உள்ளவன் யார்?
இல்லாதவன் யார்?
இயேசு சொன்ன உவமையிலிருந்து இவற்றிற்குரிய பதிலை முதலில் பார்ப்போம்.
பொற்காசுகள் உவமையில்,
பெருங்குடி மகன் ஒருவன் வணிகம் செய்து பணம் சம்பாதிக்க
ஒருவனுக்கு பத்து பொற்காசுகளும்,
இன்னொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுக்கின்றான்.
பத்து பொற்காசுகள் பெற்றவன் வணிகம் செய்து பத்து பொற்காசுகள் சம்பாதிக்கிறான்.
ஒரு பொற்காசு பெற்றவன் வணிகம் செய்யவும் இல்லை, எதுவும் சம்பாத்தியம் செய்யவும் இல்லை.
ஆண்டவர் பத்து பொற்காசுகள் ஈட்டியவனை உள்ளவன் என்கிறார்,
எதுவும் ஈட்டாதவனை இல்லாதவன் என்கிறார்.
கொடுக்கப்பட்டது போக
ஒருவனிடம் பத்து பொற்காசுகள் உள்ளன. ஆகவே உள்ளவன்.
மற்றவனிடம் எதுவும் இல்லை. ஆகவே இல்லாதவன்.
உள்ளவன் பத்து நகர்களுக்கு அதிகாரியாக ஆக்கப்படுகிறான்.
இல்லாதவனிடமிருந்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காசும் எடுக்கப்படுகிறது.
இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
இறைவன் மனிதர்களை அவரை அறிந்து, நேசித்து, அவருக்கு சேவை செய்து அவரோடு விண்ணகத்தில் வாழ்வதற்காக படைக்கிறார்.
படைக்கப்பட்டவர்கள் அதற்கு முன் ஒன்றுமில்லாதவர்கள்.
படைக்கப்பட்ட பின் அவர்களைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை.
நாம் தண்ணீர் எடுக்க கடையிலிருந்து குடம் வாங்கும் போது குடத்திற்குள் எதுவும் இருக்காது.
சுயமாக எதுவும் இல்லாத நம்மை ஆன்மீக வாழ்வை துவக்குவதற்காக இறைவன் முதலில் அவரது அருள் வரங்களை கொடுக்கிறார்.
வணிகம் செய்பவன் தன்னிடம் முதல் முதலில் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து வணிகம் செய்வது போல,
முதலில் கிடைத்த அருள் வரங்களை கொண்டு,
அவற்றின் உதவியால்,
அவர்கள் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்
தொடர்ந்து அருள் வரங்களை ஈட்டி ஆன்மீக வாழ்வில் வளர வேண்டும்.
அப்படி வளர்பவர்களுக்கு விண்ணக வாழ்வு பரிசாக அழைக்கப்படும்.
முதலில் கொடுக்கப்பட்ட அருள் வரங்களை பயன்படுத்தாமல்
ஆன்மீக வாழ்வை வாழாமல் இருப்பவர்களிடமிருந்து
பயன்படுத்தப்படாமல் இருக்கும் அருள் வரங்கள் திரும்பப் பெறப்படும்.
எந்த வரமும் இல்லாத அவர்கள்
நரக நிலையைத்தான் அடைவார்கள்.
இயேசு கூறிய உவமைகளை வாசிப்பது மட்டும் போதாது.
அவை நமக்கு கூறும் பாடங்களை கற்க வேண்டும்.
பாடங்களைக் கற்றால் மட்டும் போதாது,
கற்றதை வாழ வேண்டும்.
முதலில் சுய சிந்தனை செய்து
நமக்கு தரப்பட்ட அருள் வரங்களை பயன்படுத்தி,
புதிதாக அருள் வரங்களை ஈட்டி,
ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா என்பதை கண்டறிய வேண்டும்.
இரவில் படுக்கப் போகும்போது,
''ஆண்டவரே, நான் இரவில் தூங்குவதும் உமது அதிமிக மகிமைக்காகவே. எனது தூக்கத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."
என்று சொல்லி தூங்கினால், தூக்கம் ஆண்டவரின் அருள் வரங்களோடுதான் இருக்கும்.
காலையில், "தந்தை, மகன், தூய ஆவியின் பெயராது எழுந்து, எனது நாளை ஆரம்பிக்கிறேன்" என்று செபித்து எழுந்தால், ஏற்கனவே நம்மில் இருக்கும் அருள் வரங்களோடு புதிய அருள் வரங்கள் சேர்ந்து கொள்ளும்.
நாளின் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே நமது மூச்சு உட்பட அனைத்து செயல்களையும் ஆண்டவருக்கு ஒப்படைத்து விட்டால்,
அன்றைய நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு அருள் வரங்களை ஈட்டிக்
கொண்டேயிருக்கும்.
இப்படி வரங்களை ஈட்டிக்
கொண்டே வாழ்ந்தால்
நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் ஆண்டவருக்காகவே இருப்பதால்,
நமக்கு விண்ணக வாழ்வு உறுதி ஆகிவிடும்.
உவமையில் வரும் அரசன்,
"நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால், பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரு"
என்று கூறியது போல, ஆண்டவர் நம்மை நோக்கி,
"நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால்
விண்ணக வாழ்வை உனக்கு உரிமையாக்குகிறேன்." என்று கூறுவார்.
நமது ஒவ்வொரு செயலையும்,
"இறைவா, உமக்காக." என்று சொல்லி ஆரம்பிப்போம்.
நாம் இறைவனின் அருள் வரங்களிலும், ஆன்மீகத்திலும் வளர்வோம்.
இறைவன் நமது இறுதி நாளில்,
"மோட்சம் உனக்காக." என்று சொல்வார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment