Monday, June 13, 2022

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."(மத். 5:48)

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத். 5:48)

"தாத்தா, நம் ஆண்டவருக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்க!"

"பொடியா, உன் Size க்கு உன் ஆசை இருக்கும்.

ஆனால் ஆண்டவர் அளவில்லாத கடவுள். அளவில்லாதவருடைய ஆசை அளவில்லாததாய்த்தான் இருக்கும்.

இதில் ஆச்சரியபட என்ன இருக்கு?

அப்படி என்ன ஆசைப்பட்டு விட்டார்?"

"அவருடைய தந்தையைப் போல நாம் இருக்க வேண்டுமாம்."

", முழு வசனத்தையும் சொல்லு."


"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

", நிறைவுன்னா என்ன?"

"முழுமை. (perfect)''

",அண்டா பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன். ரொம்ப பெரியதாக இருக்கும்."

", தம்ளர் பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன். ரொம்ப சிறியதாக இருக்கும்."

", அண்டா நிறைய எவ்வளவு தண்ணீர் ஊற்றலாம்?"

"நூற்றுக் கணக்கான குடங்கள் தண்ணீர் ஊற்றலாம்."

", தம்ளர் நிறைய?"

"தம்ளர் நிறையவும் ஊற்றலாம். குறைவாகப் பிடிக்கும்."

", இப்போ அண்டா நிறையவும் தண்ணீர் ஊற்றி விட்டோம்.

தம்ளர் நிறையவும் தண்ணீர் ஊற்றி விட்டோம்.

அண்டாவைப் போலவே தம்ளரிலும் தண்ணீர் நிறைய இருக்குன்னு சொல்லலாமா?"

"சொல்லலாமே."

", இப்போது ஆண்டவரது வாக்கை வாசி."

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, 

நீங்களும் நிறைவுள்ளவர்களாய்  இருங்கள்.

கொஞ்சம் பொறுங்கள்.

அன்னை மரியாள் அருள் நிறைந்தவராக இருப்பது போலவா?"

", ஆமா."

"தாத்தா, இயேசுவின் தாயையும், நம்மையும் ஒப்பிடக் கூடாது.

அவள் கடவுளின் விசேச அருளால் சென்மப் பாவமே இல்லாது உற்பவித்தாள்.

அவளோடு நம்மை எப்படி ஒப்பிட முடியும்?"

", இயேசு நம்மை அவருடைய தந்தையோடு ஒப்பிடுகிறார்.

நான் தாயோடு ஒப்பிடக் கூடாது என்கிறாய்!

மாதா பக்தியின் நோக்கமே மாதாவைப் போல வாழ முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்."

"முயற்சிதான், தாத்தா, செய்ய முடியும். நம்மால் அதிகபட்ச அளவு முடிந்த மட்டும் வாழலாம். முழுவதுமாக மாதாவைப் போல் வாழ வேண்டும் என்றால் கடவுளுடைய விஷேச அருள் வேண்டும்."

", நானே உலகின் ஒளி என்று கூறிய ஆண்டவர்

உலகின் ஒளி நீங்கள் என்று ஏன் சொன்னார்?"

"நாமும் அவரைப் போல வாழ வேண்டும் என்பதற்காக."

", யாரைப் போல்?"

"இயேசுவைப் போல."

",இயேசு யார்?"

"இறைமகன். கடவுள்."

", தந்தை யார்?"

"கடவுள். இருவரும் ஒரே கடவுள்தான்."

",நாம் இயேசுவைப் போல வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.

"நானும் தந்தையும் ஒன்றே." என்று அவரே சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் இயேசுவைப் போல் வாழ்வதும், தந்தையைப் 
போல் வாழ்வதும் ஒன்றுதானே!"

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. 

இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும்"
(கலா. 2:20)

இதைச் சொன்னவர் யார்?"

"புனித சின்னப்பர்."

", என்ன பொருளில் சொன்னார்?"

"சின்னப்பரது உருவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இயேசுவே."

", இயேசு நிறைவானவர்தானே?"

"ஆமா."

", இப்போது சின்னப்பரைப் பார்க்கும்போது யாரைப் பார்க்கிறோம்? வாழ்பவன் நான் அல்ல என்று அவர் சொல்லி விட்டார்."

"இயேசுவைப் பார்க்கிறோம்."

",அதாவது நிறைவானவரான இயேசுவை."

"ஆமா."

", அப்போது சின்னப்பருக்குள் நிறைவு வாழ்கிறது."

"ஆமா."

", அதே நிறைவு, அதாவது நிறைவானவரான இயேசு, உனக்குள் வாழ முடியாதா?"

"முடியும், நான் சின்னப்பரைப் போல் வாழ்ந்தால்."

", உன்னால் வாழ முடியாதா?"

"நடக்கிறத சொல்லுங்க தாத்தா.

அந்தோனியார் பக்தர்களெல்லாம் அந்தோனியார் ஆக முடியுமா?"'

",ஆக வேண்டும் என்று இயேசு ஆசைப் படுகிறார்.

ஒவ்வொரு நாளும் விண்ணகத் தந்தையைப் பார்த்து,

"உமது சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப் படுவதாக"

என்று சொல்கிறாயா?"

"அடிக்கடி சொல்கிறேன்."

", பூமியில் என்ன செய்யப் பட வேண்டும்?"

"தந்தையின் சித்தம்."

",தந்தையின் சித்தத்தை பூமியில் யார் செய்ய வேண்டும்?"

"நாம்தான்."

",தந்தையின் சித்தத்தை  நாம் செய்யும்போது நமக்குள் யார் வாழ்வார்?"

"தந்தைதான் வாழ்வார்."

", சின்னப்பருள் இயேசு வாழ்ந்தது போல, நமக்குள் தந்தை வாழ்வார். சரியா?''

"ஆமா."

",சின்னப்பரைப் போல் நாமும் கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தில் வாழும்போது,

அதாவது விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழும் போது,

நிறைவானவரான  தந்தை நம்முள் வாழ்வார்."

"ஆமா."

"அதாவது நமக்குள் நிறைவு வாழும்."

"ஆமா."

", அப்படியான நிறைவானவரான தந்தையை நமக்குள் கொண்டுவர நாம் என்ன செய்ய வேண்டும்?"


"தந்தையின் சித்தப்படி வாழவேண்டும்."

", அதைத்தான் இயேசு சொல்கிறார்."

"அதாவது,

நமது வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நாமும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றால்

நிறைவுள்ள வானகத்தந்தை நம்முள் வாழ வேண்டும்.

அதாவது 

"வாழ்வது நானல்ல,

 என்னுள் விண்ணகத் தந்தை  வாழ்கின்றார்"

 என்று சொல்லும் அளவிற்கு 

 புனித சின்னப்பரைப்  போல வாழ வேண்டும்.

அதற்கு,

 இயேசு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றியது போல

நாமும் நமது வாழ்வில்  தந்தையின் சித்தத்தை முழு மனதோடு  நிறைவேற்ற வேண்டும்.

பாவம் தந்தையின் சித்தத்துக்கு  எதிரானது.

தந்தையின் சித்தப்படி வாழ்ந்தால் பாவங்கள் செய்ய மாட்டோம்.

புனிதர்களைப் போல வாழ்வோம். 

ஆனாலும், தாத்தா, புனிதர்களைப் போல, முழுக்க முழுக்க தந்தையின் சித்தப்படி வாழ்வது அவ்வளவு எளிது அல்ல."

",எளிது என்று நான் சொன்னேனா?   தந்தையின் அருளால் ஆகாதது எதுவுமில்லை.

செபிப்போம்.

இறைவன் அருளோடு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment