Wednesday, July 26, 2023

ஏன் செபிக்க வேண்டும்?

ஏன் செபிக்க வேண்டும்?


"தாத்தா, கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்து, பராமரித்து வருகிறார் என்பதை விசுவசிக்கிறோம்.

வானத்துப் பறவைகளுக்குக் கூட அவை கேளாமலேயே உணவளிக்கும் கடவுள் நாம் கேளாமலேயே நமக்கு அளிக்க மாட்டாரா?

நாம் ஏன் நமக்குத் தேவையானவற்றை அவரிடம் கேட்டு செபிக்க வேண்டும்?"

"'அதாவது நமது வாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொண்டு கடவுளைப் பற்றி கவலைப் படாமலிருக்க வேண்டும் என்கிறாய், அப்படித் தானே?"

"ஏறக்குறைய அப்படித்தான்."

"'உன்னைப் பெற்ற உன்னுடைய பெற்றோருக்கு உனக்கு என்னவெல்லாம் தேவை என்று தெரியும் தானே?"

"ஆமா."

"'நீ பிறந்தவுடன் நீ கேளாமல் தானே உனக்கு பாலூட்டினார்கள்.

 நீ வளர்ந்த பின்னும் உனக்கு என்ன தேவை என்று அவர்களுக்குத் தெரியும் அல்லவா?

பின் ஏன் அவர்களிடம் உனக்கு வேண்டியதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?"

"அவர்களிடம் ஏன் பேசுகிறாய் என்று கேட்கிறீர்கள்." 

'"ஏறக்குறைய அப்படித்தான்."

"தாத்தா, நமக்கு வேண்டிய பொருள்களை விட நமது பெற்றோரிடம் நமக்கு இருக்க வேண்டிய உறவு தான் நமக்கு முக்கியம்.

உறவை வளர்ப்பதற்காகத்தான் நான் எனது பெற்றோரிடம் எனக்கு வேண்டியதைக் கேட்கிறேன். 

நான் அவர்களிடம் பேசாமலும், எதையும் கேளாமலும் இருந்து விட்டால் என்னை நன்றி கெட்ட சென்மம் என்பார்கள்.

அது மட்டுமல்ல என் பெற்றோர் மீது எனக்குள்ள அன்பை எப்படி தெரிவிப்பது?"

"'அதாவது உனது பெற்றோருடன் உனக்குள்ள உறவை வளர்ப்பதற்காக நீ அவர்களோடு பேச வேண்டும்.

ஆனால் உன்னைப் படைத்த கடவுளோடு உனக்கு உறவு தேவையில்லை.

அதனால் தான் கடவுளை நோக்கி ஏன் ஜெபிக்க வேண்டும் என்கிறாய். அப்படித்தானே?"

"இல்லை, தாத்தா. வானத்துப் பறவைகளைப் பற்றியும், வயல்வெளி மலர்களைப் பற்றியும் இயேசு கூறியதை வைத்து அவ்வாறு கூறுகிறேன்."

"'ஆனால் "கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: "

என்று இயேசு கூறியதை நீ மறந்து விட்டாய்.

கடவுளின் அரசில் நமக்கு இடம் கிடைக்க வேண்டுமென்றால் 

அவரோடு நமக்கு உறவு இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

அவரோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதற்காகத் தான் நாம் அவரோடு பேசுகிறோம்.

நாம் சகலவற்றிலும் அவரையே சார்ந்து வாழ்கிறோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதை அவருக்கு தெரிவிப்பதற்காகத் தான் நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்கிறோம்.

செபம் என்றாலே கடவுளோடு இணைந்திருப்பது (Being United with God) என்பதுதான் பொருள்.

இவ்வுலகில் அவரோடு இணைந்து வாழ்ந்தால்தான் மறு உலகில் நமக்கு அவரோடு இடம் கிடைக்கும்.

அதற்காகத்தான் ஜெபம்."

"கடவுளிடம் நாம் எவற்றை அடிக்கடி கேட்க வேண்டும்?"

"'நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாவம் செய்யாமல் அவரோடு இணைந்து வாழ வேண்டிய அருள் வரங்களைக் கேட்க வேண்டும்.

நாம் கேட்கும் உணவு கூட இயேசுவாகிய உணவாக இருக்க வேண்டும்."

"இயேசுவாகிய உணவை உண்ணும் போது நமது ஆன்மா பாவமில்லாமல் இருக்க வேண்டும்."

"'அதற்காகத்தான் திவ்ய நற்கருணை உட்கொள்ளுவோர் அதற்கு முன் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறோம், அதாவது சாவான பாவ நிலையிலிருந்தால்."

"அற்ப பாவ நிலையிலிருந்தால்?"

"'அற்ப பாவ நிலையிலிருந்தாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

தேவ திரவிய அனுமானத்திற்கான அருள் வரங்கள் நமக்கு நிறைய கிடைக்கும்.

அவை நாம் பரிசுத்தமாக வாழ உதவும்"

"வாயில் உணவை வைக்க வலது கையை பயன்படுத்துகிறோம். கழிவைக் கழுவ இடது கையை பயன்படுத்துகிறோம்.

இடது கையால் திவ்ய நற்கருணையை வாங்குவது ஆண்டவருக்குச் செய்யும் அவமானம் இல்லையா?"

"'குருவானவரின் கைகள் ஆண்டவரைத் தொடுவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றன.

நமது கைகள்?

சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment