(மத். 7:12)
"தாத்தா, 'நேற்று ஏன் வரவில்லை, என்ன நடந்தது' என்று கேளுங்கள்."
",நேற்று ஏன் வரவில்லை, என்ன நடந்தது''
"நேற்று வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் ஒருவன் படுத்துக் கிடந்தான். வருவோர் போவோர் அவனைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். யாரும் அவனை எழுப்பவில்லை.
நான் அருகில் சென்று பார்த்தபின்புதான் அவன் படுத்திருக்கவில்லை, குடி போதையில் விழுந்து கிடந்தான் என்று தெரிந்தது.
பார்ப்பதற்கு ஒரு வசதியில்லாத குடிகாரன் போல் தெரிந்தது.
நாம் அவன் நிலையில் இருந்தால் மற்றவர்கள் நமக்கு உதவ வேண்டும் என்று எண்ணியிருப்போம்.
நான் அவனுக்கு உதவி செய்யத் தீர்மானித்தேன்.
அப்போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி, படுத்திருப்பவனை மருத்துவ மனைக்குக் கொண்டு போக வேண்டும் என்றேன்.
அவனும் நல்ல மனதுடன் அவனைத் தூக்கி ஆட்டோவில் கிடத்தினான்.
நான் அருகில் அமர்ந்து கொண்டேன்.
பக்கத்திலிருந்த அரசு மருத்துவ மனைக்கு ஆட்டோ சென்றது.
மருத்துவ மனையில் சேர்த்து விட்டேன்.
அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது என்னிடம் ஒரு பைசா கூட இல்லை என்று.
ஆட்டோகாரனிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
அவன் நல்லவன். என் நிலையைப் புரிந்து கொண்டான்.
ஏதாவது வேண்டுமா என்று கேட்டான்.
"வேண்டாம், உதவி செய்தமைக்கு நன்றி." என்று மட்டும் சொன்னேன்.
"கையில் பைசா இல்லாமல் என்ன செய்யப் போகிறாய்?" என்றான்.
"தேவைப்பட்டால் வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் வாங்கிக் கொள்வேன்." என்றேன்.
"தேவைப் பட்டால் கூப்பிடு" என்று தன் phone நம்பரைத் தந்து. விட்டுப் போய்விட்டான்.
கொஞ்ச நேரத்தில் குடிகாரன் எழுந்து விட்டான்.
நர்சுமார் என்னைப் பார்த்தார்கள். நான் என் நிலையைச் சொன்னேன்.
"நல்ல பையன். நீ கூட்டிவந்த ஆள் எழுந்து விட்டார், கூட்டிக் கொண்டு போ" என்றார்கள்.
குடிகாரன் என்னைப் பார்த்து,
"ரொம்ப நன்றி தம்பி. இனி என் வாழ்நாளில் குடிக்க மாட்டேன். இது சத்தியம்." என்றான்.
நானும் நர்சுமாருக்கு நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
இதனால் தான் உங்களைப் பார்க்க வரவில்லை."
", நல்ல காரியம் செய்தாய். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்.''
"ஆனால் ஒன்றை கவனித்தீர்களா தாத்தா?
நான் உதவி செய்வதற்கு உதவி செய்த ஆட்டோக்காரன் நல்லவன்.
உதவி செய்யும்போது பணத்துக்கு
முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
வழக்கமாக நன்கொடை எதிர்பார்க்கும் நர்சுகள் என் நிலையைப் பார்த்து எதுவும் கேட்க வில்லை.
குடிகாரன் கூட எங்கள் அன்பைப் பார்த்து திருந்தி விட்டான்.
நாம் நன்மை செய்ய ஆரம்பித்தால் நல்லவர்கள் எல்லோரும் உதவிக்கு வருவார்கள்."
",நமக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோமோ அதை நாம் மற்றவர்களுக்கு செய்தால்
அது தனக்கே செய்யப்படுவதாக கடவுள் எடுத்துக்கொள்வார்.
அதற்கு அவர் தரும் சன்மானம் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு.
இன்றைய உலகின் பிரச்சனையே மற்றவர்கள் நமக்கு என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு செய்வதுதான்.
ஏமாற்றுபவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட விரும்பாதவர்கள் தான்.
அரசியல்வாதிகள் ஓட்டுப் போடும் மக்கள் தங்களை ஏமாற்றி விடக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அதிகாரம் கிடைத்தவுடன் ஓட்டுப் போட்ட மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
மக்கள் தரும் பணம் நல்ல நோட்டா என்று பார்த்து வாங்கும் வியாபரிகள் கலப்படப் பொருள்களை விற்கலாமா?
பெற்றோர் தங்களை நன்கு வளர்த்து, தங்களை வசதியுடன் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பிள்ளைகள்,
வசதியான வாழ்க்கை கிடைத்தவுடன்
அதற்குக் காரணமான பெற்றோரை மறந்து விடுகிறார்கள்.
பிள்ளைகள் தங்களை எப்படி பெற்றோர் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ
அப்படியே பெற்றோரையும் காப்பாற்ற வேண்டாமா?
பைபிள் வசனங்களை வாசித்தால் மட்டும் போதுமா? அதன்படி நடக்க வேண்டாமா?
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்."
"மற்றவர்கள் நமக்கு விரோதமாக ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நாம் ஏதாவது தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்கிறோமா?
நாம் ஒருவரை ஒருவர் மன்னித்தால்தான் கடவுள் நம்மை மன்னிப்பார்."
",எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னிப்பதுபோல
எங்கள் குற்றங்களை மன்னியும்."
என்றுதான் நாம் தினமும் விண்ணகத் தந்தையிடம் வேண்டுகிறோம்.
நமது அயலான் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். நாமும் நமது அயலானை மன்னிக்க வேண்டும்.
மன்னித்தால்தான் கடவுள் நம்மை மன்னிப்பார்."
''மக்கள் அனைவரும் நமது விண்ணகத் தந்தையால் படைக்கப் பட்டவர்கள்.
அந்த அடிப்படையில்தான் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.
நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்கிறோம்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
நாம் நன்றாக வாழ மற்றவர்கள் நமக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுவது போல மற்றவர்கள் நன்றாக வாழ நாமும் உதவுகிறோம்.
மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்கிறோம்.
இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நம் எல்லோரையும் படைத்தவர் ஒரே இறைவன்.
அவருடைய அன்பு என்னும் கயிறுதான் நாம் அனைவரையும் ஒன்றாக கட்டிப் போட்டிருக்கிறது.
இறையன்பும், அதில் பிறந்த பிறரன்புமே நமது வாழ்க்கை."
", வாழ்க்கை = அன்பு செய்தல்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment