"உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" (மத்.9:11)
நல்ல ஆசிரியர் எப்போதும் படிப்பில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களோடு தான் இருப்பார், அவர்களின் நிலையை உயர்த்துவதற்காக.
நல்ல மருத்துவர் எப்போதும் நோயாளிகளுடன்தான் இருப்பார், அவர்கள் நோய் நீங்கி குணம் பெறுவதற்காக.
இயேசு எப்போதும் பாவிகளுடன்தான் இருப்பார், அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக.
விண்ணுலகிலிருந்து இயேசு மண்ணுலகுக்கு இறங்கி வந்தது பாவிகளைத் தேடித்தான்.
ஒரு ஊருக்கு புதிதாக மருத்துவமனை வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நோயாளிகள்தான்.
மனித உரு எடுத்த இயேசுவை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டியது பாவிகள்தான்.
நமது முதல் பெற்றோரின் பாவத்தின் காரணமாக மனு குலம் முழுவதுமே பாவத்தில் மூழ்கிய குலமாக மாறிவிட்டது.
அதனால் தான் இயேசு தனது சீடர்களிடம்,
" உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்" என்றார்.
நமக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ வேண்டியது நம் அனைவரின் கடமை.
இயேசு எப்போதும் நமது அனைவரோடும் இருக்கிறார்.
விசுவாசம் அற்றவர்களோடு
நாம் அவர்களுக்கு அளிக்கும் நற்செய்திப் போதனை மூலம் அவர்களுக்கு விசுவாசத்தை இலவசமாக அளிப்பதற்காக.
பாவிகளோடு,
அவர்களுக்கு மனஸ்தாபத்தைக் கொடுத்து,
பாவங்களை மன்னித்து, அவர்களைப் பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக.
பரிசுத்தர்களோடு
அவர்களைப் பரிசுத்தத்தனத்தில் வளர்ப்பதற்காக.
மரணம் அடைபவர்களோடு
அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காக.
மனிதர்கள் சென்மப் பாவத்தோடு உற்பவிப்பதால் அவர்கள் அனைவரையும் பாவிகள் என்று அழைக்கின்றோம்.
மனிதர்கள் தாங்கள் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சுகம் இல்லாதிருப்பவன் அதை ஏற்றுக் கொண்டால்தான் சுகம் பெற வழி தேடுவான்.
சுகம் அடைந்த பிற்பாடும் தங்களின் சுகமின்மைக்குக் காரணமாக இருந்தவற்றை மறந்து விடக்கூடாது.
அப்போதுதான் அந்தக் காரணங்கள் திரும்பவும் தங்கள் வாழ்வில் புகுந்து விடாதபடித் தடுக்க முடியும்.
பாவங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களும் தங்களது பழைய நிலையை மறந்து விடக்கூடாது.
இது அவர்களைப் பழைய நிலைக்குத் திரும்பாதவாறு பாதுகாக்க உதவும்.
பாவத்திற்கானக் காரணங்களை மறக்காமல் வாழ்ந்தால்தான்
திரும்பவும் அவற்றிற்கு இடம் கொடுக்க மாட்டோம்.
லூசிபர் பரிசுத்த நிலையில் இருந்த போது கொண்ட கர்வத்தினால்தான் சாத்தானாக மாறினான்.
பரிசுத்த நிலையை அடைந்தவர்கள் அடையாதவர்களோடுத் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைப் பற்றி பெருமையாக நினைத்தால் அதுவே பாவமாகிவிடும்.
தற்பெருமை தலையான பாவங்களுள் முதன்மையானது.
ஆகவே அதற்கு இடம் கொடாமல் தங்கள் பழைய நிலையை எண்ணித் தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.
தங்கள் வாழ்நாள் முழுவதும்,
"இயேசுவே, பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்"
என்ற மனவல்லவ செபத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
அது நாம் திரும்பவும் பாவத்தில் விழாதபடி நம்மைப் பாதுகாக்கும்.
இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடியே உலகத்திற்கு வந்தார் என்றும்,
எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்றும் ஏற்றுக்கொண்டு,
எப்போதும் அவர் நினைவிலேயே வாழ வேண்டும்.
நமக்கு மீட்பும், நித்திய வாழ்வும் உறுதி.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment