நாம் மனிதர்கள் என்பது நமக்குத் தெரியும்.
உடலும், ஆன்மாவும் சேர்ந்தவன்தான் மனிதன் என்பதுவும் நமக்குத் தெரியும்.
ஆன்மாதான் உடலை இயக்குகிறது என்பதுவும் நமக்குத் தெரியும்.
உடலைக் கண்ணால் பார்க்க முடியும், ஆன்மாவைப் பார்க்க முடியாது என்பதுவும் நமக்குத் தெரியும்.
"நீ எங்கே இருக்கிறாய்?" என்று யாராவது கேட்டால் நமது உடல் இருக்கும் இடத்தைச் சொல்லுவோம்.
"வீட்டில் இருக்கிறேன்."
"வீட்டில் எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டால் இருக்கும் இடத்தைச் சொல்லுவோம்.
"உனது ஆன்மா எங்கே இருக்கிறது?" என்று கேட்டால்
"என்னுடைய உடலில் இருக்கிறது" என்று சொல்லுவோம்.
"உடலில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவோம்?
யோசிப்போம்.
சொல்லத் தெரியாவிட்டாலும் உடலில் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
தெரியாவிட்டாலும் தெரியும்.
தெரிந்தாலும் தெரியாது.
ஏன் இந்த குழப்பம்?
நமது உடல் ஒரு சடப்பொருள் (Matter.)
ஆன்மா ஒரு ஆவி. (Spirit)
உடல் உலகைச் சார்ந்தது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது.
ஆன்மா ஒரு ஆவி. தற்காலிகமாக உடலோடு உலகில் வாழ்ந்தாலும் நிரந்தரமாக விண்ணுலகில் இறைவனோடு வாழ்வதற்காகப் படைக்கப்பட்டது.
உலகைச் சார்ந்த பொருட்களைப் பற்றிக் கேட்கும் கேள்விகளை எல்லாம் விண்ணுலகில் இறைவனோடு வாழ்வதற்காகப் படைக்கப்பட்ட ஆன்மாவைப் பற்றி கேட்க முடியாது.
இவ்வுலகமும், அதைச் சார்ந்த பொருட்களும் இடத்திற்கும், காலத்திற்கும் உட்பட்டவை.
விண்ணுலகைச் சார்ந்தவர்கள் இடத்திற்கும், காலத்திற்கும் அப்பாற்பட்டவர்கள்.
இவ்வுலகம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படைக்கப் பட்ட ஒரு இடம்.
ஆகவே உலகப் பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள
"எங்கே, எப்போது?" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்கலாம்.
"பேருந்து எங்கே நிற்கிறது?
எப்போது புறப்படும்?
எவ்வளவு நேரம் பயணம் செய்யும்?
எப்போது ஊருக்குப் போய்ச் சேரும்?
என்று கேட்கலாம்.
விண்ணுலகில் இடமும், நேரமும் இல்லை.
கடவுள் நித்தியர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள,
உலகில் நாம் பயன்படுத்தும் பொருளில் எங்கே, எப்போது
என்ற கேள்விகளைக் கேட்டால்,
கிடைக்கும் பதிலை நமது உலகப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.
என்னைப் பார்த்து,
"நீ எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டால்,
நான் இருக்கும் இடத்தைச் சொல்வேன்.
எனது உடல் கொஞ்சம். இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும.
நான் இருக்கும இடத்தில் வேறு. யாரும் இருக்க முடியாது.
நான் ஒரு நாற்காலியில் இருந்தால் நான் எழும் வரை அதில் வேறு யாரும் உட்கார முடியாது.
"கடவுள் எங்கே இருக்கிறார்?" என்று யாராவது கேட்டால்,
"எங்கும் இருக்கிறார்."
சரியான பொருளில் புரிந்து கொண்டால் சரியான பதில்.
ஆனால், எங்கும் என்ற வார்த்தையை உலக அர்த்தத்தில் புரிந்து கொண்டால்,
புரிந்து கொண்டது தவறு.
உலக மொழியில் 'எங்கே? எங்கும்.' என்ற வார்த்தைகள் இடத்தைக் குறிக்கும்.
கடவுள் இடத்திற்கு அப்பாற்பட்டவர்.
நாம் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பது போல அவரால் இருக்க முடியாது.
உலகைச் சார்ந்த சடப் பொருள்களால் இடத்தை அடைத்துக் கொண்டிருக்க முடியும்.
கடவுள் எல்லா இடத்தையும் அடைத்துக் கொண்டிருந்தால்
உலகத்துக்கே இடம் இருக்காது.
அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?
தனது ஞானத்தினாலும், வல்லமையாலும், அன்பினாலும், தனது பராமரிப்பினாலும் எங்கும். இருக்கிறார்.
தனது படைப்பின்ஒவ்வொரு அணுவையும் அவர் அறிவார்.
ஒவ்வொரு அணுவும் அவருடைய வல்லமையால் தான் இயங்குகிறது.
எல்லா பொருட்களையும் அவரே பராமரிக்கிறார்.
தனது படைப்பை முழுவதும் அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.
கடவுள் வாழும் மோட்சம் ஒரு இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கை நிலை.
(State of life.)
எங்கே என்ற வார்த்தை இடத்தை குறிப்பதால்,
"மோட்சம் எங்கே இருக்கிறது?" என்ற கேள்வியே பொருளற்றது.
" புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது".(1கொரி.2:9)
"The eye has not seen, and the ear has not heard, nor has it entered into the heart of man, what things God has prepared for those who love him."
என்று புனித சின்னப்பர் மோட்சத்தைப் பற்றி கூறுகிறார்.
மோட்ச வாழ்வு மோட்ச வாசிகள் இறைவனோடு இணைந்து வாழும் பேரின்ப நிலை என்பது நமக்குத் தெரியும்.
பேரின்பம் எப்படி இருக்கும் என்று நாம் அங்கு போகும் போது தான் தெரியும்.
பேரின்பம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருப்பதை விட,
அந்நிலையை அடைவதற்கு நம்மை நாமே தயாரிக்கும் விதமாக இவ்வுலகில் வாழ்வதே மிக முக்கியம்.
திருமண விருந்து எவ்வளவு ருசியாக இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருப்பதை விட,
அங்கு போவது தான் முக்கியம்.
அங்கு சென்ற பின் விருந்தை அனுபவித்துக் கொள்ளலாமே.
நமக்கு நாமே உற்சாகத்தைக் கொடுப்பதற்காக மோட்சத்தைப் பற்றி தியானிக்கலாம்.
ஆனாலும் அதைவிட முக்கியம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வது தான்.
"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத். 5:48)
நமது மரண வேளையில் வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாய் இருந்தால்
இறந்தவுடன் நேரடியாக மோட்சத்திற்கு சென்று விடலாம்.
ஆனால் குறைவு இருந்தால், குறைவை நீக்கி, தந்தையைப் போல் நாமும் பரிசுத்தமாக மாறுவதற்காக,
உத்தரிக்கிற ஸ்தலம் வழியே மோட்சத்துக்குச் செல்ல வேண்டும்.
இவ்வுலகில் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
காலத்தை கணக்கிட நிமிடங்கள், மணிகள், நாட்கள், வருடங்கள் என்ற அளவுகோல்களை வைத்திருக்கிறோம்.
நமது ஆன்மா நமது உடலை விட்டு பிரியும் போது காலத்தை விட்டு பிரிந்து நித்தியத்துக்குள் நுழைந்து விடுகிறது.
அதற்குப் பிறகு இவ்வுலக கால அளவைகள் அதற்குப் பொருந்தாது.
உத்தரிக்கிற ஸ்தலம் வழியே மோட்சத்தை நோக்கி பயணிக்கும் ஆன்மா, சீக்கிரமாக மோட்சத்தை அடைய உலகில் வாழ்வோர் இறைவனிடம் மன்றாட வேண்டும்.
நாம் ஒரே குடும்பத்தினர் என்பதால் நமது சகோதரர்களுக்காக வேண்டுவதை தந்தை அருள்வார்.
இவ்வுலகில் நாம் வாழும் காலத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், வேதனைகள், நோய் நொடிகள் அனைத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்து கொண்டேயிருந்தால்,
அதாவது,
நமது ஆண்டவர் நம்மிடம் கேட்டுக் கொண்டபடி நமது சிலுவைகளை முழுமையான மனதோடு சுமந்தால்,
அதாவது,
எப்போதும் பரிசுத்தர்களாக வாழ்ந்தால்,
நாம் இறந்தவுடன் நேரடியாக மோட்சத்திற்குள் நுழைய முடியும்.
நமக்கு முன் சென்றவர்களுக்காக வேண்டுவோம்.
நமக்காக வேண்டுவதோடு வாழ்வோம்.
வருடம் முழுவதும் நன்கு படித்தவர்களுக்குதான் இறுதி தேர்வின் வெற்றியின் அளவு அதிகமாக இருக்கும்.
தேர்வு எழுதிய பின் பாடத்தை படிக்க முடியாது.
நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் தன்மைதான்
நாம் உடனடியாக மோட்சத்திற்கு செல்வோமா
அல்லது
உத்தரிக்கிற ஸ்தலத்தின் வழியாக செல்வோமா என்பதைத் தீர்மானிக்கும்.
பாவத்திலிருந்து விடுதலை பெறவே பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை இயேசு ஏற்படுத்தினார்.
பாவமாசிலிருந்து விடுதலை பெறவே தாய்த் திருச்சபை நமக்கு தவ முயற்சிகளை சிபாரிசு செய்கிறது.
விழுந்தவர்களை தூக்கிவிட முயற்சிக்கும் போது நாம் விழாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா?
இறந்தவர்களுக்காக செபிக்கும் போதே,
நமக்காகவும் செபிப்போம்.
சிலுவைகளை நமது ஆண்டவர் கேட்டுக் கொண்டபடி சுமப்பதே
உண்மையான செப வாழ்வு.
எப்போது மரணிப்போம் என்பது நமக்கு தெரியாது.
ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.
வாழ்வோம், நிலை வாழ்வு பெற.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment