Monday, November 14, 2022

நம்மை நாம் நேசிப்போம்.


நம்மை நாம் நேசிப்போம்.

நித்திய காலமாக வாழும் கடவுள் நித்திய காலமாக தன்னை அளவு கடந்த விதமாக நேசிக்கிறார்.

அவர் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.

நம்மை நாம் நேசிக்கும் இயல்போடு படைத்திருக்கிறார்.

அவர் தன்னை நேசிப்பது போல நாம் நம்மை நேசிக்கிறோம்.

நாம் நம்மை நேசிப்பது நமது இயல்பு.

ஆகவேதான் நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த இரண்டாவது கட்டளையில் 

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நேசிக்கப் படுகின்றவர்களுக்கு நல்லதையே செய்வது நேசத்தின் இயல்பு.

நாம் நமக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்பினால்தான் 

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்கும் போது

அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவோம்.

நாம்  நமக்கு எப்போதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

Charity begins at home.

நம்மை நாம் அன்பு செய்யும் இயல்போடு இறைவன் நம்மை படைத்திருப்பதால் 

நமது அன்பு அதன் இல்லமாகிய நம்மில் பிறந்து

நம்மை படைத்த இறைவனை நோக்கியும்,

நம்மோடு படைக்கப்பட்ட நமது அயலானை நோக்கியும் செல்லும்.

'நமது அன்பு' என்று குறிப்பிடப்படுவது இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய அன்பு.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய அன்பு பரிசுத்தமானது.

அதன் பரிசுத்தத்தனத்தைக் காப்பாற்ற வேண்டியது நமது முதல் கடமை.

உலகியலில் கூட நமது உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள ஆசிக்கிறோம்.

அது போல் தான் ஆன்மீகத்தில் நாம் நமது ஆன்மாவை சுத்தமாக வைத்துக் கொள்ள ஆசிக்க வேண்டும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பாதவன் தன்னைப் பற்றி கவலைப்படாதவன்.

அழுக்கான அவன் உடல் பலவித நோய் நொடிகளுக்கு இருப்பிடமாக ஆகிவிடும்.

அதேபோலத்தான் ஒருவன் தனது ஆன்மாவின் பரிசுத்தத்தைப் பற்றி கவலைப்படாவிட்டால் அவனது ஆன்மா பலவிதமான பாவங்களுக்கு இருப்பிடமாக மாறிவிடும்.

பாவங்கள் இறைவன் நம்மோடு  பகிர்ந்து கொண்ட அன்பையும் களங்கப்படுத்தி விடும்.

பாவங்களால் 
களங்கப்படுத்தப்பட்ட அன்பை பரிசுத்தமாக்குவது எப்படி?

அதற்காகத்தான் நமது ஆண்டவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

நமது உடலில் அழுக்குப் படும்போது தண்ணீரில் குளித்து அதை சுத்தப்படுத்துவது போல,

பாவத்தினால் நமது அன்பு களங்கப்படும்போது,

பாவ சங்கீர்த்தனம் செய்து,

பாவ மன்னிப்பு பெற்று,

அதை பரிசுத்தமாக்க வேண்டும்.

அழுக்கு நிறைந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் எப்படி இருக்கும்?.

பாவங்கள் நிறைந்த மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள் எப்படி இருக்கும்?

அந்த எண்ணங்களின் விளைவான செயல்கள் எப்படி இருக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்துப் பார்த்தால் 

நாம் வாழும் உலகின் இன்றைய நிலைமைக்கு காரணம்

நம் மீது நாம் கொண்டுள்ள அன்பின் களங்கம்தான் என்பது புரியும்.

உலகினர் ஒவ்வொருவரின் அன்பும் பரிசுத்தமாக இருந்தால்

உலகமே பரிசுத்தமாக இருக்கும். 

உலகில் ஏன் சமாதானம் நிலவவில்லை?

ஏனென்றால் நமது மனதில் சமாதானம் இல்லை.

இருப்பதைத்தான் கொடுக்க முடியும்.

உலகில் ஏன் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை?

நமது உடலே நமது ஆன்மாவோடு 
ஒத்துழைக்கவில்லையே!

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."
என்பது நமது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

தங்களை தாங்களே உண்மையிலேயே அன்பு செய்பவர்கள் 

தங்களைத் தாங்களே பட்டினி போட மாட்டார்கள். 

தங்கள் அயலானையும் பட்டினியாய் இருக்க விட மாட்டார்கள்.

ஆடை அணியாமல் இருக்க மாட்டார்கள்.

தங்கள் அயலானையும் ஆடை இல்லாமல் இருக்க விட மாட்டார்கள்.

தங்களுக்கு நோய் வந்தால் வைத்தியம் பார்ப்பார்கள்.

தங்கள் அயலானுக்கு நோய் வந்தால் அவனுக்கும் வைத்தியம் பார்ப்பார்கள்.

தங்களை யாரும் கெடுத்து பேசுவதை அனுமதிக்க மாட்டார்கள்.

தாங்களும் யாரையும் கெடுத்து பேச மாட்டார்கள்.

தாங்கள் செல்லும் விண்ணகப் பாதையில் மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்கள்.

தாங்களும் நல்லவர்களாக வாழ்வார்கள்.

 மற்றவர்களையும் நல்லவர்களாக வாழ வைப்பார்கள்.

சுருக்கமாக தாங்கள் எப்படி இருக்க விரும்புகிறார்களோ அப்படியே மற்றவர்களும் இருக்க விரும்புவார்கள்.

மிகச் சுருக்கமாக மோட்சத்திற்கு தனியே செல்ல மாட்டார்கள்.

எல்லோரும் நம்மை நாமே நேசிப்பதை விட அதிகமாக 

நம்மைப் படைத்த இறைவனை நேசிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment