(மத்.9:6)
ஒருவன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறான் என்றால் அவன் ஆகாய விமானத்தில் பயணம் செய்திருக்கிறான் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.
இயேசு உலகிற்கு வந்தது மனித ஆன்மாவை பாவ நோயிலிருந்து மீட்க.
அவரது பணி முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி.
அவர் சென்ற இடமெல்லாம் மனிதர்களுடைய உடல் சம்பந்தப் பட்ட நோய்களைக் குணமாக்கினார்.
பார்வை தெரியாதவர்களுக்கு பார்வை அளித்தார்.
தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்.
நடக்க முடியாதவர்களை நடக்க வைத்தார்.
உடல் சார்ந்த இப் பணிகளில் எங்கே ஆன்மீகம் இருக்கிறது என்று கேட்கத் தோன்றும்.
பசித்தோர்க்கு உணவு அளிப்பது கூட ஒரு ஆன்மீகச் செயல், ஏனெனில் அதில் நூற்றுக்கு நூறு அடங்கியிருப்பது பிறர் அன்பு.
கடவுளின் படைப்புக்கும் பராமரிப்புக்கும் காரணம் அவரது அன்பு தானே!
இயேசு வியாதியஸ்தரைக் குணமாக்கிய ஒவ்வொரு புதுமைக்குப் பின்னும்
"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று இயேசுவே சொல்கிறார்.
ஒவ்வொரு புதுமையிலும் முதலில் விசுவாசம், அடுத்து பாவமன்னிப்பு, அடுத்துதான் புதுமை.
இயேசு புதுமை செய்யும்போது இவையெல்லாம் இருக்கின்றன
என்றுதான் பொருள்.
திமிர்வாதக்காரனைக் குணமாக்கிய புதுமையில் இவை வெளிப்படையாகவே தெரிகின்றன.
"இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, ( விசுவாசம்)
திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" . (பாவமன்னிப்பு)
திமிர்வாதக்காரனை நோக்கி - "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
7 அவன் எழுந்து தன் வீடு சென்றான்." (புதுமை)
வெளிப்படையாகச் சொல்லப் படாத புதுமைகளிலும் இவை இடம் பெற்றிருந்தன.
ஏனைனில் இயேசுவின் முக்கிய பணி பாவ மன்னிப்பு.
பாவ மன்னிப்புக்குத் தேவை விசுவாசம்.
அப்போஸ்தலர்கள் உலகெங்கும் அனுப்பப்பட்டதே விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதே.
ஞானஸ்நானத்தின் நோக்கம் பாவ மன்னிப்புதானே!
நற் செய்தியை அறிவித்தது கூட விசுவாசத்தை அளிப்பதற்காகத்தான்.
நாம் இன்று புதுமைகளுக்காகப்
புனிதர்களைத் தேடிப் போகிறோம்.
விசுவாசத்தோடு போகிறோமா?
பாவ மன்னிப்புப் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?
கோடி புதுமை வரத்தர் புனித அந்தோனியாரைத் தேடி 13 செவ்வாய்க்கிழமைகள் பூசைக்குப் போகிறோம்.
மிகவும் நல்லது.
அந்நாட்களில் நமது விசுவாச வாழ்வு எப்படி இருககிறது,
பாவசங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்றிருக்கிறோமா
என்பது பற்றி சிந்தித்திருக்கிறோமா?
அல்லது,
புதுமையை மட்டும் எதிர்பார்க்கிறோமா?
முதல் இரண்டையும் செய்தால்
மூன்றாவது நடக்கும்.
புனிதர்கள் பக்தியே நம்மைப் பாவம் அற்ற நிலையில் விசுவாச வாழ்வு வாழ வைப்பதற்காகத்தான்.
அவர்களை நமது முன்மாதிரிகையாகக் கொண்டு அவர்களைப் போல இறைவனுக்குப் பிரியமானவர்களாக வாழ வேண்டும்.
ஆனால் நாம் அவர்களை இறைவன் நமது சொற்படி நாம் கேட்டதைத் தர Recommend செய்பவர்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
வேறு வார்த்தைகளில்,
நாம் இறைவன் சித்தப்படி நடப்பதற்குப் பதிலாக
அவரை நம் சித்தப்படி நடக்க வைக்க உதவி செய்யும்படி புனிதர்களை கேட்கிறோம்.
இறைவன் சித்தப்படி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த புனித அந்தோனியாரைப் பார்த்து,
"அந்தோனியாரே, எனது சித்தம் விண்ணுலகில் நிறைவேற எனக்கு உதவியாக வாரும்."
என்று கேட்டால் அவர் மகிழ்ச்சி அடைவாரா?
"முதலில் விண்ணகத் தந்தையின் சித்தம் உன்னில் நிறைவேறட்டும்"
என்றுதான் அவர் சொல்வார்.
அவர் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அன்னை மரியாளைப் பார்த்து,
"அம்மா, எனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும், அதை எனக்குத் தர உமது மகனிடம் சொல்லும்."
என்று கேட்க வேளாங்கண்ணிக்கு நடக்கிறோம்.
அம்மா சொல்றாங்க,
"மகனே, நான் ஆண்டவருடைய அடிமை. என்னைப் போல நீயும் ஆண்டவருடைய அடிமையாக மாறி அவரது கட்டளைகளின்படி நட. உனக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். தேவையானதைக் கட்டாயம் தருவார்."
நாமும் புனிதர்களைப் போல விசுவசிப்போம், பாவமாசின்றி வாழ்வோம். புதுமைகளை இயேசுவின் கையில் விட்டு விடுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment