கேளுங்கள், கொடுக்கப்படும்.
(தொடர்ச்சி)
"தாத்தா, கடவுள் முதலில் உலகத்தை படைத்து அதன் பின் மனிதனை படைத்தது உலகப் பொருள்களை அவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தானே."
",கரெக்ட். நீ சொல்வது சரிதான்.
பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான்.
எதற்காகப் பயன்படுத்த என்பதுதான் கேள்வி.
ஆன்மாவும் உடலும் சேர்ந்ததே மனிதன்.
ஆன்மா விண்ணுலக வாழ்வுக்காகப் படைக்கப்பட்டது. அதற்கு உதவி செய்வதற்காகவே உடல் படைக்கப்பட்டது.
மண்ணுலகும் அதிலிருந்து எடுக்கப்பட்ட உடலும்
ஆன்மா விண்ணுலகை நோக்கி பயணம் செய்ய உதவ வேண்டும்.
ஆனால் மனிதன் செய்த பாவத்தினால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அதாவது நமது உடல் நமது ஆன்மாவை இவ்வுலக வாழ்வுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் உடல் ஆன்மாவுக்கு உதவ வேண்டும்.
இவ்வுலகப் பொருட்கள் ஆன்மீக வாழ்வுக்கு உதவ வேண்டும்.
பாவத்தினால் பாதிக்கப்பட்ட நமது இயல்பு உலகப் பொருள்களை உலக வாழ்வுக்காகவே பயன்படுத்த விரும்புகிறது.
அதை திருத்துவதற்காக தான் நமது ஆண்டவர் ஆன்மா உலகப் பொருட்களின் மீது பற்று வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்.
உலகத்தின் மீது பற்று இல்லாத மனது எளிய மனது எனப் படுகிறது.
ஆகவேதான் ஆண்டவர் 'எளிய மனதோர் பேறு பெற்றோர்' என்கிறார்.
(Blessed are the poor in spirit)
உலகத்தின் மீது பற்று இருந்தால் விண்ணக வாழ்வின் மீது பற்று இருக்காது.
உலகத்தின் மீது பற்று உள்ளவர்கள் உலகப் பொருள்களை உலக வாழ்வுக்காகவே பயன்படுத்துவார்கள்.
விண்ணகத்தின் மீது பற்று உள்ளவர்கள் உலகப் பொருள்களை விண்ணக வாழ்வுக்காக பயன்படுத்துவார்கள்.
மாணவர்கள் நோட்டு புத்தகம் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பண்டம் வாங்கி தின்பதற்காக பயன்படுத்தலாமா?
விண்ணுலக பேரின்ப வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பதற்காக கொடுக்கப்பட்ட உலகப் பொருட்களை இவ்வுலக சிற்றின்ப வாழ்வுக்காகப் பயன்படுத்தலாமா?"
"புரிகிறது. அதனால் தான் ஆண்டவர்
"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."
என்கிறார்."
",அதுமட்டுமல்ல.
ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.
ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர்.
உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:
இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
என்றும் ஆண்டவர் சொல்கிறார்.
விண்ணக வாழ்வை தேடுபவர்களுக்கு அதற்கு உதவியான உலகப் பொருட்கள் கேட்காமலேயே கொடுக்கப்படும்."
"சோறு கேட்பவர்களுக்கு சாம்பார் கேட்காமலேயே கொடுக்கப்படுவது போல!"
",கரெக்ட். நாம் ஆன்மீக காரியங்களில் மட்டும் அக்கறை காட்ட வேண்டும்.
வாழும் நாளே வாழ்வின் இறுதி நாள் என்று எண்ணி ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள்
விட்டு விட்டு போகவேண்டிய இவ்வுலக வாழ்வைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இன்றே விண்ணகம் சென்று விடுவோம் என்று எண்ணுபவர்கள் அந்த மகிழ்ச்சியில் வாழ்வார்களே தவிர மறுநாளை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளையும் அப்படியே வாழ வேண்டும்."
"தாத்தா, கேட்க வேண்டியதை விசுவாசத்தோடு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஆண்டவர்,
"கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இம்மலையை நோக்கி, "இவ்விடம் விட்டு அவ்விடம் செல்" என்றால் அது பெயர்ந்து செல்லும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது."
என்று சொல்கிறாரே.
அதை கொண்டு பார்க்கும் போது இவ்வுலகில் யாருக்குமே விசுவாசம் இருப்பதாக தெரியவில்லையே."
",ஆண்டவர் எதிர்பார்க்கிற அளவு நம்மிடம் விசுவாசம் இல்லை.
"கொரோனா நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."
என்று ஆண்டவர் சொல்லும் அளவிற்கு கொரோனா காலத்தில் நடந்து கொண்டோமா?
தொழு நோயாளிகளை தொட்டு சேவை செய்த அன்னை தெரசாவை பற்றி பெருமையாக பேசுகிறோம்.
கொரோனா நோயாளியைத் தொட்டு நம்மால் சேவை செய்ய முடிந்ததா?
அந்த அளவுக்கு நம்மிடம் விசுவாசம் இருந்ததா?
உணவு என்று சொன்னவுடன் வயிறு நிறையாது,
உணவை சாப்பிட்டால் தான் நிறையும்,
'விசுவசிக்கிறேன்' என்று சொல்வது மட்டும் ஆன்மீக வாழ்வு அல்ல.
விசுவாசத்தை வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு.
நமது விசுவாசத்தை வலுப்படுத்துமாறும்,
அதை வாழ நமக்கு உதவி செய்யுமாறும் கேட்போம்.
ஆண்டவரைக் கேட்போம்.
விசுவாசத்தோடு கேட்போம்.
கேட்பது உறுதியாக கிடைக்கும்.
"உறுதியான விசுவாசத்தைக் கேளுங்கள், தரப்படும்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment