(மத்.16; 23)
யாரைப் பார்த்து ஆண்டவர்,
"போ பின்னாலே, சாத்தானே."
என்றார்?
சில நிமிடங்களுக்கு முன்பு எந்த இராயப்பரைப் பார்த்து ஆண்டவர்,
" யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்."
"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."
"வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்."
என்றெல்லாம் சொன்னாரோ, அதே இராயப்பரைப் பார்த்துதான்,
"போ பின்னாலே, சாத்தானே." என்றார்.
இராயப்பர் முதன்முதலில் இயேசுவைப் பார்க்க வந்தபோதே,
"நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார்."
( கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.)
இயேசு உயிர்த்த பின்
"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
"என் ஆடுகளைக் கண்காணி"
"என் ஆடுகளை மேய்."
என்றெல்லாம் கூறி,
நல்ல ஆயனாகிய இயேசு தனது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை இராயப்பரிடம் ஒப்புவித்தார்,
அதாவது,
தான் நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இராயப்பரை நியமித்தார்.
அந்த இராயப்பரை எந்த சூழ்நிலையில் ஆண்டவர்
"சாத்தானே" என்று அழைத்தார்?
"இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று
மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும்,
கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்கு விளக்கத் தொடங்கினார்.
22 இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து,
"ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.
23 அவர் திரும்பி இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே,
நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே." என்றார்.
(மத்.16:21-23)
நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு மரணிப்பதற்காகவே இயேசு மனிதராகப் பிறந்தார்.
அதுவே கடவுளுடைய (பரிசுத்த தம திரித்துவத்தின்) சித்தம்.
இயேசுவின் மீது கொண்ட அன்பின் காரணமாக இராயப்பர் இயேசுவின் மரணத்திற்கு எதிராக ஆலோசனை கொடுத்தார்.
(ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம்.)
சாத்தான் தான் கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக ஆலோசனை கொடுக்கக் கூடியவன்.
சாத்தானின் ஆலோசனையைக் கேட்டு தான் மனிதன் பாவம் செய்தான்.
ஆகவே, கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக ஆலோசனை கொடுத்த இராயப்பரை 'சாத்தானே' என்று இயேசு அழைத்தார்.
இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கத்தோலிக்கத் திருச்சபையில்
இராயப்பருக்கு மேலான பதவி வகித்த மனிதர் யாருமில்லை.
யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்,
இறைவனுடைய சித்தத்திற்கு எதிராக செயல்படுபவர்கள்,
சாத்தானின் சித்தப்படி செயல்படுகிறார்கள்.
ஆண்டவர் யாருடைய பதவியை வைத்தும் அவர்களை மதிப்பிடுவதில்லை.
இறைவனுடைய சித்தப்படி எந்த அளவிற்கு செயல்படுகிறார்களோ அதை வைத்தே அவர்களை மதிப்பிடுகிறார்.
உலகியலில் உயர் பதவி வகிப்பவர்களின் தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை.
இறைவன் நமது பதவியைப் பார்ப்பதில்லை.
நமது செயல்களின் நோக்கத்தை மட்டுமே பார்க்கிறார்.
ஆகவே, இறைவன் சித்தப்படியே சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.
"விண்ணகத் தந்தையே,
உம்முடைய சித்தம் விண்ணகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக."
என்று தினமும் செபிக்கிறோம்.
இயேசு பாடுகள் பட்டு, மரணித்து நம்மை மீட்க வேண்டும் என்பதுதான் என்பதுதான் விண்ணகத் தந்தையின் சித்தம்.
நாம் மீட்பு அடைய வேண்டுமென்றால்
இயேசுவைப் போலவே சிலுவையைச் சுமக்க வேண்டும் என்பதுவே அவருடைய சித்தம்.
இறைவன் சித்தப்படியே நடப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment