(லூக்.16:15)
பொருளாசை மிக்க பரிசேயர்களுக்கு நம் ஆண்டவர் கூறிய இவ்வார்த்தைகள்,
பொருளாசை மிக்க அனைவருக்கும் பொருந்தும்.
ஒரு குட்டிக் கதை:
ஒரு ஊர்ல ஒரு பெரிய பணக்காரர் இருந்தார்.
பெரிய பணக்காரர் என்று சொன்னால் மட்டும் போதாது, மிகப் பெரிய, மிக, மிகப் பெரிய பணக்காரர்.
அந்த ஊர்ல இருந்த அவ்வளவு விவசாய நிலமும் அவருக்குதான் சொந்தம்.
அதை பல பாகங்களாகப் பிரித்து, வருடக் குத்தகைக்கு விட்டிருந்தார்.
குத்தகைக்கு எடுத்தவர்கள் குத்தகைப் பணத்தை ஒழுங்காகச் செலுத்த வேண்டும்.
ஒருவன் மற்றவர்களை விட அதிகமான இடத்தை குத்தகைக்கு எடுத்திருந்தான்.
மற்றவர்கள் எல்லாம் குத்தகைப் பணத்தை ஒழுங்காகச் செலுத்திய போது இவன் மட்டும் ஒழுங்காகக்
கொடுக்கவில்லை.
நில உரிமையாளரும் மிகப்பெரிய பணக்காரராக இருந்ததால் வரவு செலவு கணக்குகளை அதற்கென்று பணிக்கு அமர்த்தப்பட்ட ஆட்களிடமே ஒப்படைக்திருந்தார்.
குத்தகைப் பணத்தை ஒழுங்காகச் செலுத்தாத கதாநாயகர் செலுத்தாத குத்தகை பணத்தைக் கொண்டு தான் வசதியாக வாழ்ந்ததோடு,
அந்த பணத்தைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு அவ்வப்போது உதவியும் செய்து வந்தார்.
அடுத்தவரது பணத்தைக் கொண்டு இவர் செய்த உதவிகள் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.
உதவி பெற்றவர்களுக்கு இவரது ஏமாற்றுத்தனம் தெரியாது.
இவருக்கு உரியதைக் கொண்டுதான் உதவுவதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது புகழ் மழையில் தான் இவர் தினமும் குளித்துக் கொண்டிருந்தார்.
கடவுளுக்குச் சொந்தமான இவ்வுலகப் பொருட்களை அவரது மகிமைக்காகப் பயன்படுத்தாமல்,
மனிதர்முன் தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்வதற்காகப் பயன்படுத்துபவர்கள்
நமது குட்டிக் கதையின் கதாநாயகனைப் போன்றவர்கள்தான்.
நமது செயலின் தன்மையைத் தீர்மானிப்பது அதை செய்கின்ற நமது உள்ளத்தில் உள்ள செயலுக்கான நோக்கம் தான்.
ஞாயிற்றுக்கிழமை பூசையில் காணிக்கை எடுக்கும் போது இருவர் ஆளுக்கு 50 ரூபாயை காணிக்கையாகப் போடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஒருவர் ரூபாயை மடித்து, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் காணிக்கையைப் போடுகின்றார்.
அடுத்தவர் நாம் ஐம்பது ரூபாயை காணிக்கையாக போடுவது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்றே அதை காண்பித்துக் கொண்டு காணிக்கைத் தட்டில் போடுகிறார்.
இருவர் போட்டதும் ஒரே தொகை தான், ஆனால் ஒரே நோக்கம் அல்ல.
ஆண்டவருக்காக மட்டும் போட்டவருக்கு விண்ணகத்தில் அதற்கான சம்பாவனை உண்டு.
தற்பெருமைக்காக போட்டவருக்கு விண்ணகத்தில் அதற்கான சம்பாவனை எதுவும் கிடைக்காது.
ஏனெனில் கடவுள் அவர்களது உள்ளங்களை அறிவார்.
கடவுளின் பிள்ளை என்ற முறையில் ஒருவருக்கு 10 பைசா உதவியாகக் கொடுத்தாலும் விண்ணகத்தில் அதற்குரிய பலன் உண்டு.
தற்பெருமைக்காகத் தன் சொத்து முழுவதையுமே கொடுத்தாலும் விண்ணகத்தில் ஒரு பலனும் கிடைக்காது.
இன்னொரு குட்டிக் கதை:
ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள்.
அவள் சின்ன வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவள்.
கோவில் காரியங்களுக்கும் உதவி செய்வாள்.
ஆனால் செய்த உதவியை மற்றவர்களிடம் சொல்லி பீத்திக் கொள்வாள்.
அவளுக்கு ஊரில் நல்ல பெயர்.
அவள் பாட்டியாவதற்கு முன்பே இலட்சக் கணக்கான பேருக்கு உதவிகள் செய்திருப்பாள்.
அவள் மரணப் படுக்கையில் இருக்கும்போது அவளைப் பார்க்க வந்தவர்கள்,
"பாட்டி, மோட்சத்தில் உங்களுக்கு இயேசுவின் பக்கத்தில் இடம் கிடைக்கும்." என்று பெருமையாகக் கூறுவார்கள்.
பாட்டி மிகவும் மகிழ்வாள்.
சிரித்த முகத்துடன்தான் உயிரை விட்டாள்.
அவள் மோட்சத்திற்குச் சென்ற போது வாசலில் நின்று கொண்டிருந்த இராயப்பர் அவளைப் பார்த்து,
"பாட்டி, இந்தப் பக்கம் வந்து உட்காருங்கள்."
"இராயப்பரே, நான் வாசல் பக்கம் உட்காருவதற்காக மோட்சத்திற்கு வரவில்லை. உள்ளே விடுங்கள். இயேசுவைப் பார்க்க வேண்டும்."
"முதலில் மோட்சத்தில் எந்த இடத்தில் அமர வேண்டும் என்று தெரிந்து கொண்டு உள்ளே போகலாம்."
"நான் இயேசுவின் அருகே அமர வேண்டும்."
"பாட்டி, முதலில் உட்காருங்கள்."
வேறு வழியில்லாமல் பாட்டி உட்கார்ந்தாள்.
அவள் முன்னால் ஒரு பெரிய மேஜை இருந்தது.
அதன்மேல் ஒரு பெரிய பெட்டி இருந்தது.
பாட்டி அந்த பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதில் அவள் பெயர் எழுதப்பட்டிருந்தது.
இராயப்பர் அவளைப் பார்த்து,
"பாட்டி, இந்த பெட்டிக்கு ரோஜா மலர்ப் பெட்டி என்று பெயர்.
உலகில் இருந்தபோது நீங்கள் மற்றவர்களுக்குச் .செய்த ஒவ்வொரு உதவியின் போதும்
ஒரு ரோஜா மலர் இந்த பெட்டிக்குள் வந்து விழும்.
இப்போது பெட்டியைத் திறந்து அவற்றை எண்ணுவோம்.
அவற்றின் எண்ணிக்கை தான் நீங்கள் போட்சத்தில் எங்கே அமர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்."
"நான் உலகில் இருந்த போது இலட்சக் கணக்கான பேருக்கு உதவி செய்திருக்கிறேன்.
சீக்கிரம் பெட்டியைத் திறங்கள்."
இராயப்பர் பெட்டியைத் திறக்க சாவியை எடுத்த போது இன்னொரு பெட்டி வந்து அருகில் உட்கார்ந்து கொண்டது
"இது என்ன பெட்டி, இராயப்பரே?"
"நீங்கள் செய்த உதவியை மற்றவர்களிடம் சொல்லி பெருமைப் படும்போதெல்லாம் முதல் பெட்டியில் விழுந்த ரோஜா மலர் இந்த பெட்டிக்குள் வந்து விடும்."
பாட்டிக்குத் திக் என்றது.
இராயப்பர் முதல் பெட்டியைத் திறந்தார்.
உள்ளே ஒரு மலர் கூட இல்லை.
இரண்டாவது பெட்டியைத் திறந்தார்.
பெட்டி நிறைய மலர்கள்.
"பாட்டி, நீங்கள் இலட்சக் கணக்கான பேருக்கு உதவி செய்திருக்கிறீர்கள்.
விழுந்த மலர்கள் எல்லாம் முதல் பெட்டியிலேயே இருந்திருந்தால் உங்களுக்கு இயேசுவின் அருகில் இடம் கிடைத்திருக்கும்.
இப்போது நீங்கள் ஒவ்வொரு உதவிக்கும் பெருமைப் பட்டுக் கொண்டதால் கடைசி வரிசையில்தான் உங்களுக்கு இடம்."
"அங்கிருந்து இயேசுவை நன்கு பார்க்கலாமா?"
"இயேசுவை எல்லோரும் நன்றாகப் பார்க்கலாம். சந்தோசமாக உள்ளே போங்கள்."
"மகிழ்ச்சி குறைவாக இருக்குமோ?"
"செய்த உதவிகளைப் பற்றி பெருமைப் படாதிருந்திருந்தால் நீங்கள் பெரிய பாத்திரமாக இருந்திருப்பீர்கள்.
இப்போது உங்களையே நீங்கள் சிறிய பாத்திரமாக மாற்றி விட்டீர்கள்.
பெரிய பாத்திரமோ, சின்ன பாத்திரமோ, பாத்திரம் நிறைய மகிழ்ச்சி இருக்கும்.
உங்கள் அளவில் உங்கள் மகிழ்ச்சியும் முழுமையாக இருக்கும்."
இந்த கதைப் பாட்டியிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்வோம்.
நாம் உட்பட இந்த உலகில் உள்ளதெல்லாம் இறைவனுக்குச் சொந்தமானது.
அனைத்தையும் அவரது மகிமைக்காகவே பயன்படுத்துவோம்.
விண்ணகத்தில் நமக்குரிய சம்பாவனை மிகவும் பெரியதாக இருக்கும்.
விண்ணகத்திற்குச் செல்லும் போது அனுபவிப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment