(மத். 5:3)
",பேரப்புள்ள, இன்றைக்கு நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.
உலகத்திலேயே பெரிய பணக்காரன் யார் தெரியுமா?"
"நான்தான், தாத்தா."
(உலகப் பார்வையில்)
", நீயா? கேள்வியைக் காதில் வாங்கினாயா?"
"உலகத்திலேயே பெரிய பணக்காரன் யார் தெரியுமா? ன்னு கேட்டீங்க.
நான் தான்னு நான் பதில் சொன்னேன்."
", எப்படி?."
"எப்படி பாவூர் சத்திரம் என்னுடைய ஊரோ,
எப்படி இந்தியா என்னுடைய நாடோ
அதேபோல, உலகம் என் உலகம்.
உலகமே எனக்குச் சொந்தமாக இருக்கும்போது, நான்தானே பெரிய பணக்காரன்."
",எனக்கும் தான் உலகம் சொந்தம்."
"நான் வேண்டாமென்று சொன்னேனா? வைத்துக் கொள்ளுங்கள்.''
", உலகிலேயே பெரிய ஏழை யார்?"
"அதுவும் நான் தான்."
(கடவுளின் பார்வையில்)
",அது எப்படி?"
"ஏனெனில் நான் உலகத்துக்கு கொஞ்சம் கூட சொந்தமில்லை."
",அது எப்படி?"
"என்னிடம் ஒரு பேனா இருக்கிறது.
அது எனக்கு சொந்தம்.
ஆனால் நான் பேனாவுக்கு சொந்தம் இல்லை.
பேனா என்மேல் உரிமை கொண்டாட முடியாது.
அதுபோல் தான் உலகம் எனக்கு சொந்தம். ஆனால் நான் உலகத்துக்கு சொந்தமில்லை. அது என் மேல் உரிமை கொண்டாட முடியாது."
",உன்மேல் உரிமை கொண்டாட முடியாத உலகத்தை ஏன் உன்னுடைய உலகம் என்கிறாய்?"
"ஏனெனில் கடவுள் எனக்குத் தந்தது.
அவருக்காகப் பயன்படுத்துவதற்காக இந்த உலகை எனக்கு தந்திருக்கிறார்.
அவருக்காக அதை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் உலகத்தால் என்மேல் உரிமை கொண்டாட முடியாது.
கடவுள் ஒருவர்தான் என் மேல் உரிமை கொண்டாட முடியும்.
எனக்கு பற்று இருப்பது இறைவன் மேல் மட்டும் தான், உலகத்தின் மீது எனக்கு பற்று இல்லை.
கடவுள் அழைக்கும் போது நான் இந்த உலகத்தை விட்டு விட்டு அவரிடம் போய் விடுவேன்."
", நீ சொல்வது சரிதான்,. பேரப்புள்ள.
ஆனால் சொன்னால் மட்டும் போதாது. அதை நிரூபிக்க வேண்டும். எப்படி நிரூபிப்பாய்?"
" தாத்தா, அதை கடவுளிடம்தான் நிரூபிக்க வேண்டும்.
நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். நான் சொல்வதைக் கேட்கிறீர்கள். எனது உள்ளம் உங்களுக்குத் தெரியுமா?
கடவுளிடம் வாய்மொழியால் அல்ல, வாழ்க்கையால் நிரூபிக்க வேண்டும்.
கடவுளுக்கு மட்டும்தான் நமது உள்ளம் தெரியும்.
நமக்கு உலகின் மீது பற்று இருக்கிறதா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்."
", சரி, பேரப்புள்ள வாழ்க்கையால் நிரூபிக்க வேண்டும் என்று சொன்னாய்.
எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல முடியுமா?"
"அது முடியும். தாத்தா, இறைவன் உலகத்தைப் படைத்தது நமக்காக.
நம்மை உலகிற்காக படைக்கவில்லை.
நாம் இறைவனுக்காக வாழ்வதற்காகவே நம்மை படைத்தார்.
இறைவனை அன்பு செய்தும் நமது அயலானை நம்மைப் போலவே அன்பு செய்தும் இறைவனுக்காக வாழ வேண்டும்.
கடவுள் தன்னுடைய அன்பை உலகோர் அனைவரோடும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது அனைவரின் உள்ளத்திலும் அன்பு இருக்கிறது.
நாம் உயிர் வாழ ஆசைப்படுவது நம்மீது நமக்கு உள்ள அன்பினால் தான்.
நமது உள்ளத்தில் உள்ள அன்பினால் நாம் நம்மை படைத்த இறைவனை அன்பு செய்யும் போது நாம் அவரை நமது தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.
நமது அயலானை.அன்பு செய்யும் போது அவனை நமது சகோதரனாக ஏற்றுக் கொள்கிறோம்.
நமது அன்பு நமது உள்ளத்தில் மட்டும் இருந்தால் போதாது.
அது நமது சொல்லாலும், செயலாலும் வெளிப்பட வேண்டும்.
அதை இறைவனிடம் வெளிப்படுத்தும்போது அதை செபம் என்கிறோம்.
அயலானிடம் வெளிப்படுத்தும்போது அதை பிறர் சிநேக வாழ்வு என்கிறோம்.
அயலானை நோக்கி,
"நான் உன்னை நேசிக்கிறேன்." என்று சொன்னால் மட்டும் போதாது.
செயலின் மூலம், அதாவது, பிறர் உதவி செயல்களின் மூலம் நமது நேசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
நாம் எல்லோரும் உலகில் வாழ்வதால் உலகத்தின் பொருள்களை நாம் வாழ்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறோம்.
மற்றவர்களுக்கு தேவைப்படும்போது
நாம் பயன்படுத்தும் பொருள்களை
அவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு கொடுத்து உதவுவதற்காகவே உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் கடவுள் நம்மிடம் தந்துள்ளார்.
நம்மிடம் உள்ள உலக பொருள்களின் மீது நமக்கு பற்று இருக்க கூடாது.
பற்று இருந்தால் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க மனது வராது.
இந்த உலகத்தின் பொருட்களின் மீது பற்று இல்லாத மனமே எளிய மனம்.
எளிய மனது உள்ளவர்கள் தான் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவர்.
மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுவது இறைவனுக்குக் கொடுப்பதற்குச் சமம்.
நம்மிடம் உள்ளவற்றை இறைவனுக்காக மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுபவர்களுக்கு இறைவன் விண்ணரசைப் பரிசாக அளிப்பார்.
ஆகையால் தான்
"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
என்று இயேசு கூறினார்.
நாம் நாம் வாழும் உலகிற்குச் சொந்தமானவர்கள் அல்ல,
விண்ணரசுக்கே சொந்தமானவர்கள்."
", இறைமகன் இயேசு உலகத்தைப் படைத்தவர்.
உலகத்தை நமக்காகப் படைத்தார்.
நம்மைத் தமக்காகப் படைத்தார்.
இயேசுவுக்கு நம்மேல் பற்று அதிகம், .
ஆகவேதான் அனைத்து உலகிற்கும் சொந்தக்காரராக இருந்தும்
நமக்காக ஒன்றும் இல்லாதவராக ஏழை பாலகனாக ஒரு மாட்டுத் தொழுவில் ஓர் ஏழைப் பெண்ணின் வயிற்றில் பிறந்தார்.
ஏழையாக வாழ்ந்தார். ஏழையாக மரித்தார்.
ஏழை இயேசுவின் பாதங்களைப் பற்றிக்கொண்டால் உலகத்தின் மீது நமக்குள்ள பற்று மறைந்துவிடும்.
உலகப்பற்று இல்லாதவன்தான் இறைப்பற்றோடு வாழ முடியும்.
இறைவனுடைய பாதத்தையும், உலகத்தையும் ஒரே நேரத்தில் பற்றிக்கொள்ள முடியாது."
"தாத்தா, நான் ஒன்று சொல்லட்டுமா?"
", சொல்லு."
"உடைமை வேறு, பற்று வேறு.
ஒருவனிடம் ஒரு கோடி ரூபாய் உடைமையாக இருக்கலாம்.
உலகம் அவனைக் கோடீஸ்வரன் என்று சொல்லும்.
ஆனால் அவனுக்கு அவனிடம் உள்ள பணத்தின் மீது பற்று இருக்க வேண்டிய அவசியமில்லை.
பற்று இல்லாதவன் பற்றற்றவன்."
", ஒருவனிடம் ஒன்றுமே இல்லாமலிருக்கலாம்.
ஆனால் இல்லாத பொருள் மீது பற்று, ஆசை, இருக்கலாம்.
இயேசுவைப் பொறுத்த மட்டில் பற்று இல்லாதவன் தான் ஏழை.
பணம் உள்ளவனிடமும் பற்று இருக்கலாம், இல்லாதவனிடமும் பற்று இருக்கலாம்.
உலகப்பற்று இருப்பவன் ஏழை இல்லை. அவனுக்கு விண்ணரசின் மீது உரிமை இருக்க முடியாது."
"தாத்தா, எல்லா பெற்றோருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன.
குழந்தைகள் சிறுவர்கள் ஆனதும் பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள்.
எதற்காக?
படிக்க
எதற்காகப் படிக்க?
பட்டம் பெற.
எதற்காக பட்டம்?
வேலை கிடைக்க.
எதற்காக வேலை?
சம்பளம் கிடைக்க.
எதற்காகச் சம்பளம்?
குடும்பத்தைக் காப்பாற்றவா அல்லது அயலானுக்கு உதவவா?"
", இரண்டுக்கும் தான்.
தன்னை நேசிப்பதுபோல அயலானையும் நேசிக்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
நமக்கு நாமே உதவுவது போல அயலானுக்கும் உதவ வேண்டும், நம்மால் முடிந்த அளவு.
இப்போ ஒரு கேள்வி.
எளிய மனதுக்கும், விண்ணரசுக்கும் என்ன சம்பந்தம்?"
"தாத்தா, இரண்டு பொருட்களை உங்கள் முன் வைத்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?"
",எதன் மேல் எனக்கு ஆசை இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்வேன்."
"உங்கள் முன் மண்ணரசும், விண்ணரசும் வைக்கப்பட்டுள்ளன.
எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?"
",விண்ணரசை."
"அதாவது மண்ணரசு மீது உங்களுக்கு ஆசை இல்லை.
அதற்குப் பெயர் தான், தாத்தா, எளிய மனது.
எளிய மனது உள்ளவர்கள்தான் விண்ணரசைத் தேர்ந்தெடுப்பார்கள்."
", Very good பேரப்புள்ள.
உலகப் பற்றை விட வேண்டுமா?
இறைவனை இறுகப் பற்றிக் கொள்வோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment