Sunday, June 5, 2022

"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ."(லூக். 8:48)

"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ."
(லூக். 8:48)

"தாத்தா, நான் என்ன கேள்வி கேட்டாலும் ஒரே விஷயத்தைத் நான் திரும்பவும் திரும்பவும் பதிலாகச் சொல்லுகிறீர்கள்'
 ஏன், தாத்தா?"

",டேய் பொடியா, நீ என்னை எப்போ பார்த்தாலும் 'தாத்தா' என்றுதான் கூப்பிடுகிறாய். நான் ஏதாவது சொன்னேனா?"

"தாத்தாவை தாத்தா என்றுதான் கூப்பிடுவார்கள். மாமா என்றா கூப்பிடுவார்கள்?"

", உனது கேள்விகள் இயேசுவையும், அவரைச் சார்ந்த விசயங்களைப் பற்றி இருக்கும்போது, பதிலும் அப்படித்தான் இருக்கும்.

ஒரே விசயத்தை பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். ஆனால் விசயம் ஒன்றுதான்.

மாம்பழம் என்று சொன்னவுடன் உனக்கு என்ன ஞாபகத்துக்கு வருகிறது?"

"அதன் ருசி."

", சிலருக்கு அதன் கொட்டை ஞாபகத்துக்கு வரும்."

"உண்மைதான். அதைச் சாப்பிட ஆசைப்படுபவனுக்கு ருசி ஞாபகத்துக்கு வரும்.

'அதிலிருந்து புதிய மாமரம் உண்டாக்க ஆசைப்படுபவனுக்கு அதன் கொட்டை ஞாபகத்துக்கு வரும்.

இரண்டு ஆசைகளும் இல்லாதவனுக்கு மாம்பழமும், செங்கல் துண்டும் ஒன்றுதான்."

", நீ ஆரம்பித்திருக்கிற விதத்தைப் பார்த்தால் நீ ஏதோ ஒரு தொிந்த விசயத்தைப் பற்றிதான் பேச வந்திருப்பது போல தெரிகிறது."

"ஆமா, தாத்தா. ஆனால் சொன்னதையே சொல்லக் கூடாது."

", அப்படின்னா?"

"கோணத்தை மாற்றுங்கள்."

", முதலில் கேட்க வந்திருப்பதைக் கேள். கோணத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்."

"தாத்தா, இயேசு ஒவ்வொரு முறையும் குணமாக்கும் போதெல்லாம் 

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்கிறாரே, ஏன்?"

", நீ மனதில் வைத்துக் கொண்டு கேட்கிற புதுமையை முதலில் சொல்லு."

"பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண்ணைக் குணமாக்கிய புதுமை."

", தன்னைக் குணமாக்கும்படி அவள் இயேசுவை எத்தனை தடவைக் கேட்டாள்?"

"கேட்கவேயில்லை."

", நினைக்கவாவது செய்தாளா? "

"ஆமா, "நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

அதை நினைத்துக் கொண்டாள்."

", அவளது எண்ணம் எதைக் காட்டுகிறது?"

"ஆழமான விசுவாசத்தை."

", அவள் இயேசுவிடம் 'என்னைக் குணமாக்குங்கள்' என்று கேட்கவில்லை."

" ஆமா, கேட்கவில்லை."

", ஆனால் விசுவசித்தாள், குணமானாள்."

"ஆமா."

", அதனால்தான் இயேசு 'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று.' என்றார்."

"ஆனால் இயேசு இந்த புதுமைக்கு மட்டும் அப்படிச் சொல்லவில்லையே.

வேண்டி குணமடைந்த பர்த்திமேயு என்ற கண்தெரியாத பிச்சைக்காரனிடமும் இயேசு

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்" 
(மாற்கு,10:52)

என்று தான் சொன்னார்.

இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.

உண்மையில் குணமாக்கியது இயேசுதானே."

", நாம் ஓருதவி கேட்டு இறைவனிடம் செபிக்கிறோம்.

நாம் செபிக்கும்போது யாரைப் பார்க்கிறோம்?"

"இறைவனை."

", இறைவன் நம் உள்ளத்தித்தில் விசுவாசம் இருக்கிறதா என்று பார்க்கிறார். விசுவாசம் இருந்தால் நாம் கேட்டதைத் தருகிறார்.

நாம் இறைவனைப பார்க்கிறோம்.

இறைவன் எதைப் பார்க்கிறார்?"

"நமது விசுவாசத்தை"

", நமக்கு விசுவாசம் இல்லா விட்டால் கேட்டது கிடைக்காது.

விசுவாசம் இன்றி நமது செபம் பயன் அளிக்காது

நோயுடன் இருப்பவன் நோயைக் குணமாக்கும்படி விசுவாசத்துடன் இயேசுவிடம் வேண்டினால் இயேசு கூறுவார்:

"மகனே, உனக்கு என் மேல் விசுவாசம் இருப்பதால் நீ குணம் பெறுகிறாய்."

"தாத்தா, அது புரிகிறது. இயேசு,

"என்னிடம் கேட்டாய், நான் தந்தேன்" என்று ஏன் சொல்லவில்லை."

", விசுவாசத்தின் முக்கியத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதற்காக.

விசுவாசம் என்றால் வெறுமனே நாம் கேட்பது கிடைக்கும் என்று நம்புவது மட்மெல்ல.

விசுவாசம் என்றால் இயேசுவை நமது கடவுளாக ஏற்றுக் கொண்டு நம்மை அவருக்கு அர்ப்பணித்தல்.

அர்ப்பண வாழ்வு = விசுவாச வாழ்வு.

நாம் விசுவாச வாழ்வு வாழ்ந்தால் நமக்காக வாழ மாட்டோம். இயேசுவுக்காக மட்டுமே வாழ்வோம்.

இயேசுவுக்காக மட்டும் வாழ்ந்தால் நமக்காக எதுவும் கேட்க மாட்டோம்.

நமக்கு என்ன தேவை என்று இயேசுவுக்குத் தெரியும்.

நாம் கேட்காமலேயே இயேசு அவற்றை நிறைவேற்றுவார்.

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர்.

 உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத் 6:31 - 33)

இயேசுவுக்காக மட்டும் வாழ்ந்தால் நமக்கு வேண்டியதை எல்லாம் அவரே செய்வார்.

இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நம்மை வழி நடத்தும்."

"இயேசு தான் நம்மை வழி நடத்துவார்.

ஆனாலும் இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நம்மை வழி நடத்தும் என்று சொல்கிறோம்.

அதுபோல்தான் நோயாளிகளை இயேசு தான் குணமாக்கினார்.

ஆனாலும் " உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று இயேசு சொன்னார்"

", நீ குறிப்பிட்ட புதுமையில் பெரும்பாடுள்ள பெண் 'இயேசுவே என்னைக் குணமாக்கும்" என்று கேட்கவில்லை.

அவள் அவருக்குப் பின்னே சென்று அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட மட்டும் செய்தாள்.

 தொட்டவுடனே பெரும்பாடு நின்றது."

"தாத்தா, அவள் இயேசுவின் போர்வையைத்தான் தொட்டாள்.

ஆனால் நாம் இயேசுவையே
நாவினால் தொட்டு, உணவாகவே உட்கொள்ளுகிறோமே!

நம்மிடம் விசுவாசம் இருந்தால் நாம் இயேசுவைத் தவிர வேறு எதையும் தேடமாட்டோம்.

அதிலிருந்து என்ன தெரிகிறது?"

",நீயே சொல்லு."

"நாம் விசுவாசம் இல்லாமல்தான் நற்கருணையை உட்கொள்கிறோம்."

", எப்படி உட்கொள்ள வேண்டும்?"

"விசுவாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டு,

நாம் ஆண்டவருக்கு மட்டுமே உரியவர்கள்,  

அவருக்காகவே வாழ்கிறோம் என்ற உணர்வோடு நற்கருணை உட்கொண்டால் 

இவ்வுலக தேவைகளைப் பற்றி கவலைப் பட மாட்டோம்.

மறுவுலகை மட்டுமே தேடுவோம்.

நாம் கேட்காமலே நமது எல்லா தேவைகளையும் ஆண்டவர் பூர்த்தி செய்வார்."

", நாம் பல முறை பேசியதைத்தான் பேசியிருக்கிறோம்."

"எப்போதும் ஆண்டவர் ஒருவர் தானே, தாத்தா."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment