Friday, September 30, 2022

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."(லூக்.10:3)

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
(லூக்.10:3)

இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது வாழ்த்தி அனுப்பிய வார்த்தைகள்:

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."

"ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்"

என்பது வாழ்த்தா?

ஆன்மீகத்தைப் பொறுத்த மட்டில் இதுதான் வாழ்த்து.

தந்தை இறைவன்கூட  தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பும்போது:

"ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டியைப்போல் உங்களை அனுப்புகிறேன்"

என்றுதான் வாழ்த்தி அனுப்பியிருப்பார்.

ஆகவேதான்
அவர் நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே யூத ஓநாய்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தன, அவரைக் கடித்துக் குதற நேரம் பார்த்துக் கொண்டே.

 இயேசு 
அவைகளால் 
அடிக்கப்பட்டு, 
மிதிக்கப்பட்டு, 
உமிழ்நீரால் துப்பப்பட்டு, 
பாரமான சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு, கொல்லப்பட்டார்.

அதற்காகத்தான் உலகிற்கு வந்ததாக ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.

ஆண்டவரது பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும் நமக்கு இரட்சண்யம் கிடைத்ததென்றால் அவற்றை ஆண்டவருக்குக் கொடுத்தவர்கள் யூத ஓநாய்கள்தானே.

இயேசுவை "உலகின் பாவங்களைப் போக்கும் ஆட்டுக் குட்டியாக" மாற்றியவர்கள் அவர்கள்தானே.

உலகின் பாவங்களைப் போக்கும் ஆட்டுக் குட்டி தனது மரணத்திற்குக் காரணமாக இருந்த ஓநாய்களின் பாவங்களையே மன்னித்து விட்டாரே.

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம்  ஒப்புக்குக் கேட்கவில்லை.

உள்ளத்தின் ஆழத்திலிருந்து கேட்டார்.

இயேசு கடவுள். அவரது வார்த்தைக்கு சர்வ வல்லமை உண்டு.

இயேசு அவரைப் பின்பற்ற ஆசைப் படுகின்றவர்களைப் பார்த்து,

"ஜாலியாக என் பின்னே வாருங்கள்" என்று சொல்லவில்லை.

"உங்களது சிலுவையை சுமந்து கொண்டு வாருங்கள்" என்று தான் சொன்னார்.

விண்ணகத்திற்கு சென்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து, "அகலமான பாதை வழியே ஆடிப் பாடி செல்லுங்கள்" என்று சொல்லவில்லை.

 "ஒடுக்கமான பாதை வழியே கஷ்டப்பட்டு செல்லுங்கள்" என்று தான் சொன்னார்.

பேரின்பத்திற்கான பாதை துன்பங்கள் நிறைந்தது.

நமக்கான இயேசுவின் பிரதிநிதி நமது பங்குச் சாமியார்தான்.

அவரிடம் போய், "சுவாமி, ஆசீர்வதியுங்கள்" என்று சொன்னால்,

நமது நெற்றியில் சிலுவை அடையாளம் போட்டு விடுகிறார்.

சிலுவைப் பாதைதான் விண்ணகத்திற்கான பாதை என்கிறார்.

கிறிஸ்தவ வாழ்க்கையே சிலுவைப் பாதைதான்.

மகிழ்வுடன் சிலுவை வழி நடப்போம்.

மகிமையின் வாழ்வடைவோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 29, 2022

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."(லூக்.10:2)

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."
(லூக்.10:2)

முதலில் அப்போஸ்தலர்களை ஒருவர் ஒருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பிய நம் ஆண்டவர்,

அடுத்து, வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, 

தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.


 அவர்களைப் பார்த்து அவர் கூறினார்: 

"அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்."

நற்செய்திப் பணியை விவசாயப் பணியாக உருவகப் படுத்தி சொல்கிறார்.

மிகுதியாக அறுவடை செய்ய வேண்டியதிருக்கிறது.

அறுவடைக்கு வந்திருக்கும் ஆட்களோ குறைவு.

அதிகமான ஆட்களை அனுப்பும்படி அறுவடை நிலத்திற்கு உரியவரைக் கேளுங்கள் என்று ஆண்டவர் சொல்கிறார்.

அதாவது, நற்செய்தி அறிவிக்கப் பட வேண்டிய இடம் அதிகம்,  

அறிவிக்க  அதிகமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 

ஆனால் வந்திருக்கும் ஆட்களோ குறைவு.

அதிகமான நற்செய்திப் பணியாளர்களை அனுப்பும்படி நற்செய்தியின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்று சொல்கிறார். 

இங்கே நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இயேசுதான் நற்செய்தியின் ஆண்டவர்.

நற்செய்தி பணிக்கான ஆட்களை தேர்ந்தெடுப்பவரும் அவரே.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும், 

வேறு எழுபத்திரண்டு சீடர்களையும் தேர்ந்தெடுத்தவர் அவரே.

யாரும் சொல்லி தேர்ந்தெடுக்கவில்லை, அவராகவேதான் தேர்ந்தெடுத்தார்.

எழுபத்திரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்தவர் இன்னும் அதிகமாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் அவர் அவர்களைப் பார்த்து,     

"தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." என்று சொன்னார்.

இதை தியானித்துப் பார்க்கும் போது நம்மை பார்த்து சொல்வதற்காகவே அவர்களிடம் சொன்னது போல் தெரிகிறது.

ஏனெனில், அவரது வார்த்தைகள் எழுதப்பட்டு நமக்கு வந்து சேரும் என்பது அவருக்கு தெரியும்.

நம்மை கேளாமல் தான் நம்மைப் படைத்தார்.

ஆனால் அதற்கு மேல் நமக்கு தேவையானவற்றை அவரிடம் கேட்டு பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

முழுமையாக சுதந்திரத்தோடு நம்மை படைத்து,  

அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி,

 அவரோடு நெருங்கிய நட்போடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஒரு குழந்தை தன் தாயுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றால் 

அதற்கு தேவைகள் இருக்க வேண்டும், அவை அதன் தாய் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அதற்கு பசி இல்லாவிட்டால் அது தாயைத் தேடாது.

பிள்ளைகளின் தேவைகள்தான் அவர்களை பெற்றோர்களோடு நெருக்கப்படுத்துகின்றன.

அதேபோல் நமது தேவைகள் தான் நம்மைப் படைத்த கடவுளோடு நம்மை நெருக்கமாக வாழ உதவுகின்றன.

ஆகவே தான் நமக்கு தேவைகளை கொடுத்து,

"கேளுங்கள் தரப்படும்." என்று சொல்கிறார்.

நற்செய்தி அறிவிப்பு பணி விஷயத்திலும் இதையேதான் பின்பற்றுகிறார்.

"உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.

உலகமோ பெரியது.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய ஆள்களோ அதிகம்.

ஆகவே நற்செய்தி அறிவிப்பில் உங்களுக்கு உதவியாக இருக்கும் படி அதிகமாக பணியாளர்களை என்னிடம் கேளுங்கள்.

நீங்கள் கேட்கிறபடி உங்களுக்கு உதவியாளர்களை நான் அனுப்புவேன்.

நீங்கள் கேளாமலேயே என்னால் பணியாளர்களை அனுப்ப முடியும்.

ஆனாலும் நற்செய்தி பணியாளர்களுக்கும் எனக்கும் எப்போதும் நெருக்கமான உறவு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 

"என்னிடம் கேளுங்கள், அனுப்புவேன்"

 என்று சொல்கிறேன். 

என்னை நினைத்துக் கொண்டுதான்  நீங்கள் பணி புரிய வேண்டும்.

நான் உங்களை படைத்ததே எனது அளவில்லாத அன்பை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.

உரையாடல் மூலமாகத்தான் உறவு வலுப்படும்.

நீங்கள் என்னோடு எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும்,

எனது அன்புப் பகிர்வை அனுபவிக்க வேண்டும்

என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

ஆகவே அன்பு பிள்ளைகளே உங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக மட்டுமல்ல,

நற்செய்திப்பணி தேவைகளுக்காகவும்  ஒவ்வொரு வினாடியும் என்னோடு  பேசுங்கள்.

எனது அன்பிலும், மகிழ்ச்சியிலும் பங்கு பெறுங்கள்.''

நமது ஆண்டவரின் விருப்பப்படி அவரிடம் கேட்போம்,

எப்போதும் கேட்டுக்கொண்டேயிருப்போம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நாம் இயேசுவின் ஞாபகத்தில் இருக்கிறோம்.

அதேபோல அவரும் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்,

அதற்காக அவரோடு எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

நிலைவாழ்வு என்றாலே முடிவில்லாத காலம் நம் ஆண்டவரோடு நெருக்கமான உறவில் வாழ்வதுதான்.

வாழ்வோம், என்றென்றும் இயேசுவின் உறவில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 28, 2022

"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" (லூக்.9:62)

"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" 
(லூக்.9:62)

ஒருவன்,  "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்: ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.


 இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்.

இறைப் பணியில் இறங்கிய பின் அதில் முழு மூச்சிடன் ஈடுபட வேண்டும்.

பிறந்து வளர்ந்த குடும்பத்தைத் துறந்து, இறைப்பணிக்கு வந்த பின் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பவர்கள்,

கலப்பையில் கை வைத்தபின் புறப்பட்ட     வரப்பைத்   திரும்பிப் பார்ப்பவர்களுக்குச் சமம்.

வயலை உழுவதற்குப் பயன்படும் கருவி கலப்பை

ஒருவன் கலப்பையில் கைவைத்து விட்டான் என்றால் உழவு உழ ஆரம்பித்து விட்டான் என்று அர்த்தம்.

ஆரம்பித்த வேலையை முடிக்காமல் வெளியே வரக்கூடாது.

ஒருவன்  வேலையின்போதே வெளியே வர எண்ணினால் அவன் அந்த வேலைக்குப் பொருத்தமானவன் அல்ல.

உலகைச் சார்ந்த வேலைகளைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு துவக்கமும் முடிவும் உண்டு.

பள்ளிக்கூடப் படிப்பு இறுதி தேர்வுடன்  முடிந்து விடும்.

ஆசிரியர் பணி 58 வயதுடன் முடிந்து விடும்.

ஆனால் இறைப் பணிக்கு முடிவே இல்லை.

இறைப் பணிக்குள் வேறு பணி எதுவும் புகவும் முடியாது.

ஒருவர் குருவானவர் ஆகிவிட்டால் இறுதிவரை குருத்துவ பணி மட்டுமே செய்ய வேண்டும்.

மக்களின் ஆன்மீக மீட்புக்காக உழைப்பது மட்டுமே குருக்களின்  பணி.

ஒரு நாள் குருவானவர் ஒருவர் ஒரு முக்கியமான வேலையாக வெளியூருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

Bike ல்ஏறி Start செய்துவிட்டார்.

அப்பொழுது ஒரு ஆள் அவசரமாக வந்து,

"சாமி, பாவசங்கீர்த்தனம்" என்றார்.

சுவாமியார் உடனே  Bike ஐ off செய்து விட்டு, 

கோவிலுக்குள் சென்று

பாவசங்கீர்த்தனம் கேட்ட பின்பு

 ஊருக்குப் புறப்பட்டார்.

இயேசு மனிதனாக பிறந்ததே மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்காகத்தான்.

அந்த அதிகாரத்தைக் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

மருத்துவர்கள் எப்படி நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதோடு 

அவர்கள் எப்படி நலமுடன் வாழ வேண்டும் என்று வழி காட்டுகிறார்களோ,

அப்படியே குருக்களும் நமது பாவங்களை மன்னிப்பதோடு 

நாம் எப்படி ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும் என்று வழி காட்டுகிறார்கள்.

அவர்கள் நமது ஆன்மீக வழிகாட்டிகள். (Spiritual Directors)

அவர்கள் வழிகாட்டுகிறபடி நாம் நடந்தால் விண்ணக வாழ்வை அடைவது உறுதி.

குருக்கள் பள்ளிக் கூடங்கள் நடத்துகிறார்களே, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்களே என்று கேட்கலாம்.

அங்கேயும் அவர்கள் பழகுவது ஆன்மாக்களுடன்தான்.

மாணவர்களின், மற்றும் சக ஆசிரியர்களின் ஆன்மீக நலன்தான் அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களை பொது நிலையினர் வசம் ஒப்படைத்து விட்டு குருக்கள் முழுக்க முழுக்க ஆன்மீகப் பணியில் ஈடுபட்டால் இன்னும் நலமாக இருக்கும்.

பொது நிலையினருக்கும் ஆன்மீகப் பொறுப்பு இருக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கும் கடமை இருக்கிறது.

ஆகவே இறைப்பணி குருக்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது.

பாவங்களை மன்னித்தல், திருப்பலி நிறைவேற்றுதல், திவ்ய நற்கருணையை அனைவருக்கும் பகிர்தல் ஆகிய பணிகள் குருக்களுக்கு மட்டுமே உரியன. 

நற்செய்தியை அறிவித்தல் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவானது.

பேய்களிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவன் ஆண்டவர் பின் செல்ல ஆசைப்பட்டான்.

ஆனால் அவர், "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். 

 அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான். 

இதுவே பொது நிலையினரின் நற்செய்தி பணி.

விசுவாசப் பகிர்வின் மூலம், நமது விசுவாசத்தினால் நாம் பெறும் ஆன்மீக நன்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நமது பகிர்வு மற்றவர்களுக்கு வழி காட்டியாக செயல்படும்.

இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பணி இறைப் பணி மட்டும்தான்.

அதை செவ்வனே செய்து இறையடி சேர்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 27, 2022

உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"(லூக்.9:50)

"உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"
(லூக்.9:50)

"அண்ணாச்சி, கொஞ்சம் நில்லுங்க."

",சொல்லுங்க.''


''நேற்று பங்குச் சாமியார் பிரசங்கத்தில பிரிவினை சபையார் நடத்தும் செபக் கூட்டஙகளுக்கு கத்தோலிக்கர் யாரும் போகக்கூடாது என்று சொன்னார்ல!"

", ஆமா, அதுக்கென்ன இப்போ?"

"ஆண்டவர் அப்படிச் சொல்லலிய."

", ஆண்டவர் என்ன சொன்னார்?"

"உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"னு தான சொன்னார்.

நாம் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்கிறோம்.

அவர்களும் இயேசுவைத்தான் மீட்பராக ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் நமக்கு எதிராக இல்லையே, சார்பாகத்தானே இருக்கிறார்கள்.

நமக்குச் சார்பாக இருப்பவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குப் போனால் என்ன?

ஒரு நாள் அருளப்பர் இயேசுவிடம்,

"குருவே, ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்று கூறினார்.


 இயேசு அவரை நோக்கி, "அவனைத் தடுக்காதீர்கள்: ஏனெனில், உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்" என்றார்.

பிரிவினை சபையாரும் இயேசுவின் பெயரால் தான் சுகம் அளிக்கும் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.


இயேசுவின் பெயரால் நடத்தப் படும் கூட்டங்களுக்கு நாம் போனால் என்ன?"

", தம்பி, வசனங்களையும், அதிலுள்ள வார்த்தைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு விருப்பம்போல் பொருள் கொடுக்கக் கூடாது.

உங்கள் அம்மா எப்போதாவது உங்களை மட்டன் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களா?"

"சொல்லியிருக்கிறார்கள்."

", ஆனால் நேற்று நீங்கள் ஹோட்டலில் மட்டன் பிரியாணி ஒரு முழு plate சாப்பிட்டீர்களே!''

"அண்ணாச்சி, நான் காய்ச்சல் வந்து சுகமில்லாமல் இருக்கும் போது சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படின்னா எப்போதுமே சாப்பிடக் கூடாது என்றா அர்த்தம்."

", அதாவது வசனங்களுக்குப் பொருள் கொடுப்பது வார்த்தைகள் மட்டும் அல்ல, அவை கூறப்படும் சந்தர்ப்பமும் தான்.

ஒருவன் இயேசுவின் பெயரால் பேயோட்டுகிறான் என்றால் அவன் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றுதானே அர்த்தம்.

இயேசுவுக்கு அவனைப் பற்றி தெரிந்திருந்ததால் அவன் அவருக்கு எதிராக இல்லை என்றார்."

"நானும் அதைத்தானே சொல்கிறேன்.

நாம் இயேசுவை மீட்பராத ஏற்றுக் கொள்வதைப் போலவே

பிரிவினை சபையாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதானே சொன்னேன்."


", ஹலோ, அவசரப் பட வேண்டாம்.

சீடர்கள் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டது போல்தான் அவர் பெயரால் பேய் ஓட்டினவனும் ஏற்றுக் கொண்டிருந்திருப்பான்.

ஆனால் நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வது போல பிரிவினை சபையார் ஏற்றுக் கொள்ள வில்லையே!"

"நீங்கள் சொல்வது புரியவில்லை."


",ஒருவன் இயேசுவின் பெயரால் பேயோட்டியது இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலம்,
அவருடைய பாடுகளுக்கு முன்னால்.

சீடர்கள் அவரை ஏற்றுக் கொண்டிருந்தது போலவே அவனும் ஏற்றுக்
கொண்டிருந்திருப்பான்.

பாடுகளுக்கு முன்னால் இயேசுவைப் பற்றி சீடர்கள் புரிந்து கொண்டதற்கும், பாடுகளுக்குப் பின்னால் புரிந்து கொண்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இயேசு தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதைப் பற்றியும்,

மரித்த மூன்றாம் உயிர்த்தெழப்
போவதைப் பற்றியும் இயேசு அடிக்கடி சீடரகளிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

அதைச் சீடர்கள் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.


புரிந்து கொண்டிருந்தால் இயேசுவை யூதர்கள் கைது செய்த போது அவரை விட்டுப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்ததைப் பற்றி சந்தேகப் பட்டிருக்க மாட்டார்கள்.

இரண்டு சீடர்கள் எம்மாவூசைப் பார்த்து போயிருக்க மாட்டார்கள்.

சீடர்களுக்கு முழுமையான புரிதல் கிடைத்தது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கி வந்த பிறகுதான்.

அதற்குப் பின்தான் முழுமையான புரிதலோடு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்."

"இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறீர்கள்?"

",அப்போஸ்தலர்கள் இயேசுவை எப்படி ஏற்றுக் கொண்டார்களோ அப்படிதான் நாம் ஏற்றுக் கொள்கிறோம்."

"எப்படி ஏற்றுக் கொள்கிறோம்?''

", இயேசு உலகிற்கு எதற்காக வந்தாரோ அப்படியே புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்."

"இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"

",1. நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களை மன்னிக்க.

நமது பாவங்களை மன்னிக்க அப்போஸ்தலர்களுக்கு முழுமையான அதிகாரம் கொடுத்தார்.

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு.20:22,23)

நாம் பாவ மன்னிப்பு பெற பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை இயேசு ஏற்படுத்தினார்.

2. அவர் பாடுகள் படுவதற்கு முந்திய வியாழன் அன்று, வெள்ளிக் கிழமை பலியாகவிருக்கும் தன் உடலை அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுப்பதற்காக பரிசுத்த திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அப்பத்தைத் தன் உடலாகவும், இரசத்தைத் தன் இரத்தமாகவும் மாற்றி அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

அவர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்து, "இது என் உடல்."

"இது என் இரத்தம்" என்னும் வசீகர வார்த்தைகளைப் பயன்படுத்தி,

அப்பத்தை அவருடைய உடலாகவும், இரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்றும் வல்லமையைக் கொடுத்தார்.

இவ்வாறு செய்வது வெள்ளிக் கிழமையன்று தான் ஒப்புக்கொடுக்க விருக்கும் இரத்தம் சிந்திய பலியை இரத்தம் சிந்தாத விதமாய் ஒப்புக்கொடுப்பதாகும். .

குருக்கள் உலகம் முடியும் வரை இத் திருப்பலியைத் தினமும் ஒப்புக்கொடுத்து, 

இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் நமக்கு ஆன்மீக   உணவாகத் தரவேண்டும்.

நாம் பாவமாசின்றி இந்த திரு விருந்தை அருந்த வேண்டும்.

திவ்ய நற்கருணை மூலம் உலகம் முடியும் வரை இயேசு நம்மோடு இருப்பார்.

3. இயேசு கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்தி, அதன் தலைவராக இராயப்பரை நியமித்தார்.

அவருக்குப் பின் அவருடைய வாரிசாகிய பாப்பரசர் திருச்சபையின் தலைவராக இருப்பார்.

நமது பாவங்களை மன்னிப்பதற்காக பாவ சங்கீர்த்தனத்தை ஏற்படுத்திய இயேசுவை,

திருப்பலியையும், திவ்ய நற்கருணையையும் ஏற்படுத்திய இயேசுவை,

கத்தோலிக்க திருச்சபையையும், அதன் தலைவராக பாப்பரசரையும் ஏற்படுத்திய இயேசுவை 

நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

நாம் ஏற்றுக் கொள்ளும் அதே இயேசுவை நமது பிரிவினை சகோதார்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

ஏற்றுக் கொண்டால் அவர்கள் நமக்கு சார்பானவர்கள்.

ஏற்றுக் கொள்ளாவிட்டால் எதிரானவர்கள்.

இப்போ சொல்லு, அவர்கள் நமக்கு 

எதிரானவர்களா?
சார்பானவர்களா?"

"ஏற்றுக் கொண்டால் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து போயிருக்க மாட்டார்களே!"

",இப்போ சொல்லு, அவர்களுடைய செபக் கூட்டங்களுக்கு நாம் போகலாமா?''

"நிச்சயம் போகக் கூடாது."

லூர்து செல்வம்.

Sunday, September 25, 2022

"தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது." (லூக்.9:46)

"தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது." (லூக்.9:46)


"மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்."

என்று இயேசு சொன்னபோது

 அப்போஸ்தலர்கள் அதற்குரிய விளக்கத்தைக் கேட்காமல்,

 அதற்கு சம்பந்தம் இல்லாமல்,

தங்களுள் பெரியவன் யார் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

இயேசு பொறுமையுடன்,

ஒரு குழந்தையின் கையைப் பிடித்துத் தம் அருகே நிறுத்தி,

 அவர்களை நோக்கி,

 "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். 

என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்.

 உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்"
என்றார்.

குழந்தைகளுக்கு பாவம் செய்யத் தெரியாது.

பாவ மாசு மருவற்ற குழந்தையை ஏற்றுக் கொண்டு அதைப் போல் வாழ்பவன்

பாவத்திலிருந்து நமக்கு விடுதலை தர வந்த இயேசுவையே ஏற்றுக் கொள்கிறான்.

குழந்தையைப் போல் பாவ மாசில்லாமல் வாழ்பவன் தான் பெரியவன் என்று இயேசு சொல்கிறார்.

ஒருவன் சிறியவனா, பெரியவனா அவனுடைய வயதோ, பதவியோ தீர்மானிப்பதில்லை,

குழந்தையைப் போன்ற பாவமான மருவற்ற வாழ்க்கையே தீர்மானிக்கிறது.

வருடங்கள் கழியும் போது, வயது அதிகரிக்கிறது. அது நம்மை வயதானவர்களாக மாற்றும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

பதவிகள் உயரும்போது அது உலகில் நமது சமூக அந்தஸ்தை மாற்றும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

நிறைந்த படிப்பு நமது அறிவை அதிகரிக்கும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

ஆனால் பாவமாசற்ற வாழ்க்கையே நம்மை பெரியவர்களாக்கும்.

இரண்டு வயது பையன், வயதான அவனுடைய தாத்தாவை விட பெரியவன்,

ஏனெனில் அவனால் அந்த வயதில் பாவம் செய்ய முடியாது.

வயதானவர்களும், உயர்ந்த பதவி வகிப்பவர்களும், படிப்பறிவு மிக்கவர்களும் பெரியவர்கள் ஆகலாம்,   

பாவமில்லாமல் வாழ்ந்தால்.

பாவத்தை நீக்கி, இறையன்பிலும், இறையருளிலும் வளர்வோம்.

உலகினர் முன்னிலையில் அல்ல, இறைவன் முன் பெரியவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, September 24, 2022

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(லூக்.9:23)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

இயேசுவின் சீடர்களாக வாழ விரும்புகிறவர்களுக்கு இயேசு கூறும் அறிவுரைகள்:

1. தங்களையே மறுக்க வேண்டும்.

2. தங்கள் சிலுவையை நாள்தோறும் சுமக்க வேண்டும்.

3. இயேசுவைப் பின்தொடர வேண்டும்.

மனித இனம் நித்திய காலம் இறைவனோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காகத்தான் படைக்கப் பட்டது.

நமது முதல் பெற்றோர் அதை மறந்து, இறைவனது கட்டளையை மீறி பாவம் செய்ததால் அவர்களது இயல்பு நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வை நாடும் இயல்பாக விழுந்து விட்டது. (Fallen nature)

பேரின்பத்திற்காகப் படைக்கப் பட்ட இயல்பு மாறி, சிற்றின்பத்தைத் தேடும் இயல்பாகி விட்டது.

இறைவனின் சாயலாக படைக்கப் பட்ட மனிதன் சாத்தானின் சாயலை விரும்ப ஆரம்பித்து விட்டான்.

நம் ஆண்டவர் தனது சிலுவை மரணத்தின் மூலம் நமது பாவங்களுக்காகப் பரிகாரம் செய்து பேரின்ப வாழ்வுக்கான வழியைத் திறந்து விட்டிருக்கிறார்.

பேரின்ப வாழ்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமானால் 

சிற்றின்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாம் நம்மையே மறுத்து,

பேரின்ப வாழ்வை நோக்கி திரும்ப வேண்டும்.

நம்மை நாமே மறுத்தால் தான் இயேசுவோடு பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்க முடியும்.

ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் திசைகளை நோக்கி பயணிக்க முடியாது.

ஒரே நேரத்தில் பேரின்பத்தையும், 
சிற்றின்பத்தை நோக்கி பயணிக்க முடியாது.

ஆகவே தான் ஆண்டவர் 

"சிற்றின்ப வாழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் நீங்கள்

 உங்களை நீங்களே மறுத்து

 என்னை நோக்கி திரும்பி வாருங்கள்" என்கிறார்.


இயேசுவோடு பயணிக்க வேண்டுமானால் அவர் சிலுவையைச் சுமந்தது போலவே,

நாம் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்.

அழுவாரோடு அழ வேண்டும்.
சிரிப்பாரோடு சிரிக்க வேண்டும்.

சிலுவையைச் சுமப்பவரோடு நாமும் சிலுவையைச் சுமக்க வேண்டும்.

இயேசு சிலுவை என குறிப்பிடுவது நமது வாழ்வின் போது நமக்கு வரும் துன்பங்களை.

துன்பங்களை துன்பங்களாக நினைத்து சுமந்தால் அவை துன்பங்கள்தான்.

ஆனால், இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக, நமது மீட்புக்காக சிலுவையைச் சுமந்தது போல,

நாமும் நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், நமது மீட்புக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அவை சிலுவையாக மாறிவிடுகின்றன.

இயேசு எந்த கருத்துக்களுக்காகச் 
சிலுவையைச் சுமந்தாரோ,

அதே கருத்துக்களுக்காக நாமும் சிலுவையைச் சுமக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்.

நாம் யாருடைய போதனைப்படி நடக்கிறோமோ அவரைப் பின்பற்றுபவர்களாகப் கருதப் படுவோம்.

நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக வாழ வேண்டுமென்றால்

அவருடைய போதனைப்படி எல்லாவற்றுக்கும் மேலாக அவரை நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ முடியாது.

நமது அன்பு நமது சிந்தனையில் மட்டுமல்ல, சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

சொல்லில் வெளிப்படும்போது நாம் நற்செய்தியை வாயால் அறிவிக்கிறோம்.

செயலில் வெளிப்படும்போது நாம் நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கிறோம்.

நமது சுய ஆசைகளை ஒறுத்து,
நமது சிலுவையைச் சுமந்து கொண்டு,
இயேசுவின் போதனைப்படி வாழ்ந்து 

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 22, 2022

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்".(லூக்.9:13).

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (லூக்.9:13)

வெகு நேரம் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களை 

சாப்பிட அனுப்பி விடும்படி சீடர்கள் அவரிடம் சொல்கிறார்கள்.

அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று  சொல்கிறார்.

ஆண்களே ஏறக்குறைய ஐயாயிரம் பேர் உள்ள கூட்டத்திற்கு,

(பெண்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.)

அவர்களால் உணவு கொடுக்க முடியாது என்று அவருக்குத் தெரியும்.

ஆயினும் "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சொல்கிறார்.

அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான் உண்டு." என்கிறார்கள்.

இயேசு கடவுளுக்குரிய தனது வல்லமையைப் பயன் படுத்தி அவற்றைக் கொண்டு அனைவருக்கும் உணவளிக்கிறார்.

மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஐந்து அப்பங்களை எப்படி ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பங்களாக மாற்றினார்?

இதற்கு அறிவியல் ரீதியாக எந்த விளக்கமும் கொடுக்க முடியாது.

ஒரு விவசாயி தன் நிலத்தில் ஒரு நெல் மணியை நூற்றுக் கணக்கான நெல் மணிகளாக மாற்றுகிறான் என்றால் அது அறிவியலுக்கு உட்பட்டது.

ஒரு முயல் தன் வயிற்றிலிருந்து பத்து குட்டிகளைப் போடுகிறது என்றால் அது அறிவியலுக்கு உட்பட்டது.

அறிவியல் விதிகளும் கடவுளால்தான் படைக்கப்பட்டவை.

இயேசுவின் கையில் ஒரு அப்பம் ஐயாயிரம் அப்பங்களாக மாறியது அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதுமை.

ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகையே படைத்தவருக்கு ஒரு அப்பத்தை ஐயாயிரம் 
அப்பங்களாக மாற்ற முடியாதா?

அவரால் எதை எதாக வேண்டுமானாலும் மாற்ற முடியும்,  எத்தனையாக வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை  திராட்சை ரசமாக மாற்றியவர் அவர்.

"நானே விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு" என்று கூறிய அவர்,

தனது உடலையே நமது ஆன்மீக உடலாகத் தருகிறாரே, எப்படி?

கோதுமை அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றித்தானே!

 கன்னி மரியின் வயிற்றில் மனித உருவெடுத்து, நமக்காக பாடுபட்டு மரித்த அதே இயேசு தான் திவ்ய நற்கருணை.

அவரால் எல்லாம் முடியும்.

தான் எல்லாம் வல்ல கடவுள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் தான் மனிதனாய் உலகில் வாழ்ந்த காலத்தில் புதுமைகள் பல செய்தார்,

இன்றும் செய்து கொண்டு வருகிறார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சொல்லும்போதே கொடுக்கப்போவது தான்தான். என்று அவருக்குத் தெரியும்.

இன்றும் நம்மை மற்றவர்களுக்கு உதவி செய்ய சொல்லும்போதும், 

மற்றவர்களுக்கு உதவ நமக்கு உதவுபவரும் அவர்தான்.

நேரடியாகவும் உதவலாம், மற்றவர்கள் மூலமாகவும் உதவலாம்.

ஏதோ ஒரு ஏழை ரோட்டில் அடிபட்டுக் கிடக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு உதவ வேண்டும் போல் தோன்றுகிறது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நம்மிடம் இரக்கம் இருக்கிறது,
 ஆனால் காசு இல்லை.

ஆனாலும் ஒரு ஆட்டோவை நிறுத்துகிறோம்.

"சார், இந்த ஆள் யாரென்று தெரியவில்லை. அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என்னிடம் காசில்லை. கொஞ்சம் உதவுங்களேன்."

நமது நிலையைப் பார்த்தவுடன் அவருக்கே இரக்கம் வந்து விடும்.

"சரி, ஏற்றுங்கள்."

அவனை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று நர்ஸ்மாரிடம் நிலையைச் சொன்னால் அவர்கள் இரக்கப்பட்டு, அவனுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்து விடுவார்கள்.

நாம் இரக்கப்பட்டு ஆரம்பித்து வைத்ததை  கடவுள் இரக்கப்பட்டு  செய்து முடித்து விடுவார். 

சில உதவி மையங்கள் கையில் காசு இல்லாத, இரக்கம் மட்டும் உள்ளவர்களால் ஆரம்பிக்கப் பட்டு,   

இரக்கமும், காசும் உள்ளவர்களின் உதவியால் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரக்கத்தின் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், 

ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர். "

இது இயேசுவின் வாக்கு.

நம்மிடம் இரக்கம் இருக்கிறது. பிறருக்கு உதவ ஆசையாக இருக்கிறது. இரக்கத்தின் உதவியால் உதவ ஆரம்பித்து விட்டோம். தொடர்ந்து உதவ கையில் காசில்லை. கடவுளை உதவிக்கு அழைக்கிறோம்.

அவர் நம்மீது இரக்கப் பட்டு, தொடர்ந்து உதவ எப்படியாவது  காசுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்று சீடர்களிடம் சொல்லிவிட்டு,

அவர்களிடம் போதிய உணவு இல்லாததால்

 அவரே உணவு கொடுத்தது போல,

நீங்கள் பிறருக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லி விட்டு

உதவி செய்ய நம்மிடம் போதிய பணம் இல்லாவிட்டால்,

அந்த உதவியை அவரே செய்து விடுவார்.

ஆனால், நாம் முதலில் உதவி செய்ய ஆசைப்பட்டிருக்க வேண்டும்.

பிறருக்கு உதவ ஆசைப்படுவோம்.
நமது ஆசை நிறைவேற இயேசு உதவுவார்.

லூர்து செல்வம்.

Wednesday, September 21, 2022

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."(லூக்.9:3)

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."
(லூக்.9:3)

இயேசு இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்க தனது சீடர்களை அனுப்பும்போது 

"வழிப்பயணத்திற்குக் கோலோ, பையோ, உணவோ, பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்."

என்ற அறிவுரையைக் கூறுகிறார்.

எதற்காக இந்த அறிவுரை?'

இயேசுவின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏதாவது ஒரு நற்செய்தி போதனை அடங்கியிருக்கும்.

இயேசு அருளப்பரிடம் ஞானஸ்தானம் பெற்று,

40 நாட்கள் உண்ணா நோன்பு இருந்த பிறகுதான்,

நற்செய்தி போதனையை ஆரம்பித்தார்.

உண்ணா நோன்பு இருந்த பிறகு, 
நற்செய்தி போதனையை ஆரம்பிக்குமுன் சாத்தான் அவரைச் சோதித்தான்.

முதல் சோதனை உணவைப் பற்றியது.

நோன்பு இருந்ததால் பசியாய் இருந்த அவரிடம்,

"நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.

நற்செய்தி போதனையை ஆரம்பிக்கும் முன் இந்த சோதனையைக் கொடுக்க சாத்தானுக்கு இறைமகன் இயேசு அனுமதி கொடுத்தது 

நமக்கு ஒரு பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

நற்செய்திப் பணிக்கு உணவு ஒரு இடையூராக இருக்கக் கூடாது.

அதாவது நற்செய்திப் பணி நேரத்தை உணவு அபகரித்துக் கொள்ளக் கூடாது.

நற்செய்திப் பணியாளர்கள் தங்கள் முழு கவனத்தையும், நேரத்தையும் நற்செய்திப் பணிக்கே அர்ப்பணிக்க வேண்டுமே தவிர,


உணவு, பணம் போன்ற இவ்வுலகைச் சார்ந்த பொருட்களை ஈட்டுவதற்காக அல்ல.

அவை இவ்வுலகில் உயிர் வாழத் தேவைதான்.

ஆனால் அவை இல்லாவிட்டாலும் நற்செய்தி பணி நில்லாமல் தொடர வேண்டும்.

அதனால் தான் சாத்தான் கல்லை அப்பமாக மாற்ற சொன்னபோது,

"மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான்" என்று சொன்னார்.

கடவுள் வாயினின்று வரும்  சொல்தான் இறைவாக்கு,  அதாவது, நற்செய்தி.

இயேசு நற்செய்தி அறிவித்த போது தன்னோடு கோல், பை, உணவு, பணம் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லவில்லை.

எங்கே உணவு கிடைத்ததோ அங்கே சாப்பிட்டார். அவரது சொற்களில் குற்றம் காண்பதற்கு என்றே அவரை பின் சென்ற பரிசேயர்கள் வீடுகளில் கூட சாப்பிட்டிருக்கிறார்.

இரவில் தூங்குவதற்கு அவருக்கு சொந்தமான வீடு கூட இல்லை.

"மனு மகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை" என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இரவு நேரத்தை செபத்தில் தான் செலவழித்தார். 

அவரைப் போலவே அவரது சீடர்களும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்  

கோல், பை, உணவு, பணம் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டாம் என்று கூறினார்.

அவரது இந்த அறிவுரை அன்று நற்செய்தியை அறிவிக்கச் சென்ற சீடர்களுக்கு மட்டுமல்ல,

இன்று நற்செய்தி அறிவிக்கின்றவர்களுக்கும் பொருந்தும். 

நற்செய்தியை அறிவிக்கின்றவர்களுக்கு வேண்டிய உணவை, 

மற்றும் தேவையானவற்றைக்,

 கொடுப்பது நற்செய்தியைக் கேட்பவர்களது கடமை.

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்" என்பது தாய்த் திருச்சபையின் கட்டளை.

நற்செய்தி பணியினர் நற்செய்தியை அறிவிப்பதற்காக மட்டுமே வாழ்கின்றார்கள்,

பணத்தையும், உணவையும், மற்ற பொருள்களையும் ஈட்டுவதற்காக அல்ல.

நற்செய்திப் பணியினர் இவ்வுலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டினால் நற்செய்தி பணி மீது உள்ள ஆர்வம் குறைந்து விடும்.

எதிர் மறை விளைவுகளைக் கூட ஏற்படுத்தும்.

யூதாஸ் பணத்தின் மீது ஆர்வம் காட்டியதன் விளைவு நமக்குத் தெரியும்.

உலகப் பொருட்கள் மீது ஆர்வம் காட்டக்  கூடாது என்ற அறிவுரை

நற்செய்தியைக் கேட்டு வாழ வேண்டியவர்களுக்கும் பொருந்தும்.

நற்செய்திப் பணியாளர்களைப் போலவே நற்செய்தியைக் கேட்பவர்களும் இயேசுவை போல் தான் வாழ வேண்டும்.

நற்செய்தியை ஒழுங்காக வாழ ஆரம்பித்தால் இவ்வுலகப் பொருட்கள் மீது உள்ள நாட்டம் மறைய ஆரம்பித்து விடும்.

இறைவனுக்கும், பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது என்பதுவுமே நற்செய்தி தான்.

பணத்தை இறைப் பணிக்காக ஈட்டுவது ஆன்மீகம்.

பணத்தை பணம் என்பதற்காகவே ஈட்டுவது உலகியல்,

நாம் நற்செய்தியின்படி ஆன்மீக வாழ்வு வாழ ஆரம்பித்தால்  பணத்தின் மீதான நாட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

பணத்தின் மீது நாட்டம் ஏற்பட்டால் 
ஆன்மீக வாழ்வு  முடிவுக்கு வந்துவிடும்.

ஆகவே இயேசுவின் சொற்படி உலகப் பொருட்கள் மீது உள்ள ஆசையை விடுவோம்.

நற்செய்தி வாழ்வின் மீது ஆர்வம் கொள்வோம். 

இயேசுவையே சோதித்த சாத்தான் இப்போது சும்மா இருப்பானா?

அவனுடைய வேலையே சோதிப்பது தானே.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்" என்று விண்ணகத் தந்தையை நோக்கி வேண்டுவோம்.

நம்மை தந்தையின் கையில் ஒப்படைத்துவிட்டு 

மகன் போதித்த நற்செய்தியின் வழி வாழ்வோம்.

தூய ஆவி நமக்கு துணையாக இருப்பார்.

லூர்து செல்வம்.

"என்னைத் தொட்டது யார்?"(லூக்.8:45)

"என்னைத் தொட்டது யார்?"
(லூக்.8:45)

பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டவுடனே குணமானாள்.

அவள் இயேசுவின் போர்வையின் விளிம்பைத்தான் தொட்டாள்,

ஆனால் இயேசு "என்னைத் தொட்டது யார்?

யாரோ என்னைத் தொட்டார்கள், வல்லமை என்னிடமிருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன்" என்றார்.

அவளுக்கு குணத்தை கொடுத்தது எது?

இயேசுவின் வல்லமை.

ஆனால் இயேசு சொன்னார்,

"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ."

அவள் தன்னைக் குணமாக்கும்படி இயேசுவிடம் கேட்கவில்லை.

இயேசுவின் போர்வையின் விளிம்பைத் தொட்டால் தனக்குச் சுகம் கிடைக்கும் என்று உறுதியாக விசுவசித்தாள், சுகம் கிடைத்தது.

நாம் அநேக சமயங்களில் இயேசுவிடம் கேட்கிறோம்.

ஆனால் கிடைப்பதில்லை.

காரணம்?

நம்மிடம் போதிய விசுவாசம் இல்லை.

நமக்கு வேண்டியது கிடைக்க கேட்பதைவிட விசுவசிப்பது தான் முக்கியம்.

தங்களுக்கு தேவையானதை கடவுள் தருவார் என உறுதியாக விசுவசித்து,

அவரிடம் எதுவும் கேட்காமல்,

அவருடைய சித்தப்படி வாழ்பவர்களுக்கு அவர்களுக்கு தேவையானதை கடவுள் கொடுப்பார்.

அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது விசுவாசம் நிறைந்த வாழ்க்கையை.

வாயினால் கேட்பதை விட அதுவே சிறந்த செபம்.

இயேசுவின் போர்வையின் விளிம்பை தொட்ட பெண் அவரை தொட்டதாகத்தான் கூறினாள்.

"தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே குணமானதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரிவித்தாள்."

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இயேசுவோடு தொடர்புடைய எதைத் தொட்டாலும் அது இயேசுவைத் தொட்டதாகவே. கருதப்படும்.

இயேசுவால் படைக்கப்பட்ட நமது அயலானுக்குச் செய்வதை எல்லாம் இயேசுவுக்கே செய்கிறோம்.

பசியாக இருக்கும் யாருக்கு நாம் உணவு கொடுத்தாலும் இயேசுவுக்கே உணவு கொடுக்கிறோம்.

ஆடை இல்லாத  யாருக்கு நாம் ஆடை கொடுத்தாலும் இயேசுவுக்குத்தான் ஆடை கொடுக்கிறோம்.

நமது அயலானை நேசித்தால் இயேசுவை நேசிக்கிறோம். 

நமது அயலானை வெறுத்தால் இயேசுவை வெறுக்கிறோம்.

கடவுளை விசுவசிப்பதோடு நமது அயலானுக்கு நாம் செய்யும் நல்ல செயல்கள் தான் நமக்கு விண்ணகத்தை பெற்று தருகின்றன.

குணம் அடைந்த பெண் இயேசுவை தொட்டால் குணம் ஆகும் என்று விசுவசித்தாள்.

அதற்காக அவரது அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

நம்மை பொருத்தமட்டில் நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் கடவுளை தொட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

திவ்ய நற்கருணை வாங்கும் போது இயேசுவின் உடலை நாவினால் தொட்டு விழுங்கும் போது அவர் நமது ஆன்மாவோடும், உடலோடும் கலந்து விடுகிறார்.

கடவுள் எங்கும் இருப்பதால் நாம் அவருள் இருக்கிறோம், அவர் நம்முள் இருக்கிறார்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவுடனும் இருக்கிறார்.

சர்வ வல்லமை உள்ள கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருக்கும் போது நாம் எதற்கு பயப்பட வேண்டும்?

தாய் மடியில் இருக்கும் குழந்தை எதற்காகவும் அஞ்சுகிறதா?

சர்வ வல்லவ கடவுளின் மடியில் இருக்கும் நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

இந்த விசுவாசம் ஒன்றே போதும் நமக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் நாம் கேளாமலேயே நமக்கு தருவதற்கு.

நாம் ஒவ்வொரு வினாடியும் கடவுளோடு இருக்கும் உணர்வுடன் வாழ வேண்டும்,

 அதாவது இறைவனின் சன்னிதானத்தில் எப்பொழுதும் வாழ வேண்டும்.

இப்பொழுது நமக்கு என்ன வேண்டும் என்பது மட்டும்தான் நமக்கு தெரியும்,

 எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்று நமக்கு தெரியாது,

 ஆனால் நம்மோடு இருக்கும் இறைவனுக்கு தெரியும்.

நமக்கு என்ன வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழாமல் இறைவனுக்காக எப்படி வாழ வேண்டும் என்பதை மட்டும் எண்ணி வாழ்வோம்.

நமது தேவைகளை கடவுள் பார்த்துக் கொள்வார்.

லூர்து செல்வம்.

Tuesday, September 20, 2022

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" (லூக்.8:39)

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" 
(லூக்.8:39)

இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார்,

எல்லோருக்கும் ஒரே பணிதான்,

நற்செய்தியை வாழ்ந்து, மற்றவர்களுக்கு அறிவித்தல்,

ஆனால் வெவ்வேறு வகையில்,

இயேசு ஏராளமான பேய்கள் குடியிருந்த ஒருவனிடமிருந்து 
பேய்களை எல்லாம் வெளியேற்றி அவனைக் குணப்படுத்தினார்.

வெளியேற்றப்பட்ட பேய்கள் இயேசுவின் அனுமதியுடன்

அங்கே மலையில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்த பன்றிகளுக்குள் நுழைந்தன.

அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கிப்போயிற்று.

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஊருக்குள் சென்று மக்களிடம் அறிவித்தனர்.

ஊர் மக்கள் வந்து, குணமான ஆளையும், குணமாக்கிய இயேசுவையும் கண்டனர்.

அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

இயேசுவுக்கு நன்றி சொல்வதற்குப் பதில் தங்களை விட்டகலும்படி அவரைக் கேட்டனர்.

பேய்கள் நீங்கியவன் "நானும் உம்மோடு வரவிடும்" என்று மன்றாடினான்.

 இயேசுவோ, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். 

அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.

அவருடைய சீடர்கள் அவருடைய அழைப்பை ஏற்றுதான் அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்றார்கள்.

ஆனால் பேய்களிடமிருந்து விடுவிக்கப் பட்டவன்,

நானும் உம்மோடு வருகிறேன் என்று கூறியபோது,

"நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறினார்.

சீடர்களை அழைத்த இயேசு, "உம்மோடு வருகிறேன்" என்று சொன்னவனை ஏன் வீட்டுக்குத் திரும்பிப்போகச் சொன்னார்?

நமது மொழியில் 'வா' என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் 'போ.''

ஆனால் இயேசு இரண்டு சொற்களையும் அவர்களை அழைக்கவே பயன்படுத்தினார்

எதற்கு அழைக்க?

நற்செய்தியை அறிவிக்க அழைக்க.

அழைப்பு சொல்லில் இல்லை. பணியில் இருக்கிறது.

'வா' என்று அழைக்கப்பட்டவர்கள் 
அப்போஸ்தலரகள்.

அப்போஸ்தலரகள் என்ற வார்த்தைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது பொருள்.

அவர்களுக்கு பெரிய வியாழனன்று குருப் பட்டம் கொடுத்து,

பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும்,
நற்செய்தியை அறிவிக்கவும் 

உலகெங்கும் அனுப்பினார்.

குணம் பெற்றவனை, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" 

என்ற வார்த்தைகளுடன் அனுப்பியது போல,

குருத்துவ அந்தஸ்து கொடுக்கப் படாதவர்களையும்

நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார், இன்றும் அனுப்புகிறார்.

நற்செய்தி அறிவிப்பதோடு, பாவங்களை மன்னிக்கவும், திருப்பலி நிறைவேற்றவும்

குருக்களை அனுப்புவது போலவே.

நற்செய்தியை அறிவிக்க மட்டும்  பொது நிலையினரையும் அனுப்புகிறார்.

ஆக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்,
(குருக்கள் + பொது நிலையினர்)
தேவ அழைத்தல் இருக்கிறது.

அதாவது எல்லோருமே இயேசுவால் அனுப்பப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது கேட்கலாம்:

குருக்கள் தத்துவசாஸ்திரம், தேவசாஸ்திரம், விவிலியம் போன்றவற்றை ஆழமாகப் படித்து, பயிற்சி கொடுக்கப்பட்டு அனுப்பப் படுகிறார்கள்.

அவர்கள் கொடுக்கப் பட்ட பணியைச் சிறப்பாகச் செய்கிறார்கள்.

பொது நிலையினராகிய நாம் எந்த படிப்பும் படிக்காமல், எந்த பயிற்சியும் பெறாமல்

வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும்போதே அனுப்பப் பட்டால்

நம்மால் என்ன செய்ய முடியும்?

நாம் தனியாகப் போராடவில்லை.

போராட்டத்தின்போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

குருக்களோடு இருந்து அவர்களை வழிநடத்தும் அதே கடவுள்தான் நம்மோடும் இருந்து, நம்மை வழிநடத்துகிறார்.

"கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று குணமான ஆளுக்குச் சொன்ன அதே வார்த்தைகளை நமக்கும் சொல்கிறார்.

"நான் உன்னோடிருந்து உன்னை வழி நடத்திக் கொண்டிருப்பதை உன் அயலானிடம் சொல்.

அதற்கு சாஸ்திரங்கள் எதுவும் படிக்க வேண்டியதில்லை.

நான் காட்டும் வழியில் நீ நடந்தாலே போதும்.

நீ நடப்பதைப் பார்க்கும். உன் அயலான் உன்னில் என்னைக் காண்பான்.

அதாவது  நீ என்னை அவனுக்கு அறிமுகப்படுத்துவாய்.

என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நீ வாழ்ந்து போதிக்கும் நற்செய்தி.

நீ தனியாக வாழவில்லை. என்னோடுதான் வாழ்கிறாய்.

உன்னைப் பார்ப்பவர்கள் என்னைப் பார்க்காதிருப்பார்களா?

நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை மூலம் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த உன்னை நான் அழைக்கிறேன்."

இயேசுவின் அழைப்பின்படி வாழும் பொது நிலையினரிடமிருந்துதான் குருக்கள் அழைக்கப் படுகின்றார்கள்.

குருக்களின் முதல் குருமடம் பொது நிலையினரின் குடும்பம்தான்.

ஒரு குருவானவர் ஆயராகத் திருநிலைப் படுத்தப் பட்ட பின்பு, அந்த விழாவைக் கொண்டாட தன் பெற்றோரை அழைத்திருக்கிறார்.

அவர்களிடம் ஆயருக்குரிய அவருடைய மோதிரத்தைக் காண்பித்திருக்கிறார்.

அவருடைய தாய் அவளுடைய திருமண மோதிரத்தைக் காண்பித்து,

"இந்த மோதிரம் என் கைக்கு வந்திருக்காவிட்டால், அந்த மோதிரம் உங்கள் கைக்கு வந்திருக்காது," என்றார்.

பொது  நிலையினரின் முக்கியத்துவத்தை எடுத்துக் 
காட்டவே இயேசு தனது 33 ஆண்டு கால வாழ்வில்

30 ஆண்டுகள்  திருக்குடும்பத்தில் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொதுநிலையினரும் இயேசுவால் அழைக்கப்பட்டவர்களே என்பதை உணர்ந்து 

அழைப்பிற்கு ஏற்ப வாழ்வோம்.

குடும்பத்துக்கு ஒரு குருவைப் பெற்றுத் தருவோம்.

லூர்து செல்வம்.

Monday, September 19, 2022

"அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார்." (லூக்.8:23)

"அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார்." (லூக்.8:23)

நற்செய்தி நூலில் இயேசு சம்பந்தப் பட்ட எந்த நிகழ்ச்சியை  வாசிக்கும் போதும் நம் நினைவில் இருக்க வேண்டியது

இயேசு சர்வ வல்லமையும், ஞானமும் நிறைந்த கடவுள்.

அவரது ஒவ்வொரு செயலும் நித்திய கால திட்டத்திற்கு உட்பட்டது.

நாம் ஏதாவது ஒரு திட்டத்தைத் தீட்டினால், அது நமது திட்டப்படி நடக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது.

ஆனால் அவரது திட்டம் திட்டமிட்டபடியே செயலாகும்.

ஒரு நாள் அவர் தனது சீடர்களோடு 
படகில் சென்றபோது அவர் உறங்கினார்.

 அப்போது புயற்காற்று கடலில் வீசியது. 

படகு நீரால் நிறைந்துபோகவே, அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.

சீடர்களைப் பொறுத்தமட்டில் படகில் ஏறும்போது அவர்கள் புயற் காற்றில் அகப்படப் போவது தெரியாது.

கடவுளாகிய இயேசுவைப் பொறுத்தமட்டில் புயற்காற்று அவருடைய நித்திய காலத் திட்டம்.

புயற்காற்றின்போது அவர்  உறங்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.

திட்டப்படியே அவர் படகில் உறங்கினார்.

படகு நீரால் நிறைந்தது. அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.

சீடர்களுக்கு இது எதிர்பாராத நிகழ்ச்சி.

இயேசுவிடம் வந்து, "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினார்கள்.

 அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.

அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார். 

சீடர்களுக்கும், நமக்கும் விசுவாசத்தின் அவசியம் பற்றி போதிக்கவே இயேசு இந்த நிகழ்ச்சியைத் தட்டமிட்டார்.

இந்நிகழ்ச்சியை வாசிக்கும் நாம் மனதில் கொள்ள வேண்டியது

பாவம் தவிர, நமது வாழ்வில் நடை பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கடவுளுடைய திட்டப்படி தான் நடக்கின்றன.

நமக்கு நோய் நொடிகள் போன்ற கஷ்டங்கள் வரும்போது அவை இயேசுவின் திட்டப்படி தான் நடக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டால்

கஷ்டங்களைப் பார்த்து வருத்தப் படவோ, பயப்படவோ மாட்டோம்.

ஏனெனில் இயேசு நமக்கு எதைச் செய்தாலும் அது நமது நன்மைக்காகத்தான் இருக்கும்.

கஷ்டங்கள் வரும்போது இயேசுவைப் பார்த்து,

" ஆண்டவரே, இந்தக் கஷ்டத்தை எனது ஆன்மீக நன்மைக்காகவே கொடுத்திருக்கிறீர்

என்ன நன்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் உமக்குத் தெரியும்.

நான் படும் கஷ்டத்தை உமக்கே ஒப்புக் கொடுக்கிறேன்.

அவற்றைத் தாங்கும் சக்தியைத் தாரும்.

அன்று உமது பாடுகளையும், மரணத்தையும் எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக உமது தந்தைக்கு ஒப்புக் கொடுத்தது போல,

நான் எனது கஷ்டங்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

அவற்றை ஏற்றுக் கொண்டு எனக்கு நித்திய பேரின்ப வீட்டைத் தாரும்." என்று வேண்ட வேண்டும். 

சீடர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டியது போல, நாமும் நமது கஷ்டத்தை நீக்க கடவுளிடம் வேண்டலாம்.

அவருக்கு சித்தமிருந்தால் நீக்குவார்.

நமது வாழ்வில் கஷ்டங்களே வராமலிருந்தால் நாம் கடவுளை நினையாமலிருக்க வாய்ப்பு இருக்கிறது.

 அவரை நினைக்க வைப்பதற்காகவே கடவுள் நமக்குக் கஷ்டங்களை அனுப்புவதுண்டு.

இயேசு சீடர்களோடு படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, 

 புயற்காற்று வீச  திட்டமிட்டிருந்தும், 

 உறங்கினார்.

ஏன்?

சீடர்கள் தன்னை எழுப்பி வேண்ட வேண்டும் என்பதற்காக.

நாம் அவரிடம் பேச வேண்டும் என்பதற்காகவே துன்பங்களை அனுப்புகிறார்.

எப்போதும் ஆண்டவரிடம் பேசுவோம்.

அதற்காகவே இரவும் பகலும் திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

லூர்து செல்வம்.

Sunday, September 18, 2022

"எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை: கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்." (லூக்.8:16)

"எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை: கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்."
  (லூக்.8:16)

"நானே உலகின் ஒளி" என்று கூறிய நமது ஆண்டவர்,

"உலகிற்கு ஒளி நீங்கள்." என்றும் கூறியிருக்கிறார்.

நாம் ஆண்டவரைப் போலவே வாழ வேண்டும்,

நமது வாழ்க்கையில் மறு இயேசுவாக திகழ வேண்டும் 

என்பதைத்தான் இப்படி கூறியிருக்கிறார்.

அனைத்தையும் மக்களுக்கு காட்டும் ஒளி தானே மறைவாக இருக்க முடியாது.

யாரும் விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்,

மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

இயேசு மக்களுக்கு ஒளியாக திகழ்வது போல,

ஒளியாகிய நாமும் மனிதர்முன் ஒளிர வேண்டும்.

ஒளி தன்னை மட்டுமல்ல, நான் படும் பொருட்களை எல்லாம் மக்களுக்குக் காட்டும்.

நாம் ஒளியாக இருந்தால் நாம் செய்யும் நல்ல செயல்களும் மக்களுக்கு தெரியும்.

நல்லவை யாவும் கடவுளிடமிருந்தே வருகின்றன.

கடவுளின் அருளால் நாம் செய்யும் 
நற்செயல்களைக் கண்டு,.

மக்கள் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும்.

நமது நல்ல செயல்களை மக்கள் பார்க்க வேண்டும் என்று நாம் வாழ்வது நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அல்ல,

கடவுளை மகிமைப்படுத்துவதற்கே.

நாம் எதை செய்தாலும் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகவே செய்ய வேண்டும்.

நமது செயல்களில் மக்கள் நமது ஆண்டவரைப் பார்க்க வேண்டும்.

பார்த்து அவரை அறிந்து அவரிடம் வரவேண்டும்.

நமது வாழ்க்கை வெளிப்படையான நற்செய்தி அறிவிப்பு வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

வார்த்தைகள் மூலம் நற்செய்தியை அறிவிப்பதோடு,

வாழ்க்கையில் மூலமும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

நமது ஆண்டவரும் இப்படித்தான் செய்தார்.

அனைவரையும் நேசியுங்கள் என்று சொன்ன இயேசு அவரே அனைவரையும் நேசித்தார்.

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்று சொன்ன இயேசு,

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன இயேசு,

தங்களுக்கு சுகம் வேண்டும் என்று கேட்ட அனைத்து நோயாளிகளையும் குணமாக்கினார்.

அவரை பின்பற்றும் நாமும் நமது வார்த்தைகளை செயல்களாக மாற்றினால் தான் நம்மை பார்ப்போம் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

இயேசுவே உலகின் ஒளி. 

அவரது ஒளியைப் பிரதிபலிக்கும் நாம் நமது வாழ்க்கையில் மூலம் நாம் பெற்ற இயேசுவை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இயேசுவைப் போல வாழ்வோம்.
இயேசுவாகவே வாழ்வோம்.

நமது வாழ்க்கையின் மூலம் இயேசுவை அனைவருக்கும் அளிப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, September 17, 2022

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."
(லூக்.16:13)

"தாத்தா, நாம் நமது தலைவருக்குத்தானே ஊழியம் செய்ய முடியும்?"

", ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"கடவுள் நம்மைப் படைத்தவர். ஆகவே அவர் நம் தலைவர். அவருக்கு மட்டும்தான் நாம் ஊழியம் செய்ய வேண்டும். அதில் சந்தேகம் இல்லை.

இயேசு எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறாரே.

முதலில் இரண்டு தலைவர்கள் இருக்கவே முடியாது.

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."

என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

செல்வம் ஒரு தலைவரா?"

",பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகிறாய்?"

'"சைக்கிளில்."

",சைக்கிள் யார் வாங்கி தந்தது?"

"அப்பா."

',பள்ளிக்கூடத்தில் சேர்த்தது யார்?"

'"அப்பா."

",அப்பா நீ பள்ளிக்கூடம் போக சைக்கிள் வாங்கி தந்தாரா? அல்லது சைக்கிள் மிதிப்பதற்காக பள்ளிக்கூடத்தில் சேர்த்தாரா?"

''பள்ளிக்கூடம் போவதற்காகத்தான் சைக்கிள் வாங்கி தந்தார்.''

",உனக்கு சைக்கிள் மிதிப்பதில் ஆர்வம் உண்டா?'

''உண்டு."

",ஒரு நாள் நீ சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போகாமல் 

சைக்கிள் மிதிக்க வேண்டும் எந்த ஆர்வத்தில் 

பகல் முழுவதும் சைக்கிளிலேயே ஊர் சுற்றிவிட்டு 

மாலையில் வீட்டுக்கு வந்தால் அப்பா என்ன சொல்லுவார்?"

"ஒன்றும் சொல்ல மாட்டார்
 அடிப்பார்."

'',ஏன்?"

"பள்ளிக்கூடம் போவதற்காகத் தானே சைக்கிள், ஊர் சுற்ற அல்லவே."

",உன்னைப் படைத்த கடவுள் உலகத்தையும் ஏன் படைத்தார்?"

"நான் வாழ்வதற்காக."

",அப்படியானால் நீ கடவுளுக்காக வாழவில்லை!

ஞானோபதேச வகுப்பில் ஆசிரியர்
"கடவுள் உன்னை எதற்காக படைத்தார்?" என்று கேட்டால் என்ன சொல்வாய்?"

"தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும் அதனால் மோட்சத்தை அடையவும் படைத்தார்." என்று சொல்லுவேன்."

",உலகில் வாழ என்று சொல்வாயா?"

"சொல்ல மாட்டேன். கடவுள் என்னை உலகத்தில் வாழ்வதற்காக படைக்கவில்லை.
மோட்சத்தில் வாழ்வதற்காக படைத்தார்."

'',நான் கேட்டால் உலகத்தில் வாழ்வதற்காக என்று சொல்கிறாய்!"

"Sorry தாத்தா. உலகைப் படைத்தது அதை இறைவனது சேவையில் பயன்படுத்துவதற்காக."

", உலகத்தில் வாழ்வதற்காகவே வாழ்கின்றார்களே, அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்?''

"அவர்கள் கடவுளுக்கு சேவை செய்யவில்லை. உலகத்திற்குத் தான் சேவை செய்கிறார்கள்."

",உலகத்திற்கு சேவை செய்தால் என்ன அர்த்தம்?"

"கடவுளை தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் உலகத்தை தலைவராக ஏற்றுக் கொள்கிறார்கள்."

"அதாவது?"

 "கடவுளுக்கு ஊழியம் செய்யாமல் உலகத்திற்கு ஊழியம் செய்கிறார்கள்."

",இப்போது உனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?" 

"கிடைத்துவிட்டது. கடவுளுக்கு ஊழியம் செய்யாதவர்கள் உலகுக்கு ஊழியம் செய்கிறார்கள்" 

",ஒரே நேரத்தில் கடவுளுக்கும் உலகுக்கும் ஊழியம் செய்ய முடியுமா?" 

"அது எப்படி முடியும்? கடவுளுக்கு ஊழியம் செய்தால் உலகத்தை அவருக்காக பயன்படுத்த வேண்டும்.

கடவுளுக்காக வாழ்பவர்கள் உலகத்திற்காக வாழ முடியாது.

உலகத்துக்காக வாழ்பவர்கள் கடவுளுக்காக வாழ முடியாது."

",இதைத்தானே ஆண்டவர் சொன்னார். 

கடவுளுக்காக உலகைப் பயன்படுத்தாமல், உலகத்துக்காக கடவுளைப் பயன் படுத்திகிறவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?"

"நிறைய பேர் இருக்கிறார்கள். 

இவர்கள் ஆன்ம வளர்ச்சிக்கான அருள் வரம் கேட்பதற்காக கோவிலுக்கு போவதில்லை.

உலக சம்பந்தமான உதவிகளை கேட்பதற்கு மட்டும் கடவுளைத் தேடி கோவிலுக்கு போகிறார்கள்."

",உலக சம்பந்தமாக உதவிகளை கேட்கக் கூடாதா?"

"தங்களது ஆன்மீக வளர்ச்சிக்காக அவைகளைக் கேட்கலாம்.  

நல்ல சம்பளம் வரும் வேலையை கேட்கலாம், அதை பிறர் சிநேக பணியில் செலவழிப்பதற்காக.

குழந்தை வரம் கேட்கலாம், அதை ஆண்டவருக்காக வளர்ப்பதற்காக.

உலகப் பொருள்கள் அனைத்தையுமே ஆண்டவருக்காக பயன்படுத்த வேண்டுமே.

அப்படி பயன்படுத்துவதற்காக அவற்றை கேட்கலாம்."

", கேட்டது கிடைக்காவிட்டாலும்..."

"கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்."

",இப்போது சொல்லு, உலகம் எதற்காக?'

"இறை ஊழியத்தில் அதை பயன்படுத்துவதற்காக."

",எதற்காக அல்ல?"

"நாம் வாழ்வதற்காக அல்ல.

நாம் வாழ வேண்டிய இடம் மோட்சம் மட்டுமே.

அதற்காக நம்மை இவ்வுலகில் தயாரிக்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் ஆன்மீக வாழ்க்கை.''

",இறைவனுக்கு ஊழியம் செய்வோம். 

இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்வோம்."

லூர்து செல்வம்.

Friday, September 16, 2022

நல்ல நிலமும், நாமும்.

       நல்ல நிலமும், நாமும்.

"தாத்தா, சீரிய செம்மனம் என்றால் என்ன தாத்தா?"

",நல்ல மனது.

 "நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம்" என்று வானவர் பாடினார்களே, அப்படிப்பட்ட மனது."

"நல்ல நிலத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?"

",நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நன்கு முளைத்து, நன்கு வளர்ந்து, நல்ல பலன் தரும்.

அதுபோல நல்ல மனது உள்ளவர்கள் இறைவாக்கை அறிந்தால் அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கையை சீரும், சிறப்பும் உள்ளதாக மாற்றும்."

"வழியோரம், பாறை, முட்செடிகள் நிறைந்த நிலம் ஆகியவற்றுக்கும்,

நல்ல நிலத்திற்கும் என்ன வித்தியாசம்?"

", வழியில் யார் நடப்பார்கள்?"

"யார் வேண்டுமானாலும் நடப்பார்கள். நல்லவர்கள். கெட்டவர்கள், திருடர்கள் போன்று யார் வேண்டுமானாலும் நடப்பார்கள்.

மனது வழி போன்று இருந்தால் அங்கு எல்லா வகை எண்ணங்களும் குடியேறும். சாத்தான் கூட  தன் எண்ணங்களோடு குடியிருப்பான்.

அத்தகைய மனதில் இறைவாக்காகிய விதையை விதைத்தால் அது பலன் தராது."

"இப்படிப்பட்ட மனமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை சாமியாருடைய நற்செய்தி பிரசங்கத்தை கேட்டாலும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது."

",இயேசுவின் நற்செய்தி நல்ல மனதுள்ள பாவிகளை மனம் திருப்பியது.

பாவியாகிய மரிய மதலேனாளை புனிதையாக மாற்றியது.

 ஆனால் பரிசேயர்களை அது மாற்றவில்லை.

அவர்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்டாலும் அவரை கொலை செய்யவே தீர்மானித்தார்கள்.

நல்ல நிலத்தில் பயிற்தொழில் செய்வோரும், அவர்களுக்கு உதவுபவர்களும் மட்டுமே இருப்பர்.

நல்ல மனதில் ஆண்டவருக்கு ஏற்ற எண்ணங்கள் மட்டுமே குடியிருக்கும்.

இந்த எண்ணங்களின் இடையே நற்செய்தியாகிய விதை விழுந்தால் நல்ல பலன் தரும்."

"பாறைக்கும் நல்ல நிறத்திற்கும் என்ன வித்தியாசம்?"

"நல்ல நிலம் உழுது பண்படுத்தப்பட்டிருப்பதால் கடினமாக இருக்காது.

முளைத்த விதை ஆழமாக வேரூன்றி வளரும் அளவிற்கு நிலம் நன்றாக இருக்கும்.

நல்ல நிலம் போன்ற மனதில் நற்செய்தி பதிந்தால் அது நல்ல ஆன்மீகப் பலன் தரும்."

"முட்செடிகள் நிறைந்த நிலத்துக்கும் நல்ல நிலத்துக்கும் என்ன வித்தியாசம் ?"

",முட்செடிகளின் நடுவே விதை விழுந்தால் என்ன ஆகும்?"

"அது முளைக்கும், ஆனால் வளராது. முட்செடிகள் அதை அழுத்தி விடும்."

", உலகக் கவலைகள், 
செல்வத்தின் மீது ஆசை,, 
 சிற்றின்ப ஆசை போன்ற
 முட்செடிகள் இடையே விழும்
நற்செய்தி விதையும் பலன் தராது."

"ஆக நல்ல எண்ணங்களும் நல்ல ஆசைகளும் நிறைந்த, மென்மையான மனதே நல்ல மனது.

இத்தகைய மனம் உள்ளவர்கள் தான் சமாதானத்தின் தேவனின் வார்த்தையால் பயன் பெறுவார்கள்."

",ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் ஆன்ம பரிசோதனை செய்து நமது மனதில் உள்ள வேண்டாத எண்ணங்களையும், ஆசைகளையும் அப்புறப் படுத்த வேண்டும்.

அடுத்து நற்செய்தியை வாசிக்க வேண்டும்.

தொடர்ந்து அதன்படி வாழ வேண்டும்.

இதுவே நம்மை இறைவன் பாதத்தில் சேர்க்கும் வாழ்க்கை.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."

லூர்து செல்வம்.

Thursday, September 15, 2022

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"  (லூக்.8:21)

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" 
 (லூக்.8:21)

இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது,

"உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்"

என்று அவருக்கு அறிவிக்கப் பட்டது.

அதற்கு ஆண்டவர்,

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"  என்றார்.

தேவதாயின் மீது அக்கரை இல்லாத நம் பிரிவினை சகோதரர்கள் இந்த வசனத்தை தங்கள் வாதத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, இயேசுவுக்குப் பெற்ற தாய் மீது அக்கரை இல்லாததது போலவும், அதனால்தான்

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" என்று சொன்னதாகவும் கூறுகிறார்கள்.

பைபிள் வசனத்திற்கு பொருள் காணும்போது சொன்னவருடைய பண்பின் அடிப்படையில் பொருள் காணவேண்டுமே தவிர

வெறும் வார்த்தைகள் அடிப்படையில் அல்ல.

தனது 33 ஆண்டு கால வாழ்வில் 30 ஆண்டுகள் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் தாய் மீது அக்கரை இல்லாதவரா?

சிலுவையில் தான் சாகும் தருவாயில் தன் தாயைத் தன் பிரியமான சீடர் அருளப்பர் பொறுப்பில் ஒப்படைத்தவர் தாய் மீது அக்கரை இல்லாதவரா? 

மற்றவர்கள் தன் தாயைப் பற்றி அறிவித்த சந்தர்ப்பத்தை தனது நற்செய்தியை நமக்கு அறிவிக்கப் பயன்படுத்திக் கொண்டார்.

நாம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும், அப்படி நடந்தால் நாம் அவருடைய தாயும், சகோதரரும் போன்றவர், என்கிறார்.

அதுமட்டுமல்ல, அவருடைய தாய் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்தார் என்ற உண்மையும் அந்த வசனத்தில் அடங்கியிருக்கிறது.

மரியாள் கோவிலில் வளரும்போதே கன்னிமை வார்த்தைப் பாடு கொடுத்திருந்தார்.

இது அவரை வளர்த்த பெரிய குருவுக்கும் தெரியும்.

அவரது கன்னிமைக்கு பாதுகாவலாகத்தான் அவரை வயதான,
widower ஆகிய சூசையப்பருக்குத் திருமண ஒப்பந்தம் செய்து வைத்தார்.

கபிரியேல் சம்மனசு அவளது கன்னிமைக்கு பங்கம் ஏற்படாமல்
அவள் வயிற்றில் இயேசு பிறக்கவிருப்பதை அறிவித்த போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளால் தன்னை இறைப் பணிக்கு முற்றிலும் அர்ப்பணித்தார்.

அந்த விநாடியிலிருந்து இயேசுவின் பாடுகளில் அவளும் பங்கெடுத்துக் கொண்டார்.


பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டதால் வாழ் நாள் முழுவதும் வியாகுல மாதாவாகவே வாழ்ந்தார்.

சிலுவையில் மரித்த இயேசுவை அவளும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

இயேசு மரித்த பின் உயிர்த்தபோது முதல் முதல் தன் அன்னைக்குதான் காட்சி கொடுத்தார்.

இயேசு விண்ணகம் எய்திய பின் அப்போஸ்தலகள் அன்னையின் கண்காணிப்பில்தான் இருந்தார்கள்.

திருச்சபை செயல்பட ஆரம்பித்த பெந்தெகோஸ்தே நாளன்று அன்னை அப்போஸ்தலர்களுடன் தான் இருந்தார்.

ஆரம்ப காலத்திலிருந்தே திருச்சபையின் அன்னையாக செயல்பட்டவர் அன்னை மரியாள் தான்.

அன்னை மரணப் படுக்கையில் இருந்தபோது பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் தோமையாரைத் தவிர மற்றவர்கள் வந்து விட்டார்கள்.

அன்னை மரணம் அடைந்தவுடன் அடக்கம் செய்தார்கள்.

சில நாட்கள் கழித்து தோமையார் வந்தார்.

வந்தவர் அன்னையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அவருக்காக கல்லரையைத் திறந்தார்கள்.

ஆனால் உள்ளே அன்னையின் உடல் இல்லை.

அப்போதுதான் அன்னை ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை அறிந்தார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் தன் மகனுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த அன்னை மீது மகனுக்கு அக்கரை இல்லை என்று சொல்வது 

எவ்வளவு புத்திசாலித்தனம். 

நம்மைப் பொறுத்த மட்டில் இயேசுக்கு அடுத்தபடி விண்ணகத்தில் ஆன்ம சரீரத்தோடு இருப்பவர் இயேசுவின் தாய் மட்டும்தான்.

அவள் மூலம் இயேசுவிடம் செல்வதுதான் நமக்கு எளிதான வழி.

அருள் நிறைந்த அன்னை மரியை
நம்புவோம்.

அவள் வழியே விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 14, 2022

மகிமையின் சின்னம்.

     மகிமையின் சின்னம்.

பெரிய வெள்ளி இல்லாவிட்டால் உயிர்த்த ஞாயிறு இல்லை.

வெள்ளிக் கிழமை இயேசு சிலுவையில் மரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிர்த்தெழுந்தார்,

வெள்ளி கிழமை துக்க தினம்.

ஞாயிற்றுக்கிழமை மகிமையின் தினம்.

வெள்ளி கிழமை இயேசு சிலுவையில் மரித்ததால் அதைத் துக்கத்தின் அடையாளமாகத்தானே கருத வேண்டும்.

ஆனால் நாம் அதை மகிமையின் அடையாளமாகக் கருதுகிறோமே, ஏன்?

ஏனெனில்  சிலுவையில் மரித்தது மகிமையின்  உறைவிடமாகிய இயேசு.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளமே சிலுவைதான்.

இயேசுவின் காலம் வரை சிலுவை குற்றவாளிகளைத் தண்டிக்கும் கருவியாகத்தான் இருந்தது.

அதாவது தண்டனை என்னும் அவமானத்தின் சின்னமாக இருந்தது.

இயேசு குற்றவாளி அல்ல. ஆனால் பரிசேயர்கள் அவர் குற்றவாளி என பொய்க் குற்றம் சாட்டி, அதற்கு தண்டனையாக, அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

ஆனாலும் இயேசு மனுக்குலத்தின் பாவங்களை எல்லாம் சுமந்து  அவற்றுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக்கினார்.

உண்மையில் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசு தன்னையே கையளித்தார்.

அதனால் தான் தன்னையே சிலுவையில் பலியாக்கினார் என்று கூறுகிறோம். 

இயேசுவின் காலம் வரை அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை, 

இயேசு அதில் மரித்து நமது பாவங்களை வென்றதால் அது வெற்றியின் சின்னமாக மாறியது. 

இன்று நாம் அதை வெற்றியின் சின்னமாகத்தான் பயன்படுத்தினோம்.

கிறிஸ்தவ வாழ்வு என்றாலே அது சிலுவையின் வாழ்வு தான்.

நாம் சிலுவையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 சிலுவைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே சிலுவை அடையாளம் வரைந்து கொண்டுதான் எழுதுகிறோம்.

சிலுவையின் மீது படுத்திருந்த நாம் சிலுவைக்காகவே வாழப் போகிறோம் என்பதற்கான அடையாளம் அது.

இரவில் படுக்கும் போது சிலுவை அடையாளம் வரைந்து அதன் மேல் படுக்கிறோம்.

சிலுவையில் படுத்து ஆணிகளால் அறையப்பட்ட இயேசுவின் ஞாபகமாகவே தூங்குகிறோம்.

அதே ஞாபகத்தில் தான் காலையில் எழுகிறோம்.

சிலுவை அடையாளம் வரையும் போது 

"தந்தை, மகன், தூய ஆவியின் " பெயராலே வரைகிறோம்.

சிலுவையின் மீது, சிலுவைக்காக வாழும் நாம் பரிசுத்த தம திரித்துவத்தின் மகிமைக்காகவே வாழ்கிறோம் என்பதன் அடையாளமாகவே,

சிலுவை அடையாளம் வரைந்து 
 படுக்கிறோம், எழுகிறோம், தொடர்ந்து வாழ்கிறோம்.

இதன் அடையாளமாகத்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வின் முன்னும், பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.

குளிக்கும்போது சிலுவை அடையாளம் வரைந்து தான் முதல் குவளைத் தண்ணீரை மேலே ஊட்டுகிறோம்.

சிலுவை அடையாளத்தோடுதான் குளியலறையை விட்டு வெளியே வருகிறோம்.

சாப்பிடும் முன்பும், பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.

அலுவலகம் செல்ல வாகனத்தில் ஏறும் போதும், அதிலிருந்து இறங்கும்போதும்,

அலுவலகத்தில் வேலைக்காக அமரும் போதும், வேலை முடிந்து எழும்போதும்,

வீட்டுக்கு திரும்பும்போதும், வீட்டிற்கு வந்த பின்னும் சிலுவை அடையாளம் வரைகிறோம்.

நாம் சொல்லும் செபங்களில், திருப்பலிக்கு அடுத்து, மிகவும் சக்தி வாய்ந்த செபம்,

சிலுவை அடையாளம் வரைந்து கொண்டு சொல்லும்,

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."

என்ற செபம்தான்.

இதில் நம்மை படைத்த, மீட்ட, அர்ச்சிக்கும் கடவுளின் பெயராலே, அவரை நோக்கியே செபிக்கிறோம்.

சர்வ வல்லவரின் பெயராலே சொல்லும் செபத்திற்கு  ஈடான வல்லமை வேறு செபத்திற்கும் இருக்க முடியாது.

திருப்பலியை இந்த செபத்தோடு ஆரம்பித்து, இதோடுதான் நிறைவு செய்கிறோம்.

நமது கிறிஸ்தவ வாழ்வு ஞானஸ்தானத்தின் போது குருவானவர் நமது தலையில் மீது வரையும் சிலுவை அடையாளத்தில் ஆரம்பித்து, 

கல்லறையில் வரையப்படும் சிலுவை அடையாளத்தோடு விண்ணுலகில் தொடர்கிறது. 

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நமது வாழ்வு பலி வாழ்வாக இருக்க வேண்டும்.

நாம் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நமது ஞாபகத்தில் இருக்க வேண்டியவை,

1. திரி ஏக இறைவனுக்குள் நுழைகிறோம்.

2. அவருடைய பாதுகாப்பில் தான் வாழ்கிறோம்.

3.இறைவன் பெயரால் என்ன செய்தாலும் வெற்றி நிச்சயம்.

4.சிலுவையின் பாதை நம்மை விண்ணகத்திற்கு உறுதியாக அழைத்துச் செல்லும்.

5.சிலுவையில் இயேசு பட்ட வேதனை நமக்கு நித்திய பேரின்பத்தை தருவதற்காகவே. 
நமது வாழ்வில் வரும் சிலுவையும் நம்மை நித்திய பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.

6. சிலுவை அடையாளம் வரைபவர்கள் எல்லோரும் நமது சகோதர சகோதரிகளே.

7.ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் வரையும் போதும் நமது மீட்புக்காக வேண்டிக் கொள்வது போல அவர்களது மீட்புக்காகவும் வேண்டிக் கொள்வோம்.

8.நாம் வாழ்வது சிலுவையில், சிலுவைக்காகவே. 

ஆகவே நமது வாழ்வில் வரும் சிலுவைகளை,

 அதாவது துன்பங்களை,

மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு,

அவற்றை நமது மீட்புக்காகவும்,
உலகத்தினர் அனைவரின் 
மீட்புக்காகவும் கடவுளிடம் ஒப்புக் கொடுப்போம்.

9. இயேசு சிலுவையைச் சுமந்து, அதில் மரித்து உலகை மீட்பதற்காகவே உலகிற்கு வந்தார். நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள். குருவைப் போலவே வாழ்வோம்.

10 இவ்வுலகிலும், மறுவுலகிலும் இயேசுவுடனே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 13, 2022

"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."( லூக்.7:6)

"நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."
( லூக்.7:6)

நூற்றுவர்தலைவன் ஒருவனுடைய ஊழியன் நோயுற்றுச் சாகக்கிடந்தான்.

 தலைவன் அவன்மீது மிகுந்த பற்றுக்கொணடிருந்தான்.

அவன் இயேசுவிடம் நேரடியாக வராமல் 

யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.


இயேசு அவர்கள்கூடப் போனார்.

 வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே

 அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி,

 "ஆண்டவரே, இவ்வளவு

 தொந்தரை வேண்டாம்: நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.

அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். 

ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்.''

என்று சொன்னான்.

அவனுடைய தாழ்ச்சி இயேசுவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இயேசு வீட்டிற்குப் போகாமலேயே அந்த ஊழியனைக் குணமாக்கினார்.

நூற்றுவர் தலைவரின் தாழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வார்த்தைகளை தான் 

நமது தாழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக

இயேசுவை நற்கருணை மூலம் வாங்குவதற்கு முன் நாம் சொல்கிறோம்.

வெறுமனே வார்த்தைகளை மட்டும் கூறினால் எந்த பயனும் இல்லை.

வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கூற வேண்டும்.

உணர்ந்து கூறினால் நற்கருணை விருந்தில் கலந்து கொள்ள கூடாதே என்று கேட்கலாம்.

உண்மையில் இயேசுவை நமது நாவில் வரவேற்க நமக்குத் தகுதி இல்லை என்று உணர்வதுதான் நம்மைத் தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறது.

இயேசு விரும்புவது உண்மையான தாழ்ச்சியைத்தான்.

அவர் விரும்பியதை நினைப்பதுதான் நம்மை அவருக்கு ஏற்றவர்களாக மாற்றுகிறது.

தாழ்ச்சிதான் புண்ணியங்களின் அரசி.

Humility is the queen of all the virtues.

இயேசு கடவுள், சர்வ வல்லவர், அளவில்லாத பரிசுத்தர்.

அவரை வரவேற்க தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்றால் அவரும் சர்வ வல்லவராகவும், அளவில்லாத பரிசுத்தராகவும் இருக்க வேண்டும்.

கடவுளைத் தவிர வேறு யாரும் சர்வ வல்லவராகவும், அளவில்லாத பரிசுத்தராகவும் இருக்க முடியாது.

"உன்னை நீ நேசிப்பது போல மற்றவர்களையும் நேசி"

என்று நமக்கு கட்டளை கொடுத்த இயேசு,

தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார்.

அளவுள்ள நம்மை
அளவு கடந்த அன்புடன் நேசிக்கிறார்.

நம் மீது அவருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்,

நம்மை போல மனிதனாக பிறந்தார்.

பாவத்தை தவிர நமது எல்லா பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டார்.

பலகீனர்களாகிய நாம் அவரோடு பழக வேண்டுமென்பதற்காக அவர் நமது பலகீனங்களை ஏற்றுக் கொண்டார்.

அவரால் பாவம் செய்ய முடியாவிட்டாலும்,

நமது பாவ மூட்டையை அவரே சுமந்து,

 தனது சிலுவை மரணத்தால் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

அளவு கடந்த பரிசுத்தராகிய அவர் பாவிகளாகிய நம்மோடு உறவாடுவதற்காக திவ்ய நற்கருணைப் பேழையில் நமக்காக இரவும் பகலும் காத்துக் கொண்டிருக்கிறார். 

நாம் பாவிகள் என்றும், அவரோடு பேச தகுதி அற்றவர்கள் என்றும் அவருக்கு தெரிந்தாலும்,

நம் மீது கொண்ட அன்பின் காரணமாக நம்மோடு பேசவும் நாம் பேசுவதைக் கேட்கவும் விரும்புகிறார்.

பாவிகளாகிய நாம் பரிசுத்தராகிய அவரைச் சந்தித்து 

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, '

மன்னிப்பு பெறுவதன் மூலம் பாவ நிலையிலிருந்து விடுபட்டு,

பரிசுத்த நிலையை அடைந்து,

அவரோடு பேசுவதன் மூலமும்,
 தவ முயற்சிகள் செய்வதன் மூலமும் 

பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும்.

அவரளவு வளர முடியாது.

ஆனால் அவரது அருளால் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர வேண்டும்.

நமக்கு தகுதி இல்லை என்று நினைத்து வெளியேறி விடக்கூடாது.

எவ்வளவு தகுதியை அடைய முடியுமோ அவ்வளவு தகுதியை அவர் அருளால் அடைய வேண்டும்.

அவர் விண்ணில் இருந்து இறங்கி வந்ததே நம்மை விண்ணுக்கு ஏற்றிச் செல்வதற்காகத்தான்.

நம்மை விண்ணகத்துக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காகத் தான் இயேசு நம்மோடு தங்கியிருக்கிறார். 

தன்னை நேசிப்பது போல் நம்மையும் நேசிக்கிற நமது ஆண்டவர் 

நம்மோடு தன்னை பகிர்ந்து கொள்ள  

விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி வந்து நம்மை போல் மனித உரு எடுத்தாரே,

நம்மை நேசிப்பது போல் நமது அயலானையும் நேசிக்கிற நாம் நமது அயலான் நிலைக்கு எப்போதாவது இறங்கியிருக்கிறோமா?

நம்மை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு நம்முடைய உதவி தேவைப்படாது.

நம்முடைய உதவி தேவைப்படுவோர் நம்மை விட தாழ்ந்த நிலையில்தான் இருப்பார்கள். 

தேவைப்படுவோருக்கு உதவும் போது அவர்கள் நிலைக்கு இறங்கி அவர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்கிறோமா?

அல்லது நமது நிலையிலிருந்து இறங்காமல் அவர்களுக்கு கொடுக்கிறோமா?

'மகிழ்வாரோடு மகிழுங்கள்:

 அழுவாரோடு அழுங்கள்.


 உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். 

உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் 

தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். 

உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்."
(உரோமையர்.12:15, 16)

என்கிறது பைபிள்.

நாம் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம்.

தினச் சம்பளம் 
வாங்குபவர்களுக்கு உதவ வேண்டியிருந்தால் நம்மை அவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளக் கூடாது.

அவர்கள் நிலைக்கு இறங்கி, அவர்களோடு அவர்களாக பழகி, 
நம்மிடம் உள்ளதை அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கொடுப்பது வேறு, பகிர்ந்து கொள்வது வேறு. 

கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும்.

 பகிர்ந்து கொள்பவர் கை சம நிலையில் இருக்கும்.

இறைமகனே மனு மகனாக மாறித்தான் மனிதர்களுக்கு உதவினார்.

இப்போதும் தன் உடலோடும், ஆன்மாவுடனும்தான் கடவுள் மனிதனாக நம்மோடு நற்கருணையில் வாழ்கிறார்.

நமது உடலையும், இரத்தத்தையும் தான் நமக்கு உணவாக தருகிறார்.

பகிர்ந்து உண்பதுதான் விருந்து. 

இருப்பவர்கள் தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம்.

லூர்து செல்வம்.

Sunday, September 11, 2022

அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார். ( லூக்.7:13).

அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார். ( லூக்.7:13).

இயேசு நயீன் என்ற ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது,

இறந்த ஒருவனைத் தூக்கிக் கொண்டு வந்ததைப் பார்த்தார். 

அவன் கைம்பெண்ணான தாய்க்கு ஒரே பிள்ளை.

ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.

முன்னால் சென்று பாடையைத் தொட்டார்.

அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். 

நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.

இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.

இயேசு சர்வ வல்லவர் மட்டுமல்ல அளவற்ற இரக்கமும் உள்ளவர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று.

இதைப் போன்ற புதுமைகளை வாசிக்கும் போது நாம் ஒரு முக்கியமான உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை இயேசுவின் சீடர்கள் ஒரு பிறவிக் குருடனைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார்கள்:

"ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?"

இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்."

இயேசுவின் பதில் இந்த புதுமைக்கு மட்டுமல்ல எல்லா புதுமைகளுக்கும் பொருந்தும்.

இயேசு இறைமகன்.  

நம் அனைவரையும் படைத்தவர்.

நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருபவர்.

 பாவம் தவிர நம்முடைய மற்ற எல்லா நிகழ்வுகளும் அவருடைய நித்திய கால திட்டத்தின் படியே நடக்கின்றன. 

பாவம் மட்டும் நமது விருப்பப்படி செய்யப்படுவது.

அவருடைய ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு காரண, காரிய தொடர்பு இருக்கும்.

நாம் குறிப்பிட்ட புதுமையில் ஒருவன் பிறவியிலேயே குருடனாக பிறந்தது 

கடவுளுடைய (இயேசுவினுடைய) செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே,

அதாவது, இயேசு அவனை குணமாக்கி தனது இரக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டே.

அப்படிப் பார்க்கும்போது விதவைத் தாயின் மகன் இறந்ததும் இயேசு அவனுக்கு உயிர் கொடுத்து தனது இரக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டே.

அவனைப் படைத்தவர் அவர்தான்.

பராமரித்து வந்தவரும் அவர்தான்.

அவருடைய திட்டத்தின் படி அல்லாமல் அவன் மரணித்திருக்க முடியாது.

அவனுக்கு உயிர் கொடுப்பதன் மூலம்

கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை 

அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல

 இக்காலத்தில் வாழும் மக்களுக்கும் புரிய வைக்கவே 

அவனை மரணிக்கச் செய்திருக்கிறார்.

இதுவும் இயேசு நமக்கு அறிவித்திருக்கிற நற்செய்தி தான்.

இப்பொழுது நமக்கு வருகின்ற துன்பங்களும், நோய் நொடிகளும் 
அவரது இரக்கத்தை நாம் பயன்படுத்த சந்தர்ப்பம் தருவதற்காகவே வருகின்றன.

இவை இரண்டு விதங்களில் நாம் ஆன்மீக பலன் அடைய உதவுகின்றன.

1.நம்மை கடவுளை நினைக்க வைக்கின்றன. துன்பங்களே வராவிட்டால் கடவுளை மறந்து விட வாய்ப்பு இருக்கிறது,

பசி வரும்போது தானே குழந்தை அம்மாவை தேடுகிறது!

தேவைகள் ஏற்படும் பொழுது தானே நாம் பெற்றோரை தேடுகின்றோம்!

புனிதர்களின் திருத்தலங்களுக்கு திருயாத்திரை செய்பவர்களில் பலர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகத்தான்,

ஆகவே ஒரு வகையில் நமக்கும் இறைவனுக்கும் மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்துவது நமக்கு வரும் துன்பங்கள்தான்.

அவரது இரக்க மழையில் நம்மை நனைய வைப்பதும் அவைகள் தான்.

2. நமக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

புனிதர்கள் இதைத்தான் செய்தார்கள்.

எல்லா புனிதர்களும் வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமந்தவர்கள்தான்.

கடவுள் நம் மீது கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாகத்தான் தான் சுமந்த சிலுவையை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளின் அன்பை மையமாக கொண்டு தியானித்தால் நமக்கு வரும் துன்பங்கள் கடவுளின் இரக்கப் பெருக்கத்தின் அடையாளங்களே என்பது புரியும்.

பாவத்தை மட்டும் தான் நாம் செய்கிறோம். நமது பாவத்துக்கு கடவுள் பொறுப்பல்ல.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்க துன்பங்களை அனுப்புவது கடவுள் நம் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகத்தான்.

நாம் செய்யும் பாவ பரிகாரம் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்கிறது.

கடவுளின் இரக்கத்தை துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்,

அவற்றை பாவ பரிகாரமாக ஏற்றுக்கொண்டு விண்ணக வாழ்வை அடைவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இரண்டில் மிக முக்கியமானது விண்ணக வாழ்வு என்பதை மறந்து விடக்கூடாது.

ஒரு தாய் பிரசவ வேதனையை ஏற்றுக் கொள்வது தனது குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்காக,

நாம் நமக்கு வரும் துன்பங்களை பொறுமையுடன் ஏற்றுக் கொள்வது இறைவனின் முகத்தை பார்ப்பதற்காக.

துன்பங்கள் வரும்போது இறைவனின் இரக்கத்தை நினைப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, September 10, 2022

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.''( லூக்.15:7)

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.''
( லூக்.15:7)

இறைமகன் இயேசு பாவிகளை தேடியே மனுவுரு எடுத்து உலகிற்கு வந்தார்.

அவர் வந்த நோக்கம் நிறைவேறும் போது அவரும், அவரைச் சார்ந்த விண்ணவர்களும் மகிழ்ச்சி அடைவது இயற்கையே.

பாவம் செய்யாமல் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை குறித்தும் விண்ணகத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

  அதைவிட அதிகமான  மகிழ்ச்சி பாவிகள் மனம் திரும்பும் போது ஏற்படும்.

பிள்ளைகள் நலமாக வாழ்ந்து கொண்டிருப்பது குறித்து பெற்றோருக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை.

ஏதாவது ஒரு பிள்ளை மிகவும் சுகமில்லாதிருந்து, சுகம் அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சி அதைவிட அதிகமாக இருக்கும்.

இயேசு எல்லாம் வல்ல கடவுள்.

அவர் நினைத்திருந்தால் மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே வார்த்தையில் உலகைப்  படைத்த அவர் ஒரே வார்த்தையில் விண்ணிலிருந்தே அனைவருடைய பாவங்களையும் மன்னித்திருக்கலாம்.

ஆனால் அவர் நம் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படையாக நமக்குக் காட்டுவதற்கே

மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

இயேசு நம் மீது அன்பு கொண்டிருந்ததால்தான் நமக்காக பாடுகள் பட்டு தன் உயிரையே பலியாக்கினார்.

அந்த அன்பை நாம் உணர வேண்டும்.

அவரை அன்பு செய்வதோடு,

 அவர் யாருக்காகவெல்லாம் பாடுபட்டு மரித்தாரோ அவர்களையும்  நாம் அன்பு செய்ய வேண்டும்.

அவர் எதற்காக மனிதனாக பிறந்தாரோ அதை நம்மால் இயன்ற மட்டும் நாமும் செய்வோம். 

அதாவது நாமும் மனிதர்கள் மனம் திரும்ப நம்மால் இயன்றதை இயேசுவின் அருள் உதவியோடு செய்ய வேண்டும்.

இயேசுவின் அன்பை நாம் புரிந்து கொண்டு அதை மற்றவர்களும் புரிய வைக்க வேண்டும்.

நமது சிந்தனை, சொல், செயல் முழுவதையும் இயேசுவின் அன்புப் பணியில் பயன்படுத்த வேண்டும்.

நமது முயற்சியால் மனிதர்கள் மனம் திரும்பினால் அதை முன்னிட்டும் விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.

நமது சக மனிதர்கள் மனம் திரும்ப நம்மால் இயன்றதைச் செய்வோம்.

உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவித்து மக்களை மனம் திருப்பும் பணியை இயேசு தனது சீடர்களுக்குத் தானே கொடுத்தார்.

அதே பணியை அவர்களுடைய வாரிசுகளாகிய குருக்கள் செய்து வருகின்றார்களே.

குருக்களின் பணியை நாம் அபகரிக்கலாமா?

அவர்களுடைய பணியை நாம் அபகரிக்கவில்லை.

பொதுக் குருத்துவத்தைச் சேர்ந்த நமக்கும் அந்த கடமை இருக்கிறது.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.

அது குருக்களுக்கு மட்டுமே இருக்கிறது.

பாவத்தில் வாழ்பவர்களை மனம்திருப்பி, பாவ மன்னிப்பு பெறுவதற்காக அவர்களை குருக்களிடம் அழைத்து வரலாமே.

மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் கடமை மருத்துவர்களுக்கு  மட்டுமே இருக்கிறது.

ஆனாலும் சுகம் இல்லாதவர்களை  மருத்துவர் அல்லாத நாம் மருத்துவரிடம் அழைத்து வரலாமே.

இந்த உலகியல் பழக்கத்தை ஆன்மீகத்துக்கும் கொண்டு வரலாமே.

குருக்கள் ஒரே நேரத்தில் எங்கும் இருக்க முடியாது.

ஆனால் பொது நிலையினறாகிய நாம் பரவலாக வாழ்வதால் மனம் திருப்பும் பணியை நாம் செய்வது எளிது.

நாம் நற்செய்தியின் படி வாழ்ந்தாலே நம்மை பார்க்கும் மக்கள் மனம் திரும்புவார்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் வாழும் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

மனம் திரும்பியவர்களை குருக்களிடம் அழைத்து வர வேண்டும்.

அதன்பின் அவர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக செயல்படுவார்கள்.

ஆன்மீக விஷயங்களில் நாம் குருக்களோடு ஒத்துழைக்கும் போது இயேசுவோடுதான் ஒத்துழைக்கிறோம்.

இயேசுவின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறுகிறோம்.

நம்மால் மனம் திருப்பப்பட்ட ஆன்மாக்களோடு நாமும் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

Friday, September 9, 2022

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"(லூக்.6:46)

"நான் சொல்லுவதைச் செய்யாமல் "ஆண்டவரே, ஆண்டவரே" என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?"
(லூக்.6:46)

மனிதர்களுக்கு கடவுள் கொடுத்துள்ள மிகப்பெரிய வரம் சிந்தனை, சொல், செயல்.

கடவுள் அவரது சாயலில் நாம் இருக்க வேண்டும் என்பதற்காக நமக்கு அவரால் கொடுக்கப்பட்ட வரம் இது.

கடவுள் சிந்திக்கிறார், தனது சிந்தனையை நமக்கு தெரியப்படுத்துகிறார்.
நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்துக் கொண்டு வருகிறார்.

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றையும் கடவுளுக்காக எப்படிப் பயன்படுத்துகிறோம்?

அவரைப் பற்றி தியானிக்கிறோமா?

தியானிக்கும்போது பிறக்கும் அன்பை அவருக்குத் தெரியப்படுத்துகிறோமா?

நமது அன்பை செயலில் வெளிப்படுத்துகிறோமா?

கடவுள் நமக்கு தந்திருக்கும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் போது தான் நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பை செயலில் வெளிப்படுத்துகிறோம்.

"கடவுளே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம்" என்று சொன்னால் மட்டும் போதாது.

அவரது சொற்படி செயல் புரிய வேண்டும். 

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று அவரை அழைத்து நமக்கு வேண்டிய உதவிகளை கேட்பது மட்டும் செபம் அல்ல.

அவரது சொல்லை செயல்படுத்துவதுதான் உண்மையான செபம்.

அவர் சொன்னபடி நடக்காமல்,

 அதாவது, 

அவரது கட்டளைகளை வாழாமல்,

அவரை நோக்கி "ஆண்டவரே, ஆண்டவரே" அழைத்தால்,

நமது அழைப்பு பொருளற்றது.

எல்லா பக்தி  முயற்சிகளும்   வாழ்க்கையாக மாற வேண்டும்.

 வாழ்க்கையில் பிரதிபலிக்காத பக்தி பக்தியே அல்ல.

இறை அன்னையின் மீது பக்தி வைத்திருக்கிறோம்.

 தினமும் அன்னையை நோக்கி செபமாலை சொல்கிறோம்.

அன்னையின் திருத்தலங்களுக்கு திருயாத்திரையாக சென்று வருகின்றோம்.

ஒன்றை மறந்து விடக்கூடாது.

மாதா பக்தியின் உயிர் மாதாவைப் போல் வாழ்வது.

வாழ்க்கையில் பிரதிபலிக்காத பக்தி முயற்சிகள் உயிர் அற்றவை.
 
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளின் மூலம் தனது வாழ்க்கை முழுவதையும்  இறைவனுக்கு அர்ப்பணித்தவள் நமது அன்னை.

அவள் வாழ்ந்தது இறைவனுக்காக மட்டுமே, தனக்காக அல்ல.

நாமும் நமது வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணித்து,

 அவருக்காக வாழ்ந்தால் மட்டுமே நாம் உண்மையான மாதா பக்தர்கள்.

அர்ப்பணம் இல்லாமல் நமக்கு வேண்டிய உதவிகளை கேட்பதற்கு மட்டுமே மாதாவின் மீது பக்தி கொண்டிருந்தால் அது உயிர் இல்லாத பக்தி.

அதனால் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை.

நாம் செப மாலை சொல்லும் போது ஒவ்வொரு பத்து மணியையும் ஏதாவது ஒரு கருத்துக்காக ஒப்புக்கொள்கிறோம்.

மிகவும் நல்லது.

அந்த பத்து மணி செபமாலையின்போது எதைப் பற்றி தியானிக்கிறோமோ அது நமது வாழ்வில் பிரதிபலித்தால்தான் 

அதற்கு நமது கருத்தை நிறைவேற்றும் சக்தி ஏற்படும்.

அல்லது நாம் சொல்வது வெறும் வார்த்தைகளாகவே  இருக்கும்.

உதாரணத்திற்கு, இயேசு பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்த்ததை தியானித்துக் கொண்டு பத்து மங்கள வார்த்தை செபங்கள் சொல்லுகிறோம்.

அந்த தியானத்தின் போது,

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்ற இயேசுவின் வார்த்தைகள் நமது மனதை தொட்டிருக்கும்.

நமது வாழ்வில் நமது விருப்பப்படி வாழாமல் இயேசுவின் விருப்பப்படி வாழ வேண்டும்.

இயேசுவின் விருப்பப்படி வாழ்ந்தால் தான் நாம் உண்மையான செபமாலை மாதா பக்தர்கள்.

கருத்தை சொல்லும்போதும், "அன்னையே, உங்கள் மகனுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் கேட்பதை பெற்றுத் தாரும்"  என்று சொல்ல வேண்டும்.

அப்போதுதான் நமது செபம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

புனித அந்தோனியார் பக்தர்கள் அவருடைய புதுமைகளை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

புதுமைகள் செய்ய சக்தி கொடுத்த அவரது வாழ்க்கையை பின்பற்ற வேண்டும்.

வாழ்க்கையை பின்பற்றாமல் உதவிகளை மட்டும் கேட்டால்

நாம் விண்ணகம் செல்ல உதவும்  புனிதராக அவரை எண்ணாமல் 

உதவிகளைப் பெற்றுத் தரும் Agent ஆக நினைக்க ஆரம்பித்து விடுவோம்.

புனித அல்போன்சா பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை புனிதத்துவம் பெறும் வழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புனித கல்கத்தா தெரசாவின் பத்தர்கள் இறைவன் பெயரால் ஏழைகளுக்குச் செய்யும் சேவையே 

 இறைவனுக்குச் செய்யும் சேவையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புனிதர்கள் மீதான பக்தி நமது வாழ்க்கையாக மாறாவிட்டால் அப்பக்தியால் யாருக்கும் பயன் இல்லை.

"ஆண்டவரே, ஆண்டவரே" என்று இயேசுவை அழைத்தால் மட்டும் போதாது, அவரது சொற்படி வாழ வேண்டும்.

இவ்வுலகில் இயேசுவின் சொற்படி வாழ்ந்தால் தான் மறு உலகில் அவரோடு வாழ முடியும்.

வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, September 8, 2022

பேறுபெற்றவர்கள்.

        பேறுபெற்றவர்கள்.

ஏழைகள், பசியாய் இருப்பவர்கள், அழுபவர்கள், இகழ்ந்து ஒதுக்கப் பட்டவர்கள் பேறுபெற்றவர்கள் என்று இயேசு கூறுகிறார். 

உலகக் கண்ணோக்கில் பார்ப்பவர்களுக்கு இக்கூற்று வினோதமாகத் தோன்றும்.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற தமிழ் மொழிப் படி

 இவ்வுலகினர் எவ்வளவு கஷ்டப்பட்டாவது செல்வத்தை ஈட்டுவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யாரும் பசியினால் வாடுவதற்காக வாழ்வதில்லை. பசியின்றி வாழ்வதற்காகவே உணவைத் தேடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழுது கொண்டல்ல, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதே மக்களின் ஆசை. அவர்கள் கொண்டாடும் விழாக்கள் எல்லாம் அதற்காகத்தான்.


மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்படுவதற்கு அல்ல,

புகழோடு ஏற்றுக் கொள்ளப்படவே மக்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை நோக்கி 


"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்,

பசியாய் இருப்பவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:

இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:


மற்றவர்களால் புறம்பாக்கக்கப் பட்டு இகழப்படுகின்றவர்களே நீங்கள் பேறுபெற்றவர்கள்."

என்று சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

தேர்வு எழுதவிருக்கிறவர்களிடம் போய், 

"தேர்வில் தோல்வி அடைபவர்கள் பேறுபெற்றவர்கள்"

என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.

ஆனால் ஆண்டவர் பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம், லௌகீகம் அல்ல.

ஆன்மீகம் லௌகீகத்துக்கு எதிரானது.

லௌகீக வாதிகள் இவ்வுலகமே சதம் என்று வாழ்கின்றவர்கள்.

ஆன்மீகவாதிகள் விண்ணகத்திற்காக வாழ்பவர்கள்.

இருவருடைய பார்வையே எதிர் மாறாது.

லௌகீகத்தில் இவ்வுலக செல்வமோ, அதன் மீது பற்றோ உள்ளவர்கள் செல்வந்தர்கள்.

இவர்களுக்கு இவ்வுலக பொருள் மீது மட்டும் ஆசை இருக்கும். 

மறு உலகிற்கு தேவையான அருள்மிகு இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். 

 இவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கை மரணத்தோடு முடிந்து விடும்.

ஆன்மீகத்தில் இவ்வுலக செல்வத்தின் மீது பற்று இல்லாதவர்கள் ஏழைகள்.

இவர்களுக்கு மறு உலக வாழ்க்கைக்கு தேவையான அருள் மீது மட்டும் பற்று அதிகம் இருக்கும்.

இறைவன் மீதும், அயலான் மீதும் அன்பு, செபம், தவ முயற்சிகள் மூலம் இறையருளை ஈட்டுவதிலே குறியாக இருப்பார்கள்.

இவர்களது நித்தியகால பேரின்ப வாழ்வு மரணத்தில் ஆரம்பிக்கும்.

இவ்வுலக மரணம் இவர்களுக்கு விண்ணகத்திற்கு வாசல்.


பொருள் உள்ளோர்க்கு இவ்வுலகம் மட்டும் தான்.

ஆனால் அருள் உள்ளவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

இப்போது சொல்லுங்கள், யார் பேறுபெற்றவர்கள்?

உடலை வளர்ப்பதற்கு தேவையாக இருப்பது உடற்பசி. இது உள்ளவர்கள் வயிறார உண்டு உடலை வளர்ப்பார்கள். மரணத்திற்குப் பிறகு உடல் புழுக்களுக்கு இரையாகும்.

ஆண்டவர் குறிப்பிடுவது ஆன்மீக பசி. ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான இறை அருள் மீது பசி. இவர்கள் ஆன்மீக உணவாகிய ஆண்டவரையே தேடி உணவாக உட்கொள்ளுவார்கள்.

செபத்தின் மூலமும், தேவத்திரவிய அனுமானங்கள் மூலமும் கிடைக்கும் அருளை ஆன்மாவிற்கு ஊட்டுவதே இவர்களது வாழ்வின் பணி.

 இவர்களது ஆன்மா அருளால் நிறைய நிறைய, விண்ணகத்தில் இவர்கள் நித்திய காலம் அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தின் அளவு கூடிக் கொண்டே இருக்கும்.

உடற்பசி உள்ளவர்களுக்கு உடல்  புழுக்களுக்கு உணவாக வளரும்.

ஆன்மீகப் பசி உள்ளவர்களுக்கு நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

யார் பேறுபெற்றவர்கள், உடல் பசி உள்ளவர்களா? 

அருள் பசி உள்ளவர்களா?

ஆண்டவர் குறிப்பிடுவது அருள் பசி உள்ளவர்களைத்தான்.


உடல் மீது ஆசை உள்ளவர்கள் வலி வந்தால் அழுவார்கள், நோய் வந்தால் அழுவார்கள், ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் அழுவார்கள். அவர்களது அழுகையால் யாருக்கும் பயனில்லை.

ஆன்மீக நலன் மீது ஆசை உள்ளவர்கள் ஆன்மாவிற்கு கேடு விளைவிக்கும் பாவம் செய்ய நேர்ந்தால் 

தங்களைப் படைத்த அன்பு நிறைந்த தேவனுடைய மனதை தங்களது பாவத்தால் நோகச் செய்து விட்டோமே என்ற வருத்தத்தினால் அழுவார்கள்.

அவர்களது அழுகையை ஏற்றுக்கொண்டு இரக்கம் நிறைந்த இறைவன் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.

செய்த பாவத்திற்காக அழும் அழுகை பாவ மன்னிப்பையும், நித்திய பேரின்ப வாழ்வையும் பெற்றுத் தரும்.

உடல் வலியினால் அழுபவர்களது வலி அழுகையால் குறைய போவதில்லை.

ஆனால் பாவத்திற்காக அனுபவங்களின் அழுகை பாவ மன்னிப்பையும், நித்திய பேரின்ப வாழ்வையும் பெற்றுத் தரும்.

ஆகவேதான் பாவ மன்னிப்பு கேட்டு அழுபவர்கள் பேறுபெற்றவர்கள்.

மனுமகன் மனிதர் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக 

பரிசேயர்களாலும், மறைநூல் அறிஞர்களாலும் 

வெறுக்கப்பட்டு, 

வசைகூறப்பட்டு, 

 இகழப்பட்டு,

பாடுகள் படுத்தப்பட்டு,

சிலுவையில் அறையப்பட்டு, கொல்லப்பட்டார்.

மனுமகன் நமக்காக பட்ட பாடுகளை அவருடைய மகிமைக்காக நாம் பட நேர்ந்தால் நாம் பேறுபெற்றவர்கள்.

வேதசாட்சியாக மரிப்பதைவிட பாக்கியமான மரணம் வேறு இருக்க முடியாது.

 
இறைவன் மீது பற்று கொள்வோம்.

இறையருள் மீது பசியாய் இருப்போம்.

நாம் செய்த பாவங்களுக்காக வருந்தி அழுவோம்.

இயேசுவின் பொருட்டு மனிதர் நம்மை வெறுத்து,
 புறம்பாக்கி,
 வசைகூறி,
 நமது பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது 

மகிழ்ச்சி அடைவோம்.

ஏனெனில் நமக்கு கைம்மாறாக கிடைக்கப் போவது நித்திய பேரின்ப வாழ்வு.

லூர்து செல்வம்.