Monday, June 27, 2022

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (மத்.8:20)

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 
(மத்.8:20)

இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர் கடவுள்.

இருப்பவை அனைத்தும் அவருக்கே சொந்தம்.

இருப்பவை அனைத்தும் அவராலேயே இருக்கின்றன.

அவர்தான் சொல்கிறார்,

"நரிகளுக்கு வளைகள் உண்டு: வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" 

நரிகளையும், வானத்துப் பறவைகளையும் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும்,

பெரிய விலங்குகளிலிருந்து கண்ணுக்குத் தெரியாத Virus வரை அனைத்தையும் படைத்து

அவற்றை வாழவைத்துக் கொண்டிருப்பவர் அவர்.

அவர் தனக்குத்  தலைசாய்க்கவும் இடமில்லை என்று சொல்கிறார்.

ஏன்?

இறைமகன் நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு மரிப்பதற்காக மனுவுரு எடுத்தபோது,

தேவ சுபாவத்தில் சர்வ வல்லவரான அவர்

மனித சுபாவத்தில் சக்தி இல்லாமையைத் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் துவக்கமும், முடிவும் இல்லாத அவர்,

மனித சுபாவத்தில் பிறப்பையும், மரணத்தையும் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் துன்பமே பட முடியாத அவர்,

மனித சுபாவத்தில் துன்பத்தையே வாழ்வாகத் தேர்ந்து கொண்டார்.

தேவ சுபாவத்தில் சர்வத்துக்கும் உரிமையாளரான அவர்,

மனித சுபாவத்தில் ஏழ்மையையே
வாழ்வாகத் தேர்ந்து கொண்டார்.

ஏழ்மையையே வாழ்வாகத் தேர்ந்து கொண்டதனால்தான்

ஒரு ஏழைக் கன்னியின் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

ஒரு ஏழை தச்சுத் தொழிலாளியைத் தனது வளர்ப்புத் தந்தையாகத் தேர்ந்து கொண்டார்.

ஒரு  மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

முப்பது வயது வரை தச்சுத் தொழிலையே செய்து வாழ்ந்தார்.

தனது பொது வாழ்வின்போது தலை சாய்க்கக்கூட இடமில்லாது வாழ்ந்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.
குருவைப் போல் வாழ்பவன்தான் சீடன்.

நாம் நமது குருவைப் போல வாழ்கின்றோமா?

கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

அவருக்குத தலை சாய்க்கக்கூட இடமில்லை.

நமக்கு?

அவர் நடந்தே பயணித்தார்.

நாம்?

அவர் கிடைத்த இடத்தில், கிடைத்ததைச் சாப்பிட்டார்.

நாம்? 

அவர் ஏழையாகவே வாழ்ந்தார்.

நாம்?

காலம் மாறிவிட்டது என்று காலத்தின் மேல் பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க ஆசைப்படாமல் சிந்திப்போம்.

அவர் பாவமே செய்ய முடியாதவர்.

பாவிகளாகிய நமக்காக ஏழையாக வாழ்ந்தார்.

நாம் பாவிகள்

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏழ்மையில்  வாழ வேண்டாமா?

குருவைப்போல் வாழாதவர்கள் அவருடைய சீடர்கள் அல்ல.

ஆகவே அவரைப்போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment