Sunday, December 31, 2023

அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்.(அரு.3.30)

அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்.
(அரு.3.30)

நேற்றுதான் புத்தாண்டு பிறந்தது. இன்று அதில் 365இல் ஒரு பகுதியைக் காணவில்லை. ஒரு நாள் தேய்ந்து விட்டது.

தேதி ஒன்று இரண்டாகும்போது வளர்கிறது என்று கூறாமல் தேய்கிறது என்று கூறுவது எப்படி நியாயம் என்று கேட்கலாம். 

நாட்களும், மாதங்களும், வருடங்களும் நம்மை விட்டு கடந்து போவதால் தான் 
குழந்தை பையன் ஆகிறது 
பையன் வாலிபன் ஆகிறான் வாலிபன் பெரியவனாய் ஆகிறான் பெரியவன் தாத்தாவாகிறான்.  

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஒரு மனிதன் வளர வேண்டுமானால் அவன் வாழும் காலம் தேய வேண்டும்.

அது மட்டுமல்ல மனிதன் வயதில் வளரும் போது வாழ்வில் தேய்கிறான்.

ஒருவன் 60 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவன் திட்டமிட்டுருந்தால் 

அவன் பிறந்து ஒரு வயது ஆகும்போது அவன் வாழ்நாளில் ஒரு ஆண்டு குறைகிறது.


10 வயது ஆகும்போது 10 ஆண்டுகள் குறைகின்றன.

40 வயது ஆகும்போது அவன் வாழ்நாளில் 40 ஆண்டுகள் குறைகின்றன.

60 ஆண்டுகள் ஆகும் போது அவனது வாழ்நாள் முடிந்து விடுகிறது.

அப்படியானால் வயதால் வளரும் மனிதன் வாழ்வில் வளர்கிறானா? தேய்கிறானா?

வளர்ச்சியும், தேய்மானமும் சேர்ந்தே பயணிக்கின்றன.

அதுதான் வாழ்க்கை.

திருமுழுக்கு அருளப்பர் இயேசுவையும் தன்னையும் ஒப்பிட்டுப் பேசும் போது

"அவர் வளர வேண்டும், நான் குறைய வேண்டும்" என்கிறார்.

இயேசுவையும், நம்மையும் நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

நம்மில் இயேசு வளர வேண்டுமென்றால் நாம் குறைய வேண்டும்.

வளர்ச்சியும் (இயேசுவும்)
தேய்மானமும் (நாமும்) சேர்ந்தே பயணிக்க வேண்டும்.

 நாம் குறையா விட்டால் இயேசுவால் நம்மில் வளர முடியாது.

எப்படி?

இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?

நமது ஆன்மாவை மீட்க.

நமக்கு ஆன்மா, உடல் என்று இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.

நாம் நமது உடல் வளர்வதைத் தான் நமது கண்களால் பார்க்கிறோம்.

நமது உடல் வளர்வதற்காகத்தான் உழைக்கிறோம், உண்கிறோம்.

ஆனால் ஒன்றை மறந்து விடுகிறோம்.

நமது உண்மையான வளர்ச்சி ஆன்மாவின் வளர்ச்சி தான்.

நோய் நொடி இன்றி, வலிமையில் வளர்வது உடல் வளர்ச்சி.

பாவ மாசின்றி பரிசுத்தத்தனத்தில் வளர்வது ஆன்மாவின் வளர்ச்சி.

எதன் வளர்ச்சியில் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும், உடல் வளர்ச்சியிலா, ஆன்மாவின் வளர்ச்சியிலா?

ஆன்மாவின் வளர்ச்சியில் தான்.

ஏனெனில் நமது ஆன்மா தான் அழிவின்றி நித்திய காலம் வாழ வேண்டியது.

நமது உடலை எப்படி பேணி வளர்த்தாலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதன் வாழ்வு முடிவுக்கு வந்து, அது மண்ணுக்குள் போய்விடும்.

நமது உடலைச் சார்ந்த வளர்ச்சியில் மட்டும் நாம் ஆர்வம் காட்டினால் நமது ஆன்மாவை இழக்க நேரிடும்.

ஆகவே நமது ஆன்மா வளர வேண்டும், உடல் தேய வேண்டும். இதுதான் நமது உண்மையான வளர்ச்சி.

நமது ஆன்மா வளர வேண்டுமென்றால் அதை மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்த இறைமகன் இயேசு அதில் குடியேற வேண்டும்.

இயேசுவின் ஆதிக்கம் வளர வேண்டும்.

இயேசுவின் அருளால் நமது ஆன்மா வளரும்போது,

நமது உடலைச் சார்ந்த அக்கறை தேய வேண்டும்.

நாம் உலகில் பிறந்திருப்பது ஆன்மீக வளர்ச்சிக்காகத்தான்.

நமது ஆன்மீகம் வளர வேண்டும் என்றால் அதில் இயேசு வளர வேண்டும்,

உடல் சார்ந்த வளர்ச்சி குறைய வேண்டும்.

இயேசு நமது ஆன்மாவில் வளர நாம் அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.

ஏதாவது ஒரு நாளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு,

அன்று நாம் எதன் வளர்ச்சிக்கு அதிக ஆர்வம் காட்டுகிறோம்,

ஆன்மீக வளர்ச்சிக்கா
 உடல் வளர்ச்சிக்கா

என்பதை ஆய்ந்து உணர்வோம்.

நமது 24 மணி நேர வாழ்வில் 

ஆன்மீக வளர்ச்சிக்கான ஜெபம், தவம், நற்செயல்கள் ஆகியவற்றுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்,

உடல் நலத்திற்கான காரியங்களுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் 

என்பதை ஆராய்ந்து பார்த்தால் நாம் உண்மையிலேயே ஆன்மீகவாதிகளா, உடல் நல வாதிகளா என்ற உண்மை புலனாகும்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்,

ஒரு நாளில் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?

உடலைச் சார்ந்த வளர்ச்சிக்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?

ஒரே பதில் தான்.

24 மணி நேரத்தையும் ஆன்மீக வளர்ச்சிக்காகத் தான் செலவழிக்க வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நமது உடலில் தானே ஆன்மா வாழ்கிறது.

 உடல் படுத்து விட்டால், ஆன்மா எப்படி நடக்கும்?

ஒரு மாணவன் மேல்நிலைப் பள்ளியில் 12 வது வகுப்பில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?

முதல் வகுப்பிலிருந்து 12 ஆண்டுகள் படிக்க வேண்டும்.

ஒரு மனிதன் விண்ணக வாழ்வுக்குச் செல்ல எவ்வளவு காலம் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்?

அதற்கும் ஒரே பதில் தான்.

பிறந்ததிலிருந்து மரணம் அடையும் வரை காலம் முழுவதும் ஆன்மீக வாழ்வு தான் வாழ வேண்டும்.

அப்படியானால் உடலைச் சார்ந்த வாழ்வு?

உடலைச் சார்ந்த வாழ்வையும் ஆன்மீக மீட்புக்காக வாழ வேண்டும்.

ஆன்மீக வாழ்வுக்காக 100 சதவீத வாழ்வு,

உடல் மட்டுக்குமாக 0 சதவீத வாழ்வு.

நாம் உண்பதையும், உடுப்பதையும் உறங்குவதையும் கூட ஆன்மீக நலனுக்காக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால்,

 அவையும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

இயேசுவை நம்மை முழுமையாக ஆள அனுமதித்து விட்டால்,

நமது ஒவ்வொரு செயலையும் அவருக்கு ஏற்றதாக மாற்றி விடுவார்.

"இயேசுவே, இன்று நான் விடும் ஒவ்வொரு மூச்சையும் உமக்கு ஒப்புக்கொள்கிறேன்.

இயேசுவே, எனது உடல் உமக்காக உழைக்க வேண்டும். அதற்காகவே அதற்கு உணவு கொடுக்கிறேன்.

இயேசுவே, எனது அயலானுக்கு உதவி செய்ய பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே அதை ஈட்டுகிறேன்.

இயேசுவே, காலை 6:00 மணிக்கு திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.
அதற்காகவே சீக்கிரம் படுக்கைக்கு செல்ல வேண்டும். ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன்.

இயேசுவே, எனது பாவங்களுக்குப் பரிகாரமாக தவ முயற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக இன்று நண்பகல் உணவை மட்டும் உண்கிறேன்."

இவ்வாறாக நமது ஆசைகளுக்கு முற்றிலும் விடை கொடுத்து விட்டு,

சகலத்திலும் இயேசுவின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே வாழ்ந்தால்

நமது ஒவ்வொரு செயலும் ஆன்மீகச் செயலே.

நமது உடல் இயேசுவின் பணியாளாக மாறி விடுகிறது.

நம்மில் இயேசுவின் மேல் உள்ள ஆசை வளர வேண்டும். நமது ஆன்மா வளரும்.

உடல் நலன்மீது உள்ள ஆசை குறைய வேண்டும்.

இயேசுவோடு வளர்வது தான் நமது உண்மையான வளர்ச்சி.

லூர்து செல்வம்.

Saturday, December 30, 2023

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)(தொடர்ச்சி)

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)
(தொடர்ச்சி)

அனைவருக்கும் அடியேனின் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

2023ல் ஆரம்பித்த தியானத்தை 2024ல் தொடர்கிறோம்.

ஆண்டு முழுவதும் உணவு வகைகள் மாறினாலும் உண்பது மாறாதது போல,

இறை வசனங்கள் மாறினாலும் தியானம் மாறாது.

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?"

தந்தையின் இல்லம் எது?

விண்ணுலகில் வாழும் எங்கள் தந்தையே!"

என்று நாம் ஜெபிக்கும்போது, விண்ணகமே தந்தையின் இல்லம் என்று நினைக்கிறோம்.

நாம் நினைப்பது சரிதான்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?

நாம் இப்போது வாழும் நேரம், இடம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது விண்ணகம்.

Heaven is beyond time and space.

நேரம், இடம் ஆகியவற்றுக்கு உட்பட்டு வாழும் நாம்,

நாம் வாழும் இல்லத்தைப் போல நமது தந்தையின் இல்லத்தைக் கற்பனை செய்து விடக் கூடாது.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

மனித மொழியில் 'எங்கும்' என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் என்று பொருள்படும்.

ஆனால் கடவுள் இடத்துக்கு அப்பாற்பட்டவர்.

'இருக்கிறார்' என்ற வார்த்தை நிகழ்காலத்தைக் குறிக்கும்.

ஆனால் கடவுள் காலத்திற்கு அப்பாற்பட்டவர். நித்தியர்.

அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

தனது பண்புகளால் எங்கும் இருக்கிறார்.

God is everywhere by His attributes.


சர்வ வல்லமை, அளவற்ற ஞானம்,
அளவு கடந்த அன்பு ஆகியவை கடவுளின் முக்கிய பண்புகள்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் 6000 மைல்களுக்கு அப்பால் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆறாவது ஜார்ஜ் மன்னர் இந்தியாவை ஆட்சி செய்தார்.

அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு இந்தியர்கள் வாழ்ந்தார்கள்.

அதிகாரம் அவரது பண்பு. அவரது அதிகாரம் இந்தியாவை ஆட்சி செய்தது.

சுதந்திர இந்தியாவை ஆள்பவர் யார்?

டில்லியில் இருக்கும் இந்தியாவின் பிரதமர்.

பிரதமரின் அதிகாரம் தான் இந்தியாவை ஆள்கிறது.

கடவுளின் பண்புகளுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

நம்மிடம் அன்பு இருக்கிறது.

ஆனால் கடவுள் அன்புமயமானவர்.
அன்பே கடவுள்.

கடவுள் வல்லமை மயமானவர்.
வல்லமையே கடவுள்-

கடவுள் ஞான மயமானவர்.
ஞானமே கடவுள்.

இந்த பண்புகள் வாழ இடம் தேவையில்லை.

வல்லமை மயமான கடவுள் தனது வல்லமையால் அனைத்தையும் படைத்தார்.

அவர் படைத்த அனைவரையும் அன்பு செய்கிறார்.

அனைத்தையும் அவர் அறிகிறார்.

மனிதன் இடத்தை அடைத்துக் கொண்டு வாழ்கிறான்.

 Man occupies space.

ஒரு இடத்தில் இருக்கும் மனிதன் அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் இருக்க முடியாது.

 ஒருவன் இருக்கும் இடத்தில் இன்னொருவன் இருக்க முடியாது.

ஆனால் கடவுளுக்கு இடமும் தேவையில்லை, நேரமும் தேவையில்லை. அவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

இடத்தில் வாழும் மனிதனிடம் அவர் அன்பால் வாழ்கிறார்,

வல்லமையால் வாழ்கிறார்,

ஞானத்தினால் வாழ்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும் இயங்குகின்றன.

ஒரு அணு கூட அவருடைய வல்லமையால் தான் இயங்குகிறது.

அவரின்றி அணுவும் அசையாது.

இப்போது தந்தையின் இல்லம் எங்கே இருக்கிறது விடை கேள்விக்கு விடை தெரிந்திருக்கும்.

கடவுள் தன்னுடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும் எங்கெல்லாம் வாழ்கிறாரோ அங்கெல்லாம் கடவுளின் இல்லம் இருக்கிறது.

அவருடைய வல்லமையாலும், அன்பினாலும், ஞானத்தினாலும்தான் நாம் வாழ்கிறோம்.

ஆகவேதான் நாமும் கடவுள் வாழும் இல்லம்தான்.

சர்வ வல்லமை வாய்ந்த, 
அளவற்ற ஞானமுள்ள,
அளவற்ற அன்புள்ள கடவுள் 

நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அன்புள்ள என்ற வார்த்தையை அன்பு மயமான என்று புரிந்து கொள்ள வேண்டும். 

அளவு கடந்த வல்லமையும்,
அளவு கடந்த ஞானமும்,
அளவு கடந்த அன்பும்

நமக்குள் இருப்பதால்

எப்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார்,

 நாம் கடவுளோடு இருக்கிறோம் என்ற உணர்வோடு வாழ வேண்டும்.

நம்மை ஆளும் மன்னர் நமது வீட்டில் நம்மோடு இருந்தால் அவருக்கு எதிராக நாம் செயல்படுவோமா?

நம்மை ஆளும் கடவுள் நமக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்ந்தால் நாம் அவருக்கு எதிராக செயல்படுவோமா?

அதாவது, பாவம் செய்வோமா? 

நிச்சயமாக மாட்டோம்.

கடவுள் நமக்குள் இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்ந்தால்,

நாம் அவருக்காகவே வாழ்வோம்.

கடவுள் நம்மோடும், 
நாம் அவரோடும் வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு.

நாம் கடவுள் வாழும் இல்லம் என்ற உணர்வு நமக்கு மோட்ச வாழ்வின் முன் ருசியைக் (Pretaste) கொடுக்கிறது.

தாயின் மடியில் வாழும் குழந்தையைப் போல நாம் விண்ணகத் தந்தையின் மடியில் வாழ்கிறோம்.

இறைமகன் மனுமகனாக உலகில் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, நம்மோடு வாழ்ந்து நம்மை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காகத் தான்.

இந்த ஆன்மீக உணர்வு இந்த ஆண்டு மட்டுமல்ல, வருகின்ற எல்லா ஆண்டுகளிலும் நம்மோடு இருக்க வேண்டும்.

",இயேசுவே, நீர் தந்தையுள்ளும் தந்தை உம்முள்ளும் வாழ்வது போல,

என்னுள் வாழும் உம்முள் நான் வாழ்கிறேன்.

எப்போதும் என்னை உமது அரவணைப்பில் வைத்துக் கொள்ளும். 

ஆமென்."

லூர்து செல்வம்.

Friday, December 29, 2023

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43).

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.(லூக்.2:43)

ஒவ்வொரு ஆண்டும் திருக்குடும்பம் பாஸ்காத் திருவிழாவுக்காக யெருசலேமுக்குப் போவது வழக்கம்.

இயேசுவுக்கு 12 வயது நடந்த போது வழக்கம் போல திருவிழாவுக்குச் சென்றார்கள்.

திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார்.

 இது அவருடைய பெற்றோருக்குத்  தெரியாது.

எதற்காக யெருசலேமில் தங்கிவிட்டார்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தன்னைத் தேடி வந்த தனது பெற்றோர்களிடமே இயேசு சொல்கிறார்,

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

இந்தப் பதிலைக் கேட்கும் சில நண்பர்களுக்கு மனதில் ஒரு சந்தேகம் தோன்றலாம்.

இயேசு பிறந்தது பெத்தகெமில்.

அவர் வளர்ந்தது நசரேத் ஊரில் உள்ள அவர்களுடைய வீட்டில்.

போதித்தது யூதேயா, கலிலேயா. சமாரியா ஆகிய நாடுகளில்.

திருவிழா சமயங்களிலும், கோவிலில் போதிக்க வேண்டும் என்று அவர் நினைத்த சமயங்களிலுமே அவர் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.

12 வயதில் அவர் காணாமல் போன மூன்று நாட்களும்

  கோயிலில் தங்கி, அங்கே போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருடனே இருந்த இயேசு ஏன் "என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

என்று கேட்கிறார்.

அவர் மனிதனாகப் பிறந்ததன் நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு 

அவரது வார்த்தைகளைத் தியானித்தால் அவற்றில் ஆழமான ஒரு உண்மை இருப்பது நமக்கு புரியும்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."

12 வயதில் அவர் அவருடைய தந்தையின் இல்லத்தில்,

அதாவது கோவிலில் தங்கியிருந்தது மூன்று நாட்கள் மட்டுமே.

  "என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

இவ் வார்த்தைகளில் அவர் உலகிற்கு வந்ததும் நோக்கம் பிரதிபலிப்பது தெரியும்.

"என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்க வேண்டுமென்பது" என்றால்,   

"என் தந்தை உலகிற்கு என்னை எதற்காக அனுப்பினாரோ அதைச் செய்ய வேண்டும் என்பது"

என்ற பொருள் மனதில் தோன்றுகிறது.

நாம் நாள் முழுவதும் பல மைல்களுக்கு அப்பால் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் அது நமது இல்லத்தில் வாழ்வோருக்காகத் தானே!

இயேசு உலகில் மனிதனாகப் பிறந்து, வளர்ந்து, நற்செய்தி அறிவித்து, பாடுகள் பட்டு மரித்தாலும் 

அது தனது விண்ணகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தானே!

கோவிலில் அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

அவர் எதைப் பற்றி பேசினார் என்று குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அவர் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை மனதில் கொண்டு அதைத் தியானித்தால் 

மெசியாவைப் பற்றிய பழைய ஏற்பாட்டின் இறை வார்த்தைகளை பற்றியதாய் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

மழை சீசன் ஆரம்பித்த உடனே பஸ்ஸில் ஏறி, குற்றாலத்தில் இறங்கி, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, கடையில் ஒரு துண்டு வாங்கிக் கொண்டு அருவிக்குச் சென்று குளிக்கிறோம்.

குற்றாலத்திற்குப் போவது பஸ்ஸில் ஏறுவதற்காகவோ, ஹோட்டலில் சாப்பிடுவதற்காகவோ, துண்டு வாங்குவதற்காகவோ அல்ல,

 குளிப்பதற்காக.

அதுபோல இயேசு மனிதனாக பிறந்ததின் நோக்கம்

 நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்ப்பதற்காக,

நாசரேத் ஊரில் 30 ஆண்டுகள் வாழ்வதற்காக அல்ல.

அவரது நோக்கத்தை மையமாக வைத்து அவரது வார்த்தைகளைத் தியானிக்க வேண்டும்.

நாம் முடிவில்லா வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக தனது ஒரே பேரான மகனை தந்தை உலகிற்கு அனுப்பினார்.

இயேசு பாடுகப்பட்டு மரித்தது அந்த நோக்கத்துக்காக தான்.

தான் உலகுக்கு வந்ததின் நோக்கத்தைத் தான் இயேசு தனது பெற்றோரிடம் சொல்கிறார்.

ஆனால் அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. (லூக்.2:50)

அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.(51)

 நமது கைக்கு பைபிள் வந்ததிலிருந்து இந்நிகழ்ச்சியை எத்தனை முறை வாசித்திருப்போம்!

நமக்கு விளங்கியதோ விளங்கவில்லையோ 

இந்நிகழ்ச்சிகளையெல்லாம் நம் உள்ளத்தில் கொண்டிருக்கிறோமா?

அல்லது வேகமாக வாசித்து வேகமாக மறந்து விடுகிறோமா?

வயலில் விளைந்ததை எல்லாம் ஒரே நாளில் சாப்பிட்டு விட முடியாது.

ஆகவே அதை வருடம் முழுவதும் வீட்டில் வைத்திருக்கிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாக தினமும் சாப்பிடுகிறோம்.

அதுபோல இறை வார்த்தைகளை எப்போதும் நமது மனதில் வைத்திருக்க வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவைகளைப் பற்றி தியானிக்க வேண்டும்.
(தியானம் தொடரும்)

லூர்து செல்வம்.

பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: கடவுள் அருளும் அவர்மீது இருந்தது." (லூக்.2:40)

''பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: கடவுள் அருளும் அவர்மீது இருந்தது." (லூக்.2:40)

'கடவுள் மனித உறவை' மையமாக வைத்துத் தியானித்தால் சில உண்மைகள் புலனாகும்.

நித்திய காலத்திலிருந்தே சுயமாக இயங்கி வருபவர் கடவுள்.

அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

 எல்லாவற்றுக்கும் ஆதி காரணர்.

தன்னுடைய பண்புகளில் அளவில்லாதவர்.

ஆகவே மாற முடியாதவர்.

வளர முடியாதவர்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் அவரைச் சார்ந்தே வாழ்கிறான்.

அவனது ஒவ்வொரு அணுவும் அவரால் தான் இயங்குகிறது.

உலகில் அவனது துவக்கத்துக்கும் முடிவுக்கும் காரணர் அவரே.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிக்க 

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாக மாறவில்லை, 
மனிதனாகப் பிறந்தார்.

கன்னி மரியின் வயிற்றில் மனுவுரு எடுத்த போதும்  அவர் கடவுளாக இருந்தார்.

மனிதனாகப் பிறந்த இறைவனுக்கு இரண்டு சுபாவங்கள்,

தேவ சுபாவம், மனித சுபாவம்.

அவர் முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

அவரிடம் கடவுளுக்குரிய தன்மைகள் அத்தனையும் முழுமையாக இருந்தன.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் அவர் மனிதனாகவும் விளங்கினார்.

மனிதனாகப் பிறந்த பின்பு தான் அவருக்கு இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டது.

இறைமகன் கடவுள்.

கடவுள் மனிதனாகப் பிறந்ததால், அன்னை மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்,

துவக்கமும் முடிவும் உள்ள, அதாவது பிறப்பும் மரணமும் உள்ள
மனிதனாகப் பிறந்தார்.

மனித சுபாவத்தில் கடவுள் பிறந்தார், வளர்ந்தார், மரித்தார்.

கடவுள் மனிதனுக்காக மனிதனாகப் பிறந்ததோடு, அவனுக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார்.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் அவர் மனிதனாக வாழ்ந்ததால்,

மனிதன் பாவத்தை முழுமையாக கைவிட்டு கடவுளாகிய இயேசுவைப் போல் வாழ வேண்டும்.

"பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: 

ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: 

கடவுள் அருளும் அவர்மீது இருந்தது."

குழந்தையாக பிறக்கும் நாம் வளர்ந்து வலிமை பெற்றால் மட்டும் போதாது,

இயேசுவைப் போல ஞானம் உள்ளவர்களாக வளர வேண்டும்.

அவர் கடவுள், அருள் நிறைந்தவர்.

ஆன்மீக வாழ்வின் மூலம் அருள் நிறைந்த அவரிடமிருந்து அருளைப் பெற்று அதில் நாமும் வளர வேண்டும்.

ஒரே வாக்கியத்தில்,

நாம் வலிமையிலும், ஞானத்திலும், அருளிலும் வளர வேண்டும்.

யாரும் சொல்லாமலேயே நாம் சாப்பிட்டு வலிமையில் வளர்கிறோம்.

வலிமையில் மட்டும் வளர்ந்தால் நாம் மனிதர்கள் அல்ல.

ஞானத்தில் எப்படி வளர்வது?

ஞானம் என்றால் என்ன?

புத்தியால் பெற்ற அறிவை, இறைவன் சித்தத்தின்படி வாழ பயன்படுத்தத் தெரிவது ஞானம்.

இறைவன் சித்தப்படி வாழத் தனது அறிவைப் பயன்படுத்தியதால் தான் அன்னை மரியாளை ஞானம் நிறைந்த கன்னிகையே என்கிறோம்.

தினமும் பைபிளை வாசிக்கிறோம்.

இறைவனது நற்செய்தியை பற்றிய அறிவைப் பெறுகிறோம்.

பெற்ற அறிவை நமது ஆன்மீக வாழ்வில் பயன்படுத்துகிறோமா?

அல்லது வினாடி வினாக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மட்டும் பயன்படுத்துகிறோமா?

நற்செய்தியின் படி வாழத் தெரியாவிட்டால்,

அதாவது நம்மிடம் ஞானம் இல்லாவிட்டால்,

நற்செய்தியில் Phd. பட்டம் வாங்கினாலும் கூட பயனில்லை.

தூய ஆவியின் வரங்களில் முதன்மையானது ஞானம்.

அருளில் வளர்வது எப்படி?

பாவக்கறையில்லாத ஆன்மாவின் மீது இறைவன் தனது அருளைப் பொழிகிறார்.

ஜென்மப் பாவமாசு இல்லாமல் உற்பவித்த நமது அன்னையை ''அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

பாவத்தை விலக்கினால் மட்டும் போதாது, புண்ணியத்தில் வளர வேண்டும்.

புண்ணியத்தின் அளவு அதிகரித்தால் அதற்கு ஏற்றபடி இறைவன் அருளும் நம்மில் அதிகரிக்கும்.

மனிதர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக

 இறை மகன் பாவம் தவிர மற்ற எல்லா மனிதத் தன்மைகளையும் ஏற்று மனிதனாக பிறந்தார்.


இயேசு காட்டிய வழியைப் பின்பற்றி

நமது அயலானுக்கு உதவுவதற்காக,

பாவம் தவிர வேறு எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

பட்டினியாக இருக்கும் அயலானுக்கு உதவ நாம் பட்டினியாயிருந்தால் நாம் இயேசுவுக்கு பிரியமான சீடர்களாக வாழ்வோம்.

வசதியாக வாழும் ஒருவருக்கு தேவ அழைத்தல் வந்தால் 

தனது வசதியான வாழ்க்கையை கைவிட்டுவிட்டு இறைவனது அழைத்தலை ஏற்று,

வறுமையில் வாழும் குருக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

உடல் வலிமையில் மட்டுமல்ல, ஆன்மீக ஞானத்திலும், அருளிலும் வளர்வோம்.

இவ்வுலகில் மட்டுமல்ல நித்தியத்திற்கும் இயேசுவோடு வாழ வேண்டியவர்கள் நாம்.

லூர்து செல்வம்.

Wednesday, December 27, 2023

இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:(லூக்.2:34)

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்:
(லூக்.2:34)

யூத மதச் சட்டப்படி ஒரு தாய்க்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இது யூத மதத்தைப் பின்பற்றும் மனிதர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம்.

கடவுள் மனிதர்களுக்கான சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்.

காலத்திற்கு அப்பாற்பட்ட கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

ஆனாலும் மனித குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாகப் பிறக்கத் திட்டமிட்ட கடவுள்,

மனிதர்களுக்கான சட்டங்களுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டார்.

அதனால்தான் தான் குழந்தையாக இருந்த போது கோவிலில் தந்தை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படவும்,

திருமுழுக்கு அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெறவும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

அதன்படி அவர் பிறந்த 40 வது நாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார்.

சட்டப்படி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் பலியாகக் கொடுக்கப்பட்டன. 

தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்த சிமியோன் என்னும் நீதிமான், குழந்தையைக் ஏந்திக்கொண்டு,

திருக் குடும்பத்துக்கு ஆசிகூறி, 

 குழந்தையின் தாயாகிய மரியாளைப் பார்த்து,

 "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்: எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.

 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்றார்.

இறை மகன் மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்துப் பிறந்தது மனித குல மீட்புக்காக, அதாவது, எழுச்சிக்காக.

எழுச்சிக்காகப் பிறந்தவர் எப்படி வீழ்ச்சியாக இருப்பார்?

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைத்தபோது அவர்கள் அனுசரிப்பதற்காகக் கட்டளை ஒன்று கொடுத்திருந்தார்.

கட்டளை கொடுக்கப்பட்டதன் நோக்கம் அவர்கள் அதன்படி நடந்து தங்கள் பரிசுத்தத் தனத்தில் வளர்வது.

பரிசுத்தத் தனத்தில் வளர்வதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளை,

அவர்கள் அதை மீறிய போது அவர்களது வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. 

காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு நேரம் குறிப்பிடப்படாவிட்டால்,

அவர்கள் நினைத்த நேரத்தில் பள்ளிக்கு வரலாம்.

நேரம் குறிப்பிடப்பட்ட பின்,

நேரத்துக்கு வருபவர்கள் நல்ல மாணவர்கள்.

பிந்தி வருபவர்கள் தண்டனைக்கு உட்பட்ட மாணவர்கள்.

மனித குல மீட்புக்காகப் பிறந்த இயேசுவின் சொற்படி நடக்கிறவர்கள் மீட்பு பெறுவார்கள்.

அது அவர்களுக்கு எழுச்சி.

சொற்களை மீறி நடப்பவர்கள் தண்டனைக்கு உட்படுவார்கள்.

அது அவர்களுக்கு வீழ்ச்சி.

நேசிக்கப்படும் பொழுது மனிதர்களின் எழுச்சிக்கு காரணமாகும் அதே இயேசு,

வெறுக்கப்படும் போது அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிறார்.

ஆனால் வீழ்ச்சிக்கு அவர் காரணம் என்று  புரிந்து கொள்வது சரியான புரிதல் அல்ல.

நரகத்துக்குப் போகின்றவர்கள் கடவுள் எங்களைப் படைத்ததால்தான் நரகத்துக்குப் போகிறோம் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

கடவுள் நம்மைப் படைத்தது விண்ணகப் பேரின்ப வாழ்வுக்காகத்தான்.

ஆனாலும் பேரின்ப வாழ்வு வேண்டுமா, பேரிடர் வாழ்வு வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டியது மனிதன் தான்.

சுகம் இல்லாத ஒருவன் மருத்துவரிடம் செல்கிறான்.

அவர் அவனுக்கு மருந்தாக சில மாத்திரைகளைக் கொடுக்கிறார்.

மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட்டால் அவன் குணம் பெறுவான்.

சாப்பிடாவிட்டால் குணம் பெற மாட்டான்.

வியாதி குணமாகாவிட்டால் அதற்கு காரணம் மாத்திரைகள் அல்ல,

அவற்றை சாப்பிடாத நோயாளிதான்.

அதேபோல ஒரு மனிதன் பாவத்திலிருந்து மீட்பு பெற்றால் அதற்குக் காரணம் 

அதற்காகப் பாடுகள் பட்டு தன்னையே சிலுவையில் பலியாக்கிய இயேசு கிறிஸ்து.

மீட்பு பெறாவிட்டால் அதற்குக் காரணம் மீட்புத் தர வந்த இயேசுவை அவன் ஏற்றுக் கொள்ளாதது தான்.

சர்வ சுதந்திரத்தோடு நித்திய காலமாய் வாழும் இறைவன்,

தனது சாயலாகப் படைத்த மனிதனுக்குச் சுதந்திரத்தைப் பகிர்ந்து கொடுத்துள்ளார்.

சுதந்திரத்தைப் பயன்படுத்தி இறைவன் தரும் மீட்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி
மீட்பை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதற்குக் காரணம் அவன் தான், மீட்பர் அல்ல.

நாம் எப்படி நமது சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறோம்?

காலையில் 5 மணிக்கு எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு| சுத்தமான உடையணிந்து ஆறு மணித் திருப்பலிக்குச் செல்ல வேண்டும்.

காலை ஐந்து மணிக்கு கடிகாரம் அலாரம் அடிக்கிறது.

அலார ஓசை கேட்டவுடன் எழ வேண்டும்.

ஆனாலும் எழவா, வேண்டாமா என்று தீர்மானிக்க நமக்குப் 
பரிபூரண சுதந்திரம் இருக்கிறது.

எழுபவர்கள் பாக்கியவான்கள், எழாதவர்கள் சோம்பேறிகள்.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

கோவிலுக்குள் நுழைந்தவுடன் திவ்ய நற்கருணையின் முன் ஒற்றை முழங்கால் படியிட்டு எழவோ, (Genuflect)

தலையை மட்டும் குனிந்து வணங்கவோ நமக்கு  முழு சுதந்திரம் இருக்கிறது.

திவ்ய நற்கருணை நாதருக்கு உரிய ஆராதனையைக் கொடுக்க விரும்புவோர் முழங்கால் படியிட்டு எழுவர்.

தலை குனிந்து வணங்குவது மனிதருக்குச் செலுத்தும் மரியாதை.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

திவ்ய நற்கருணையை நாவில் வாங்கவோ, கையில் வாங்கவோ நமக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது.

நற்கருளையில் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

நாவில் வாங்கும் போது துகள் எதுவும் கீழே விழ வாய்ப்பு இல்லை.

ஆனால் கையில் வாங்கும் போது துகள்கள் கையில் ஒட்டவும் தரையில் விழவும் வாய்ப்பு இருக்கிறது.

தரையில் விழும் துகள்கள் வருவோர் போவோரால் மிதிபட வாய்ப்பு இருக்கிறது.

நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நமது முதல் பெற்றோர் தங்களது சுதந்திரத்தை விலக்கப்பட்ட கனியைத் தின்னப் பயன்படுத்தினார்கள்.

நாம் நமது சுதந்திரத்தை பாவம் செய்ய பயன்படுத்துகிறோமா?

 நற்செயல் புரியப் பயன்படுத்துகிறோமா?

நமது சுதந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை முழுத் திருப்பலி காணப் பயன்படுத்துகிறோமா?

அரைகுறையாக காணப் பயன்படுத்துகிறோமா?

நமது சுதந்திரத்தைத் தீமைக்கு நன்மை செய்யப் பயன்படுத்துகிறோமா?

பழிக்குப் பழி வாங்கப் பயன்படுத்துகிறோமா?

நமது உடல் உறுப்புகளை நமது விருப்பம் போல் தான் பயன்படுத்துகிறோம். அதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது.

நமது கரங்களை அள்ளிக் கொடுக்க பயன்படுத்துகிறோமா? அள்ளி எடுக்க பயன்படுத்துகிறோமா?

நமது வாயை அன்பாக பேசப் பயன்படுத்துகிறோமா?
கோபமாகப் பேச பயன்படுத்துகிறோமா?

நமது செயலால் மற்றவர்கள் பயன்பெற்றால் அது நற்செயல்,

மற்றவர்களுக்கு துர்மாதிரிகை ஏற்பட்டால் அது தீச்செயல்.

நாம் பாவத்திலிருந்து எழுந்து, நற்செயல்கள் புரிய நமக்குத் தனது அருள் வரங்களைத் தரவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

அவர் தரும் அருள் வரங்களைப் பயன்படுத்தாமல் நாம் பாவத்தில் விழுந்தால் அதற்கு பொறுப்பு நாம் தான்.

நாம் வாழும் நேரம் இறைவன் நமக்குக் கொடுத்த பரிசு.

நேரத்தைப் பயன்படுத்துபவர்கள் வாழ்வார்கள்.

வீணடிப்பவர்கள் வீழ்வார்கள்.

நேரம் + பயன்பாடு = வாழ்க்கை.
நேரம் + வீணடித்தல் = வீழ்ச்சி.

 இறைவன் தந்த நேரத்தை அவர் சித்தப்படி வாழப் பயன்படுத்துவோம்.

நிலைவாழ்வு பெறுவோம்.

அதுதான் நாம் படைக்கப்பட்டதன் நோக்கம்.

நம்மைப் படைக்க கடவுள் நமது அனுமதியைக் கேட்கவில்லை.

ஆனால் நம்மை மீட்க நமது அனுமதியை எதிர்பார்க்கிறார்.

கடவுளோடு ஒத்துழைத்து அவர் தரும் மீட்பைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, December 26, 2023

.."எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"(மத்.2:13)

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்"(மத்.2:13)

புனித சூசையப்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை.

தனது மனைவி மரியாளின் வயிற்றில் கருத்தரித்திருப்பது சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன் என்பது 

கபிரியேல் தூதர் அவரது கனவில் தோன்றி தெரிவித்த பின்பு தான் அவருக்குத் தெரியும்.

அன்னை மரியாள் கபிரியேல் தூதரை நேரில் பார்த்தாள்.

ஆனால் சூசையப்பர் கனவில் தான் பார்த்தார்.

இறைவனின் தூதர் கனவில் தோன்றி அறிவித்த இறைச் செய்தியை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு விசுவாசம் இருந்தது.


கபிரியேலின் சொற்களை நம்பி மரியாளைத் தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

மனைவியாக ஏற்றுக் கொண்டாலும் மரியாளுக்குப் பாதுகாவலராகவும், இயேசுவுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் மட்டுமே வாழ்ந்தார்.

அன்னை மரியாளைப் போலவே அவரும் இறைவனின் அடிமையாகவே வாழ்ந்தார்.

எதிர்க் கேள்வி கேட்காமல் எஜமானனின் சொல்லுக்குக் கீழ்படிபவனே அடிமை.

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை
 ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்."

சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, 

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.

அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்

"கலிலேயா நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

இறைவன் சொன்னதை, '
 சொன்னபடியே,
 சொன்ன உடனேயே செய்தார்.

சாதாரண மனிதன் தனக்கு என்ன செய்தி கிடைத்தாலும் தனது புத்தியைப் பயன்படுத்தி அதன் காரண காரியத் தொடர்புகளை ஆராய்ந்த பின்புதான் ஏற்றுக் கொள்வான் அல்லது விட்டுவிடுவான்.

ஆனால் அடிமை தனது எஜமான் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வான்.

சூசையப்பரும் அப்படியே செய்தார்.

ஆண்டவரின் தூதர் சூசையப்பரை குழந்தையுடனும், அதன் தாயுடனும் எகிப்துக்கு போக சொன்ன போது,

அவர் நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்திருந்தால்,

"சர்வ வல்லமையுள்ள கடவுள் ஏன் ஒரு சாதாரண மனிதனிடமிருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்கு ஓட வேண்டும்?" என்று நினைத்திருப்பார்.

ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை.

அவர் அடிமை, கடவுள் அவரது எஜமான்.

எஜமான் போ என்றவுடன் போகிறார்,

 வா என்றவுடன் வருகிறார்.

இஸ்ரேல் நாட்டுக்குப் போ என்றவுடன் போகிறார்,

 கலிலேயாவுக்கு போ என்றவுடனும் போகிறார்.

அன்னை மரியாளும், சூசையப்பரும் அவர்களாக இயங்கவில்லை,

கடவுள்தான் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நாம் அவர்களுடைய பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தாயைப் போல் பிள்ளை,
குருவைப் போல் சீடன்.

நாம் அவர்களது பக்தர்கள் என்பது உண்மையானால் நாமும் அவர்களைப் போல் ஆண்டவரின் அடிமைகள்.

அவர்கள் ஆண்டவரது அடிமைகளாக வாழ்ந்தார்கள்.

நாமும் அப்படி வாழ்கின்றோமா?

கடவுள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறாரா?

அல்லது

நாம் நமது இஸ்டம்போல் இயங்கிக் கொண்டிருக்கிறோமா?

நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது,

 நமது ஆன்மாவின் நன்மைக்காக, ஆனால் நமது மனித குணத்திற்கு விருப்பம் தராத நிகழ்வுகள் வரும்போது,

அவை கடவுளின் சித்தம் என்று அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோமா?

அல்லது முணு முணுத்துக் கொண்டே வேறு வழியில்லாமல் அவற்றை அனுபவிக்கிறோமா?

நமது செப விண்ணப்பங்களில் அதிகம் இடம்பெட்டிருப்பது ஆன்மாவைச் சார்ந்த வேண்டுதல்களா?

அல்லது நமது உடல் நலனைச் சார்ந்த வேண்டுதல்களா?

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி என்று கூறுகிறோமா?

அல்லது,

ஒழுங்காக கோவிலுக்குப் போகும் எனக்கு ஏன் இவற்றை அனுமதிக்கிறீர் என்று கடவுளிடம் கேள்வி கேட்கிறோமா?

நமக்குச் சுகம் இல்லாமல் இருக்கும்போது நமது அம்மா வெறும் கஞ்சி போட்டுத் தந்தால்,

அது பிரியாணியைப் போல் ருசியாக இல்லை என்று முணுமுணுப்பதில்லை.

கஞ்சி நமக்கு சுகம் தரும் என்று ஏற்றுக் கொள்கிறோம்.

இதேபோல் கடவுள் நம்மிடம் செயல்படும் போது ஏன் முணுமுணுக்கிறோம்?

நாம் கடவுளின் அடிமைகளாக வாழ்ந்தால்தான், நாம் சூசையப்பருடையவும் அன்னை மரியாளுடையவும் பக்தர்கள்.

உண்மையிலேயே திரு குடும்பத்தின் பக்தர்களாக, 

ஆண்டவரின் அடிமைகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்.(அரு.20:8)

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்.
(அரு.20:8)

"மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென"

இயேசு தனது அப்போஸ்தலர்களிடம் தனது பாடுகளுக்கு முன்பேயே தெரிவித்திருந்தார்.

அவரிடம் வந்த நோயாளிகள் தங்களது விசுவாசத்தாலேயே குணம் பெற்றார்கள்.

ஆனால் அவருடைய அப்போஸ்தலர்களிடம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு விசுவாசம் இல்லை.

இருந்திருந்தால் அவர் மரித்த மூன்றாம் நாள் அவரது வருகையை எதிர்பார்த்து வீட்டிலேயே இருந்திருப்பார்கள்.

மதலேன் மரியாள் சொன்னதைக் கேட்டு இராயப்பரும், அருளப்பரும் இயேசுவின் கல்லறைக்கு வந்திருக்க மாட்டார்கள்.

ஆனாலும் அவர்கள் வந்த விதத்திலிருந்து நாம் ஒரு உண்மையை ஆணித்தரமாக அறிந்து கொள்ள முடிகிறது.

அருளப்பர் இராயப்பரை விட இளையவர்.

ஆகவே இராயப்பரை விட வேகமாக முதலில் கல்லறைக்கு வந்துவிட்டார்.

ஆனாலும் இராயப்பர் வருமுன் அவர் கல்லறைக்குள் செல்லவில்லை.

இராயப்பர் கல்லறைக்குள் நுழைந்த பின்பு தான் அருளப்பர் நுழைந்தார்.

திருச்சபையின் தலைவருக்கு அவர் முதலிடம் கொடுத்தார்.

இராயப்பர் தான் திருச்சபையின் தலைவர் என்ற உண்மையை அருளப்பர் தன்னுடைய செயலால் உறுதிப்படுத்துகிறார்.

 பைபிளிலிருந்து மட்டுமே ஆதாரத்தைத் தேடும் நமது பிரிவினைச் சகோதரர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.


"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்று

மதலேன் மரியாள் இராயப்பரிடமும், அருளப்பரிடமும் கூறிய போது,

தான் உயிர்க்கப் போவது பற்றி தங்களிடம் இயேசு கூறியதை. அவர்கள் அவளிடம் சொல்லவில்லை.

மாறாக அவளது பேச்சை நம்பி கல்லறைக்கு ஓடினார்கள்.

மதலேன் மரியாளின் வார்த்தைகளை நம்பிய அளவுக்கு சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளை நம்ப வில்லை.

நமது விசுவாசத்திற்கு ஆதாரம் வார்த்தையானவரின் வார்த்தைகள் மட்டுமே.

நாம் குழந்தைகளாக இருந்தபோது நமது அம்மா நாம் முன்பின் பார்த்திராத ஒரு ஆளைக் காண்பித்து,

"அப்பா" என்று கூப்பிடு என்றார்கள்.

அவரையே நமது வாழ்நாள் முழுவதும் அப்பாவாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.

அம்மாவின் வார்த்தைகளுக்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரத்தைக் கேட்கவில்லை. 

அம்மாவின் வார்த்தைகளுக்கு அம்மா மட்டுமே ஆதாரம்.

இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபை தான் நமது ஆன்மீகத் தாய்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை தான் நமது விசுவாசத்துக்கு ஆதாரம்.

கத்தோலிக்கத் திருச்சபை நமக்குத் தந்திருக்கும் பைபிள் தான் உண்மையான பைபிள்.

ஆன்மீக ரீதியாக நம்மை பெற்ற தாய் கத்தோலிக்கத் திருச்சபைதான்.

கத்தோலிக்கத் திருச்சபை காண்பிக்கும் இயேசுதான் மனிதர்களின் பாவங்களை மன்னிக்க மனிதனாகப் பிறந்த இயேசு.

இயேசு மனிதனாக பிறந்தது நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அல்ல.

நமது பாவங்களை மன்னிக்கவே அவர் பாடுகள் பட்டு மரித்தார்.

நமது பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும் அதிகாரத்தை தான் நிறுவிய கத்தோலிக்க திருச்சபைக்கே இயேசு அளித்தார்.

"யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்."

"இதை எனது ஞாபகமாகச் செய்யுங்கள்." 

திருப்பலிதான் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான ஜெப வழிபாடு.

நமது கத்தோலிக்க திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதற்கு காண்பிக்கும் ஆர்வத்தை விட

பிரிவினைச் சகோதரர்களின் சுகமளிக்கும் ஜெப வழிபாட்டில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அவர்கள் உண்மையான கத்தோலிக்கர்கள் அல்ல, பெயரளவுக்கு மட்டுமே கத்தோலித்தார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபை தந்திருக்கும் பைபிள் தான் முழுமையான பைபிள்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை தான் மனு மகனாகப் பிறந்த இறைமகனின் போதனை.

எங்கே பாவ சங்கீர்த்தனமும், திவ்ய நற்கருணையும் இருக்கின்றனவோ

 அங்கேதான் நமது பாவங்களை மன்னிக்க மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு இருக்கிறார்.

நாம் உண்மையான கிறிஸ்தவர்களா அல்லது பெயரளவுக்கு மட்டும் கிறிஸ்தவர்களா என்பதைச் சிந்தித்து அறிவோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் உண்மையான பிள்ளைகளாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, December 25, 2023

மீட்பர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்.

மீட்பர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்.
   *      * .  * . *      * .  *   *      * .  *    *      * .  *

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அது நல்லதோ கெட்டதோ, ஒரு நோக்கம் இருக்க வேண்டும். 

மனநிலை சரியில்லாதவன் தான் நோக்கமேயின்றி ஏதாவது செய்து கொண்டேயிருப்பான்,

சாப்பிடுபவன் ஒன்று பசிக்காகச் சாப்பிடுவான் அல்லது ருசிக்காகச் சாப்பிடுவான்.

ஏதாவது ஒரு நோக்கத்துக்காகச் செயல் புரிபவன், செயலுக்குப் பின் தனது நோக்கம் நிறைவேறி விட்டதா, இல்லையா என்பதை பற்றி ஆராய்வான்.

பசிக்காகச் சாப்பிடுபவனுக்குச் சாப்பிட்ட பின் பசி நீங்கியிருக்க வேண்டும்.

சாப்பிட்ட பின்பும் பசித்துக்கொண்டிருந்தால் அவன் எவ்வளவு சாப்பிட வேண்டுமோ அவ்வளவு சாப்பிடவில்லை என்று அர்த்தம்.

ருசிக்காக சாப்பிடுபவனுக்கு சாப்பிட்ட பின் ருசியை அனுபவித்த திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.

அளவுக்கு மீறிய உப்பினாலோ, உறைப்பினாலோ உணவு ருசியாக இல்லாவிட்டால் அவனுக்கு ருசியாய் உண்ட திருப்தி ஏற்பட்டிருக்காது.

திருமண விழாவின் நோக்கம் என்ன?

ஒரு ஆணும் பெண்ணும் கருத்து ஒருமித்த கணவன் மனைவியாக இணைவதே திருமண விழாவின் நோக்கம்.

மேடை அலங்காரமோ,  
சங்கீதக் கச்சேரியோ, 
 பேச்சாளர்களின் வாழ்த்துரையோ, திருமண விருந்தோ, 
விழாவை சிறப்பிக்க நாம் செய்யும் எந்த செயலுமோ 
திருமண விழாவில் நோக்கம் அல்ல.

இவையெல்லாம் சிறப்பாக அமைந்து திருமணத் தம்பதியர் கருத்து ஒருமித்த கணவன் மனைவியாக மாறாவிட்டால் திருமண விழாவின் நோக்கம் நிறைவேறவில்லை.

நாம் கிறிஸ்மஸ் திருவிழா கொண்டாடியதன் நோக்கம் என்ன?

நமது மீட்புக்காக மனிதவுரு எடுத்த நமது ஆண்டவர் இயேசுவின் அருளை நிறையப் பெற்று, ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைவது தான் கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம்.

அதாவது நமது ஆன்மாவின் மீட்பு தான் கிறிஸ்துமஸ் விழாவின் நோக்கம்.

இதை ஒட்டிய வெளியரங்க, 

புத்தாடை அணிதல்,.
 குடில் ஜோடித்தல், 
ஸ்டார் தொங்க விடுதல்,
கிறிஸ்மஸ் தாத்தா வலம் வருதல், கிறிஸ்மஸ் விருந்து,
 போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் எதுவும் கிறிஸ்மஸ் விழாவின் நோக்கம் அல்ல.

இவையெல்லாம் சிறப்பாக அமைந்து இயேசுவின் அருளால் ஏற்படும் ஆன்மீக வளர்ச்சி எதுவும் நம்மிடம் ஏற்பட்டிருக்காவிட்டால் நமது கிறிஸ்மஸ் விழா ஒரு தோல்வி விழாதான்.

கடைக்குச் சென்று ஒரு கப் காபி கேட்கிறோம். கப் வந்தது, காபி வரவில்லை. காசு கொடுப்போமா?

கொண்டாட்டங்கள் சிறப்பாக இருந்தன, குடிலில் பிறந்த இயேசு நமது உள்ளத்தில் பிறக்கவில்லை.

ஆன்மீக வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.

விழா கொண்டாட்டத்தால் நமக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.


விழாவினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நமது ஆன்மா பரிசுத்தத் தனத்தில் வளர்ந்திருக்க வேண்டும்.

இறையன்பினால் இயேசுவோடு நமது ஆன்மீக உறவின் நெருக்கம் அதிகரித்திருக்க வேண்டும்.

இயேசு நமக்குள்ளும் 
நாம் இயேசுவுக்குள்ளும் 
இணைந்து வாழ ஆரம்பித்திருக்க வேண்டும்.

நமது பிறரன்பு செயல்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

செயல்கள் இல்லாத உறவு செத்த உறவு.

செயல் பூர்வமான பிறரன்பு தான் உண்மையான இறையன்பு.

நமது பிறருக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை இறைவனுக்கே செய்கிறோம்.

இரண்டு சக்கரங்கள் உள்ள மிதிவண்டியின் ஒரு சக்கரம் உருளாடாவிட்டால் மிதிவண்டி நகராது.

இறையன்பும், பிறரன்பும் நமது ஆன்மீக வண்டியின் இரண்டு சக்கரங்கள்.

அதில் ஒன்று நகராவிட்டாலும் நமது ஆன்மீகம் நகராது.

தேர்வு எழுதுபவன் தேர்வு எழுதியவுடன் தான் எழுதிய பதில்களைத் திரும்பிப் பார்ப்பது போல,

நாம் கொண்டாடிய கிறிஸ்மஸ் விழாவைத் திரும்பிப் பார்ப்போம்.

ஆன்மீக ரீதியாக நாம் வெற்றி பெற்றிருந்தால் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

போதிய வெற்றி பெற்றிருக்காவிட்டால் நாம் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.

அது அடுத்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பாக கொண்டாட நமக்கு உதவியாக இருக்கும்.

லூர்து செல்வம்.

Friday, December 22, 2023

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.(லூக்.1:58)

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.
(லூக்.1:58)

வயதான காலத்தில் எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட அவளது அயலாரும் உறவினரும் 

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதை எண்ணி அவளோடு மகிழ்ந்தனர்.

அவளது மகிழ்ச்சியில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இந்த வசனத்தை வாசித்த போது எனக்கு மற்றொரு இறை வசனம் ஞாபகத்துக்கு வந்தது.

"மகிழ்வாரோடு மகிழுங்கள்: அழுவாரோடு அழுங்கள்."
(உரோமை.12:15)

மகிழ்வாரோடு மகிழ்ந்தால் மகிழ்பவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

எலிசபெத்தம்மாளின் மகிழ்ச்சியும் இரட்டிப்பு ஆகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அழுவாதோடு அழுதால் அழுபவர்களின் வேதனை பாதி குறையும்.

இந்த வசனம் ஞாபகத்திற்கு வரும்போது அதோடு கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.


இந்த வசனத்திற்கும் கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இயேசு கிறிஸ்து பிறந்த அன்று வான தூதர்கள்  ஆடுகளுக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்த இளையர்களுக்குத் தோன்றி,

'' அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

 இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா"

என்று கூறினர்.

ஆக கிறிஸ்துமஸ் திருவிழா நமக்கு மகிழ்ச்சியூட்டும் திருவிழா.

நாம் விழா கொண்டாட்டத்தை பற்றி மட்டும் மகிழாமல்,

மீட்பரின் பிறப்பை நினைத்து மகிழ்ந்தால்,

அந்த மகிழ்ச்சி விண்ணக வாசிகளிடையே பல மடங்கு பெருகிப் பொங்கும்.

ஒரு திருமண விழாவுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் திருமண தம்பதிகளின் அழகைப் பற்றியோ, பொருத்தத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.

திருமண விருந்து ருசியாக இருந்தால் திருமண விழா நன்றாக இருந்தது என்று சொல்வார்கள்.

விருந்து மோசமாக இருந்தால் விழாவைப் பற்றியும் குறைவாகவே மதிப்பிடுவார்கள்.

கிறிஸ்மஸ் விழாவின் கதாநாயகன் குழந்தை இயேசு.

விழாவைப் பற்றிய உணர்வுகள் குழந்தை இயேசுவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

விழாவை முன்னிட்டு டிசம்பர் முதல் தேதியே தொங்க விடப்படும் கிறிஸ்மஸ் ஸ்டார்,

கிறிஸ்மசுக்காக நாம் எடுக்கும் புதிய ஆடைகள்,

கிறிஸ்மஸ் குடில்,

நள்ளிரவுக் கொண்டாட்டம்,

கிறிஸ்மஸ் விருந்து 
ஆகியவற்றையே நமது விழா மையமாகக் கொண்டிருந்தால்,

அதாவது,

இயேசு பாலனைப் பற்றியே நாம் சிந்திக்காதிருந்தால்

நாம் கொண்டாடுவது கிறிஸ்மஸ் விழாவாக இருக்காது, வெறும் விழாவாகவே இருக்கும்.

இயேசு பாலனைப் பற்றி சிந்திக்காமல் எப்படி விழா கொண்டாட முடியும் என்று கேட்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் முடிந்தவுடன் திருப்பலிக்கு வந்து,

நற்கருணை வாங்கியவுடன் வீட்டுக்கு செல்பவர்கள்

தாங்கள் ஞாயிறு திருப்பலிக்குச் சென்று வந்ததாகக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்மஸ் விழாவின் மைய கருத்தைப் பற்றி கவலைப்படாமல் வெளியரங்க விழாவை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுபவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

விழாவின் மைய கருத்துதான் என்ன?

அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றெடுப்பதற்கு சத்திரத்தில் கூட இடம் கிடைக்கவில்லை.

மாடுகள் அடையும் தொழு மட்டுமே கிடைத்தது.

பிறந்த இயேசுவை படுக்க வைக்க தொட்டில் கட்ட கூட வசதி இல்லை.

மாடுகளின் தீவனத் தொட்டியில் வைக்கோல் படுக்கையின் மேல் தான் இயேசு பாலன் படுத்திருந்தார்.

இயேசு பாலனுக்கு புது உடை எதுவும் மரியாள் வாங்கி வரவில்லை.

கந்தல் துணிகளைக் கொண்டே அவரைப் போர்த்தியிருந்தாள்..

மார்கழிப் பனியில் அவரது உடல் நடுங்கி கொண்டிருந்தது.

உலகைப் படைத்த கடவுள் ஒன்றுமில்லாத நிலையில் மனிதனாகப் பிறந்திருக்கிறார்.

கந்தல் துணிகளை போர்த்திக் கொண்டு,

தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் இயேசு பாலனைப் பார்க்க

நாம் Tip top புத்தாடை அணிந்து செல்கிறோம்.

ஏழையாகப் பிறந்திருக்கும் இறைவனைக் கண்டு தரிசிக்க பணக்காரத் தன்மையுடன் செல்கிறோம்.

மீட்பர் பிறந்திருப்பது மகிழ்ச்சி தான். அதைப்பற்றி நாம் ஆன்மீக ரீதியில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

ஆனால் அவர் பிறந்திருக்கும் ஏழ்மை நிலை?

இயேசுவின் பாடுகளும், மரணமும் நமக்கு மீட்பை பெற்றுத் தந்தன.

நமது ஆன்மா மீட்படைவது குறித்து மகிழ்ச்சி தான்.

ஆனால் அவர் 
இரத்த வியர்வை வியர்த்ததையும், 
அடிகள் பட்டதையும், மிதிக்கப்பட்டதையும், 
பாரமான சிலுவையை சுமந்ததையும், சிலுவையின் பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்ததையும், 
ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும், 
மரணம் அடைந்ததையும் பார்த்து சிரித்து கொண்டிருக்க முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சிக்குறியது என்றாலும்,

அவரது பாடுகளும், மரணமும் துக்கத்துக்கு உரியவை தானே.

அழுவாறோடு அழவேண்டும் மகிழ்வாரோடு மகிழ வேண்டும்.

இயேசு பாடுகள் பட்ட போது அன்னை மரியாள் அழுதிருப்பாள், நாமும் அழவேண்டும்.

இயேசு உயிர்த்தபோது அவள் மகிழ்ந்திருப்பாள், நாமும் மகிழ வேண்டும்.

கிறிஸ்மஸ் அன்று இயேசு ஏழையாகப் பிறந்தார். ஏழைக் கோலத்தில் படுத்திருக்கும் அவரைப் பார்க்க நாமும் ஏழைக் கோலத்தில் தான் செல்ல வேண்டும்,  Tip top உடை அணிந்து அல்ல.

அவர் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்காகப் பிறந்தார். நாம் அவரது மகிழ்ச்சிக்காக விழா கொண்டாட வேண்டும். 

நமது அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை அவருக்கே செய்கிறோம். 

நமக்கு புத்தாடை எடுப்பதை விட நமது அயலானுக்கு எடுத்துக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

 நாம் உண்பதை விட நமது அயலானுக்கு உணவு கொடுப்பதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். 

நமது அயலான் மகிழ கொண்டாடும் விழா தான் இயேசு பாலன் மகிழ கொண்டாடும் விழா.

கிறிஸ்மஸ் விழாவின் மையம் இறையன்பும், பிறர் அன்பும்,

அதாவது,

இயேசு பாலனும், நமது அயலானும்.

இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இயேசு பாலனையும், நமது அயலானையும் மையமாக வைத்து விழாவிற்காக நம்மை தயாரிப்போம்.

பரிசுத்தமான இதயம் இறையன்புக்கு ஆதாரம்.

பகிர்ந்து கொள்ளுதல் பிறர் அன்புக்கு ஆதாரம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.(லூக்.1:58)

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.
(லூக்.1:58)

வயதான காலத்தில் எலிசபெத்தம்மாளுக்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட அவளது அயலாரும் உறவினரும் 

அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதை எண்ணி அவளோடு மகிழ்ந்தனர்.

அவளது மகிழ்ச்சியில் அவர்களும் பங்கு கொண்டனர்.

இந்த வசனத்தை வாசித்த போது எனக்கு மற்றொரு இறை வசனம் ஞாபகத்துக்கு வந்தது.

"மகிழ்வாரோடு மகிழுங்கள்: அழுவாரோடு அழுங்கள்."
(உரோமை.12:15)

மகிழ்வாரோடு மகிழ்ந்தால் மகிழ்பவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

எலிசபெத்தம்மாளின் மகிழ்ச்சியும் இரட்டிப்பு ஆகி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அழுவாதோடு அழுதால் அழுபவர்களின் வேதனை பாதி குறையும்.

இந்த வசனம் ஞாபகத்திற்கு வரும்போது அதோடு கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.


இந்த வசனத்திற்கும் கிறிஸ்மஸ் திருவிழாவின் கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இயேசு கிறிஸ்து பிறந்த அன்று வான தூதர்கள் தோன்றி ஆடுகளுக்கு சாம காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களை நோக்கி,

'' அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

 இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா"

என்று கூறினர்.

ஆக கிறிஸ்துமஸ் திருவிழா நமக்கு மகிழ்ச்சியூட்டும் திருவிழா.

நாம் விழா கொண்டாட்டத்தைப் பற்றி மட்டும் மகிழாமல்,

மீட்பரின் பிறப்பை நினைத்து மகிழ்ந்தால்,

அந்த மகிழ்ச்சி விண்ணக வாசிகளிடையே பல மடங்கு பெருகிப் பொங்கும்.

ஒரு திருமண விழாவுக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர் திருமண தம்பதிகளின் அழகைப் பற்றியோ, பொருத்தத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.

திருமண விருந்து ருசியாக இருந்தால் திருமண விழா நன்றாக இருந்தது என்று சொல்வார்கள்.

விருந்து மோசமாக இருந்தால் விழாவைப் பற்றியும் குறைவாகவே மதிப்பிடுவார்கள்.

கிறிஸ்மஸ் விழாவின் கதாநாயகன் குழந்தை இயேசு.

விழாவைப் பற்றிய உணர்வுகள் குழந்தை இயேசுவையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

விழாவை முன்னிட்டு டிசம்பர் முதல் தேதியே தொங்க விடப்படும் கிறிஸ்மஸ் ஸ்டார்,

கிறிஸ்மஸ்காக நாம் எடுக்கும் புதிய ஆடைகள்,

கிறிஸ்மஸ் குடில்,

நள்ளிரவு கொண்டாட்டம்,

கிறிஸ்மஸ் விருந்து 
ஆகியவற்றையே நமது விழா மையமாகக் கொண்டிருந்தால்,

அதாவது,

இயேசு பாலனைப் பற்றியே நாம் சிந்திக்காதிருந்தால்

நாம் கொண்டாடுவது கிறிஸ்மஸ் விழாவாக இருக்காது, வெறும் விழாவாகவே இருக்கும்.

இயேசு பாலனைப் பற்றி சிந்திக்காமல் எப்படி விழா கொண்டாட முடியும் என்று கேட்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் முடிந்தவுடன் திருப்பலிக்கு வந்து,

நற்கருணை வாங்கியவுடன் வீட்டுக்கு செல்பவர்கள்

தாங்கள் ஞாயிறு திருப்பலிக்குச் சென்று வந்ததாகக் கூறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்மஸ் விழாவின் மைய கருத்தைப் பற்றி கவலைப்படாமல் வெளியரங்க விழாவை மட்டும் விமரிசையாகக் கொண்டாடுபவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

விழாவின் மைய கருத்துதான் என்ன?

அன்னை மரியாள் இயேசுவைப் பெற்று எடுப்பதற்கு சத்திரத்தில் கூட இடம் கிடைக்கவில்லை.

மாடுகள் அடையும் தொழு மட்டுமே கிடைத்தது.

பிறந்த இயேசுவை படுக்க வைக்க தொட்டில் கட்ட கூட வசதி இல்லை.

மாடுகளின் தீவனத் தொட்டியில் வைக்கோல் படுக்கையின் மேல் தான் இயேசு பாலன் படுத்திருந்தார்.

இயேசு பாலனுக்கு புது உடை எதுவும் மரியாள் வாங்கி வரவில்லை.

கந்தல் துணிகளைக் கொண்டே அவரைப் போர்த்தியிருந்தாள்..

மார்கழிப் பனியில் அவரது உடல் நடுங்கி கொண்டிருந்தது.

உலகைப் படைத்த கடவுள் ஒன்றுமில்லாத நிலையில் மனிதனாகப் பிறந்திருக்கிறார்.

கந்தல் துணிகளைப் போர்த்திக் கொண்டு,

தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் இயேசு பாலனைப் பார்க்க

நாம் Tip top புத்தாடை அணிந்து செல்கிறோம்.

ஏழையாகப் பிறந்திருக்கும் இறைவனைக் கண்டு தரிசிக்க பணக்காரத் தன்மையுடன் செல்கிறோம்.

மீட்பர் பிறந்திருப்பது மகிழ்ச்சி தான். அதைப்பற்றி நாம் ஆன்மீக ரீதியில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

ஆனால் அவர் பிறந்திருக்கும் நிலை
மகிழ்ச்சிக்குரியதா?

இயேசுவின் பாடுகளும், மரணமும் நமக்கு மீட்பை பெற்றுத் தந்தன.

நமது ஆன்மா மீட்படைவது குறித்து மகிழ்ச்சி தான்.

ஆனால் அவர் 
இரத்த வியர்வை வியர்த்ததையும், 
அடிகள் பட்டதையும், மிதிக்கப்பட்டதையும், 
பாரமான சிலுவையை சுமந்ததையும், சிலுவையின் பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்ததையும், 
ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டதையும், 
மரணம் அடைந்ததையும் பார்த்து சிரித்து கொண்டிருக்க முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சிக்குறியது என்றாலும்,

அவரது பாடுகளும், மரணமும் துக்கத்துக்கு உரியவை தானே.

அழுவாறோடு அழவேண்டும், மகிழ்வாரோடு மகிழ வேண்டும்.

இயேசு பாடுகள் பட்ட போது அன்னை மரியாள் அழுதிருப்பாள், நாமும் அழவேண்டும்.

இயேசு உயிர்த்தபோது அவள் மகிழ்ந்திருப்பாள், நாமும் மகிழ வேண்டும்.

கிறிஸ்மஸ் அன்று இயேசு ஏழையாகப் பிறந்தார். 

ஏழைக் கோலத்தில் படுத்திருக்கும் அவரைப் பார்க்க நாமும் ஏழைக் கோலத்தில் தான் செல்ல வேண்டும், ஃ

Tip top உடை அணிந்து அல்ல.

அவர் நமது ஆன்மீக மகிழ்ச்சிக்காகப் பிறந்தார். நாம் அவரது மகிழ்ச்சிக்காக விழா கொண்டாட வேண்டும். 

நமது அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை அவருக்கே செய்கிறோம். 

நமக்கு புத்தாடை எடுப்பதை விட நமது அயலானுக்கு எடுத்துக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

 நாம் உண்பதை விட நமது அயலானுக்கு உணவு கொடுப்பதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும். 

நமது அயலான் மகிழ கொண்டாடும் விழா தான் இயேசு பாலன் மகிழ கொண்டாடும் விழா.

கிறிஸ்மஸ் விழாவின் மையம் இறையன்பும், பிறர் அன்பும்,

அதாவது,

இயேசு பாலனும், நமது அயலானும்.

இப்போது கிறிஸ்துமஸ் விழாவிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

இயேசு பாலனையும், நமது அயலானையும் மையமாக வைத்து விழாவிற்காக நம்மை தயாரிப்போம்.

பரிசுத்தமான இதயம் இறையன்புக்கு ஆதாரம்.

பகிர்ந்து கொள்ளுதல் பிறர் அன்புக்கு ஆதாரம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

Thursday, December 21, 2023

என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.(லூக்.1:47)

என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.
(லூக்.1:47)   

அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளின் வீட்டில் வைத்து இறைவனைப் புகழ்ந்த போது,

"என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது" என்று பாடினாள்.

அன்னை மரியாளின் மீட்பர் யார்?

அன்னை மரியாள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் மனு மகனாய்ப் பிறந்த இறைமகன் இயேசு தான் மீட்பர்.

மரியாள் இந்த பாடல் வரிகளை பாடிய போது மனித குல மீட்பர் அவளது வயிற்றில்தான் கருவுற்ற குழந்தையாக இருந்தார்.

தான் பெற விருந்த தனது மகனைப் புகழ்ந்துதான் மரியாள் இந்த பாடலைப் பாடினாள்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நாம் அனைவரும் பாவிகள். பாவம் செய்தவர்கள். நம்மை நமது பாவத்திலிருந்து மீட்க ஒரு மீட்பர் தேவை.

ஆனால் மரியாள் ஜென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தது மட்டுமல்ல, அவளது வாழ்நாளில் எந்த ஒரு பாவமும் செய்யவில்லை.

அருள் நிறைந்தவளாய் உற்பவித்தவள் அருள் நிறைந்தவளாய்த்தான் வாழ்ந்தாள்.

பாவம் இல்லாமல் உற்பவித்து பிறந்து வாழ்ந்த அவளுக்கு மீட்பர் எதற்கு?

நோயுற்றவர்கள் மருத்துவரை தேடிச் செல்கிறார்கள். அவர் அவர்களைப் பரிசோதித்து மருந்து கொடுத்து நோயைக் குணமாக்குகிறார்.

அதே மருத்துவர் தனது மகனுக்குத்  தடுப்பு மருந்து கொடுத்து, சத்துள்ள உணவு கொடுத்து நோய் எதுவும் வராத படிக் காப்பாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நோய் வந்தவர்களுக்கு மட்டுமல்ல,  நோய் வராமல் அவரால் காப்பாற்றப்பட்ட அவரது மகனுக்கும் அவர்தான் மருத்துவர்.

பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்து மீட்ட அதே இயேசு தான், 

 தான் பாவமே நெருங்காமல் காப்பாற்றிய தனது அன்னைக்கும் மீட்பர்.

அவர் காப்பாற்றியிருக்காவிட்டால் மரியாள் நம்மைப் போல் தான் உற்பவித்திருப்பாள். 

ஆகவே இறைமகன் இயேசு தான் அவரது தாய்க்கும் மீட்பர்.

தனது வயிற்றில் மனுவுரு எடுத்திருப்பது இறை மகன் என்பது அவளுக்குத் தெரியும்.

தன்னைப் படைத்த கடவுள்தான் தன் வயிற்றில் மனிதனாக உற்பவித்திருக்கிறார் என்பதும் அவளுக்கு தெரியும்.

தன் மகனைப் புகழ்ந்தே இந்தப் புகழ்ச்சிப் பாடலை மரியாள் பாடினாள்.

அவளது மகனை நினைத்ததுமே அவளது இதயம் மகிழ்ச்சியால் பொங்கியது.

இயேசு போதனையாளர் மட்டுமல்ல, சாதனையாளர்.

தனது போதனைகளை வாழ்ந்து காட்டியவர்.

தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றவர்கள் உயர்நிலையை அடைவார்கள் என்று போதித்தவர்,

தனது அடிமையைத் தனது தாய் நிலைக்கு உயர்த்தினார்.

அது மட்டும் அல்லாமல் அவளை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தினார்.

மற்ற மனிதர்களிலும் தாழ்ச்சியுடன் வாழ்கின்ற மிகச் சிறியவர்கள் விண்ணரசில் பெரியவர்களாக கருதப்படுவார்கள் என்றார்.

நமது அன்னையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்,

நமது அன்னையின் அருள் நிறைந்த தன்மை இறைவன் அவருக்கு அளித்த விசேச வரம்.

அருளைப் பொருத்தம் மட்டில் அவள் சமுத்திரம் என்றால் நாம் ஒரு தம்ளர் மட்டுமே.

நாம் பாவிகள். பாவ நிலையில் இறைவனின் அருளை நம்மால் பெற இயலாது.

ஆனாலும் இறைவனின் அருளின் உதவி இன்றி நம்மால் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட முடியாது.

அதற்கான அருளை இறைவன் எல்லோருக்கும் தருகிறார்.

அதைப் பயன்படுத்தி பாவங்களுக்கு 
மனஸ்தாபப்பட்டு, பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் நமது ஆன்மாவிற்கு இறைவன் அருள் கிடைக்கும்.

அந்த அருளின் உதவியால் பாவ சந்தர்ப்பங்களை விலக்கி, பாவங்களைச் செய்யாமல், புண்ணிய வாழ்வு வாழ்ந்தால்

புண்ணியங்களின் அளவுக்கு ஏற்ப நமக்கு அதிகமான அருள் கிடைக்கும்.

சமுத்திரத்தின் அளவு அருள் கிடைக்காவிட்டாலும்

 தம்ளரின் அளவு இறைவனின் அருளை நம்மால் ஈட்ட முடியும்.

நமது புண்ணிய வாழ்வால் எவ்வளவு இறையருளைப் பெற முடியுமோ அவ்வளவு பெற முயற்சி செய்ய வேண்டும்.

கருவுற்றிருந்த நிலையிலும் மலை நாட்டிற்கு நடந்து சென்று எலிசபெத்தம்மாளுக்கு அன்னை மரியாள் உதவி செய்தாள்.

அன்னையைப் பின்பற்றி நாம் நமது பிறருக்கு உதவி செய்வதன் மூலம் அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழலாம்.

நமது அன்னையைப் போல நாமும் நமது ஜெபத்தின் போது தனது அருளால் நம்மை வழி நடத்தி வரும் இறைவனை புகழ்ந்து பாடுவோம்.

நம் மீது இறைவன் கொண்டுள்ள அன்பை நினைத்து அகமகிழ்வோம்.

நமது அன்னையைப் பின்பற்றி வாழ்ந்தால் விண்ணுலகில் அவள் அருகே அமர்ந்து 

நித்திய பேரின்ப வாழ்வு வாழ நமக்கு இறைவன் அருள் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

Tuesday, December 19, 2023

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" (லூக்.1::38)

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 
(லூக்.1::38)

தாயைப் போல் பிள்ளை, நூலை போல் சேலை என்பார்கள்.

இயேசு தனது அன்னை மரியாளை நமது தாயாகத் தந்திருக்கிறார்.

நாமும் அவளை நமது தாயாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் மரியாளின் பிள்ளைகள் என்றால் நாம் அவளைப் போல ஆண்டவரின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

சிறிது நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

வேலைக்காரர்களுக்கும் (Servants) அடிமைகளுக்கும் (Slaves) வித்தியாசம் உண்டு.

வேலைக்காரர்கள் எஜமானர்களின் உடைமைப் பொருள் அல்ல.

அவர்களுக்கு இஷ்டம் இருந்தால் வேலையைப் பார்த்துவிட்டு அதற்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம். 

இஷ்டம் இல்லாவிட்டால் வேலையை விட்டு நின்று கொள்ளலாம்.

ஆனால் அடிமை எஜமானனின் உடைமை.

எஜமான் அவர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

சம்பளம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்களுக்கு உணவும் வாழ வசதியும் செய்து கொடுத்தால் போதும்.

நாம் ஒரு bike வைத்திருந்தால் அதற்கு சம்பளமா கொடுக்குறோம்?

அதற்கு உணவாக பெட்ரோலை மட்டும் தானே கொடுக்கிறோம்.

அது நிற்க வீட்டில் இடமும் கொடுக்கிறோம்.

நமது அன்னை மரியாள் தன்னை இறைவனுடைய அடிமையாக அர்ப்பணித்து விட்டாள்.

தன்னுடைய நலனுக்காக அல்ல இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து விட்டாள்.

அவள் முழுக்க முழுக்க இறைவனுடைய உடைமை.


நாம் நமது உடைமையாகிய பைக்கை பெட்ரோலால் நிரப்பி அதற்கு உயிர் கொடுப்பது போல,

இறைவன் மரியாளைத் தனது அருளால் நிரப்பி ஆன்மீக உயிர்த்துடிப்போடு அவளை வாழச் செய்தார்.

நாசரேத் ஊரில் சூசையப்பருடைய
சொந்த வீட்டிலேயே இயேசு குழந்தையாகப் பிறந்திருக்கலாம், அவர் நினைத்திருந்தால்.

ஆனால் சூசையப்பறையும் நிறைமாத கர்ப்பிணியான மரியாளையும் பெத்லகேம் ஊருக்கு பயணம் செய்ய ஏற்பாடு செய்தவர் இறைவன் தானே.

அங்கே அவர்களுக்கு தங்குவதற்கு வசதியான இடம் கூட ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை.

மாடுகள் அடையும் சாணி நாற்றம் வீசும் மாட்டுத் தொழுவத்தையே இறைவன் அவர்களுக்கு ஏற்பாடு செய்தார்.

ஆண்டவரது அடிமைகளாகிய அவர்கள் எதிர்க் கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை எல்லாம் தங்களது கஷ்டத்தை பார்க்காமல் அப்படியே செய்தார்கள்.

மாட்டுத் தொழுவத்தில் தான் உலகைப் படைத்த இறை மகன் மனு மகனாகப் பிறந்தார்.

யூதர்களின் அரசராகப் பிறந்த அவரை முதலில் வந்து வாழ்த்தியவர்கள் ஆடு மேய்க்கும் இடையர்கள்.

அவரது பிறப்பைப் பற்றிய செய்தி அவர்களுக்குத் தான் முதலில் அறிவிக்கப்பட்டது.

உலகையே காத்து வரும் இறைவன் ஏரோதிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவர்களை தன்னை எடுத்துக் கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னார்.

அடிமைகள் எதிர்க் கேள்வி கேட்காமல் சொன்னபடி செய்தார்கள்.

எகிப்தில் மூன்று ஆண்டுகள் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்தார்கள்.

தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை எல்லாம் முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.

முழு நேரமும் இறை மகன் அவர்களோடு தான் இருந்தார்.

அவர்களை கஷ்டங்களிலிருந்து காப்பாற்றவில்லை.

மூன்று ஆண்டுகள் கழித்து தான் அவர்களைச் சொந்த நாட்டுக்கு இறைமகன் வரச் சொன்னார்.

அங்கே பிழைப்புக்கு தச்சு வேலைதான் செய்தார்கள்.

இறை மகனே அந்த வேலையைத் தான் செய்தார்.

எல்லா வகையிலும் தனது அன்னைக்கும் வளர்ப்புத் தந்தைக்கும் கீழ்படிந்து நடந்தார்.

பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த இறை மகன்,

தான் நாசரேத்தில் வாழும்போது சூசையப்பரை மரணத்திலிருந்து காப்பாற்றவில்லை.

இயேசுவின் மடியிலேயே தலை வைத்து அவர் இறந்தார்.

அடிமைகளுக்கு சொந்த ஆசைகள் இருக்கக் கூடாது.

எஜமானனின் ஆசை தான் அவர்களின் ஆசை.

ஆகவே தான் சூசையப்பரும் அன்னை மரியாளும் இறை மகனின் ஆசைப்படி மட்டும் வாழ்ந்தார்கள், அடிமைகளாக.

உலகத்தில் ஆண்டவரின் அடிமையாக வாழ்ந்ததால் தான் மரியாள் விண்ணகத்தில் பரலோக பூலோக அரசியாக முடி சூட்டப்பட்டாள்.

ஆண்டவர் அவரது அடிமைகளுக்கு கொடுத்த உணவு அவரது அருள்.

கொடுத்த வீடு அவருடைய மோட்ச வீடு.

நாம் அன்னை மரியாளின் பிள்ளைகள், அடிமை பெற்ற பிள்ளைகள்.

நாமும் ஆண்டவருடைய அடிமைகள் தான்.

அன்னை மரியாள் தனது அடிமை வாழ்வை வாழ்ந்தது போல அவரது பிள்ளைகளாகிய நாம் வாழ்கிறோமா?

அல்லது நமது இஷ்டப்படி வசதிகளோடு வாழ்கிறோமா?

அடிமைகளுக்கு சொந்தமாக ஆசைகள் எதுவும் இருக்கக் கூடாது என்று நமக்கு தெரியும்.

ஆனால் நமது ஜெபத்தில் மட்டும்,

''உமது சித்தம் விண்ணுலகில் நிறைவேறுவது போல பூவுலகிலும் நிறைவேறுவதாக"

என்று கூறிவிட்டு,

நமது ஆசைகள் நிறைவேறுவதற்காகத் தானே வீட்டிலும், கோயிலிலும் ஜெபிப்பதோடு,

 புனிதர்களின் திருத்தலங்களுக்கு சென்றும் ஜெபிக்கிறோம்!

"நான் தேர்வில் வெற்றி பெற வேண்டும்,

நல்ல சம்பளத்தோடு உயர்ந்த உத்தியோகம் கிடைக்க வேண்டும்,

நல்ல இடத்தில் திருமணம் நடக்க வேண்டும்,

முதலில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும்,

சொத்து சுகங்கள் நிறைய கிடைக்க வேண்டும்,

கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்,"

என்பவை போன்ற ஆயிரக்கணக்கான கருத்துக்களுக்காக தானே புனிதர்களின் திருத்தலங்களுக்குத் திருயாத்திரைகள் போகிறோம்!

நாம் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு தானே இயேசுவைப் பின்பற்ற வேண்டும்.

ஆனால் சிலுவைகள் வரும்போது அவற்றை இறக்கி வைக்க தானே ஆண்டவரின் உதவியைத் தேடுகிறோம்!

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்ன இயேசுவிடம்

எத்தனை பேர் "உமக்காகச் சுமக்க எனக்கு சிலுவையைத் தாரும் ஆண்டவரே" என்று கேட்கிறோம்?

அடிமைத் தாயின் பிள்ளைகளாகிய நாம் எஜமானர்களைப் போல வாழ ஆசைப்படுகிறோம்.

மாடடைத் தொழுவில் இயேசு பாலனை மடியில் சுமந்த மரியாள்,

சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடலை மடியில் சுமந்த நேரம் வரை 

தன் மகனின் அடிமையாக, அவரைப் போலவே சிலுவையைச் சுமந்து தான் வாழ்ந்தாள்.

நாமும் ஆண்டவரின் அடிமைகளாக,

நமக்காக வாழாமல்,

அவருக்காக மட்டுமே வாழ்ந்தால் தான் நாம் உண்மையில் மரியாளின் மைந்தர்கள்.

லூர்து செல்வம்.

Monday, December 18, 2023

சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்..(மத்.1:24)


 சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்..
(மத்.1:24)

அன்னை மரியாள் மூன்று வயதிலிருந்து கோவிலில் தான் வளர்ந்தாள்.

சிறு வயதிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து விட்டாள்.

இது அவளை வளர்த்த கோவில் குரு சக்கரியாசுக்கும் தெரியும்.

ஆகவே அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் அவளது கன்னிமைக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய கணவனைத் தேர்ந்தெடுக்க முடிவு முடிவு செய்தார்.

மனைவி இறந்தபின் விதவர்களாக (Widowers) வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் கோவிலுக்கு வரும்படி அழைத்தார்.

வந்தவர்களில் சூசையப்பரும் ஒருவர்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கம்பு (rod) கொடுக்கப்பட்டது.

சூசையப்பர் வைத்திருந்த கம்புக்குள்ளிருந்து ஒரு புறா வெளிப்பட்டு அவரின் தலை மேல் அமர்ந்தது.

அவரே மரியாளின் கணவராகத்
 தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது கன்னிமைக்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர் வாக்குக் கொடுத்த பின்பு தான் மரியாள் அவரைத் தனது கணவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தாள்.

திருமண ஒப்பந்தம் நடந்தது.

அவர் அவளைத் தனது இல்லத்தில் விட்டு விட்டு தச்சு வேலை செய்வதற்காக வெளியூருக்குச் சென்று விட்டார்.

அந்த சமயத்தில்தான் கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி இறைமகன் அவளது வயிற்றில் மனு மகனாக கருத்தரிக்கப் போகும் செய்தியை அறிவித்தார்.

அது இறைவனின் சித்தம் என்பதால்,

"இதோ நான் ஆண்டவரின் அடிமை" 

எனக் கூறி இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டாள்.

அந்த வினாடியே இறைமகன் அவளது வயிற்றில் மனு மகனாக உருவெடுத்தார்.

இந்த நிகழ்வு சூசையப்பருக்குத் தெரியாது.

அவர் தனது வேலை முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

மரியாள் கருவுற்றிருப்பதை அறிந்தார்.

அவர் நீதிமான்.

 அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராய், அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், 

 ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 

"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். 

ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். 

அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

மரியாளுக்கு நேரடியாகத் தோன்றிய தூதர் சூசையப்பருக்குக் கனவில் தோன்றினார்.

ஆனாலும் அவர் கொடுத்த செய்தியை சூசையப்பர் ஏற்றுக்கொண்டார்.

சூசையப்பரின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு

அவர் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டது பற்றி ஒரு சில நொடிகள் தியானிக்கலாம்.

அவர் ஒரு நீதிமான்.

கணவனுக்குத் தெரியாமல் கருத்தரித்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம்.

சட்டப்படி நடப்பது தான் நீதி என்றால் அதைச் சூசையப்பர் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் தெய்வ பயம் உள்ள நீதிமான்.

நீதிப்படி பார்த்தால் கடவுளே தனக்கு எதிராகப் பாவம் செய்த நமது முதல் பெற்றோரைத் தண்டித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் நீதியோடு அளவற்ற அன்பும் நிறைந்தவர்.

நமது முதல் பெற்றோர் விசயத்தில் கடவுள் எடுத்த முடிவு அளவற்ற அன்பும், நீதியும் கலந்தது.

நீதிப்படி மனிதன் 
தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அன்பின் அடிப்படையில் அந்த பரிகாரத்தைத் தானே செய்வது என்று கடவுள் தீர்மானித்தார்.

சூசையப்பர் ஒரு நீதிமான்.

நீதிப்படி மட்டும் பார்த்தால் அவர் மரியாளை விலக்கி வைத்து, அவளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் இறையன்புமிக்க நீதிமான்.

மரியாளுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட அவரது மனது சம்மதிக்கவில்லை.

ஆகவே அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இப்போது நமது மனதில் ஒரு கேள்வி எழும்.

எல்லோருக்கும் தெரியும் படி விலக்கினாலும்,

மறைவாக விலகினாலும் முடிவு ஒன்றுதான்.

விலக்கினால் மரியாள் தனியாக வாழ வேண்டியிருக்கும்.

அதுவே மற்றவர்கள் முன்னால் அவளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும்.

அதை சூசையப்பர் விரும்பியிருக்க மாட்டார்.

"மறைவாக விலக்குவது" என்பது பற்றி விளக்கம் எதுவும் நற்செய்தி நூலில் தரப்படவில்லை.

நமது விளக்கம் நீதிமானாகிய சூசையப்பருக்கும், கற்புக்கு அரசியாகிய மரியாளுக்கும் விரோதமாக இருந்து விடக்கூடாது.

சூசையப்பர் மரியாளை மனைவி என்ற அந்தஸ்த்திலிருந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாக விலக்கி வைத்து விட்டு,

அவளோடு சகோதரன் உறவில் வாழ்ந்து,

அவள் பெறவிருக்கும் மகனைத் தன் மகனாக ஏற்று அவளோடு வாழத் தீர்மானித்திருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு முன்னால்தான் மரியாளின் கணவன்.

மரியாளோடு தனிப்பட்ட உறவில் சகோதரன்.

இதனால் கணவனுக்குத் தெரியாமல் கருத்தரித்த மரியாளுக்கு உலகினர் முன்னிலையில் எந்த அவமானமும் ஏற்படாது.

கடவுள் தனது சித்தத்தை தன்னுடைய தூதர் மூலம் சூசையப்பருக்கு தெரிவித்துவிட்டார்.

சூசையப்பர் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொண்டு, மனு மகனின் வளர்ப்புத் தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் சித்தம்.

இதனால் மரியாளின் கன்னிமைக்கு எந்தவித பங்கமும் வராது.

இயேசுவின் தாய் அவரைக் கருத்தரிக்கு முன்னும் கன்னி,

கருத்தரித்தபோதும் கன்னி,

அவர் பிறந்த பின்னும் கன்னி.

இயேசு பிறக்கும் போதும் அவளது கன்னித் தன்மைக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை.

மரியாளுக்கு பிரசவ வலி எதுவும் ஏற்படாமல்,

ஒரு கண்ணாடியின் வழியே ஒளி செல்வது போல,

இயேசு அவளது வயிற்றிலிருந்து பிறந்தார்.

சூசையப்பருக்கு ஏற்பட்ட வாழ்க்கை சூழ்நிலை வேறு யாருக்கும் ஏற்படாது.

ஆனாலும் நமது வாழ்வில் ஏற்படும் எந்தப் பிரச்சனையையும் சூசையப்பரின் மனநிலையோடு சந்திக்க வேண்டும்.

நாம் எடுக்கும் எந்த முடிவும் நீதிக்கும், அன்புக்கும் விரோதமாக இருந்து விடக் கூடாது.

நம்மை நம்பி வாழ்பவர்களுக்கு நம்மால் எந்தவித அவமானமும் ஏற்பட்டு விடக்கூடாது.

மரியாள் கருத்தரித்த விதம் எப்படி என்று சூசையப்பருக்குத் தெரியாதிருந்தபோதும்

அவளுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

குற்றமே செய்யாத மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்து,

அந்த சந்தேகத்தாலேயே குடும்ப வாழ்க்கையை நரக வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும்

நண்பர்களுக்கு சூசையப்பர் ஒரு பாடம்.

நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீதியும், அன்பும் கலந்த தீர்வினைக் காண்போம்.

லூர்து செல்வம்..

Sunday, December 17, 2023

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.(மத். 7:1)

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.(மத். 7:1) 

"தாத்தா, இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இப்போது நரகத்தில்தானே இருப்பான்."

"'மனிதனின் ஆழ்மனதை இறைவன் மட்டுமே அறிவார்.

நமக்கு புறம் மட்டுமே தெரியும்.

நமக்கு தெரிவதை மட்டும் வைத்து நாம் யாரைப் பற்றியும் தீர்ப்புச் சொல்லக்கூடாது.

நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள். என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்."

"மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறாரே"

"'யூதாஸ் செய்தது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தின் கனாகனத்தை நமக்கு உணர்த்தவே இயேசு அப்படி சொன்னார்.

நாம் அப்படிப்பட்ட பாவத்தை செய்து விடக்கூடாது அல்லவா."

"யூதாஸ் மோட்சத்திற்குப்
 போயிருப்பான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?"

"நாம் எல்லோரும் பாவிகள். இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகத்துக்கு வந்தார்.

நம்மைத் தேடி வந்தது நமது பாவத்திலிருந்து நம்மை மீட்க.

பரிசேயர்களும், யூத மதகுருக்களும், மறை நூல் வல்லுனர்களும் சேர்ந்துதான் இயேசுவைக் கைது செய்து,

பிலாத்தின் மூலம் அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள்.

யூதாஸ் அவர்களுக்கு உதவி செய்தான்.

யூதாஸ் உட்பட அவர்கள் அனைவரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குக் காரணமாக இருந்தார்கள்.

அளவற்ற இரக்கத்தின் உருவாகிய இயேசு மரண வேதனையோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது தனது தந்தையை நோக்கி,

"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று செபித்தார்.

அவர் உண்மையிலேயே செபித்தாரா? 

ஒப்புக்குச் செபித்தாரா?"

"அவர் நாம் நமது பகைவர்களையும் நேசிக்க வேண்டும்,

நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்

என்று போதித்த கடவுள்.

அவர் எப்படி ஒப்புக்குச் செபித்திருப்பார்?

தந்தையோடு அவர் ஒரே கடவுள் தானே!

அப்படியானால் தன்னை நோக்கித் தானே அந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாய் இருப்பது தானே சத்தியம்."

"'அப்படியானால் மன்னிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டிய இயேசுவே அவர்களை மன்னித்திருப்பார் அல்லவா!"

"ஆனால், தாத்தா, அவர் மன்னிப்பதற்குத் தயாராக இருந்திருப்பார்.

ஆனால் பாவம் செய்தவர்கள் பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டுமே!

கேட்டால் தானே மன்னிப்புக் கிடைக்கும்!"

"'உனது அம்மா வீட்டில் உனக்கு உணவு தயாரித்து வைத்திருக்கிறார்கள்.

நீ வீட்டுக்குப் போய்விட்டு வந்திருக்கிறாய்.

நீ சாப்பிட்டுவிட்டு தான் வந்திருப்பாய் என்று நான் நம்பினால் அது தவறா?"

"அதாவது, இயேசு அவர்களை மன்னிக்கத் தயாராக இருந்தார், அவர்கள் மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால் அதற்கு பைபிளில் ஆதாரம் இல்லையே!"

"'பாவிகள் மன்னிப்புக் கேட்க வேண்டியது கடவுளிடம்.

மனஸ்தாபப் படவும், மன்னிப்புக் கேட்கவும் வேண்டிய அருள் வரங்களை கொடுக்க வேண்டியது கடவுள்.

நான் இயேசுவை நம்புகிறேன்.

அவர்களை மன்னியும் என்று தந்தையிடம் வேண்டியவர் உறுதியாக அதற்கான அருள் வரங்களைக் கொடுத்திருப்பார்.

உன்னிடமும், என்னிடமும் சொல்லிவிட்டு தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை."

"ஆனால் யூதாஸ் நாண்டு கொண்டல்லவா செத்தான்.

அதுவே சாவான பாவம் ஆச்சே."

"'இன்னும் நீ புறத்தை மட்டுமே பார்க்கிறாய். அகம் நமக்குத் தெரியாது.

இருந்தாலும் உனக்காக பைபிளில் இது பற்றி சிந்திக்க ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்போம்.

யூதாஸ் கொலையாளிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது உண்மைதான்.

ஆனால் கொலை செய்யப்படுவதற்காகக் காட்டி கொடுக்கவில்லை.

அவன் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்தவன்.

பலமுறை அவரது விரோதிகள் அவரைப் பிடிக்க முயன்ற போது அவர் யாருக்கும் தெரியாமல் தப்பித்திருக்கிறார்.

இது யூதாசுக்கும் தெரியும்.

அவன் பண ஆசை பிடித்தவன் என்பதும் உண்மைதான்.

ஆகவே இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் பணம் கிடைத்து விடும், ஆனால் இயேசு எப்படியும் தப்பித்து விடுவார் என்று அவன் எண்ணியிருக்க வேண்டும்.

அவரைக் கொல்வதற்காகக் காட்டிக் கொடுத்திருந்தால். அவருக்கு மரணத் தீர்வை கிடைத்த போது அவன் சந்தோசம் அல்லவா பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவன் அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான்.

மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்ததற்காக மனம் வருந்தினான்.

பணத்தையும் தூர எறிந்து விட்டான்.

உணர்ச்சி வேகத்தில் நாண்டு கொண்டான்.

நான்டு கொண்டது பாவம். ஆனாலும் அந்த சமயத்தில் அவனது உள்ளத்தில் இருந்தது மாசற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்ததற்கான வருத்தம்.

செய்த பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்பட ஒரு வினாடியின் சிறு பகுதியே போதும்.
(A small fraction of a second is enough to feel sorry for one's sin)

இயேசு தந்தையை நோக்கி செய்த செபத்தையும், யூதாஸின் மனநிலையையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் 

அவன் மரணத்தின் இறுதி வினாடியில் உத்தம மனஸ்தாபட்டிருப்பான் என்று நம்பினால் தவறா?

ஒருவரைப் பற்றி கெட்ட விதமாய் தீர்ப்புக் கூற நமக்கு உரிமை இல்லை.

ஆனால் நல்லதை மட்டும் பார்த்து நல்ல விதமாய்க் கருத்து கூறினால் தப்பு இல்லையே!

ஐயோ பாவம், யூதாஸ்.

இரக்கத்தின் ஊற்றாகிய இயேசு மாசற்ற இரத்தத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக வருந்திய அவன் மேல் அருள் வரங்களை அள்ளிப் போட்டிருப்பார்.

அவனும் மனம் திரும்பியிருப்பான்.

நமது பாவம் பெரியதாக இருக்கலாம், நமது மீட்பரின் இரக்கம் அதைவிடப் பெரியது.

இரண்டையும் தராசில் வைத்தால் இரக்கம் தான் வெல்லும்."

" யூதாசுக்கு சார்பாக வாதிட வேறு ஏதாவது இருக்கிறதா?"

"'அவன் யூதர்களை இயேசு ரோமையர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பார் என்று நம்பியிருந்தான்.

ஆனால் இயேசு தனது பொது வாழ்வின் போது அநேக நோயாளிகளைக் குணமாக்கியதோடு அவர்களது பாவங்களையும் மன்னித்தார்.

எப்போதும் ஆயிரக்கணக்கானோர் அவரது நற்செய்தியைக் கேட்பதற்காக அவர் கூடவே செல்வார்கள்.

ஆனால் இயேசு அரசியல் புரட்சி எதுவும் செய்யவில்லை.

இயேசுவின் தலைமையில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும் என்று யூதாஸ் விரும்பினான்.

இயேசுவைக் காட்டிக் கொடுத்தால் அவரது விரோதிகள் அவர்களை கைது செய்வார்கள்.

அதே சமயத்தில் இயேசுவால் நன்மை பெற்ற ஆயிரக்கணக்கானோர் இயேசுவுக்காக அரசை எதிர்த்து புரட்சி செய்வார்கள் என்று அவன் நம்பினான்.

அவன் பண ஆசை பிடித்தவன் என்பது உண்மைதான்.

ஆனாலும் பண ஆசையை விட இயேசுவின் மேல் உள்ள மரியாதை அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

ஆகவேதான் அவருக்கு மரணத் தீர்வை இட்டவுடன் பணத்தை தூர வீசி எறிந்து விட்டான்.

பணத்துக்கு அடிமையாகிவிடவில்லை.

இயேசுவின் இரக்கம் நிச்சயமாக வென்றிருக்கும்.

ஒருவன் இயேசுவுக்கும் பணத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது.

இயேசுவா? பணமா? என்ற கேள்வி வந்தபோது பணத்தை விட்டு விட்டான்.

இயேசுவிடம் போக போதிய தைரியம் வரவில்லை.

ஆனாலும் தனக்காக

 தான் பெற்ற பணத்தை வீசி எறிந்த யூதாசுக்கு ஆன்மீக உதவியாக 

இயேசு அருள் வரங்களை அள்ளித் தந்திருக்க வேண்டும்.

அளவற்ற அன்பின் மிகுதியால் தானே அவர் யூதாசையும் படைத்திருப்பார்!

இயேசுவின் அன்பு வென்றது என்று உறுதியாக நம்புகிறேன்.

பாவிகளாகிய நாமும் அதைத்தானே நம்பியிருக்கிறோம்!

நாம் பாவம் செய்யும் போதெல்லாம் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு தானேயிருக்கிறோம்.

நாம் அளக்கிறபடி தான் நமக்கும் அளக்கப்படும்.

நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுமென்றால்

 மற்றவர்களைப் பற்றி கெட்ட விதமாய் தீர்ப்புச் சொல்லக்கூடாது."

"யூதாஸைப் பற்றி இப்படி கூறு நீங்கள் அவரால் குணமாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?

 இயேசு பிலாத்துவால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இயேசுவிற்கு சார்பாக குரல் கொடுக்க அவர்கள் அங்கு வரவில்லையே."

"'அவர்கள் அங்கு வரவில்லை என்பது உண்மைதான்.

இயேசு கைது செய்யப்பட்டது ஈஸ்டருக்கு முந்திய வியாழக்கிழமை இரவு.

தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை.

இயேசு மரித்தது வெள்ளிக்கிழமை மாலை.

ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது.

"தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! உன்னதங்களில் ஓசான்னா! " என்று ஆர்ப்பரித்து 

ஜெருசலேமுக்குள் அழைத்து வந்த மக்கள் நகரில் தான் இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஏன் இயேசுவுக்கு சார்பாக பேச பிலாத்துவின் அரண்மனைக்கு வரவில்லை என்பது நமக்கு தெரியாது.

தெரியாத விஷயத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்தால் உண்மையை அறிய முடியாது.

அவர்களைப் பற்றி தீர்ப்புக் கூறுவதற்குப் பதிலாக 

 நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வோம்.

எல்லா சூழ்நிலைகளிலும் நாம் இயேசுவுக்குப் பிரமாணிக்கமாயிருப்போம்.

யாராவது இயேசுவுக்கு எதிராகப் பேசினால் அவர்களோடு வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக உண்மையான இயேசுவை அவர்களுக்குக் கொடுப்போம்.

இயேசுவுக்கு எதிராக தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்வோம்.

நமது நடவடிக்கைகளிலிருந்து நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

இயேசுவின் சாயலாக வாழ்ந்து நம்மில் இயேசுவைக் காணச் செய்வோம்.

யாரையும் தீர்ப்பிட வேண்டாம்.

தீர்ப்பு நாள் நமக்குச் சாதகமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

Saturday, December 16, 2023

ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.(அரு.1:1)

ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.
(அரு.1:1)

"தாத்தா, நற்செய்தி  அருளப்பர் ஏன் இறைமகனை வார்த்தை என்கிறார்?"

"'கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?"

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்களும் கேள்வி கேட்கிறீர்கள்?"


"'தெரிந்ததிலிருந்து தெரியாததற்குப் போக வேண்டும்.

என் கேள்விக்கு முதலில் பதில் சொல்"

"கடவுள் மனிதனைத் தன் சாயலில் படைத்தார்."

"'மிருகங்கள் நம்மைப் போலவே உயிரோடு பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன.

அவைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?"

"மிருகங்களுக்கு ஆன்மா இல்லை. நாம் ஆன்மாவோடு பிறந்தோம்."

"'மிருகங்களுக்கும் உடல் இருக்கிறது. நமக்கும் உடல் இருக்கிறது.

மிருகங்களும் சாப்பிடுகின்றன, நடக்கின்றன, ஓடுகின்றன, தூங்குகின்றன.

நாமும் சாப்பிடுகின்றோம் நடக்கின்றோம் ஓடுகின்றோம், தூங்குகிறோம்.

எதில் நாம் மிருகங்களிலிருந்து வேறுபடுகிறோம்?"

"நமக்கு சிந்திக்கத் தெரியும், 
சிந்தித்ததைப் பேசத் தெரியும், 
சிந்தனைக்கு ஏற்ப செயல் புரியத் தெரியும்.

மிருகங்களால் சிந்திக்கவும் முடியாது, பேசவும் முடியாது."

"'சிந்தனை, சொல், செயல் மூன்றும் நம்முடைய இயல்பு.

மிருகங்கள் நடப்பதையும் ஓடுவதையும் செயல் என்று கூற முடியாது, ஏனென்றால் அவை சிந்தனையின் விளைவு அல்ல.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும்தான் நமக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கின்றன.

கடவுளும் சிந்திக்கிறார், 
சிந்தனையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், 
நம்மில்  செயல் புரிகிறார்.

நாமும் சிந்திக்கிறோம், 
சிந்திப்பதை சொல் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம், செயல் புரிகிறோம்.

நாம் சிந்திக்கும்போது நமது மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன.

எண்ணங்கள் வார்த்தையின் வடிவில் இருக்கின்றன.

வார்த்தைகளைத் தான் பேசுகிறோம்.

நாம் சிந்திப்பதைச் செயலில் காட்டுகிறோம்."

"அதாவது கடவுளும் சிந்திக்கிறார்.

தான் சிந்திப்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நம்மில் செயல் புரிகிறார்.

 நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவை தான் நம்மை நமக்கு கடவுளின் சாயலைக் கொடுக்கின்றன என்று சொல்கிறீர்கள், அப்படித்தானே."

"'அப்படியே தான்"

"ஆனால், தாத்தா, நமக்கு வாய் இருக்கிறது. அதன் மூலம் நமது எண்ணங்களை வார்த்தை வடிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

 ஆனால் கடவுள் ஆவியானவர். அவரால் எப்படி நம்மைப் போல் பேச முடியும்?"

"'நமது ஆன்மா ஆவி, கடவுளைப் போல.

நமது உடல் மண்ணில் உள்ள பொருட்களால் ஆனது.

ஆவியான கடவுளுக்கு உடல் இல்லை, ஆகவே நம்மை போல் வாயும் இல்லை, நம்மைப் போல் பேச முடியாது.

ஆனால் அவரது சிந்தனைகளை நம்முடைய மனதோடு அவரால் பகிர்ந்து கொள்ள முடியும்.

அவரது எண்ணங்களை தீர்க்கத்தரிசிகளோடு பகிர்ந்து கொண்டதால் தான் பைபிள் உருவானது.

பைபிள் என்றாலே இறைவாக்கு தானே.

நமது உள்ளத்தில் அவர் பேசுகிறார்.

நமது சிந்தனையில் தோன்றும் எண்ணங்கள் வார்த்தை வடிவில் உள்ளன.

நமது சிந்தனையில் வார்த்தைகள் பிறக்கின்றன.

தந்தை இறைவனின் சிந்தனையில் பிறக்கும் வார்த்தைதான்  மகன்.

ஆகவே தான் இறைமகனை வார்த்தை என்கிறோம்.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்பு தான் பரிசுத்த ஆவி. அன்பின் தேவன்."


"இப்போது நான் சொல்கிறேன்.

"ஆதியிலே வார்த்தை இருந்தார்:

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், 

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." என்று அருளப்பர் கூறுகிறார்.

நித்திய காலத்திலிருந்தே  தந்தை இறைவன் வார்த்தையாகிய மகனைப் பெறுகிறார்.

அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், ஆகவே தந்தை கடவுள்.

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்." ஆகவே மகன் கடவுள்.

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் பரிசுத்த ஆவி கடவுள்.

மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.

இந்த பரிசுத்த தம திரித்துவத்தின் இரகசியத்தை

கடவுள் அருளப்பரோடு பகிர்ந்து கொள்கிறார்.

அருளப்பர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்."


"'தந்தையிடமிருக்கும் வார்த்தை நம்மை மீட்பதற்காக மனுவுருவானார்.
  
தனது மீட்புப் பணியை தூய ஆவியின் மூலம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தந்தை படைத்தார்.
மகன் மீட்டார்.

தூய ஆவி ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மூவரும் ஒரே கடவுள்

ஆகவே இப்படியும் சொல்லலாம்.

கடவுள் படைத்தார்.
கடவுள் மீட்டார்.
கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மனித உரு எடுத்தது மகன் மட்டுமே."

"தந்தை இறைவன் தனது சிந்தனையில் பிறந்த வார்த்தையை, அதாவது மகனை,
 நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

தந்தையுள் வாழும் அவர் நமக்குள்ளும் வாழ்கிறார்.

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் வார்த்தையை, அதாவது மகனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் கடவுளைப் பற்றியே நினைத்து,
அவரைப் பற்றியே பேசி, அவருக்காகவே செயல் புரிந்து வாழ்ந்தால் 

மற்றவர்கள் நம்மில் கடவுளைக் காண்பார்கள்.

நம்முள் வாழும் வார்த்தையானவர் அன்பே உருவானவர் .

அவரது அன்பை நம்மோடு பகிர்ந்துள்ளார். 

கடவுள் தன்னையும் நேசிக்கிறார்,  நம்மையும் நேசிக்கிறார்.

நாமும் கடவுளை முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல் நமது அயலாணையும் நேசிக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பு இருக்க வேண்டும்.

நமது அன்பை அனுபவிக்கும் நமது அயலான் நம்மில் அன்பே உருவான கடவுளைக் காண வேண்டும்.

இயேசு நமக்கு முன்மாதிரிகையாய்  வாழ்ந்தது போல நாம் அவரைப் பின்பற்றி நமது அயலானுக்கு முன்மாதிரிகையாய் வாழ வேண்டும்.

நமது முன்மாதிரிகையான வாழ்க்கை  நம்மை  செயல் மூலம் வார்த்தையை அறிவிக்கும் வீரர்களாக மாற்றும்.

இவ்வுலகில் வார்த்தைக்காக வாழ்ந்து மறுவுலகில் வார்த்தையோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

:

Friday, December 15, 2023

"விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்?"(மத். 17:17)

''விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்?"
(மத். 17:17)

வலிப்பினால் துன்பப்பட்ட ஒரு பையனைக் குணமாக்க முடியாத தனது சீடர்களைப் பார்த்து இயேசு,

''விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே,'' என்று இயேசு தனது சீடர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

அவர்களைப் போல் நாமும் விசுவாசம் இல்லாமலிருந்தால் நம்மைப் பார்த்தும் அதே வார்த்தைகளைக் கூறுவார்.

உலகைச் சார்ந்த தொழில் அதிபர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு ஆட்கள் தேவை என்றால் முதலில் விளம்பரம் கொடுப்பார்கள்.

அதில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதி, தொழில் திறமை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பார்கள். 

விண்ணப்பிப்பவர்களையும் நேர்காணலில் தாங்கள் எதிர்பார்த்த தகுதி இருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் ஆண்டவர் கையாண்ட முறையே வேறு.

உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணி உலகில் உள்ள மற்ற எல்லாப் பணிகளையும் விட மிகப்பெரிய பணி, கடினமான பணி.

அப்பணிக்கு அடிப்படைத் தேவை உறுதியான விசுவாசம்.

அடுத்த தேவை இறையியலில் ஞானம்.

மனிதனை படைக்கும் போது அவனது உடலை களிமண்ணால் செய்து, அவனது அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதியது போல,

தகுதியை அடிப்படையாகக் கொள்ளாமல் சாதாரண படியாத பாமர மக்களைச் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

சீடர்கள் இயேசு தங்களுக்கு ரோமை பேரரசிடமிருந்து அரசியல் விடுதலை பெற்றுத் தரப் போகிறார் என்று எண்ணினார்கள்.

இயேசு நிறுவப் போகும் சாம் ராஜ்ஜியத்தில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் வேண்டும் என்று அருளப்பரும், வியாகப்பரும் அவரிடம் கேட்டதிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

சீடர்களுக்கு ஆன்மீகத்தில் பயிற்சி கொடுப்பதற்காகத்தான் தனது பொது வாழ்வின் போது அவர்களைத் தன்னுடனே இயேசு வைத்திருந்தார்.

அவர்கள் முன்னால் வியாதியஸ்தர்களைக் குணமாக்கிய போது,

"உனது விசுவாசம் முன்னே குணமாக்கிற்று." என்று சொல்வார்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு சீடர்களிடம் விசுவாசம் வளரவில்லை.  

ஒருநாள் தம்முடைய சீடரோடு கடலில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது,

இயேசு படகில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது புயற்காற்று   வீசியது. 

கடவுள் தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று சீடர்கள் விசுவசித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் படகு மூழ்கி விடுமோ என பயந்து,

"குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினர்.

 அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.

பின்னர், அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார்.

இன்னொரு முறை இயேசு கடல் மேல் நடந்து வந்தார்.

இராயப்பரும் கடல் மேல் நடக்க ஆசைப்பட, இயேசு "வா" என்றார்.

இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.

காற்று பலமாக வீசியது.

இராயப்பர் தனது முழு கவனத்தையும் இயேசுவின் மேல் வைக்காமல் காற்றையும் கவனித்ததால் மூழ்க ஆரம்பித்தார்.

ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.

 உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.

பொது வாழ்வின் போது தான் பாடுகள் படப்போவதையும், மரிக்கப் போவதையும், மூன்றாம் நாள் உயிர் போவதையும் பற்றி சீடர்களிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் இயேசு உயிர்த்த பின்பு துவக்கத்தில் சீடர்கள் அதை நம்பவில்லை.

இயேசு விண்ணகம் எய்திய பின் பரிசுத்த ஆவியின் வருகையின் போது தான் சீடர்களின் விசுவாசம் உறுதி பெற்றது.

அவர்களின் விசுவாசம் உறுதி பெற்ற பின்பு தான் கத்தோலிக்க திருச்சபை இயங்க ஆரம்பித்தது.

அது முதல் இன்று வரை பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் படி தான் திருச்சபை இயங்கிக் கொண்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து இயங்கும்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி நம் மீது இறங்கியதால் விசுவாசத்தை இலவசமாகப் பெற்றோம்.

பிறக்கும் குழந்தை குழந்தையாகவே இருப்பதில்லை, வளர்கிறது.

நாம் பெற்ற விசுவாசம் வளர்ந்திருக்கிறதா அல்லது இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதா, சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

படகுப் பயணத்தின் போது இயேசு சீடர்களின் கூடவே இருந்தும் 

விசுவாசக் குறைவின் காரணமாக,

 படகு மூழ்கி விடுமோ என்று சீடர்கள் பயந்தார்கள்.

இயேசு நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசிக்கிறோமா?

உறுதியாக விசுவசித்தால் நமது வாழ்வில் பிரச்சனைகள் வரும்போது பயப்படவே மாட்டோம்.

இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை விசுவசித்தால் மட்டும் போதாது,

அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு எந்த வித ஆபத்தும் வராது என்பதை உறுதியாக விசுவசிக்க வேண்டும்.

நான் ஆபத்து என்று குறிப்பிடுவது நமது ஆன்மீக வாழ்வுக்கு எதிரான ஆபத்து.

உடலைச் சார்ந்த மரணம் ஒரு ஆபத்து அல்ல.

அது மோட்சத்தின் வாசல்.

நமக்கு வரும் நோய்   நாம் சுமக்க வேண்டிய சிலுவை, பிரச்சனை அல்ல.

இயேசு சிலுவையில் மரித்தார் என்பதையும், மூன்றாம் நாள் உயிர்த்தார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாமும் ஒரு நாள் மரிப்போம், இயேசுவின் இரண்டாவது வருகையின் போது உயிர்ப்போம் என்பதை விசுவசிக்க வேண்டும்.

இந்த விசுவாசம் உறுதியானதாக இருந்தால் நாம் நமது வாழ்வில் எதற்கும் பயப்பட மாட்டோம்.

நமது விசுவாசம் உறுதியானதாக இருந்தால்,

நமது உடலுக்கு என்ன நேர்ந்தாலும்,

நமது ஆன்மா பத்திரமாக இருக்கும்.

நமது ஆன்மாவின் நலன் தான் நமக்கு முக்கியம்.

லூர்து செல்வம்.