(தொடர்ச்சி)
"தாத்தா, வகுப்புல மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பது அறிவைப் பெறுவதற்காக.
ஆனால் நமது பிரிவினை சபையினர் நம்மிடம் கேள்வி கேட்பது நம்மைக் குழப்புவதற்காக.
ஆகவே அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நாம் பேசுவோம்.
அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பற்றி திருச்சபை கூறுவதைக் கூறுங்கள்."
",இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அருளப்பரை பார்த்து என்ன சொன்னார்?"
"இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.
பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார்.
அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்."
",மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் இயேசு அவளை அருளப்பர் பாதுகாப்பில் விட்டிருப்பாரா?"
"நமக்குத் தெரியும் இயேசு மட்டுமே அன்னை மரியாளின் மகன் என்று.
சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு மட்டும் தெரியாது.
இயேசு தனது மரணத்திற்கு பின் தனது அன்னைக்கு பாதுகாவலராக அருளப்பரை நியமிக்கிறார்.
மகனுக்குரிய பாசத்தோடு அவளைக் கவனிப்பதற்காகத்தான் அருளப்பரை நோக்கி,
"இதோ! உன் தாய்" என்றார்"
",அன்னை மரியாள் அருளப்பரை மட்டுமல்ல எல்லா அப்போஸ்தலர்களையும் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டாள்.
திருச்சபையின் தாயும் அவள் தான்.
ஆகவே நம் அனைவருக்கும் தாய் அவள் தான்.
இயேசுவை நேசித்தது போலவே நம் அனைவரையும் நம் அன்னை நேசிக்கிறாள்."
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மரியாள் தன் மகனை நமது மீட்புக்காக தந்தை இறைவனுக்கு பலியாக ஒப்புக்கொடுத்தது போல
நம்மையும் ஒப்புக் கொடுப்பாள் போல் இருக்கிறது!"
",போல் இருக்கிறது' என்ன?
நமது ஆன்மீக வாழ்க்கையின் நோக்கமே அதுதானே.
இயேசு நம்மை நமது சிலுவைகளை சுமக்க சொன்னது நம்மை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகத் தானே.
அதில் நமக்கு உதவுவதற்காகத் தான் தன் அன்னையை நமது அன்னையாக இயேசு தந்திருக்கிறார்.
மரியன்னை பக்தியின் உண்மையான நோக்கம் அதுதான்.
அன்னையிடம் சென்று நாம் மீட்பு பெற வேண்டிய உதவியைக் கேட்காமல் உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டால்,
நாம் பள்ளிக்கூடம் சென்று பாடங்களைப் படிக்காமல்,
விளையாடி விட்டு வரும் மாணவர்களுக்குச் சமம் ஆவோம்.
மரியாளை நமது அன்னையாக நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் ஏற்றுக் கொண்டால், '
நமக்கு பேரின்ப நிலை வாழ்வு உறுதி."
"தாத்தா அன்னையின் விண்ணேற்பு பற்றி சொல்லுங்கள்.
விவிலிய ஆதாரங்களை நான் கேட்கவில்லை.
அது அறிஞர்களுக்கு.
நாம் சாதாரண மக்கள்.
நமக்கு அன்னை மீது பக்தி தான் முக்கியம்.
சாப்பாடு எங்கிருந்து வந்தது என்பதை பற்றி கவலைப்படாமல், ருசியாக இருந்தால் சாப்பிடுபவர்கள் நாம்.
சொல்லுங்கள். சாப்பாட்டை பற்றி அல்ல.
அன்னையின் விண்ணேற்பைப் பற்றி."
''அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தாள்.
அப்போஸ்தலர்கள் நற்செய்தி அறிவிப்பததற்காக உலகெங்கும் சென்று விட்டார்கள்.
அன்னையின் மரணம் நெருங்கிய போது அந்தச் செய்தி பரிசுத்த ஆவியால் அப்போஸ்தலர்களுக்கு அவர்களது உள்ளுணர்வு மூலம் தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர்கள் செருசலேமுக்குத் திரும்பினார்கள்.
தோமையார் தவிர மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் வந்துவிட்டார்கள்.
அன்னை மரணம் அடைந்தவுடன் யூத முறைமைப்படி அவளை அடக்கம் செய்தார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு தோமையார் வந்து சேர்ந்தார்.
வந்தவர் "தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும்,
கல்லறையை திறந்து காட்டுங்கள்" என்று மற்றவர்களை கட்டாயப்படுத்தினார்.
அவரது கட்டாயத்திற்காக கல்லறை திறக்கப்பட்டது.
ஆனால் அங்கே மரியாளின் உடல் இல்லை.
மரியாள் ஆன்ம சரிரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் என்று தீர்மானித்தார்கள்.
மரியாள் தோமையாருக்குக் காட்சி கொடுத்து தான் ஆன்ம சரிரத்தோடு விண்ணகத்தில் இருக்கும் செய்தியை தெரிவித்தாள்.
மரியாளின் விண்ணேற்பு செய்தியை நாம் அறிய உதவியவர் தோமையார்தான்.
தன் மகனோடு மரியாள் விண்ணகத்தில் ஆன்ம சரிரத்தோடு இருக்கும் செய்தியை அப்போஸ்தலர்கள் தாங்கள் நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடத்திலெல்லாம் மக்களுக்கு அறிவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே
மக்கள் மரியாளின் விண்ணேற்பை விழாவாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.
திருச்சபையின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாமலேயே திருச்சபை முழுவதும் மக்களால்
அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே விண்ணேற்புத் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.
1950இல்தான் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் மரியாள் விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் அன்னையின் விண்ணேற்பு திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்."
"இதிலும் கூட அன்னையின் தாழ்ச்சியைப் பாருங்கள்.
தான் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க 1950 வரை விண்ணகத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள்.
இராயப்பர் நினைத்திருந்தால் அவரே செய்திருக்கலாம்.
ஆனால் கடவுள் சித்தப்படிதானே எல்லாம் நடக்கும்."
",சரியாகச் சொன்னாய்..
இறைவனால் எல்லாம் முடியும்.
கடவுள் நினைத்திருந்தால் மனிதனை பாவம் செய்ய முடியாதவனாகப் படைத்திருக்கலாம்.
ஆனால் அவனை முழு சுதந்திரத்தோடு படைத்தது அவர் சித்தம்.
அவர் நினைத்திருந்தால் மனிதனாகப் பிறக்காமலேயே மனிதர்களின் பாவங்களை மன்னித்திருக்கலாம்.
ஆனால் தான் பாடுகள் பட்டு, மரித்து, மனிதர்களின் பாவங்களுக்கு தானே பரிகாரம் செய்த பின்பு தான் மன்னிக்க வேண்டும் என்பது அவர் சித்தம்.
அவர் நினைத்திருந்தால் அவர் உலகில் வாழும் போதே அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அதை பரிசுத்த ஆவியின் மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்பது அவர் சித்தம்.
நாம் என்ன நினைத்தாலும் எல்லாம் இறைவன் சித்தப்படி தான் நடக்கும்."
"தாத்தா, அன்னை மரியாள் விண்ணகத்திற்கு ஆன்ம,
சரீரத்தோடு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.
விண்ணகம் எங்கே இருக்கிறது?''
",எங்கேயும் இல்லை."
" நான் விளையாட்டுக்கு கேட்கவில்லை. உண்மையிலேயே கேட்கிறேன்."
", நானும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன்.
விண்ணகம் நமது உலகத்தை போல ஒரு சடப் பொருள் அல்ல.
சடப் பொருளுக்கு தான் இருக்க இடம் தேவை.
ஆவி இருக்க இடம் தேவை இல்லை.
ஆவியாகிய இறைவன் வாழ்வது போல,
ஆவியாகிய நமது ஆன்மாவும் விண்ணகத்தில் வாழும்.
"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."
ஆதாமிற்குள் ஊதப்பட்ட உயிர்
மூச்சுதான் ஆன்மா.
உயிர் மூச்சாகிப ஆன்மாவைக் கடவுள் உடலிலிருந்து பிரித்து விட்டால்
உடல் பழையபடி களிமண்ணாகி விடுகிறது.
உடலிலிருந்து பிரிந்த ஆன்மா விண்ணக நிலையை அடைகிறது.
மனிதனாய் பிறந்த இயேசு மரிக்கும்போதும்,
மரியாள் மரிக்கும்போதும் அவர்களுடைய ஆன்மாக்கள் இதே நிலையைத்தான் அடைந்தன.
இயேசு உயிர்க்கும் போது சடப்பொருளாய் அடக்கம் பண்ணப் பட்ட அவரது உடல், Spiritual body யாக மாற்றம் அடைந்தது.
உயிர்த்தபோது உடலோடும் ஆன்மாவோடும் இயேசு விண்ணகம் எய்தினார். .(Ascended)
அன்னை மரியாள் கடவுளால் ஆன்ம சரீரத்தோடு விண்ணக நிலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.(Assumed)
இயேசு கடவுள், ஆகவே சொந்த வல்லமையினால் ஆன்ம, சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.
மரியாள் கடவுளால் ஆன்ம, சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்."
லூர்து செல்வம்.