Thursday, November 3, 2022

"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன்.: "அகமகிழுங்கள்."(பிலிப்.4:4)

"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன்.: "அகமகிழுங்கள்."
(பிலிப்.4:4)

புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில்   

."ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன்.: "அகமகிழுங்கள்."

என்று கூறுகிறார்.

இந்த வசனத்தை வாசித்த நண்பர் ஒருவர்,

"நம் ஆண்டவர் 

'இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்.' என்று கூறியிருக்கிறாரே.

சின்னப்பர் அக மகிழச் சொல்கிறாரே, 

நாம் யார் சொன்னபடி நடக்க வேண்டும்?" என்று கேட்டார்.

சில நண்பர்கள் இப்படித்தான் முழு வசனத்தை வாசித்தாலும் தங்கள் வாதத்திற்கு வேண்டிய பகுதியை மட்டும் மேற்கோளாகக் கூறுவார்கள்.

 நான் ஒரு செபக் கூட்டத்தில் கலந்து கொள்ள போய்க் கொண்டிருக்கும்போது இந்து நண்பர் என்னை வழிமறித்து,

"கையில் பைபிள் வைத்திருக்கிறீர்கள். அதை வாசிப்பதில்லையா?"

"என்ன ஆச்சி உங்களுக்கு? கேட்க வேண்டியதை நேரடியாகவே கேளுங்கள்."

." உங்கள் ஆண்டவர்'

''என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்." என்று கூறியிருக்கிறார்.

உங்களுக்கு விண்ணரசில் சேர விருப்பம் இல்லையா?"

"நேற்று காலையில் உமது வீட்டிற்கு வந்தபோது உமது பையனைப் பார்த்து என்ன சொன்னீர்?"

"ஞாபகம் இல்லையே."

"பள்ளிக் கூடம் போகின்றவன் எல்லாம் பாஸ் பண்ண மாட்டான்" என்று கூறவில்லை.?"

"ஹலோ, நான் சொன்னது முழுவதையும் கூறாமல் பாதியை மட்டும் கூறினால் எப்படி?

'பள்ளிக் கூடம் போகின்றவன் எல்லாம் பாஸ் பண்ண மாட்டான், பாடத்தைப் படிக்கிறவன்தான் பாஸ் பண்ணுவான்,'னு சொன்னேன்.

நீர் பாதியை விழுங்கி விட்டு மீதியை மட்டும் கூறுகிறீர்."

"நீர் மட்டும் எப்படி? ஆண்டவர் சொன்னது,

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்." என்று ஆண்டவர் சொன்னார்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றாமல் மகனைப் பார்த்து 'ஆண்டவரே, ஆண்டவரே' அழைத்துப் பயனில்லை"

வசனங்களை அரைகுறையாய் வாசித்து விட்டு கேள்வி கேட்கக் கூடாது.

ஆண்டவர் சொன்னது,

"இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், சிரிப்பீர்கள்."

இப்போது தங்கள் பாவங்களுக்காக அழுபவர்கள் விண்ணகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்."

சின்னப்பர் கூறிய முழு வசனம்:

"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன்.: "அகமகிழுங்கள்."

வெறுமனே "அகமகிழுங்கள்." என்று சின்னப்பர் கூறவில்லை.


"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்."என்று கூறுகிறார்.

ஆண்டவருக்காக, ஆண்டவருக்குள் வாழ்ந்து அதன் விளைவாக மகிழ்ச்சியாக இருக்கச் சொல்கிறார்.


"கிறிஸ்து இயேசுவுக்குள் பிலிப்பி நகரில் வாழ்கின்ற இறைமக்கள், மேற்பார்வையாளர், திருப்பணியாளர் அனைவருக்கும்" 

சின்னப்பர் கடிதம் எழுதுகிறார்.

கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்ந்தவர்களுக்கு எழுதுகிறார்.

"நற்செய்திக்காக என்னோடு போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுள்ளன." என்று கூறிய பின்புதான்

"ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்" என்று கூறுகிறார்.

நற்செய்திக்காக போராடியதின் விளைவுதான் சின்னப்பர் குறிப்பிடும் அகமகிழ்ச்சி.

சின்னப்பர் இறைவனின் பணியாள். அவர் கூறியது பைபிளில் இடம் பெற்றிருப்பதால் அது இறைவாக்கு.

இறைவாக்கு நமக்கும் சேர்த்துதான்.

நாமும் சின்னப்பர் குறிப்பிடும் சீடர்களைப் போல நற்செய்திக்காகப் போராட வேண்டும்.

நற்செய்தி ஆண்டவருக்கு உரியது.

 ஆண்டவருக்காகப் போராடும்போது இயல்பாகவே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

ஒரு வேலைக்காக, அதனால் கிடைக்கும் வருமானத்திற்காகப் போராடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியால் விண்ணகத்தில் எந்த பயனும் இல்லை.

அது உலக வாழ்வோடு முடிந்து விடும்.

ஆண்டவருக்காகப் போராடும் போது ஏற்படும் மகிழ்ச்சிதான் பேரின்பமாக விண்ணகத்திலும் தொடரும்.

ஆண்டவருக்காகப் போராடும் போது நாம் சிலுவையைத்தான் சுமக்கிறோம்.

சிலுவையைச் சுமக்கும்போது உடல்ரீதியாக வேதனையும், வலியும் ஏற்படும்.

கிறிஸ்துவின் எதிரிகள் அவருக்காகப் போராடும் நமக்குத் துன்பத்தைத் தான் கொடுப்பார்கள்.

அதனால் கிடைக்கும் உடல் வலியும், வேதனையும், ஆன்மீக ரீதியாக அகமகிழ்ச்சியைத் தரும்.

அந்த மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று இறைவாக்கு கூறுகிறது.

இயேசுவே கூறியிருக்கிறார்,

"மனிதர் உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள். தங்கள் செபக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.

என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்து நிற்கிறவன் மீட்கப்பெறுவான்."

நற்செய்திப் பணியின்போது நாம் படும் துன்பங்கள் நமக்கு மீட்பைப் பெற்றுத்தரும்.

மீட்பு நித்திய பேரானந்த வாழ்வையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

நற்செய்திக்காக மகிழ்ச்சியோடு போராடுவோம்.

ஆண்டவருக்குள் வாழ்ந்து அவருக்காகப் போராடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி நித்திய காலமும் நிலைத்திருக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment