(லூக்.20:36)
மோயீசன் எழுதிவைத்துள்ளபடி
"குழந்தைப் பேறில்லாத ஒரு பெண் ஏழு சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராக மணந்து குழந்தை பேறு பெறாமலேயே இறந்து விடுகிறாள்.
விண்ணுலகில் அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்?"
என்று சதுசேயருள் சிலர் இயேசுவைக் கேட்டார்கள்.
அதற்கு இயேசு விண்ணுலகில் வாழ்வோர் வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள் என்று இயேசு பதில் சொன்னார்.
உலகம் ஒரு சடப் பொருள். அதில் உள்ள அனைத்தும் சடப் பொருள்கள்தான்.
சடப் பொருட்கள் இடத்திற்கும், நேரத்துக்கும் கட்டுப் பட்டவை.
மனிதனின் ஆன்மா ஒரு ஆவியாக இருந்தாலும், உடல் சடப் பொருள்தான்.
ஆவியாக இருக்கும் நமது ஆன்மாவுக்கும், சடப் பொருளாகிய உடலுக்கும் உள்ள வித்தியாசம்,
நமது ஆன்மா அழியாது. அது படைக்கப் பட்டதாகையால் அதற்குத் துவக்கம் உண்டு, முடிவு இல்லை.
உலகில் அது உடலோடு வாழ்ந்தாலும் அது நிரந்தரமாக வாழ அதற்கு உடல் தேவையில்லை.
ஆகவேதான் நாம் மரித்த பின்பும். அது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.
சடப் பொருளாகிய உடலுக்குத் துவக்கம் உள்ளது போலவே முடிவும் உண்டு.
மண்ணால் ஆன அது நாம். மரித்த பிறகு மண்ணுக்கே திரும்பி. விடும்.
உலக முடிவில் அது உயிர்க்கும் போது சடப் பொருளாக உயிர்க்காது, ஆவிப் பொருளாகவே உயிர்க்கும்.
எப்படி ஆன்மா தனித்து வாழும் போது அது இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்குமோ, அப்படி உயிர்த்த உடலும் இருக்கும்.
மனிதன் உலகில் வாழும்போது இடத்துக்கும், நேரத்துக்கும் கட்டுப் பட்டிருப்பான்.
மரணத்துக்குப் பின், இடத்துக்கும், நேரத்துக்கும் கட்டுப் படாத நித்திய ஜீவியாக மாறிவிடுவான்.
உலகில் கணவன், மனைவியாக வாழ்வோர் விண்ணுலகில் அப்படி வாழ முடியாது.
ஆவிகளுக்குத் திருமண வாழ்க்கையோ, குழந்தைப் பேறோ கிடையாது.
மனுக் குலத்தைப் படைக்கு முன் இறைவன் சம்மனசுக்களை ஆவிகளாகத்தான் படைத்தார்.
கடவுளைப் போலவே அவர்களும் இடத்திற்கும், நேரத்துக்கும் அப்பாற் பட்டவர்கள்.
உலகில் இடத்திற்கும், நேரத்துக்கும் உட்பட்டு வாழும் மனிதன்,
மரித்து விண்ணக நிலையை அடைந்தபின்,
சம்மனசுக்களைப் போலவே,
இடத்திற்கும், நேரத்துக்கும் அப்பாற் பட்டு வாழ ஆரம்பித்து விடுவான்.
இடத்திற்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்ட இறைமகன் மனுவுரு எடுத்த போது,
மனித சுபாவத்தில் அவற்றுக் உட்பட்டே வாழ்ந்தார்.
யூதர்கள் வாழ்ந்த நாட்டில் வாழ்ந்தார்.
33 ஆண்டுகளே வாழ்ந்தார்.
தேவ சுபாவத்தில் துவக்கமும், முடிவும் இல்லாத இயேசு
மனித சுபாவத்தில் தன்னை துவக்கத்துக்கும், முடிவுக்கும் உட்படுத்திக் கொண்டார்.
அன்னை மரியின் வயிற்றில் வாழ்க்கையைத் தொடங்கி,
33 ஆண்டுகள் வாழ்ந்து,
சிலுவையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
சிலுவையில் மரிக்கும் வரை இயேசு உலகில் வாழ்ந்தார்.
மரித்தவுடன் அவரது ஆன்மா விண்ணகத்துக்குச் சென்று விட்டது,
உடல் கல்லறைக்குச் சென்று விட்டது.
மூன்றாம் நாள் உயிர்த்தவுடன் அவரது உடலும் ஆன்மாவோடு சேர்ந்து விண்ணகம் சென்று விட்டது.
விண்ணகத்தில் உடலோடும், ஆன்மாவுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசு,
அதே உடலோடும், ஆன்மாவுடனும் திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உலகில் வாழும்போது இயேசுவின் உடல் சடப் பொருள், இப்போது ஆன்மீகப் பொருள்.
நமது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும்.
அன்னை மரியாளும் இயேசுவைப் போலவே ஆன்ம, சரீரத்தோடு விண்ணகத்தில் வாழ்கிறாள்.
நாமும் மரணத்திற்குப் பிறகு,
உயிர்த்த பிறகு அப்படியே வாழ்வோம்,
வானதூதர்களைப் போலவும், அன்னை மரியாளைப் போலவும், இயேசுவைப் போலவும்.
உயிர்க்கு முன் நமது ஆன்மா மட்டும் வாழும். உயிர்த்த பின் ஆன்மீகமயமாக்கப் பட்ட உடலோடும் சேர்ந்து வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment