"உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்." (மத். 6:21)
",ஏண்டா, பேரப்புள்ள, வந்த நேரத்திலிருந்து எதுவும் பேசாமல் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"
"என்னுடைய மனது இப்போது என்னிடம் இல்லை."
", எங்கே இருக்கிறது?"
"நேற்று நான் போட்டிருந்த சட்டைக்குள் இருக்கிறது.
இன்று காலையில் சட்டை மாற்றும் போது நேற்று போட்டிருந்த சட்டைப் பைக்குள் வைத்திருந்த 50 ரூபாய் நோட்டை எடுக்க மறந்து விட்டேன்."
", அதற்கென்ன, சட்டை உனது வீட்டில்தானே இருக்கும்."
"வீட்டில்தான் இருக்கும், தாத்தா.
அம்மா அதை எடுத்து Washing machine க்குள் போட்டுவிடக் கூடாது.
வீட்டிற்குப் போய்விட்டு வந்து விடட்டுமா, தாத்தா?"
",சரி போய்விட்டு வா. அல்லது சட்டைப் பையை விட்டு வெளியே வர மாட்டாய்."
"தாத்தா, நல்ல வேளை நான் உடனே வீட்டுக்குப் போனேன்.
நான் போகும்போது அம்மா சட்டையை Washing machine க்குள் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான் சட்டையைப் பிடுங்கி ரூபாய் நோட்டை எடுத்துவிட்டேன்.
இந்தா பாருங்க அந்த ரூபாய்."
", பத்திரமாய் வச்சுக்கோ.
ஆனால் இன்றைக்கு வேறு எதையும் பற்றி பேச மாட்ட."
"இன்று காலையில் நான் வாசித்த பைபிள் வசனம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தேன்.
அதை என்னுடைய ரூபாய் நோட்டு கெடுத்துவிட்டது."
",என்ன வசனம்?"
"உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
", கெடுக்கவில்லை, பேரப்புள்ள, உதவி செய்திருக்கிறது.
நீ இங்கு இருந்தாய். உனது உள்ளம் சட்டைப் பைக்குள்தானே இருந்தது!"
"அது உண்மைதான், தாத்தா."
",இதைத்தான் நம் ஆண்டவர் ஆன்மீக ரீதியில் கூறினார்.
உனது ரூபாய் நோட்டு உனது உலகியல் ரீதியான செல்வம்."
"தாத்தா, நீங்கள் சொல்வது தவறு.
ரூபாய் நோட்டு உலகியல் ரீதியான செல்வம்தான்.
ஆனால் எனது செல்வம் அல்ல."
", இது உன்னுடைய ரூபாய்தானே."
"என்னுடைய ரூபாய்தான். ஆனால் எனது செல்வம் அல்ல.
என்னுடைய செல்வம் நமது ஆண்டவரும், அவருடைய அருளும்தான்."
",Very good. நீ இப்படிச் சொல்கிறாயா என்பதைக் கண்டுபிடிக்கதான் நான் அப்படிச் சொன்னேன்.
ஆன்மீகச் செல்வம்தான் நமது செல்வமாக இருக்க வேண்டும்.
நம்மிடம் உலகியல் பொருட்கள் இருக்கலாம். அவை நமது செல்வம் அல்ல
அவற்றைச் செல்வமாக ஏற்றுக் கொண்டால் நம்மிடம் ஆன்மீகச் செல்வம் இருக்க முடியாது."
"நமது செல்வம் எங்கு உள்ளதோ எங்கே உள்ளதோ அங்கேதான் மனதும் இருக்கும்.
நமது செல்வம் ஆண்டவரிடம் இருந்தால் நமது மனமும் அவரிடம் தான் இருக்கும்.
நமது மனது நிறைய ஆண்டவர் தான் இருப்பார்."
",நம்மிடம் உலகியல் பொருட்கள் இருந்தால்?"
"அவை, ஆண்டவருக்காக, அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட வேண்டிய பொருட்கள்.
தேவை உள்ளவர்களுக்கு உதவ வேண்டுமென்பது ஆண்டவரது சித்தம்.
அதை நிறைவேற்ற உலகியல் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
பிறர் சிநேகப் பணிகளுக்காக உலகியல் பொருட்களைப் பயன்படுத்துவது இறைவனது அருளாகிய ஆன்மீகச் செல்வத்தை நாம் ஈட்டப் பயன்படும்.
நமது செல்வம் ஆண்டவராக இருக்கும்போது அவர் முழுவதும் நமக்கே, நாம் முழுவதும் அவருக்கே.
நமது வாழ்க்கை முழுவதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கே.
இறையன்பு பணிகளிலும், பிறரன்புப் பணிகளிலும்
நமது இறைச் செல்வத்துடனே தீவிரமாக ஈடுபடுவோம் "
", Washing machine ல இருந்து காப்பாற்றிய 50 ரூபாய் நோட்ட என்ன செய்யப் போற?"
"அதை ஏதாவது ஒரு ஏழையைப் பசிப்பிணியிலிருந்து காப்பாற்றப் பயன்படுத்துவேன்."
", அதுவும் இறைப்பணிதான்.
நமது செல்வம் இறைவனே. நமது உள்ளம் முழுவதும் அவரிடமே இருக்க வேண்டும்.
இவ்வுலகப் பொருட்களை நமது செல்வமாகத் தேர்ந்தெடுத்தால் நம்மால் இறைவனை நினைக்க முடியாது.
இறைவன் வாழும் விண்ணுலகிற்குள் நுழையவும் முடியாது.
ஆகவே இறைவன் ஒருவரையே நமது செல்வமாகத் தேர்ந்தெடுப்போம்.
நமது உள்ளம் இறைவனுக்காக மட்டுமே.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment