", பொடியா, ஏன் இப்படி மூஞ்சைத் தூக்கிக் கொண்டு கவலையாக இருக்க."
"காலையில்
"துயருறுவோர் பேறுபெற்றோர்"
என்று பைபிளில் வாசித்தேன். அதனால் கொஞ்சம் துயரமாக இருந்து பார்க்கிறேன்."
", எதற்காகத் துயரமாக இருக்கிறாய்."
"இப்பதான தாத்தா சொன்னேன், பைபிளில் வாசித்ததினால என்று."
", அது புரியுது. துயரத்துக்குக் காரணம் வேண்டுமே.
இயேசுவின் தாயை வியாகுல மாதா என்கிறோம்.
வியாகுலம் என்றால் துயரம் என்றுதான் அர்த்தம்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தன் மகன் இயேசு பட்ட பாடுகளை நினைத்தும், அவற்றுக்குக் காரணமான நமது பாவங்களை நினைத்தும் அவள் துயரமாக இருந்தாள்.
உனது துயரத்துக்குக் காரணம் என்ன?"
"தாத்தா, இன்று ஆண்டவரின் இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களோடு பேச விரும்பினேன்.
அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
முதலில் உங்களைப் பேச வைப்பதற்காக அப்படி இருந்தேன்.
இப்போ சொல்லுங்கள்..
துயரம் என்றால் என்ன?
துயரம் எப்படி நம்மைப் பேறு பெற்றவர்கள் ஆக்குகிறது.?"
",நீ எப்போதாவது அழுதிருக்கிறாயா?"
"அழுதிருக்கிறேன். அப்பா அடிக்கும்போது, வாத்தியார் அடிக்கும்போது அழுதிருக்கிறேன்."
", அது உனக்கு வலிப்பதற்காக அழுதிருக்கிறாய்.
மற்றவர்களுக்காக அழுதிருக்கிறாயா?"
"ஆமா, என் தம்பி சுகம் இல்லாமலிருக்கும் போது அவன் அழுவதை பார்த்து நானும் அழுதிருக்கிறேன்.
என்னுடைய உறவினர்கள் மரணிக்கும்போது அவர்களுடைய பிரிவைத் தாங்க முடியாமல் அழுதிருக்கிறேன்."
",பிறர் படும் கஷ்டங்களைப் பார்த்து நாம் அழுவது தான் உண்மையான துயரம்.
பிறருக்காக அழ வேண்டும் என்றால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும்.
நாம் யாரையாவது வெறுத்தால் அவர்கள் கஷ்டப்படும்போது நமக்கு துயரம் வராது.
ஆகவேதான் நாம் எல்லோரையும்,
நம்மை பகைப்பவர்களையும் கூட நேசிக்க வேண்டும்.
நாம் யாரையும் பகைக்க கூடாது.
கிறிஸ்தவர்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று திட்டம்
தீட்டுபவர்களையும் கூட நாம் நேசிக்க வேண்டும்.
உண்மையான கடவுளை அறியாத அவர்களைப் பார்த்து நாம் உண்மையிலேயே வருந்த வேண்டும்.
நம்மையே தியாகம் செய்து உண்மைக் கடவுளை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
பிறர் படும் உடல்சார்ந்த கஷ்டங்களாக இருந்தாலும், ஆன்மாவைச் சார்ந்த கஷ்டங்களாக இருந்தாலும்
அவர்களுக்காக நாம் துயரம் அடைந்தால்
நாம் பேறு பெற்றவர்கள்.
கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்வது நமது பிறர் சிநேகக் கடமை.
"நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."
அன்னை மரியாள் தனது கஷ்டங்களை நினைத்து துயரம் அடையவில்லை.
தனது மகனது பாடுகளைப் பார்த்தும், நமது பாவ நிலையை எண்ணியுமே துயரம் அடைந்தாள்.
சிலுவை அடியில் அவள் கண்ணீரோடு நின்றது நமக்காவும்தான்.
தன் மகனது பாடுகளால் பயன்பெற போகாதவர்களை எண்ணி கண்ணீர் விட்டிருப்பாள்."
" தாத்தா, நமக்கொரு துன்பம் வந்தால் நாம் அழக்கூடாதா?"
",நமக்கு துன்பம் வரும்போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதுதான் ஆண்டவருக்கு ஏற்றது.
இயேசு அவருக்கு வந்த பாடுளையும், மரணத்தையும் ஏன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்?
நமக்கு துன்பங்களே இல்லாத நித்திய பேரின்ப வாழ்வை தருவதற்காகத்தானே!
இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மறுவுலக பேரின்பத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வாகனங்கள் என்பதற்காகவே அவற்றை நமக்கு அனுமதிக்கிறார்."
"நமக்காக நாம் துயரப் படவே கூடாதா?''
",துயரப்பட வேண்டும்."
"என்ன தாத்தா, கொஞ்சம் முன்னால்தான்
நமக்கு துன்பம் வரும்போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதுதான் ஆண்டவருக்கு ஏற்றது.
இப்போது துயரப்பட வேண்டும் என்கிறீர்கள்.
எது சரி?"
",இரண்டுமே சரி."
"அதெப்படி?"
", உடலைச் சார்ந்த துன்பங்களை நமது ஆன்மீக நலனுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஆன்மாவைச் சார்ந்த நோய் நொடிகளுக்காக துயரப் பட்டு அழவேண்டும்"
"புரியும்படியாகச் சொல்லுங்கள்.
ஆன்மாவைச் சார்ந்த நோய் என்றால்?"
",நாம் செய்யும் பாவம். பாவ நோயோடு விண்ணகத்திற்குள் நுழைய முடியாது.
நமது பாவங்கள் தான் கடவுள் மனிதனாக பிறப்பதற்கும், பாடுகள் படுவதற்கும், சிலுவையில் மரணம் அடைவதற்கும் காரணம்.
நாம் கடவுளை உண்மையாகவே நேசித்தால் அவரை சிலுவையில் அறைந்து கொன்ற நமது பாவங்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தி அழுவோம்.
இதற்குப் பெயர் தான் உத்தம மனஸ்தாபம்.
நமது உத்தம மனஸ்தாபம் நமது பாவங்களுக்கு உடனடியாக இறைவனது மன்னிப்பை பெற்றுத் தரும்.
பாவங்களுக்காக உத்தமனஸ்தாபப்பட்டு அழுது பாவசங்கீர்த்தனம் செய்பவர்கள் பேறு பெற்றவர்கள்.
நமக்கு விண்ணகத்தில் நித்திய ஆறுதல் கிடைக்கும்."
"தாத்தா, பிறருடைய துன்பங்களுக்காக வருத்தப்படுவது போல்
பிறருடைய பாவங்களுக்காக நாம் வருத்தப்படலாமா?"
", நமது அயலான் பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அவனால் விண்ணகம் அடைய முடியாது.
நாம் அவனை நேசித்தால் அவன் பாவ வாழ்க்கையை விட்டு வெளியேறும்படி அவனுக்கு உதவி செய்வோம்.
இது ஒரு பிறர் சிநேக செயல்.
அவன் மனம் திரும்பும்படி கடவுளிடம் நாம் செபிக்க வேண்டும்.
நமது நாடு மனம் திரும்பி உண்மையான கடவுளிடம் வரும்படி வேண்டுவது ஒரு மறைபரப்புப் பணி.
ஆனால், பிறருடைய பாவங்களுக்காக அவர்கள் தான் மனஸ்தாபப்பட வேண்டும்.
அதற்காக நாம் வேண்டிக் கொள்வது அவர்களுக்கு நாம் செய்யும் உதவி."
"ஆக, பிறருடைய வாழ்க்கைக் கஷ்டங்களுக்காவும்,
தங்களது பாவங்களுக்காகவும் துயரப்படுகிறவர்கள் பேறு பெற்றவர்கள்.
அவர்களுக்கு விண்ணகத்தில் நித்திய ஆறுதல் உறுதி."
", இறைவனை நேசிப்பவர்கள் தங்கள் பாவங்களுக்காக துயரப்படுவர்.
அயலானை நேசிப்பவர்கள் அவர்களுடைய கஷ்டங்களுக்காக
துயரப்படுவர்.
வேறு வார்த்தைகளில்
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி,
உன்னை நீ நேசிப்பதுபோல உன் அயலானை நேசி என்ற
இறைவனது அன்புக் கட்டளைகளை அனுசரிப்பவர்கள் பேறு பெற்றவர்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment