Wednesday, November 9, 2022

ஒரே திருச்சபை. (தொடர்ச்சி)

ஒரே திருச்சபை.
                     (தொடர்ச்சி)

அன்னை மரியாளை அம்மா என்று அன்புடன் அழைக்கிறோம்.

 அவளைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகப் பேசுகிறோம்.

அவள் மீது நாம் கொண்டுள்ள அன்பை காண்பிக்க அவளுடைய திருத்தலங்களுக்குத்
திருயாத்திரையாகச் செல்கிறோம்.

நமக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் பிள்ளைக்குரிய நம்பிக்கையோடு அம்மாவிடம் கேட்கிறோம்.

அம்மாவும் நாம் கேட்பதை எல்லாம் தருகிறாள் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறோம்.

மிகவும் மகிழ்ச்சி.

தாயைப் போல் பிள்ளை என்பார்களே.

நாம் எப்படி?

 அம்மாவைப் போல வாழ்கின்றோமா?

அவள் கடவுளுக்கு அடிமையாக வாழ்ந்தது போல நாமும் அடிமையாக வாழ்கின்றோமா?

அவள் தனது வாழ்நாளெல்லாம் இறைப் பணிக்கு தன்னை அர்ப்பணித்தாள்.
நமது அர்ப்பண வாழ்வு எந்த அளவுக்கு இருக்கிறது?

இயேசுவுக்காக அன்னை வியாகுல மாதாவாக வாழ்ந்தாள்.

 நமக்கு வியாகுலங்கள் வரும்போது நாம் அம்மாவைப் போல அவற்றை முழு மனதோடு கடவுளுக்காக ஏற்றுக் கொள்கிறோமா?

 அல்லது 

அவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்காக வியாகுல மாதாவையே நாடுகிறோமா?

அம்மா இறைவனின் தாயாக வாழ்ந்தாலும் தனக்கென்று எந்த ஒரு புதுமையையும் செய்யும்படி மகனிடம் கேட்டதாகத் தெரியவில்லை.

கேட்டிருந்தால் திருக் குடும்பம் தச்சு வேலை செய்து பிழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ஒன்றுமில்லாமையிருந்து உலகையே படைத்தவர் இயேசு.

தான் வளர்ந்த குடும்பத்திற்கு உணவை படைத்துக் கொடுக்க முடியாதா?

ஆனால் கானாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்தபோது திருமண வீட்டாருக்கு உதவும்படி மகனைக் கேட்கிறாள்.

அவரும் ஒரு புதுமை செய்து தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிக் கொடுக்கிறார். 

நாம் மற்றவர்களுக்கு உதவும்படி அம்மாவிடம் கேட்கிறோமா?

இரண்டு பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

''அம்மா எனக்கு அந்த வேலையை பெற்றுத் தாருங்கள்.'' என்று கேட்கிறோமா?

அல்லது,

''என்னோடு வேலைக்கு விண்ணப்பித்திருப்பவருக்குப்
பெற்றுத் தாருங்கள்.'' என்று கேட்கிறோமா?

கபிரியேல் தூதர்,

"ஏரோது மன்னன் பிள்ளையைக் கொல்லத் தேடுகிறான்.

பிள்ளையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு போங்கள்." என்று சொன்னபோது,

மாதா தன் மடியில் இருந்த குழந்தையைப் பார்த்து,

"இயேசுவே, நீங்கள் ஏரோதுவைப் படைத்த கடவுள்தானே.

உங்கள் வல்லமையால் அவனுடைய கையிலிருந்து நம்மைக் காப்பாற்றுங்களேன்.

எகிப்துக்குப் போகச் சொல்லாதீர்கள்." என்று சொன்னாளா?

இல்லையே.

கபிரியேல் தூதர் சொன்னவுடன்

கடவுளின் தாயாக இருந்தும் அடிமை போல் தூதருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாளே!

எகிப்தில் திரு குடும்பத்தினர் மூவரும் அகதிகள் போல் தானே வாழ்ந்தார்கள்.

நமக்கு இயேசு துன்பங்களை அனுமதிக்கும்போது

 அவற்றை சிலுவைகளாக ஏற்றுக் கொள்கிறோமா?

அல்லது,

அவற்றை நீக்கும்படி இயேசுவின் தாயிடமே உதவி கேட்கிறோமா?


நம்மில் பெரும்பாலோர் அந்தோனியார் பக்தர்கள்.

அந்தோனியார் வாழும்போதே ஆயிரக்கணக்கான புதுமைகளை செய்தவர்.

இப்போதும் கோடி அற்புதர் என்று அழைக்கப்படுகின்றவர்.

புதுமைகள் செய்தாவது நமது விண்ணப்பத்தை நிறைவேற்றும் படி அவரிடம் கேட்கிறோம்.

எவ்வளவு விசுவாசம் இருந்திருந்தால் அத்தனை புதுமைகளைச் செய்திருக்க முடியும்!

நமது விசுவாசம் வளர வேண்டும் என்று அதற்கான உதவியை அந்தோனியாரிடம் கேட்டிருக்கிறோமா?

விசுவாசம் என்றால் விசுவாச சத்தியங்களை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல,  அவற்றை வாழ்வதும்தான்.

எல்லாம் வல்ல இறைவனை நமது தந்தையாக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, 

நாம் அவரது பிள்ளைகளாக,

 அவர் மீது முழு நம்பிக்கை உள்ள பிள்ளைகளாக,

 முழுமையான அன்புள்ள பிள்ளைகளாக வாழ வேண்டும்.

அன்பில் வளர வளர, விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் 
வளர்ந்து கொண்டிருப்போம்.

கடவுள் நம்முள்ளும், நாம் அவருள்ளும் வாழ்வதுதான் முழுமையாக விசுவாச வாழ்க்கை.

கடவுள் நம்முள் வாழ்கிறார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நம்முள் வாழ்கிறார்.

ஒவ்வொரு வினாடியும் நம்மை பராமரிக்கிறார்.

இதை ஏற்றுக்கொண்டு நாம் அவருள் வாழ்வதுதான் விசுவாசம்.

எல்லாம் வல்ல கடவுளுக்குள் நாம் வாழ்ந்தால் முழுமையான பாதுகாப்பு உணர்வோடு வாழ்வோம்.

நம்மை பராமரிக்கும் பொருட்டு அவர் என்ன செய்தாலும் அது நமது நன்மைக்கே என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்வோம்.

மரணம் உட்பட நமக்கு என்ன துன்பங்கள் வந்தாலும் அது நமது ஆன்மாவின் நன்மைக்கே என்று முழுமையான் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்வோம்.

அவரது அருளைத் தவிர வேறு எதையும் நமக்காகக் கேட்க மாட்டோம்.

கடவுள் பால் நாம் கொண்டுள்ள அன்பு மிகுந்து, ஒன்றிப்பும் மிகுந்து விட்டால் 

நாம் நம்மை பற்றி கவலைப்படுவதை விட இறைவனை நேசிப்பதிலும்,

நமது அயலானை நேசித்து, அவனுக்கு உதவி செய்வதிலும் நாம் அதிக அக்கறை காட்டுவோம்.

இயேசு கொடுத்த இரண்டு கட்டளைகளை பரி பூரணமாக நிறைவேற்ற ஆரம்பிப்போம்.

அதாவது முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்.

இறையன்புக்காகவும் பிறர் அன்புக்காகவும் நம்மை அர்ப்பணித்து வாழ்வதுதான் உண்மையான விசுவாச வாழ்வு.

அன்னை மரியாளும், மற்ற அனைத்து புனிதர்களும் உண்மையான விசுவாச வாழ்வு வாழ்ந்தார்கள்.

உண்மையான, முழுமையான விசுவாச வாழ்வு வாழ்பவர்களுக்குதான் இறைவன் புதுமைகள் செய்யும் வரத்தைக் கொடுக்கிறார்.

"விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்:

 என் பெயரால் பேய்களை ஓட்டுவர், 

புதிய மொழிகளைப் பேசுவர்,


பாம்புகளைக் கையால் பிடிப்பர்.

 "கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. 

பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்."
(மாற்கு.16:17,18)

முழுமையான விசுவாசிகளைப் பற்றி இயேசு கூறிய வார்த்தைகள் இவை.

அன்னை மரியாள், அந்தோனியார் மற்றும் மற்ற புனிதர்களிடம் நமக்கு வேண்டிய எத்தனையோ உதவிகளைக் கேட்கிறோம்,

நமது விசுவாசம் வளர வேண்டும் என்று அதற்கான உதவியை கேட்டிருக்கிறோமா?

"ஆண்டவரோ, "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்

 இம்முசுக்கட்டை மரத்தை நோக்கி,

 "வேருடன் பெயர்ந்து கடலில் ஊன்றிக்கொள்" என்பீர்களாகில்,

 உங்களுக்கு அது கீழ்ப்படியும்.''
(லூக்.17:6)
என்றார்.


நம்மிடம் கடுகளவு விசுவாசம் கூட இல்லை.

நமது விசுவாசத்தை வளர்க்கும்படி நமக்காக இறைவனை மன்றாட புனிதர்களிடம் வேண்டுவோம்.

அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்,

ஏனெனில் நாம் எல்லோரும் ஒரே திருச்சபை என்னும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

ஆகவே நமது உடன் பிறப்புக்கள்.

திருச்சபையை சேர்ந்த அனைவரும் விசுவாச வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் அதை நிறுவிய நமது ஆண்டவரின் ஆசை.

நமது ஆண்டவரின் ஆசையை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment