நமது ஆண்டவராகிய இயேசு உலகில் 33 ஆண்டுகள் வாழ்ந்து விண்ணகம் எய்துமுன்
உலகில் தனது நற்செய்தி அறிவிக்கும் பணியை தொடர்ந்து செய்வதற்காக
ஏக, பரிசுத்த, கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை நிறுவினார்.
அவர் நிறுவியது ஒரே திருச்சபை தான்.
அதை உலகெங்கும் பரப்பும் பணியை தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கும்,
அவர்களுடைய வாரிசுகளுக்கும் அளித்தார்.
பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர்தான் அப்போஸ்தலர்களுடைய வாரிசுகள்.
அவர்களால் நிர்வகிக்கப்படும் திருச்சபை தான் இயேசு நிறுவிய ஒரே திருச்சபை.
திருச்சபை பரிசுத்தமானது. அதில் வாழும் நாம் அனைவரும் பாவிகள். அது பாவிகளின் பரிசுத்தமான கூடாரம்.
நம்மை பாவங்களிலிருந்து விடுவித்து,
இயேசுவின் அருளை தேவத்திரவிய அனுமானங்களின் மூலம் நமக்கு அள்ளித் தந்து,
நம்மை பரிசுத்தர்களாக மாற்றுவதுதான் அதன் பணி.
பரிசுத்தமானவர்கள் தான் இயேசுவின் விண்ணக அரசுக்குள் நுழைய முடியும்.
ஞானஸ்நானமும்,
பாவ சங்கீர்த்தனமும் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கும் தேவத்திரவிய அனுமானங்கள்.
திவ்ய நற்கருணை அருளின் ஊற்றாகிய நமது ஆண்டவரையே நமக்கு உணவாகத் தந்து நமது ஆன்மாவை பராமரிக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள் நிறைவேற்றும் திருப்பலியின் போது தான் நமது ஆண்டவர் அப்பத்திலும், ரசத்திலும் பிரசன்னம் ஆகிறார்.
இப்போது ஒன்றை புரிந்து கொள்ளலாம்.
அப்போஸ்தலர்களுடைய வாரிசுகளாகிய பாப்பரசரும், ஆயர்களும், குருக்களும், தேவத்திரவிய அனுமானங்களும் உள்ள திருச்சபைதான் இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே திருச்சபை.
இது உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானது.
எல்லோரும் இதன் உறுப்பினர்களாக சேர்ந்து, மீட்பு அடைய வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை.
திருச்சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்,
ஆகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள். ஒருவரை ஒருவர் நேசிக்கவும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கடமைப்பட்டவர்கள்.
இவர்கள் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களே.
இவ்வுலக வாழ்வு நிரந்தரமானது அல்ல. இங்கு வாழ்ந்து முடித்துவிட்டு விண்ணகம் சென்ற பின்பும் இவர்கள் திருச்சபையின் உறுப்பினர்களே.
எங்கு வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கடமைப்பட்டவர்கள்.
உலகில் வாழ்வோரும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாழ்வோரும்,
மோட்சத்தில் வாழ்வோரும்
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே.
எல்லோரும் சேர்ந்து இயேசுவின் ஞான உடல் என்று அழைக்கப்படுகிறோம்.
ஒருவரை ஒருவர் நேசிக்கவும்,
ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கடமைப்பட்டிருப்பதால்தான்
நாம் உலகில் வாழ்பவர்களை நேசிப்பதோடு விண்ணகவாசிகளையும் நேசிக்கிறோம்.
நமது செபத்தின் மூலம் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்கு உதவி செய்கிறோம்.
அவர்களும் தங்கள் செபத்தின் மூலம் நமக்கு உதவி செய்கிறார்கள்.
மோட்ச வாசிகளையும் நாம் நேசிப்பதோடு நமக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் அவர்களை நாடிச் செல்கிறோம்.
அவர்களும் நம்மை நேசிப்பதோடு நமக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்கிறார்கள்.
அவர்கள் நமக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் கடவுளை நோக்கிய தங்கள் செபத்தின் மூலம் செய்கிறார்கள்.
உதவி செய்வது நமது கடவுளே.
திருச்சபை குடும்பத்தினர் அனைவரும் தங்களது அன்பின் மூலமும், செபத்தின் மூலமும் கடவுளோடு இணைக்கப்பட்டிருக்கிறோம்..
புனிதர்கள் மட்டுமல்ல மற்ற விண்ணகவாசிகளும் நமக்காக கடவுளிடம் செபிக்கலாம்.
ஆகவே நமக்கு முன் விண்ணகம் சென்று விட்ட நமது திருச்சபையை சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளை நோக்கியும் செபிக்கலாம்.
அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும், மோட்சத்தில் இருந்தாலும் நமக்காக கடவுளிடம் வேண்டுவார்கள்.
மோட்ச வாசிகளை நோக்கி செபிக்கக் கூடாது என்பவர்கள் இயேசுவால் நிறுவப்பட்ட திருச்சபையை சேர்ந்தவர்கள் அல்ல.
"எங்களுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வேண்டாம், அம்மா மட்டும் போதும்" என்பவர்களை பற்றி அம்மா என்ன நினைப்பார்கள்?
"எங்களுக்கு இயேசு மட்டுமே போதும், சகோதர சகோதரிகள் வேண்டாம்,"
என்பவர்களைப் பார்த்து, இயேசு
"என்னை நேசிப்பவர்கள் நான் கொடுத்த இரண்டு கட்டளைகளையும் நிறைவேற்றுவார்கள்.
நிறைவேற்றாதவர்கள் என்னை உண்மையாக நேசிக்க முடியாது.
என்னை நேசிப்பவர்கள் கட்டாயம் தங்களது சகோதர, சகோதரிகளையும் நேசிப்பார்கள்.
விண்ணில் வாழும் தங்கள் உறவினர்களை நேசிக்காதவர்களால், என்னை மட்டும் எப்படி நேசிக்க முடியும்?
எனது ஞான உடலில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டாயம் நேசிப்பார்கள்.
என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்.
வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதுதான் வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பம்."
என்று கூறுவார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட ஒரு குணம் உண்டு.
ஒருவரது குணத்தை வைத்து அவர் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிடலாம்.
நமது நடை உடை பாவனைகளையும்,
நமது குணத்தையும் வைத்து
நம்மை இயேசுவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மற்றவர்கள் சொல்லும் அளவிற்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையை இறையன்பும் பிறர் அன்பும் வழி நடத்தினாலே நாம் இயேசுவின் சீடர்கள் என்று மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
விண்ணில் வாழும் புனிதர்களை நேசித்தால் மட்டும் போதாது அவர்களைப் போலவே நாமும் வாழ வேண்டும்.
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment