உலகின் முடிவு நெருங்கும்போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இயேசு கூறிவிட்டு,
"நீங்களும் இதெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது கடவுளின் அரசு அண்மையில் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்."
"களியாட்டத்தாலும் குடிவெறியாலும் உலகக் கவலையாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடையாதபடியும்,
அந்நாள் எதிர்பாராமல் கண்ணிபோல் உங்களைச் சிக்கவைக்காதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்."
"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு
மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
என்று கூறுகிறார்.
உலக முடிவு நெருங்கும் காலத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுவாகக் கூறிய இந்த புத்திமதி
நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலும் பொருந்தும்.
இவ்வுலகில் நமது வாழ்நாள் நிலையானது அல்ல என்பதால்
நமது வாழ்வை தொடங்கும் போதே அதன் முடிவை நோக்கித்தான் நாம் நகர்கிறோம்.
நாம் பிறந்த பின் உண்மையில் நாம் வளர்வதில்லை.
மாறாக நமது வாழ்வின் மொத்த காலமும் ஒவ்வொரு நாளாக குறைந்து கொண்டுதான் வருகிறது.
நமது முதல் பிறந்தநாளை நாம் கொண்டாடும்போது நமது மொத்த வாழ்வில் ஒரு வருடம் குறைந்துவிட்டது.
ஆகையால் நமது வயது அதிகரிக்க அதிகரிக்க வாழ்நாள் தேய்ந்து கொண்டு தான் வருகிறது.
ஆகவேதான் ஆரம்ப காலத்தில் இருந்தே இறுதி காலத்திற்காக நம்மையே தயார் படுத்தி கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
அதிலும் நமது இறுதி நாள் என்று என்று நமக்கு தெரியாததால்,
இறுதி நாளில் ஆண்டவரின் வருகைக்காக தயாராக இருக்க வேண்டிய நாம்,
நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்துக் கொண்டு இயேசுவின் வருகைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவரின்றி அணுவும் அசையாது.
நமது விண் நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் இயேசுவின் இடைவிடாத உதவி தேவைப்படுகிறது.
இயேசு 'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று சொன்னது இந்த உதவியைத்தான்.
"மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
நமது வாழ்வின் இறுதியில் இயேசுவின் முன்பு தனித் தீர்வைக்காக நிற்பதற்கு வேண்டிய வலிமையைத் தரும்படி,
நாம் இயேசுவை நோக்கி ஒவ்வொரு வினாடியும் செபிக்க வேண்டும்.
பகலிலும், இரவிலும்,
பணியிலும், ஓய்விலும்
நமது சிந்தனை இயேசுவின் மேலேயே இருக்க வேண்டும்.
செபம் என்றாலே இறைவனோடு இணைந்திருப்பது தான்.
Prayer means union with God.
வாழ்வின் இறுதியில் இறைவனை தைரியத்தோடு சந்திக்க வரம் தரும்படி அவரிடமே வேண்ட வேண்டும்.
தைரியத்தோடு சந்திப்பது என்றால் பாவமாசின்றி, பரிசுத்தமான இருதயத்தோடு சந்திப்பது.
பாவம் செய்யாதிக்கவும், புண்ணியத்தில் வளரவும் வேண்டிய வரம் வேண்டி இறைவனை மன்றாட வேண்டும்.
இறைவன் தரும் வரத்தைப் பயன்படுத்தி நாம் செயல்பட வேண்டும்.
பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
இறை வரங்களின் வாய்க்கால்களாகிய தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்.
அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
பரிசுத்தமான உள்ளத்தோடு அடிக்கடி திவ்ய நற்கருணை உண்ண வேண்டும்.
அடிக்கடி திருப்பலியில் கலந்துகொண்டு இறை மகனை இறைத் தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு வாழ்ந்தால் நமது வாழ்வின் இறுதியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வுலக வாழ்வின் இறுதிதான் நிலை வாழ்வின் ஆரம்பம்.
இதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வினாடியும் வாழ்வோம்.
நிலை வாழ்வு நமதே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment