(மத்.12:50)
இயேசு தனது தந்தையைப் பற்றி பேசும் போதெல்லாம் நாம் ஒரு இறை இயல் உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.
மூவருக்கும் ஒரே வல்லமை, ஒரே ஞானம், ஒரே சித்தம்.
ஆகவே தந்தையின் சித்தம் தான் மகனின் சித்தமும்.
ஆகவே,
"தந்தையின் விருப்பப்படி" என்று சொல்வதை அவர் "எனது விருப்பப்படி" என்று சொன்னாலும் சரியே.
ஆனாலும் "வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ," என்று சொல்கிறார்.
பூங்காவனத்தில் அவர் இரத்த வியர்வை வியர்த்தபோதும்,
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"
என்றுதான் சொன்னார்.
தந்தையின் விருப்பமும், அவரது விருப்பமும் ஒரே விருப்பமாக இருந்தாலும்
ஏன் "உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்றார்?
நமக்காக மனுவுரு எடுத்த இயேசுவின் ஒவ்வொரு சொல்லும், செயலும், ஒவ்வொரு அசைவும் கூட நமக்கு ஒரு முன்மாதிரியாகவே இருக்கும்.
நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் நம் இயேசு.
நம்மைப் படைத்த கடவுள் நாம் அனுசரிக்க நமக்கு கட்டளைகளைத் தந்திருக்கிறார் என்பதன் பொருள் என்ன?
அவரது விருப்பம் தான் கட்டளை வடிவில் நமக்கு தரப்பட்டிருக்கிறது.
நாம் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும்,
நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்
என்பது நம்மை படைத்த இறைவனின் விருப்பம்.
இறைவனின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும்.
நாம் கிறிஸ்துவை அறியாதிருந்தபோது நமக்கு நற்செய்தி போதிக்கப்படுகிறது.
நாம் ஞானஸ்நானம் பெற விரும்புகிறோம்.
ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவன் ஆகிறோம்.
நல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறோம்.
இங்கு விரும்புகிறோம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் விரும்புவது நாம் அல்ல, நம்மை படைத்த இறைவன்,
இறைவன்தான் நாம் மனம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார்,
அந்த விருப்பத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
பாவம் மட்டும்தான்
நமது விருப்பத்தால்
இறைவனது விருப்பத்திற்கு எதிராக செய்யப்படுகிறது.
பாவம் தவிர மற்ற எல்லா செயல்களும் இறைவனது விருப்பப்படிதான், திட்டப்படிதான் நடக்கின்றன.
" நீ ஏன் கிறிஸ்தவனாக மாறினாய்?" என்று யாராவது கேட்டால் நாம் சொல்ல வேண்டிய பதில்
"அது என்னை படைத்தவரின் விருப்பம்."
"நீ ஏன் குருமடத்திற்குப் போனாய்?"
"அது கடவுளின் விருப்பம். அதை நிறைவேற்றினேன்."
"நீ ஏன் ஏழைகளுக்கு உதவி செய்கிறாய்?"
"அது கடவுளின் விருப்பம்."
நமது வாழ்வில் எத்தனை நல்ல காரியங்கள் நாம் செய்தாலும் அவையெல்லாம் கடவுளின் விருப்பப்படி தான் செய்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"நான் விரும்பினேன், செய்தேன்."
என்று சொல்வது தற்பெருமைக்கு ஆரம்ப நிலை.
இறையியல் படி தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம் தான், ஒரே விருப்பம் தான்.
இருந்தாலும் அவர் தந்தையை நோக்கி,
"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்கிறார்.
ஆனால் நமக்கும் இறைவனுக்கும் ஒரே விருப்பம் அல்ல.
இறைவனின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொள்கிறோம், அவ்வளவுதான்.
நாம் செயல்படுவது நமது விருப்பத்தினால் அல்ல, நம்மை படைத்தவனின் விருப்பத்தினால்.
ஆனால் அநேக சமயங்களில் நாம் தான் எல்லாவற்றையும் சாதித்ததாக பெருமைபட பேசிக் கொள்கிறோம்.
அப்படி பேசக்கூடாது.
எல்லாம் இறைவன் செயல் என்ற மனநிலையில் நாம் செயல்பட வேண்டும் என்று நமக்கு போதிப்பதற்காகவே,
தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பமாக இருந்தாலும் கூட
மகன் "தந்தையே உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று சொல்கிறார்.
"என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ,"
என்பதற்கு,
"கடவுளின் விருப்பப்படி வாழ்கிறவன் எவனோ"
என்பதுதான் பொருள்.
அப்படி வாழ்பவன்தான் இயேசுவின் தாயும், சகோதரனுமாக இருக்க முடியும்.
அன்னை மரியாள் திருமணம் ஆவதற்கு முன்பே கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
அவளது கன்னிமைக்கு பாதுகாவலாகத்தான்
மனைவியை இழந்த, வயதான சூசையப்பரை,
அவளை வளர்த்த பெரிய குரு
அவளுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார்.
கதிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது மரியாள்,
"இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"
என்று தனது கன்னிமை வார்த்தைப் பாட்டை வான தூதருக்கு நினைவு படுத்தினாள்.
ஆனால் அவள் வயிற்றில் பிறக்கப் போவது "கடவுளுடைய மகன்"
என்பதை அறிந்த உடனே,
"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்"
என்று கூறினாள்.
கடவுளுக்குத் தானே வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
ஆகவே அவரால் தன்னுடைய கன்னிமைக்கு பழுது வராது என்பது அவளுக்கு தெரியும்.
இறைவன் விருப்பப்படி நடக்க அவள் ஏற்றுக் கொண்டதால்தான் அவள் இறைவனின் தாயானாள்.
யாரெல்லாம் தந்தையின் விருப்பப்படி வாழ்கின்றார்களோ அவர்கள் எல்லாம் இயேசுவின் தாயைப் போன்றவர்கள்.
அன்னை மரியாளின் உண்மையான பக்தர்கள் எல்லாம் அன்னை மரியாளைப் போன்றவர்களே.
தாயைப் போல் தானே பிள்ளை.
"உண்மையான பக்தர்கள்." என்றேன்.
அம்மாவை போல வாழ்வதற்காக அவள் மீது பக்தி வைத்திருப்பவர்கள் உண்மையான பக்தர்கள்.
கேட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் பக்தி வைத்திருப்பவர்கள் பக்தர்கள் தான்,
ஆனால் எதற்காக பக்தி வைக்க வேண்டுமோ அது அவர்களிடம் இல்லை, ஆகவே உண்மையான பக்தி இல்லை.
மரியாளைப் பிடிக்காத சில பிரிவினை சகோதரர்கள் மரியாள் பக்திக்கு எதிராக இந்த வசனத்தை பயன்படுத்துகிறார்கள்.
மாறாக இது மரியாளுக்கு பெருமை சேர்க்கும் வசனம்.
தன் அன்னை தந்தையின்
சித்தப்படி வாழ்கின்றாள் என்பதை இயேசு இந்த வசனத்தால் உறுதி செய்கிறார்.
"என் தாய் வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவள்."
என்ற உண்மை இந்த வசனத்துக்குள் இருக்கிறது.
இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,
நமது வாழ்வின் போது நாம் நல்ல காரியங்களை செய்யும்போது,
"நான் செய்தேன்." என்று பெருமை பட பேசக்கூடாது.
நல்ல காரியங்களை செய்ய கடவுள் நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தேர்வு எழுதும் போது பேனாவா எழுதுகிறது?
பேனா எழுதுபவரின் கருவி.
எழுதுபவர் பேனாவை பைக்குள் வைத்து விட்டால் பேனாவால் எழுத முடியுமா?
இறைவன் முன் நமது நிலையும் அதுதான்.
இதை ஏற்றுக் கொள்வது தான் தாழ்ச்சி, புண்ணியங்களின் அரசி.
"நான் தான் செய்தேன்" என்று சொல்வது தற்பெருமை.
தற்பெருமை தலையான பாவங்களின் தலையான பாவம்,
லூசிபெரை சாத்தானாக மாற்றிய பாவம்.
நாம் தாழ்ச்சியுடன்
இறைவன் விருப்பப்படி வாழ்வோம்.
"எல்லாம் இறைவன் செயல்" எனக்கூறி புகழை எல்லாம் இறைவனுக்குக் கொடுப்போம்.
இயேசுவின் தாயாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment