Tuesday, June 14, 2022

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்."(சங் 33:8) (தொடர்ச்சி)

"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(சங் 33:8) 
(தொடர்ச்சி)

"தாத்தா, மக்களின் அறியாமையைப் போக்குவது  நமது கடமை என்கிறீர்கள்.

மரணம்தான் விண்ணகத்திற்குள் நுழையும் வாசல் என்ற உண்மையை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது?"

",இயேசு கூறியதுபோல அவரது நற்செய்தியை மக்களுக்கு அறிய வைப்பதின் மூலம்,

கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதை மக்களுக்கு புரிய வைக்கலாம்.

 கடவுள் நல்லவர் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டால்,

அவரது செயல்கள் யாவும் நல்லவையே என்பதையும் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் நமக்காகப் பட்ட துன்பங்களை மக்கள் புரிந்து கொண்டால்,

தங்களுக்கு வரும் துன்பங்களின் பெருமையை மக்கள் புரிந்து கொள்வார்கள். 

கடவுள் நமக்காக ஏற்றுக் கொண்ட மரணத்தை மக்கள் புரிந்து கொண்டால்,

மரணத்தைப் பற்றிய உண்மையையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்."

"தாத்தா, புரிய வைக்கலாம், புரிந்து கொண்டால் என்று சொல்கிறீர்கள்.

புரிய வைப்பது எப்படி?

நற்செய்தி அறிவிப்பவர்கள் ஆண்டவரைப் பற்றியும்,

அவர் நமக்காகப் பட்ட துன்பங்களைப் பற்றியும்,

நமக்காக அனுபவித்த மரணத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் யாரும் அதைப் புரிந்து கொள்ளவில்லையே.

இன்னும் துன்பம் வந்தால் அதை நீக்க ஆண்டவரிடம் வேண்டுகிறார்கள்,

மரணம் என்று சொன்னவுடனே பயப்படுகிறார்களே."

", அதற்குக் காரணம் என்னவாய் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?"

"முதலில் இதைச்  சொல்லும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

கொரோனா காலத்தில் நாம் யாரும் கொரோனா நோயாளிகளைப் பார்க்கப் போகவில்லை.

நோய்க்கும், சாவுக்கும் பயந்துதானே.

இறைவனது திட்டத்திற்கு எதிராக எதுவும் நடக்காது என்ற உறுதியான நம்பிக்கை இருந்தால்

"நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்"

என்ற ஆண்டவர் வார்த்தைப்படி நடந்திருப்போம், இல்லையா?"

", உண்மைதான். நாமே பயப்படும் போது மற்றவர்களை எப்படி பயப்படாதீர்கள் என்று சொல்ல முடியும்?

புனித கல்கத்தா தெரெசாளுக்கு தொழுநோய் தொற்று நோய் என்று தெரியும்.

ஆனாலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்கள். புண்களை அவர்களே கழுவி மருந்து போட்டார்கள்.

சுவாமி தமியான் (Father Damien) தொழுநோயாளிகளோடு தங்கி அவர்களுக்காக உழைத்தார்.  

அவரையும் அந்நோய் தொற்றிக்கொண்டது.

ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

முதலில் நாம் ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று நாம் சுவைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவரைச் சுவைத்துப் பார்க்கும்போது அவருடைய பாடுகளையும், மரணத்தையும் சேர்த்துதான் சுவைக்க வேண்டும்.

நம்மைப் பார்த்து மற்றவர்களும் சுவைப்பார்கள்.

கோடி அற்புதரான புனித அந்தோனியார் 35 வயதிலேயே இறந்து போனார்.

தனக்கென்று ஒரு புதுமை செய்யும்படி ஆண்டவரிடம் அவர் கேட்கவில்லை."

"ஆண்டவர் நல்லவர் என்பதைப் புரிந்து கொண்டால் அவரால் நடக்கும் எதுவும் நமது நன்மைக்கே என்பதையும் புரிந்து கொள்வோம்.

உலகம் துன்பங்கள் நிறைந்ததுதான்.

துன்பங்கள் ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்ளப் படும்போது நமது ஆன்மா பரிசுத்தம் அடையும்.

விண்ணக பேரின்ப வாழ்வுக்கு இவ்வுலக பெருந் துன்ப வாழ்வுதான் காரணமாக இருக்கும்.

துன்பங்களை சிலுவையாக ஏற்றுக் கொண்டால் அவற்றில் மரணிக்க பயப்பட மாட்டாம்.

மரணம் விண்ணகத்தின் வாசல் என்பதைத் தெரிந்து கொண்டால் அது வரும் போது ஆவலுடன் வரவேற்போம்.

ஆண்டவரைச் சுவைத்துப் பார்த்தவர்களுக்கு

அவர் வாழ்ந்த இந்த உலகமும் சுவையாகவே இருக்கும்.

நித்திய பேரின்ப சுவைக்கு அதுவே காரணமாய்க் கூட இருக்கும்."

",முதலில் நாம் ஆண்டவரைச் சுவைப்போம். பிறகு மற்றவர்களுக்கு சுவைக்கக் கொடுப்போம்."

"சரிதான், தாத்தா. அம்மா தான் செய்த சமையலைத்  தான் ருசி பார்த்த பின்புதான் மற்றவர்களுக்குப் பரிமாறுவார்கள்.

தாயைப் போல் தான் பிள்ளை இருக்க வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment