Friday, June 10, 2022

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத். 5:24)

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத். 5:24)

"தாத்தா, முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள்."

", ஏண்டா, என்ன தப்பு செய்த?"

"தப்பு ஒண்ணும் செய்யல தாத்தா.
ஏற்கனவே நீ சொன்ன விசயத்தைப் பற்றித் திரும்பவும் கேட்க பயமா இருக்கு."

",என்ன விசயம் பற்றி?"

"சமாதானம் பற்றி."

",சமாதானம் பற்றி முழுதும் பேசணும்னா நம்ம வாழ்நாள் காணாது.

ஏனெனில் சமாதானம் புதுப் புது பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது.

நீ கேட்க வந்ததைக் கேள்."

"தாத்தா, இருவருக்குள் இருந்த சமாதான உறவு முறிந்து விட்டால்

அரைச் சரி செய்ய முறித்தவர் முதல் முயற்சி எடுக்க வேண்டுமா?

அல்லது முறிவுக்குக் காரணமில்லாதவர் முதல் முயற்சி எடுக்க வேண்டுமா?"

", உனது இந்த சந்தேகத்துக்குக் காரணம் என்ன?"

"நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, 

உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, 

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்.

 பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து."
(மத். 5:23, 24) என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.


"உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,"

இங்கே மனத்தாங்கல் இருப்பது 'சகோதரனுக்கு."

ஆண்டவர் "முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." என்கிறார்.

மனத்தாங்கல் இருப்பவன் முதலில் அதைச் சரி செய்ய வேண்டுமா?

மனத்தாங்கல் இல்லாதவன் முதலில் அதைச் சரி செய்ய வேண்டுமா?''

",கடவுள் மனிதனை பாவம் இன்றி சமாதான உறவோடுதான் படைத்தார், அந்த உறவை முதலில் முறித்துக் கொண்டவர் யார்?"

"மனிதன்."

", மனிதன் முறித்த உறவைச் சரி செய்ய முதலில் முயற்சி எடுத்தவர் யார்?"

"கடவுள். கடவுள்தான் மனிதனாக பிறந்து மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்தார்."

", கடவுள் முதலில் முயற்சி எடுத்திருக்கா விட்டால்?"

"முறிந்த உறவு முறிந்த உறவாகவே இருக்கும்."

",உனது சகோதரன் காரணமே இல்லாமல் உனது மனதை நோகச் செய்து விட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

அதனால் உறவு முறிந்தது.

உனக்குச் சமாதானம் செய்து கொள்ள ஆசை.

 ஆனால் உனது சகோதரன் முதல் முயற்சி எடுக்க மாட்டான் என்று உனக்குத் தெரியும்.

சமாதானம் செய்து கொள்ள நீ என்ன செய்வாய்?"

"எனது ஆசையை நிறைவேற்ற நான்தான் முயற்சி எடுப்பேன்."

",அதைத்தான் ஆண்டவர் செய்ய சொல்லி இருக்கிறார். 

தன்னைப் போலவே தனது சீடர்களும் செயல்பட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

நமது அயலானோடு நமக்கு சமாதான உறவு இருக்க வேண்டும்.

நமது அயலான் தப்பு செய்திருந்தாலும், அவனை நாம் மன்னித்து ஏற்றுக் கொள்வதில் தவறில்லையே.

கடவுள் தன்னுடைய அளவில்லாத அன்பின் காரணமாக 

அவரே மனிதனாகப் பிறந்து

 பாடுபட்டு 

தன்னையே சிலுவையில் பலியாக்கி 

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து 

நம்மை தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நமது ஆண்டவரையே நாம் பின்பற்றுவோமே."

"நாம் செய்யும் சமாதானத்தை நமது சகோதரன் ஏற்றுக் கொள்ளா விட்டால்?"

", அது நமது தப்பு இல்லையே.

நாம் சமாதானம் செய்துகொள்ள வேண்டும்.

நமது சகோதரன் மீது நமக்கு எந்த கோபமும் இருக்கக் கூடாது.

அதை நாம் அவனுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நமக்கு அவன்மீது எந்தக் கோபமும் இல்லை என்பது தெரிந்தால்  அவன் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது."

"நாம் இயேசுவின் சீடர்கள் என்பதற்காகவே நம்மை வெறுப்பவர்கள் அநேகர் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்வதன் மூலம் நமது அன்பை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நமது அன்பைப் பார்த்து அவர்கள் மனம் திரும்ப வேண்டும்."

", மனிதன் இறைவனோடு இருந்த சமாதான உறவை முறித்து விட்டாலும்,

 மனிதனோடு இறைவனுக்கு இருந்த அன்பு உறவில் எந்த மாற்றமும் இல்லை.

அவர் மாறாதவர்.

நித்திய காலமாகவே மனிதன் மீது அவருக்கு இருந்த அன்பு அப்படியே இருந்தது.

பரிசுத்தவான், பாவி என்ற வேறுபாடு இல்லாமல் கடவுள் அனைவரையும் நேசிக்கிறார். 
 
லுசிபெரை நேசித்தது போலவே சாத்தானையும் அவர் நேசிக்கிறார்.

நமது நேசமும் அப்படியே இருக்க வேண்டும்.

எதிரிகளுக்குக் கூட நாம் எதிரியாக இருக்கக் கூடாது.

நாம் அனைவருக்கும் நண்பர்களாகவே வாழ வேண்டும்.

நாம் அனைவரையும் நேசித்தால்தான் கடவுள் நமது காணிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்.

யார் மேலாவது உள்ள கோபத்தோடு நாம் காணிக்கை செலுத்தினால் அது காணிக்கை அல்ல.

வெறும் பொருளே."

விண்ணகத் தந்தையே, எங்களுக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வதுபோல

உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ளும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment