"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்."
(லூக்.21:13)
"வணக்கம், சார்."
"வணக்கம்."
"சார், என்னை ஞாபகம் இருக்கிறதா?"
", அமல்ராஜ் தானே!"
"அமல்ராஜேதான். பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி சார்.
என்னைப் பற்றி வேறு ஏதாவது ஞாபகத்தில் இருக்கிறதா, சார்?"
", ஏண்டா, வாத்தியாருக்கே பரீட்சையா?"
"சாரி, சார். நானே சொல்லிவிடுகிறேன்.
'உனக்கு படிப்பில் விருப்பம் இல்லை. விருப்பம் இல்லாத இடத்துக்கு வந்து உன் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். நாளையிலிருந்து நீ பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டாம் பேசாமல் வீட்டிலிருந்து விருப்பப்பட்ட வேலையை பார்.' என்று
சொல்லிக்கொண்டே பிரம்பால் உள்ளங்கையில் ஒரு அடி அடித்தீர்களே."
",இதே வார்த்தைகளை நிறைய பேருக்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் எனக்குக் கீழ்ப்படியவில்லை, உன்னைத் தவிர.
வருடங்கள் பத்து ஓடிவிட்டன. இப்போது எப்படி இருக்கிறாய்?"
"உங்களுக்கு கீழ்ப்படிந்ததால் தான் நன்றாக இருக்கிறேன்.
மறுநாளே ஒரு பெட்டிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகள் சம்பளத்தை சேர்த்து வைத்து நானே ஒரு பெட்டிக்கடை ஆரம்பித்தேன்.
நல்ல வியாபாரம்.
பெட்டிக்கடையை பலசரக்குக் கடையாக மாற்றினேன்.
இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்.
எனது உள்ளங்கையை பார்க்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் வரும்.
நான் வாழ்க்கையில் முன்னேற நீங்கள் கொடுத்த அடி தான் காரணம்.
நீங்கள் கொடுத்த அடி அன்று வலித்தது, இன்று இனிக்கிறது.
இன்று ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக
எனக்கு கடை மூலம் வருமானம் வருகிறது.
அதற்கு நீங்கள்தான்,
நீங்கள் என் உள்ளங்கையில் கொடுத்த அடிதான் காரணம்.
உங்களை மறக்க முடியாது.
ரொம்ப நன்றி, சார்."
இது உண்மையிலேயே நடந்த சம்பவம். மாணவனின் பெயரை மட்டும் மாற்றிப்
போட்டிருக்கிறேன்.
வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது நம்மை கஷ்டப்படுத்துவதற்காக அல்ல, நமக்கு பாடம் கற்பிக்க.
என்ன பாடம்?
கஷ்டங்களை நித்திய பேரின்பமாக மாற்றலாம்.
எப்படி?
அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதன் மூலம்.
நமது செபங்கள் உடனடியாக கேட்கப்படாதது நமது நன்மைக்கே.
ஒரு கடைக்கு ஒரு புத்தகம் வாங்க போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
போன உடனேயே நாம் கேட்ட புத்தகம் கிடைத்துவிட்டால் புத்தகத்தை வாசிப்பதில் தான் ஆர்வம் இருக்குமே தவிர கடையை மறந்து விடுவோம்.
ஆனால் ஒவ்வொரு முறை போகும்போதும் இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று கடைக்காரர் சொன்னால்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, பலமுறைகள் கடைக்குச் செல்வோம்.
கடைக் காரருக்கும், நமக்கும் இடையில் நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இறைவனை விட நாம் விரும்புவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து
விரும்புவதை இறைவனிடம் கேட்கும் போது
கேட்ட உடனே தராமல் தாமதித்தால்
திரும்பத் திரும்ப இறைவனைத் தேடிச் செல்வோம்.
இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு அதிக நெருக்கம் அடையும்.
வெகு நாள் கழித்து கேட்டது கிடைக்கும் போது இறைவனின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வோம்.
காலப்போக்கில் பொருளை விட அதை தரும் இறைவனே முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
நம்மை திரும்பத் திரும்ப அவரிடம் வரவைப்பதற்கே கடவுள் நாம் கேட்டதை தர காலம் தாழ்த்துகிறார்.
செபத்தின் மூலம் கேட்பதை விட செபமே முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால்
கேட்பதை விட செபத்தின் மூலம் அவரோடு இணைந்து இருப்பதையே வாழ்வாகக் கொள்வோம்.
எப்போதும் கடவுளோடு இணைந்திருந்தால், நமக்கு வேண்டியதை அவர் நாம் கேட்காமலேயே தருவார்.
வாழ்வில் ஏற்படும் தோல்விகள் உண்மையிலேயே தோல்விகள் அல்ல.
அவை வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை வெற்றி பெற்ற பின்பு தான் உணர்வோம்.
இயேசு பிறந்த சமயத்தில் ஏரோது மன்னன்,
அவரைக் கொல்வதாக நினைத்துக் கொண்டு,
அநேக மாசில்லாத குழந்தைகளைக் கொன்றான்.
குழந்தைகளின் பெற்றோரின் நிலையில் நின்று பார்த்தால், அவர்கள் குழந்தைகளை இழந்தார்கள்.
ஆனால் குழந்தைகளின் நிலையில் நின்று பார்த்தால்,
அவர்கள் எந்தவித உலக துன்பங்கள் இன்றி
நித்திய பேரின்பத்தை அனுபவிக்க
விண்ணகம் சென்று விட்டார்கள்.
உண்மையிலேயே அவர்கள் பாக்கியவான்கள்.
"இதற்கெல்லாம் முன்னதாக என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்.
எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்."
என்று இயேசு சீடர்களைப் பார்த்து சொல்கிறார்.
கிறிஸ்தவத்தை விரும்பாத மன்னர்கள் கிறிஸ்துவின் சீடர்களை பிடித்து துன்புறுத்துவது
அவர்கள் இயேசுவைப் பற்றி அவருடைய எதிரிகளுக்குக் கூற வாய்ப்பளிக்கும்.
அவர்கள் இயேசுவுக்கு சாட்சிகளாக, அதாவது, வேத சாட்சிகளாக மரிப்பதற்கு
வேத கலாபனை காலம் வாய்ப்பு அளிக்கும்.
அவர்கள் சிந்தும் இரத்தத்தில் தான் திருச்சபை வளரும்.
இன்று நாம் தாய்த்திருச்சபையில் சேர்ந்து,
மீட்புப் பெற, வாய்ப்புப் பெற்றிருக்கிறோம் என்றால்
அதற்கு இயேசுவுக்கு சாட்சிகளாக மரித்த அவரின் சீடர்களே காரணம்.
இன்றும் கிறிஸ்துவின் விரோதிகள் நம்மைத் துன்பப்படுத்தி,
நம்மைக் கொல்லும் அளவிற்கு ஏதாவது செய்தாலும் கூட,
நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
ஏனெனில் நாம் இயேசுவின் சாட்சிகளாகவும்,
அனேகர் மனம் திரும்பி,
அவரிடம் வருவதற்கு காரணர்களாகவும் விளங்குவோம்.
துன்பங்கள் வரும்போது மகிழ்வோம்.
நித்திய பேரின்பத்திற்கு காரணம் அவைகள்தான்.
இயேசுவின் பாடுகள்தான் நமது மீட்புக்குக் காரணம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment