Tuesday, November 22, 2022

"மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று"(லூக்.22:24)

"மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று"
(லூக்.22:24)

இயேசுவின் இறுதி இரவு உணவு நேரம்.

கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பலிப் பொருளை ஒப்புக்கொடுத்தவர்கள் உண்பது வழக்கம்.

இயேசு வெள்ளிக்கிழமை அன்று தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கப்படவிருக்கும் தன்னை 

வியாழக்கிழமை அன்றே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

அப்பத்தை தனது உடலாகவும் ரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு உணவாக கொடுக்கிறார்.

இயேசு பிறந்த பின்  செய்த முதல் புதுமை கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது.

இறக்குமுன் அவர் செய்த கடைசி புதுமை திராட்சை ரசத்தை தன் ரத்தமாக மாற்றியது.

கானாவூர் புதுமை இதற்கு ஒரு முன் அடையாளம்.

"திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.

அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? 

எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்."

இயேசு இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்ட நேரம் இறுதி உணவு நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

திருமணத்தின் போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது.

இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார்.

இறுதி உணவின்போது திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றுகிறார்.

தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதும் உணவாக கொடுப்பதற்காகத் தான்.


திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றியதும் உணவாக கொடுப்பதற்காகத் தான்.

கடவுளால் எல்லாம் முடியும்.

சர்வ வல்லமையுள்ள கடவுள் மனிதனாகப் பிறக்கும்போது பாவம் தவிர மனிதனிடம்  உள்ள எல்லா பலகீனங்களையும் தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டார்.

பாடுகள் பட்டு மரித்து மனிதனை மீட்பதற்காகவே மனிதனாய் பிறந்த சர்வ வல்லமை உள்ள கடவுள் ஏற்றுக் கொண்ட பலகீனங்களில் ஒன்று பயம்.

இது தான் மெய்யாகவே மனிதன் என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகத்தான்.

பயத்தின் காரணமாக இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட போராட்டம் தான் 

கெத்சேமனி தோட்டத்தில் இயேசுவின் இரத்த வேர்வையாகவும் 

தந்தையை நோக்கி சொன்ன செபமாகவும் வெளிப்பட்டது.

இந்த போராட்டத்தின் மத்தியில் அவருடைய சீடர்கள் நடந்து கொண்ட விதம்தான் நமக்கு கவலையை அளிக்கிறது.

பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் இயேசுவை உணவாக உட்கொண்டவுடன் அவரைக் காட்டிக் கொடுக்கப் புறப்பட்டான்.

மற்ற சீடர்கள் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்று வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

சிறிது நேரத்திற்கு முன்புதான் அவர்களுக்கு குருப் பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்ற வார்த்தைகள் மூலம்,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றும் வல்லமை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, உணவிற்கு முன்னால் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவி தாழ்ச்சியைப் பற்றி அவர்களுக்கு போதித்திருந்தார்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், 

நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.

நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்."

என்று சொல்லியிருந்தார்.

இவ்வளவையும் கேட்டபின், மூன்று ஆண்டுகள் இயேசுவிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் 

தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்று வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்கள்.

இயேசு பொறுமையாக, 

"உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், 

தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.

யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? 

பந்தியில் அமர்பவன் அன்றோ?

 நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்." என்றார்.

இயேசு சீடர்களுக்கு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

 நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் பெரிய மனிதன் ஆவதற்கு தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் பையனை சேர்க்கும்போதே

" நன்கு படிக்க வேண்டும், 

முதல் மதிப்பெண் பெற வேண்டும்.

பட்டங்கள் பெற வேண்டும், 

பதவிகள் பெற வேண்டும், 

மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்,

பெரிய மனிதன் என்று பெயர் எடுக்க வேண்டும்" என்றுதான் சொல்கிறோம்.

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது பதவி உயர்வு பெற்று நிர்வாகியாக மாற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம்.

MLA ஆன உடனே முதல்வர் பதவிக்கு முயற்சி செய்கிறோம்.

நமது திருச்சபையில் கூட பங்குச்சாமியாருக்கு ஆயர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும்.

பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை பார்த்தவுடன் சிறியவர்களுக்கும் பெரியவர்கள் ஆக ஆசை பிறக்கும்.

நம்மைப் பார்த்து ஆண்டவர் சொல்கிறார், 

"நான் என்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவியது போல நீங்கள்   மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

நான் விண்ணையும் மண்ணையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுள்.

காலங்களை கடந்து நித்தியத்தில் வாழ்பவர்.

நான் ஏன் மண்ணுலகில் மனிதராக பிறந்து,

எனது சீடர்களின் பாதங்களைக் கழுவும் அளவுக்கு என்னையே தாழ்த்தி,

மனிதர்களாகிய உங்களுக்கு பணி புரிகிறேன்?

நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தானே!

நான் உங்களை அன்பு செயவது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தால்,

ஏற்றத்தாழ்வு பார்க்காமல் ஒருவர்க்கு ஒருவர் பணிபுரிவீர்கள்.

சமூக அந்தஸ்தைப் பார்க்காதீர்கள்.

உங்களது அன்பை மட்டும் பாருங்கள்.

எல்லோருக்கும் பணி புரியுங்கள்.

உங்களது அன்பும், பணிவும், பணியும் மட்டும்தான் உங்களை எனது அன்பிற்கு இனிய சீடர்களாக மாற்றும்.

பணி புரிவது உங்களது வாழ்வாக இருக்கட்டும்."

பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல்,

 ஒருவருக்கு ஒருவர் பணிபுரிந்து இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

இயேசு மட்டுமே நம்மை விட பெரியவர்.

நாம் எல்லோருமே சிறியவர்கள் தான்.

இதைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment