"தாத்தா, நான் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருக்கிறேன்"
", very good. தினமும் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பாய். இப்போது எழுதலாம் என்றிருக்கிறாய். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்."
"தாத்தா, இப்போதும் கேள்விகள் கேட்கத் தான் வந்திருக்கிறேன்."
", எப்போது கட்டுரை எழுதுவாய்?"
"எனது கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தெரிந்து கொண்ட பின்,
முதலில் ஒரு முன்னுரை."
", கட்டுரைக்கா?"
"இல்லை. எனது கேள்விகளுக்கு"
",கேள்விகளுக்கு முன்னுரையா?"
"ஆமா. நான் உறுப்பினராக இருக்கும் ஒரு குழுவின் (Group) நிர்வாகி (Administrator) மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்.
கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்காகத் தான் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
குழுவில் கத்தோலிக்கர் அல்லாதோரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
அவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளை அறிய வேண்டும் என்பதுதான் குழுவின் நோக்கம்,
ஆனால் அவர்களில் ஒருவர் Forward செய்த ஒரு கட்டுரை இறைவனின் தாயாகிய நம் அன்னையை உண்மைக்கு புறம்பான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்திருக்கிறது.
அதை எழுதியவர் யார் என்று நமக்குத் தெரியாது. Forward செய்தவர் மட்டும் தான் நமக்குத் தெரியும்.
கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.
"மரியாள் இயேசுவுக்கு சமமாக, இன்னும் மேலாக கருதப் படுகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எப்படி கொண்டாடப்படுகின்றதோ
அப்படியே கன்னி மரியாளின் பிறந்த நாளும் மிக ஆடம்பரமாக கொண்டாடப் படுகிறது.".
இல்லாத ஒன்றை அச்சிட்டு விட்டால் அது உண்மையாகி விடுமா தாத்தா?"
",கத்தோலிக்க திருச்சபை எந்த காலத்திலும் மரியாள் இயேசுவுக்கு சமமானவள் என்று கூறவேயில்லை.
நம்மைப் போலவே அவளும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பெண்மணி.
அவர் தான் மனிதனாகப் பிறக்கும் போது தனக்குத் தாயாக இருக்க ஒரு பெண்மணியை நித்திய காலமும் திட்டமிட்டு,
அந்த நோக்கத்திற்காகவே அவரால் குறிக்கப்பட்ட காலத்தில் அவளைப் படைத்தார்.
இயேசு தேவ சுபாவத்தில் காலங்களைக் கடந்தவர், நித்தியர்.
மனித சுபாவத்தில் காலத்திற்கு உட்பட்டவர், பிறப்பும் இறப்பும் உள்ளவர்.
மரியாள் நம்மை போலவே காலத்திற்கு உட்பட்டவர்.
காலத்திற்கு உட்பட்ட மரியாள் எப்படி காலங்களை கடந்த கடவுள் இயேசுவுக்குச்
சமமானவளாக இருக்க முடியும்?
இருக்கிறாள் என்று திருச்சபை சொல்லுமா?
இயேசு சர்வ வல்லவர்.
சர்வ வல்லவருக்கு சமமாக மரியாள் இருக்கிறாள் என்று திருச்சபை சொல்லுமா?
சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொன்னால் உண்மையாகி விடுமா?
திருவிழா கொண்டாட்டங்களை வைத்து எப்படி அன்னைக்கு இயேசுவை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்ல முடியும்?
பெற்றோர் குழந்தையின் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினால், குழந்தை பெற்றோரைவிட பெரியவன் ஆகிவிடுவானா?
நாம் இயேசுவுக்கும் விழாக் கொண்டாடுகின்றோம்,
புனிதர்களுக்கும் விழாக் கொண்டாடுகின்றோம்.
பூனை நான்கு கால்களால் நடக்கிறது,
புலி நான்கு கால்களால் நடக்கிறது,
ஆகவே பூனையும் புலியும் சமம் என்று கூறுவது போல்
அவரது கூற்று இருக்கிறது.
இயேசுவுக்கு கொண்டாடப்படும் விழாக்களுக்கும்,
புனிதர்களுக்கு கொண்டாடப்படும் விழாக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அது நமக்குத் தெரியும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம் மட்டுமே தெரியும்."
"ஆண்டவரின் தாய். இந்த கோட்பாட்டின் படி இயேசுவின் தாய்க்கும் இயேசுவுக்கு ஒரே சம நிலையில் மதிப்பு கொடுக்கப் படுகின்றது." என்று கட்டுரை ஆசிரியர் எழுதுகிறார்.
அன்னை மரியாளை கடவுளின் தாய் என்று நாம் அழைப்பதால் அவளை இயேசுவுக்கு சமமாக நாம் கருதுகின்றோமாம்."
", இயேசு கடவுள். அன்னை மரியாள் கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்தாள். ஆகவே அவள் கடவுளின் தாய்.
சாதாரண பெண்மணிகளை விட கடவுளின் தாயாகிய மரியாள் பெருமைக்கு உரியவள்.
நாம் இயேசுவை கடவுளாகவும்,
மரியாளை அவருடைய தாயாகவும் கருதுகிறோம்.
கடவுளை மனிதனாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றவன் மரியாள் என்று தான் சொல்லுகிறோம். இயேசுவுக்கு சமமானவள் என்று சொல்லவில்லை.
"இறைவனின் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்றுதான் சொல்லுகிறோம்.
"இறைவனுக்கு சமமானவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று நாம் சொல்லவில்லை."
"எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று சொல்லும் போதே இயேசு அன்னையை விட மேலானவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்."
",இயேசு கிறிஸ்து *ஸ்தீரீயே* என்ற பொருள் படும் வகையில் தொடர்பு கொள்ளும் வகையில் தான் சொல்லப்பட்டு இருக்கின்றது."
என்று எழுதியிருக்கிறார்.
",மரியாள் அவரது அன்புக்குரிய தாயாக இருந்ததால்தான் இயேசு தான் 33 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்வில் மரியாளுக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.
இறைவனின் 10 கட்டளைகளில் நான்காவது கட்டளை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்வது.
அவரது கட்டளையை அவரே பின்பற்றி நடந்து நமக்கு முன்மாதிரிகை காட்டி இருக்கிறார்."
"தாத்தா, அந்தக் கட்டுரை ஆசிரியர் ''அப்படியே ஆண்டவரின் தாய் என்று சொன்னாலும் இன்றைய வழக்கத்தின் படி ஒருவர் தனது வாடகை தாய்க்கு எந்த மரியாதையை கொடுக்கின்றாரோ அதே கனத்தை தான் இயேசு கிறிஸ்து மரியாளுக்கு கொடுக்கின்றார்" என்று சொல்கிறார்
சர்வத்தையும் படைத்து பராமரித்து வரும் சர்வ வல்லவ கடவுள் தன்னை மனிதனாய்ப் பெற்ற தாயை வாடகைத் தாய்க்குச் சமமாகக் கருதுவாரா?
தனது தாயை வாடகை தாய்க்குச் சமமானவள் என்று கூறும் அளவிற்கு தரம் கெட்டு போனவர்களைப் பற்றி இயேசு என்ன நினைப்பார்?"
",இயேசு பாவிகளை நேசிக்கும் கடவுள்.
தன்னைக் காட்டி கொடுத்த யூதாசையே 'நண்பனே' என்று அழைத்தவர்.
இப்படிப் பட்டவர்வர்களுக்காகவும் சேர்த்துதான் இயேசு சிலுவையில் தன்னை பலியாக்கினார்.
நாமும் அவர்களை மன்னித்து அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்."
"தாத்தா, நாம் அன்னை மரியாளை சென்ம பாவமருவின்றி உற்பவித்தவள் என்று விசுவசிக்கிறோம்.
தனது வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி வாழ்ந்தவள் நமது அன்னை.
ஆனால் அந்த கட்டுரையாசிரியர் அன்னை மரியாள்
பாவமற்றவர் என்று வேதத்தில் எந்த இடத்திலும் சொல்லப் பட வில்லை என்று கூறுகிறார்."
", கபிரியேல் தூதர் மரியாளை "அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்று வாழ்த்தியதை நண்பர் வாசித்திருக்க மாட்டார்.
ஒரு பாத்திரம் ஒரு பொருளால் நிறைந்திருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
"அந்தப் பாத்திரத்தில் அந்த பொருளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அர்த்தம்."
", மரியாள் அருள் நிறைந்தவள் என்று சொன்னால், அவளிடம் அருளுக்கு எதிரான பாவம் சிறிதும் இருக்க முடியாது என்று அர்த்தம்.
மரியாளை அருள் நிறைந்தவள் என்று வாழ்த்தியவர் இறைவனால் அனுப்பப்பட்ட வான தூதர்.
அவர் இறைவன் கொடுத்த வாழ்த்துச் செய்தியை அப்படியே மரியாளுக்கு தெரிவித்தார்.
மரியாளிடம் எந்தவித மாசும் இல்லை என்று தனது தூதர் வழியாக அறிவித்தவர் எல்லாம் வல்ல இறைவன்.
பாவங்கள் இரண்டு வகை. சென்மப் பாவம், கர்மப் பாவம்.
நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நாம் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே சென்ப பாவத்தோடு உற்பவிக்கிறோம்.
நாம் இறைவன் கட்டளையை மீறி செய்கிற பாவம் கர்ம பாவம்.
இந்த இரண்டு வித பாவங்களும் மரியாளிடம் இல்லை.
பரிசுத்தமான கடவுள் தான் மனித உரு எடுப்பதற்காக தனது தாயை சென்மப் பாவம் இன்றி படைத்தார்.
அவள் வேறு எந்த பாவமும் செய்து விடாதபடி தனது அருள் வரத்தால் காத்தார்.
இது அவருடைய தாய்க்கு மட்டும் கொடுக்கப்பட்ட விசேசமான வரம்.
"அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்ற கபிரியேல் தூதரின் வாழ்த்துரையில் இந்த உண்மை அடங்கியிருக்கிறது.
வேண்டுமென்றே மரியாளை விரும்பாத நமது பிரிவினை சகோதரர்களுக்கு இது புரியாது.
புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பார்கள்."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment