில் நம்முடைய தாய் நமக்காக முகமலர்ச்சியோடு எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நாம் அனுபவப் பூர்வமாக பார்த்திருக்கிறோம்.

நாம் நேசிப்பவர்களுக்காக நாமே தேடிச் சென்று கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம்.

இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டு ஆண்டவரது வார்த்தைகளை தியானிப்போம்.

சுமக்க முடியாமல் கஷ்டங்களைச் சுமந்து செல்லும் நம்மை பார்த்து ஆண்டவர் சொல்கிறார்,

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."

நம் மீது கொண்ட அன்பின் மிகுதியால் இயேசு கூறும் வார்த்தைகள் இவை.

வயலிலிருந்து நெல் மூடைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்துகிறோம்.

15 மூடைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவற்றை இரண்டு மாடுகளின் மேல் ஏற்றினால் அவற்றால் சுமக்க முடியாது.

15 மூடைகளையும் வண்டியில் ஏற்றி, வண்டியின் நுகக்கால்களை மாடுகளின் கழுத்தில் மேல் வைத்து,

பூட்டாங்கயிறு கொண்டு கட்டிவிட்டால்

வண்டியில் எவ்வளவு சுமையை ஏற்றினாலும் மாடுகள் எளிதாக வண்டியை இழுத்துச் செல்லும்.

ஒரு சாதாரண குடிமகனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக,
ஒரு விவசாயியின் அனுபவத்தை இயேசு தனது போதனையில் பயன்படுத்துகிறார்.


"சுமக்க முடியாமல் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும் என் மக்களே என்னிடம் வாருங்கள்.

உங்கள் சுமையை என் முன் இறக்கி வையுங்கள்.

உங்கள் சுமையை நான் என் மேல் ஏற்றிக் கொள்கிறேன்.
(வண்டியில் சுமையை ஏற்றுவது போல.)

உங்கள் கழுத்தில் எனது
 நுகக்காலை மட்டும் வைக்கிறேன்.

என் நுகம் இனிது.

உங்கள் சுமை முழுவதும் என் மேல், என் நுகம் மட்டும் உங்கள் மேல்.

மிக எளிதாக நீங்கள் என்னை இழுத்துக் கொண்டு போகலாம்.

உங்கள் சுமையை நான் சுமப்பதால் உங்களுக்கு விண்ணகப் பாதையில் நடப்பது எளிதாக இருக்கும்."

நமது வாழ்வில் எது நேர்ந்தாலும்,

இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி,

அப்படியே அதை இயேசுவிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இன்பம் ஆன்மீக இன்பமாக மாறிவிடும்.

துன்பம் சிலுவையாக மாறி நாம் சுமப்பதற்கு மிக எளிதாக இருக்கும்.

நமது வாழ்வில் நமக்கு எது கிடைத்தாலும் நமது அன்பர்களோடு அவற்றைப் பகிர்ந்து கொள்வது போல,

நமது ஆன்மீக அனுபவங்களை எல்லாம் இயேசுவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில் நமது அன்பர் அவர் ஒருவரே.

நமது அயலானை அவர் மூலமாகத்தான் நேசிக்க வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர் மூலமாகத்தான் நேசிக்க வேண்டும்.

கணவன் மனைவி அன்பு கூட அவர் மூலமாகத்தான் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

உறவுகளை அவர் மூலமாகப் பகிர்ந்து கொள்ளும் போது பாவத்தால் உள்ளே நுழைய முடியாது.

பகிர்ந்து கொள்ளப்படும் அன்பு பரிசுத்தமானதாக இருக்கும்.

இயேசு பரிசுத்தராக இருப்பதால் அவர் வழியே நடைபெறும் எல்லா அனுபவங்களும் பரிசுத்தமானவைகளாகவே இருக்கும்.


கையில் விளக்கோடு நடந்தால் நமது பாதை ஒளி நிறைந்ததாக இருப்பது போல,

நாம் இயேசுவோடு நடந்தால் நமது ஆன்மீகப் பாதை பரிசுத்தமானதாக இருக்கும்.

பரிசுத்தமான பாதை வழியே நடந்தால் பரிசுத்தமான விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

இயேசுவோடு நடப்போம், அவரோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment