Monday, November 7, 2022

நித்தியத்துக்கும், நமக்கும் என்ன உறவு?

நித்தியத்துக்கும், நமக்கும் 
      என்ன உறவு?


மனிதர்களாகிய நாம் இடத்துக்கும் நேரத்துக்கும் கட்டுப் பட்டவர்கள்.

We are bound to space and time.

இடமும், நேரமும் துவக்கமும் முடிவும் உடையவை. ஆகவே நிரந்தரமானவை அல்ல.

உலகமாகிய இடத்தில் வாழும் மனிதனும் நிரந்தரமாகவன் அல்ல.

உலகத்தை போலவே நமக்கும் துவக்கமும் முடிவும் உண்டு.

நமது உலக வாழ்க்கை பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது.

உலகத்தை, அதாவது, இடத்தையும் நேரத்தையும் படைத்த கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர், அதாவது நித்தியர்.

'நாம் காலத்தில் வாழ்கிறோம், கடவுள் நித்தியத்தில் வாழ்கிறார்.

நித்தியம் காலத்திற்கு அப்பாற்பட்டது.

இதைப் பற்றி தியானித்துக் கொண்டிருந்த போது

நமக்கும் நித்தியத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்ற ஒரு வினோதமான கேள்வி மனதில் எழுந்தது.

நித்தியம் துவக்கமும் முடிவும் அற்றது.

நாம் துவக்கமும் முடிவும் உள்ளவர்கள்.

துவக்கமும் முடிவும் உள்ள நாம்,
துவக்கமும் முடிவும் இல்லாத கடவுளால் படைக்கப் பட்டிருப்பதால் 

நமக்கும், நித்தியத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

நமது ஆன்மாவிற்கு அழிவு இல்லை என்பது நமக்குத் தெரியும்.

ஆகவே அது உடலை விட்டு பிரிந்த பின்பும் நித்தியத்துக்கும் வாழும் என்பதும் நமக்குத் தெரியும்.

இப்போது மனதில் எழுந்த கேள்வி நமது ஆரம்பத்திற்கும் நித்தியத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்பதுதான்.

நமது ஆரம்பம்' என்று சொல்லும் போதே 

ஆரம்பம் இல்லாத நித்தியத்திற்கும்

 நமக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும் என்ற என்ற கேள்விதான் பதிலாகத் தோன்றியது.

ஆனாலும் நான் விடவில்லை.
தொடர்ந்து சிந்தித்தேன்.

ஆரம்பம் என்ற வார்த்தை ஆரம்ப காலத்தை குறிக்கும்.

 நித்தியம் ஆரம்பம் உள்ள காலத்திற்கு வெளியே உள்ளது.

அப்படி இருக்கும்போது ஆரம்பம் உள்ள  நமக்கும் நித்தியதுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

ஒரு பத்து வயது பையன் தன்னுடைய பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்டான்:

"அம்மா, உங்களது திருமண புகைப்பட ஆல்பத்தில் யார் யாரெல்லாமோ இருக்கிறார்கள்.

உங்களது பிள்ளையாகிய என்னை காணவில்லை.

 நான் எங்கே இருக்கிறேன்?''

"எனது மனதில்.

எனக்கு திருமணம் என்று பேசிய போதே நீ எனது மனதில் பிறந்து விட்டாய்.

திருமணம் ஆகும்போது மனதில்தான் இருந்தாய்.

திருமணம் ஆனபின் எனது மனதில் இருந்த நீ வயிற்றுக்குள் வந்து,

 அங்கே பத்து மாதம் இருந்துவிட்டு

 உலகிற்கு வந்தாய்."

"எனது அம்மாவாகிய உங்கள் மனதில் நான் உங்களுக்கு திருமணம் ஆகுமுன்பே பிறந்து விட்டேன் என்று சொல்கிறீர்கள்.

எனது விண்ணக தந்தையாகிய இறைவனின் மனதில் நான் என்று பிறந்திருப்பேன்?"

"பத்து வயது பையன் இப்படிப்பட்ட கேள்வியை கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடவுள் துவக்கமும், முடிவும் இல்லாதவர். 

நித்திய காலமாக வாழ்பவர்.

இப்பொழுது உனது கேள்விக்கு நீயே பதிலை கண்டுபிடி."

"உங்களுக்கு திருமணம் பற்றி பேசிய போது உங்கள் மனதில் நான் பிறந்தது உண்மையானால்,

ஆரம்பமே இல்லாத கடவுளின் மனதில் ஆரம்பமே இல்லாத காலத்தில் நான் பிறந்திருப்பேன்.

இப்போது நீங்கள் வாழும்போது நானும் உங்களோடு வாழ்வது போல,

நித்திய காலம் நானும் கடவுளோடு வாழ்வேன்.

தாயைப் போல பிள்ளை, தந்தையைப் போல மகன்."

"இதையெல்லாம் உனக்கு யார் சொல்லித் தந்தார்கள்?"

"ஞானோபதேச வகுப்பில் சிஸ்டர்
சொல்லித் தந்தார்கள்."

 "ஆரம்பமே இல்லாத காலத்தில் கடவுளில் மனதில் பிறந்த நீ

என் மனதுக்குள் வரும் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்?"

''உங்கள் மனதில் எப்படி இருந்தேனோ அதே போல் தான் இறைவனின் மனதிலும் இருந்தேன்.''

"எப்படி?"

"உங்கள் மனதில் எண்ணமாக இருந்தது போல கடவுளின் மனதிலும் எண்ணமாக (Idea) இருந்தேன்.

 பிறக்காத என்னைப் பற்றி பலவிதமாக கற்பனைகள் பண்ணியிருப்பீர்கள்.

கடவுளும் இன்னும் படைக்கப்படாத என்னைப் பற்றி பலவிதமாக திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

எப்போது படைக்கப்பட்டு உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும்,

எங்கெங்கே, எப்படி எப்படி வாழவேண்டும்,

எப்போது அவரிடம் திரும்பச் செல்ல வேண்டும் என்பதை பற்றி நிறைய திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

அவரது திட்டப்படி உலகில் வாழ வேண்டியது எனது கடமை.

இவ்வுலகில் எனது கடமை முடிந்தவுடன் நித்திய காலம் அவரோடு வாழ என்னை அழைத்துக் கொள்வார்."

"இவ்வுலகில் உனது ஆரம்பமும் முடிவும் கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

உனது உலக வாழ்வின் ஆரம்பமும், முடிவும் நித்திய காலமாக கடவுள் மனதில் இருக்கிறது.

இவ்வுலகில் நம்மை ஆரம்பிப்பதும் அவர்தான், முடிவுக்கு கொண்டு வருவதும் அவர்தான்."
  
"எல்லாம் மனிதர்களும் கடவுளின் மனதில் எண்ணமாக (Idea) இருந்து விட்டு தான்,

காலம் வந்தவுடன் உண்மையான (Real) மனிதர்களாக பிறக்கிறார்கள்.

எங்கே பிறக்க வேண்டும்,
 யாரிடம் பிறக்க வேண்டும்,
 எங்கே வாழ வேண்டும்,
 எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்பதெல்லாம் இறைவனது நித்திய காலத் திட்டப்படிதான் நடக்கும்.   

நல்லவர்களாக வாழ வேண்டுமா, கெட்டவர்களாக வாழ வேண்டுமா என்பதை மட்டும் தான் நாம் தீர்மானிக்க வேண்டும்.

நல்லவர்களாக வாழ்ந்தால் தான் தொடர்ந்து நித்திய காலமும் கடவுளோடு வாழ முடியும்."

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர்.

 ஆரம்பம் இல்லாத காலத்திலிருந்தே தான் படைக்கவிருந்த

அகிலத்தைப் பற்றியும், அதில் வாழ்ந்து கொண்டிருக்கிற அனைத்து மக்களைப் பற்றியும் அவருக்கு தெரியும்.

நமது முதல் பெற்றோர் அவரது கட்டளைகளை மீறி பாவம் செய்வார்கள் என்பது அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

இறைமகன் ஆதாமின் வம்சத்தில் மனிதனாகப் பிறந்து, 

பாடுகள் பட்டு, 

சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து,

மனக்குலத்தைப் பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்று நித்திய காலமாக தீர்மானித்து விட்டார். 

அதன்படி தான் துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்,

துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

சாக்கடைக்குள் விழுந்த மனிதனை வெளியே எடுக்க நாம் 
சாக்கடைக்குள் குதிப்பது போல,

காலத்தில் வாழும்  மனிதனை மீட்டு நித்தியமாக வாழ வைப்பதற்காக நித்திய கடவுள் காலத்திற்குள் நுழைந்தார்.

நித்திய துன்பத்தில் விழாதவாறு நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் உலக துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.

நம்மை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

நாம் அவரிடம் என்னென்ன கேட்போம் என்று அவருக்கு நித்திய காலமாக தெரியும்.

நாம் இன்று கேட்பதைத் தருவதற்காக அதை நித்திய காலமாக தயாராக வைத்திருந்தார்.

இன்று நமது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம்.

இன்று மன்னிப்பு கேட்போம் என்று அவருக்கு நித்திய காலமாக தெரியும்.

நமக்குத் தரவேண்டிய மன்னிப்பு நித்திய காலமாக அவரிடம் தயார் நிலையில் இருக்கிறது.

கேட்ட பின்பு தான் தருவது போல் நமக்கு தோன்றுகிறது.

ஆனால் நமக்கு தரவேண்டியது நாம் கேட்கும் முன்பே அவரிடம் ரெடி.

நமது உலகத் தந்தை நாம் பிறக்கு முன்பே நமக்கு வேண்டிய சொத்துக்களை தயாரித்து வைத்திருப்பது போல,

நமது விண்ணக தந்தை நம்மை படைக்கும் முன்பே படைத்த பின் நமக்கு தருவதற்காக நமக்கு தர வேண்டியதை நித்திய காலமாக தயாராக வைத்திருக்கிறார்.

கடவுள் உலகைப் படைத்த பின்பு தான் அதில் வாழவிருக்கும் மனிதனை படைத்தார்.

இன்று இந்த உலகில் வாழும் நாம் நித்திய காலம் கடவுளோடு வாழ மோட்ச பேரின்ப வாழ்வு நமக்காக நித்திய காலமாகக் காத்துக் கொண்டிருக்கிறது.

இதுதான் நமக்கும் நித்தியத்துக்கும் உள்ள உறவு.

இந்த உறவை நமக்குத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment