Monday, November 21, 2022

"நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்."(லூக்.21:19)

"நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்."
(லூக்.21:19)

"நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் எனது அப்பா என்னை படிக்க வைத்தார்."

"அப்படியா? பிறகு ஏன் ஆகவில்லை?"

"மெடிக்கல் காலேஜ்ல சேர முடியல."

"ஏன் சேர முடியல?"

"அப்ளிகேஷன் போட்டாத்தான் சேப்பாங்களாம். நான் அப்ளிகேஷன் போடல."

"ஏன்?"

"ஒண்ணாங் க்ளாஸ் கூட பாஸ் பண்ணாதவங்க அப்ளிகேஷன் போட முடியாதுன்னு சொல்லிட்டாங்க."

"என்னது? 
ஒண்ணாங் க்ளாஸ் கூட பாஸ் பண்ணலியா?"

"எங்க அப்பா என்னை ஒண்ணாங் க்ளாஸ்ல சேர்த்து விட்டாரு.

அன்றைக்கு பள்ளிக்கூடம் 
போனவன்தான். பிறகு போகவில்லை."

" நீங்கள் மெடிக்கல் காலேஜ்ல சேர முடியலன்னு சொல்றீங்க!"

"உண்மையைத்தானே சொன்னேன்.

ஆரம்பித்தேன், நிலைத்திருக்கவில்லை.

ஆரம்பித்ததை செய்து முடித்தால்தானே வெற்றி வரும்.

சரி, அது இருக்கட்டும். உங்கள் திருமணம் கோவிலில் தானே நடந்தது. அதற்குப் பின் நீங்கள் ஏன் கோவிலுக்கு வரவில்லை?"

"நான் பிறந்தது கிறிஸ்தவம் அல்லாத குடும்பத்தில்.

ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தேன்.

நான் ஞானஸ்நானம் பெற்றால் தான் அவளை திருமணம் முடிக்க முடியும் என்று சொன்னார்கள்.

அதற்காக ஞானோபதேசம் படித்து, ஞானஸ்நானம் பெற்றேன். 

காதலித்த பெண்ணைக் கல்யாணம் முடித்தேன்.

அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பெண்ணுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.

கிடைத்த பின் வரவில்லை.

இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது."

"ஞானஸ்நானம் பெற்றால் கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.

ஆரம்பித்த வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்."

"இல்லாவிட்டால்?"

"உங்கள் ஆன்மாவை இழக்க நேரிடும்."

"அப்படீன்னா?"

"உங்களால் மீட்பு அடைய முடியாது."

"அப்படீன்னா?"

"விசுவசித்து ஞானஸ்நானம் பெற வேண்டும். 

பெற்ற பின் வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ வேண்டும். 

 வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ்ந்தால் தான்

 இறந்தபின் நமது ஆன்மா நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியும்.

 இதற்குப் பெயர்தான் மீட்பு. 

மீட்பு அடையாவிட்டால் ஆன்மா நித்திய பேரிடர் நிலையை அடையும்.

ஞானஸ்நானம் பெறு முன்பே சொல்லி இருப்பார்களே."

"சொன்னார்கள். நான் அதையெல்லாம் கவனிக்கவில்லை.

நீங்கள் ஒண்ணாங் கிளாஸ் கூட பாஸ் பண்ண வில்லையே.

எழுத வாசிக்க தெரியாதே. 

பைபிள் வாசிக்க முடியாதே.

பைபிள் வாசிக்க முடியாத உங்களால் எப்படி வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ முடியும்."

"பைபிள் வாசிக்க முடிவதற்கும்,
விசுவாச வாழ்வு வாழ்வதற்கும் சம்பந்தமே இல்லை.

இயேசுவால் நிறுவப்பட்ட தாய்த் திருச்சபையின் சொல் கேட்டு,

அதன் படி வாழ்வதுதான் விசுவாசம் வாழ்வு,
 
வாழும்போது சோதனைகள் பல வரலாம்.

அவற்றை வென்று விசுவாச வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்."

"விசுவாச வாழ்வுன்னு சொல்லுகிறீர்களே. அப்படி என்றால் என்ன?"

"நீங்கள் கேட்பது திருமணம் முடித்த பின் கல்யாணம் என்றால் என்ன என்று கேட்பது போல் இருக்கிறது.

ஞானஸ்தானம் பெறுவதற்கு முன்பே உங்களுக்கு விசுவாசத்தை பற்றி கூறியிருப்பார்கள்.

நீங்கள் பெண் மேலே குறியாக இருந்ததால் அதை கவனித்திற்க மாட்டீர்கள்.

நான் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

இயேசுவையும்,
 அவரது நற்செய்தியையும் ஏற்றுக்கொண்டு,

கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்து,

இயேசுவின் போதனைப்படி வாழ்வதுதான் விசுவாச வாழ்வு.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும்,

நம்மை நாம் நேசிப்பது போல இறைவனால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும்

இதுதான் இயேசு போதித்த நற்செய்தியின் ரத்தின சுருக்கம்.

பைபிள் வாசிக்க தெரியாதவர்களுக்கு பங்கு சுவாமியார்தான் பைபிள்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் அவர் வைக்கிற பிரசங்கத்தை ஒழுங்காக கேட்டாலே போதும் பைபிளை வாசித்தது போல் தான்.

பைபிளை வாசிக்க தெரிந்தவர்களுக்கும் அதன் பொருளை புரிய வைப்பது குருக்கள் தான்.

இயேசுவின் போதனைப்படி இறையன்பிலும், பிறர் அன்பிலும் நிலைத்திருப்பது தான் விசுவாச வாழ்வில் நிலைத்திருப்பது.

நமது அன்பு சொல்லிலும் செயலிலும், வெளிப்பட வேண்டும்.

இயேசுவின் பெயரால் நாம் செய்யும் நற்செயல்கள்தான் நாம்  விசுவாச வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கான வெளி அடையாளம்."

"வாழ்வதை ஏன் நிலைத்திருப்பது என்று கூறுகிறீர்கள்?"

''விசுவாச வாழ்வு வாழும் போது வெளியிலிருந்து இடையூறுகள் நிறைய வரும்.

கிறிஸ்தவத்தையே அழிக்க ஆசைப்படும் அனேக மக்கள் நம்மை சுற்றி வாழ்கின்றனர்.

அவர்கள் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நம்மை வெறுப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியாதபடி இடையூறுகள் செய்து கொண்டிருப்பார்கள்.

அவற்றின் மத்தியிலும் நமது விசுவாசத்தை இழக்காமல் வாழ்வதுதான் கிறிஸ்தவத்தில் நிலைத்து நிற்பது.

நிலைத்து நிற்பவர்கள் தான் மீட்பு பெறுவார்கள்."

"நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவேயில்லையே."

"உங்கள் மனைவி?"

"அவள் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதில் நான் குறுக்கிடவில்லை.

அவள் ஒழுங்காக கோவிலுக்குப் போகிறாள், செபம் சொல்கிறாள், மற்றவர்களுக்கு உதவி செய்கிறாள்.

நான் எதையும் தடுப்பதில்லை.''

"இனி உங்களது மனைவியுடன் கிறிஸ்தவ வாழ்வை வாழ ஆரம்பியுங்கள்.

பின்பு அதில் நிலைத்து நில்லுங்கள்."

"பேச்சோடு பேச்சாக உங்களது விசுவாச ஆர்வத்தை என்னில் ஊட்டியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

அடுத்து உங்களை சந்திக்கும் போது நல்ல கிறிஸ்தவனாகச் சந்திப்பேன்."

"ஆசைப்படும்போதே ஆரம்பித்து விட்டீர்கள். நிலைத்திருங்கள். 
உறுதியாக மீட்பு அடைவீர்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment