Thursday, June 9, 2022

"உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத்.5:16)

"உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத்.5:16)

"நானே உலகின் ஒளி: என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்"
(அரு. 8:12)
என்று கூறிய அதே இயேசு 

"உலகிற்கு ஒளி நீங்கள்"
(மத். 5:14)
என்றும் கூறியுள்ளார்.

ஏன், தாத்தா?

உலகின் ஒளி நாமா? இயேசுவா?"


" நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் "
(லூக் 4:43)
என்று கூறிய அதே இயேசுதான்


 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."
(மாற்கு. 16:15)
என்றும் கூறியுள்ளார்.

நற்செய்தியினை அறிவிக்க வேண்டியது இயேசுவா , நாமா?"

"தாத்தா, ஒரு கேள்வி கேட்டால் நீங்கள் கேள்வியையே பதிலாகச் சொல்கிறீகள். நீங்கள் English காரனா?"

",English காரன் அப்படித்தான் சொல்வானா?"

"ஆமா, தாத்தா.

ஒருவன் ஒரு English காரனப் பார்த்து,

"Why do you, English people, always answer a question with another question?" என்றானாம்.

அதற்கு அவன், "Is it?" என்று பதில் சொன்னானாம்."

", நீ முதலில் கேட்ட கேள்விக்குரிய பதிலை நீ புரிந்து கொள்வதற்காகத்தான் நான் கேள்வி கேட்டேன்."

"அது புரியுது."

", புரிந்ததைச் சொல்லு."

"அதுதான புரியல."

", என்னடா சொல்ற. புரியுதுங்க.
சொல்லுடான்னு சொன்னா அதுதான புரியலங்க.

எது புரியுது. எது புரியல."

"அது உங்களுக்குப் புரியலையா?

எனக்கு புரிய வைப்பதற்காக தான் கேள்வி கேட்கிறீர்கள் என்பது புரிகிறது.

 ஆனால் எதைப் புரியவைக்க என்பது புரியவில்லை."

", உலகில் நற்செய்தி அறிவிப்பதற்காக விண்ணிலிருந்து வந்தவர் யார்?"

"இயேசு."

",இயேசு நற்செய்தி அறிவிக்க யாரை அனுப்பினார்?''

"அப்போஸ்தலர்களை."

", அவர்களை மட்டுமா?"

"இயேசுவின் சீடர்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணி இருக்கிறது."

", நாமும் இயேசுவின் சீடர்கள்தான். இப்போது உன் கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடி."

"உலகின் ஒளி இயேசுவே.

ஒளி வெளிச்சத்தில்தான் நம்மால் பார்க்க முடியும், நடக்க முடியும்.

இயேசு ஆன்மீக ஒளி.

அது காட்டும் வெளிச்சத்தில்தான் நம்மால் விசுவாசக் கண் கொண்டு பார்க்க முடியும், 

விண்ணகத்தை நோக்கி நடக்க முடியும்,

விண்ணகத்தை அடையவும் முடியும்.

இயேசு போதித்த நற்செய்தியின் பொருளை புரிந்துகொள்ள வேண்டுமானால் 

இயேசுவின் ஒளி நற்செய்தி வசனங்கள் மேல் பட வேண்டும்.

 பட்டால்தான் நமது .விசுவாசக் கண்ணுக்கு அது புரியக்கூடிய விதமாய்த் தெரியும். 

இயேசு நம்மையும் நற்செய்தியை அறிவிக்கச் சொல்லியிருக்கிறார்.

நாம் அறிவிக்கும் நற்செய்தி மக்களுக்குப் புரிய வேண்டுமானால் இயேசுவின் ஒளி கட்டாயம் தேவை.

நாம் இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும்.

எந்த அளவுக்கு அதிகமாக பிரதி பலிக்கிறோமோ,

அந்த அளவுக்கு நமது நற்செய்தி அறிவிப்பு பலன் தரும்.

இயேசு அவரது ஒளியில் வாழும் நம்மையும் நமது கிறிஸ்தவ வாழ்வின் மூலம் மறு கிறிஸ்துவாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆகவே நம்மையும்

"உலகிற்கு ஒளி நீங்கள்." என்கிறார்.

நாம் நமது நற்செயல்களைக் கொண்டு, வானகத்திலுள்ள நமது தந்தையை மகிமைப்படுத்த வேண்டும். 

 நாம் நற்செய்தியின்படி வாழ்ந்தால் நமது நற்செயல்களிலிருந்தே நாம் அறிவிக்கும் நற்செய்தியை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எதைப் போதிக்கிறோமோ அதன்படி நாம் வாழ்ந்தால் நமது போதனையின் பொருள் மக்களுக்குப் புரியும்.

வாழ்க்கையின் மூலம் நமது போதனையைப் புரிய வைக்கும் ஒளியாக நாம் வாழ வேண்டும்.

சூரியனின் ஒளியை நிலா பிரதிபலிப்பதுபோல நாம் இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்முள் வாழும் ஒளியாகிய இயேசுவைக் காண வேண்டும்.

"வாழ்வது நானல்ல, இயேசு என்னுள் வாழ்கிறார்." என்று நம்மால் கூற முடியுமானால்

நாம் உலகின் ஒளி.

நாம் இயேசுவாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு நம்மை உலகின் ஒளி என்கிறார்.

சரியா, தாத்தா."

", Super சரி.

நமது வாழ்வில் இயேசுவைப் பிரதிபலித்தால் தான்

கிறிஸ்தவன் (கிறிஸ்து + அவன்) என்ற பெயர் நமக்குப் பொருந்தும்.

கிறிஸ்துவாக வாழ்ந்து கிறிஸ்தவத்தை உலகெங்கும் பரப்புவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment