Sunday, November 13, 2022

அன்பு படும் பாடு.

அன்பு படும் பாடு.


"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன." 

கடவுள், மனிதன் உட்பட, எல்லாவற்றையும் நல்லவையாகவே படைத்தார்.

மனிதன் மட்டும் தனது பரிபூரண சுதந்திரத்தை பயன்படுத்தி பாவம் செய்தான்.

மற்ற பொருட்களுக்கு சுதந்திரம் இல்லாததால் அவற்றால் பாவம் செய்ய முடியாது.

ஆகவே அவை படைக்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து நல்லவையாகவே இருக்கின்றன.

மனிதன் அவற்றை பயன்படுத்தி இறை அன்பிலும் பிறர் அன்பிலும் வளர வேண்டும்.

ஏவாள் சாப்பிட்ட பழத்தில் குறை ஒன்றும் இல்லை. சாப்பிடக் கூடாது என்ற கட்டளையை மீறி சாப்பிட்டது தான் பாவம்.

இப்போதும் உலகப் பொருள்களை மனிதன் பயன்படுத்தக்கூடிய விதமாய் பயன்படுத்த வேண்டும்.

எதற்கு பயன்படுத்தக் கூடாதோ அதற்கு பயன்படுத்தும் போது தான் பாவம் நுழைகிறது.

ஒருவன் கையில் ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

 அதை தேவைப்படும் ஒரு ஏழைக்கு உதவியாக கொடுக்க பயன்படுத்தினால் அவன் புண்ணியம் செய்கிறான்.

 அதே பணத்தை இலஞ்சமாக கொடுக்கப் பயன்படுத்தினால் பாவம் செய்கிறான்.

God is Love.
கடவுள் அன்பாக இருக்கிறார்.

அன்பு (Love) ஒரு மிகவும் நல்ல வார்த்தை.

ஏனென்றால் அது கடவுளின் பண்பைக் குறிக்கிறது.

ஆனால் இன்று மனிதனால் மிகவும் தவறாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வார்த்தையும் அதுதான்.

"Today,” observes Pope Benedict, “the term ‘love’ has become one of the most frequently used and misused of words” (Deus Caritas Est, no. 2)"

நாம் நமது அயலானை நேசிக்க வேண்டும்.

We must love our neighbour.

 ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும் நமது அயலான்கள் தான்.

I love God. என்று நாம் கூறினால் நம்மை நல்லவர்கள் என்பார்கள்.

ஆனால், நம்மை முன்பின் தெரியாத ஒரு பெண்ணைப் பார்த்து "I love you" என்று சொன்னால் அவள் ஏன் செருப்பை கழற்றுகிறாள்?

அந்த அளவுக்கு மனிதன் love என்ற வார்த்தையைத் தவறாகப்
 பயன்படுத்தி அதன் சாயலையே கெடுத்திருக்கிறான்.

அன்பு செய்வது புனிதமான செயல். அது கடவுள் செய்து கொண்டிருக்கும் செயல்.

அன்பு செய்வது கடவுளின் செயலாகையால் 

நாம் யாரை அன்பு செய்தாலும்

 கடவுளின் பெயரால் 

அவர் நம்மை எதற்காக அன்பு செய்கிறாரோ 

அதற்காகவே நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும். 

கடவுள் நம்மை பராமரித்து ஆன்மீக ரீதியாக விண்ணக வழியில் நடக்கும் வழியாக அன்பு செய்கிறார்.

ஒரு தாய் தன் பிள்ளையை அன்பு செய்வது அதை கடவுளின் பிள்ளையாக வளர்ப்பதற்காகத்தான்.

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை அன்பு செய்வது அவர்களை கடவுளுக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக தான்.

ஆனால் ஒரு ரயில் பயணி தனது சக பயணியோடு அன்பான வார்த்தைகளைக் கொண்டு, பேசி அவனை தன் வயப்படுத்திய பின்

அவன் தூங்கும்போது

 அவனது பொருட்களை திருடிக் கொண்டு சென்றால் 

அவன் முதலில் அன்பு செய்யவில்லை 

அன்பு செய்வது போல் நடித்தான்.

நல்லவர்கள் போல் நடிப்பவர்களும் அன்பான வார்த்தைகளை பயன்படுத்துவதால் 

அன்பான வார்த்தைகள் களங்கம் உள்ளவைகளாக மாறிவிட்டன.

ஆகவே உண்மையாகவே  அன்பாகப் பேசுகின்றவர்களைக் கூட நம்மால் நம்ப முடியவில்லை.

நல்லவர்கள் கூறும் அதே நல்ல வார்த்தைகளை திருடர்களும் திருடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆகவே பேச்சை வைத்து யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

 தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகளை போல மக்கள் மேல் அன்பொழுக பேச யாராலும் முடியாது.

மக்களிடையே பணத்தை வாரி இறைக்கவும் முடியாது.

தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தும் மக்களுக்காகவே இருப்பது போலவும்,

தாங்கள் பிறந்து வாழ்வது மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் என்பது போலவும் வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.

எதற்காக?

அதிக ஓட்டுக்கள் பெற்று பதவியில் அமர்ந்து தேர்தலில் செலவழித்தது போல பல மடங்கு சம்பாதிப்பதற்காக.

அன்பு, சேவை என்ற வார்த்தைகள் (அன்பும் அல்ல, சேவையும் அல்ல) அவர்கள் கையில் படும் அவதியை பாருங்கள்.

The most misused words by the politicians are love and service.

அரசியல்வாதிகள் அப்படி.

 நாம் எப்படி?

"Love is divine." என்று சொல்கிறோம்,

முற்றிலும் சரிதான்.

கடவுளுடைய அன்பு தெய்வீகமானது.

நமது அன்பு?

கடவுள் தனக்காக, தான் பயன்பெற வேண்டும் என்பதற்காக, நம்மை அன்பு செய்யவில்லை.

அவர் இயல்பிலேயே பரிபூரணமானவர்.

அவர் நிறைவாக இருக்க மற்றவர்களிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை.

அன்பின் மிகுதியால் அவர் நம்மை படைத்ததே நாம் நித்தியத்துக்கும் அவரோடு பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நாம் நன்றாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை அன்பு செய்கிறார்.

நாம் அவரை அன்பு செய்ய வேண்டும் என்று அவர் சொல்வதே நமது நன்மைக்காகத்தான்.

நாம் அவரை அன்பு செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர் தனது அன்பில் பரிபூரணமாக இருக்கிறார்.

நாம் கடவுளை அன்பு செய்தால் அதன் பயனாகிய நித்திய பேரின்பத்தை நாம்தான் அனுபவிப்போம்.

மனித அன்பு (Human love) அவருடைய அன்பை போல் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.


 “To love is to will the good for another.”
St. Thomas Aquinas.

ஆகவேதான் நம்மை அவரது
 சாயலில் படைத்தார்.

ஆனால் நாம் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை மனித தன்மை கொண்ட அன்பாக மாற்றி விட்டோம்.

கடவுளை மையமாக கொண்டிருக்க வேண்டிய அன்பை நம்மை மையமாக கொண்டதாக மாற்றி விட்டோம்.

நாம் யாரையாவது அன்பு செய்ய வேண்டும் என்றால் அதனால் நமக்கு என்ன நன்மை என்பதையே நினைத்துப் பார்க்கிறோம்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பை என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நமக்கு யாரும் சொல்லாமலேயே தெரியும்.

அன்பினால் சேர்ந்து வாழ வேண்டிய குடும்பங்கள் சுயநலம் காரணமாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருப்பது அன்பு படும் பாட்டுக்கு ஒரு உதாரணம்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்டது சுயநலம் அற்ற அன்பு.

அதற்குள் சுயநலத்தைப் புகுத்தி அதன் சாயலை கெடுத்து விட்டோம்.

கையில் பைபிளை மட்டும் எடுத்துக்கொண்டு கத்தோலிக்க சபையை விட்டு பிரிந்து சென்ற நமது சகோதரர்கள் 

காணிக்கை வசூலிப்பதற்காக மட்டும் கிறிஸ்துவின் அன்பை பற்றி பேச கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இயேசுவின் அன்பை வியாபார பொருளாக மாற்றிவிட்ட இவர்களை கடவுள்தான் மனம் திருப்பி தாய்த் திருச்சபைக்கு அழைத்து வரவேண்டும்.  

கடவுள் அன்பை வாழ்கிறார்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட சுயநலமற்ற அன்பை நாமும் வாழ்வோம்.

கடவுள் நம்மை நேசிக்கும் போது நாம் வாழ்கிறோம்.

நாம் கடவுளை நேசிக்கும் போதும் நாம்தான் வாழ்கிறோம்.

நாம் அயலானை நேசிக்கும் போது அயலான் வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.
 



 




.

No comments:

Post a Comment