",பேரப்புள்ள, இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி,
"இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
என்று யாருடைய விசுவாசத்தைப் பாராட்டினார்? ஏன்?"
"நூற்றுவர தலைவனின் விசுவாசத்தைப் பாராட்டினார்.
ஏனெனில், இயேசுவின் வல்லமையில் மற்றவர்களை விட அதிக விசுவாசம் வைத்திருந்தான்.
மிகுந்த தாழ்ச்சி உள்ளவனாகவும் இருந்தான். ஆகவே இயேசு அவனைப் பாராட்டினார்."
",இயேசுவின் வல்லமையில் மற்றவர்களை விட அதிக விசுவாசம் வைத்திருந்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?"
"அவன் ஆண்டவரை நோக்கி,
ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்று மட்டும்தான் சொன்னான்.
வந்து குணமாக்குங்கள் என்று கேட்கவில்லை
ஆண்டவர்தான் அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்
ஆனால் அவன்
"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்." என்றான்.
"உண்டாகுக" என்றே ஒரே வார்த்தையில் உலகைப் படைத்தவர் இயேசு.
அந்த வல்லமையில் அவனுக்கு விசுவாசம் இருந்தது.
மற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய உதவியை மட்டும் கேட்டனர்.
நூற்றுவர் தலைவனோ அவரது வல்லமையை அறிக்கையிட்டு,
அதன் அடிப்படையில் உதவி கேட்டான்.
"ஆண்டவரே நீர் சர்வ வல்லமை உள்ளவர்.
நீர் விரும்பியதை நிறைவேற்ற உமது வார்த்தை மட்டுமே போதும்.
சர்வ வல்லமை உள்ள நீர் என் வீட்டிற்கு வர ஒன்றுமே இல்லாத நான் தகுதி அற்றவன்.
ஆகவே ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், எனது ஊழியன் குணமடைவான்"
என்று சொன்னான்.
மற்றவர்களுக்கும் இயேசுவின் வல்லமை மீது விசுவாசம் இருந்தது.
அதனால்தான் உதவி கேட்டனர்.
நூற்றுவர் தலைவன் அந்த விசுவாசத்தை வெளிப்படையாக, தாழ்ச்சியுடன் அறிக்கையிட்டான்.
அவன் பயன்படுத்திய வார்த்தைகளை நாமும் திவ்ய நற்கருணை வாங்கு முன் பயன் படுத்துகிறோம்.
"ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், என் ஆன்மா குணமடையும்."
ஆண்டவர் மிகவும் பரிசுத்தர். நாம் பாவிகள். எவ்வளவு முயன்றாலும் அவரளவு பரிசுத்தம் அடைய நம்மால் முடியாது.
முற்றிலும் பரிசுத்தமான அவர் நமக்குள் வர நாம் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர்கள்.
தகுதியற்ற நமக்குள் இயேசு ஆசையோடு வருகிறார் என்றால் அதற்கு அவரது அளவு கடந்த அன்பே காரணம்."
"தாத்தா, 'நான் தகுதி அற்றவன்,' என்று கூறிக்கொண்டே நற்கருணை வாங்குகிறோமே,
அது ஏன்?"
",நான் தகுதி அற்றவன்,' என்று கூறும்போது நமது உண்மையான நிலையை ஆண்டவரிடம் எடுத்துச் சொல்கிறோம்.
ஆனால் நம்மைப் படைத்த ஆண்டவரைத் தவிர நமக்கு வேறு புகலிடம் இல்லை.
கடவுளுக்கு நிகரான ஒருவரை அவராலே படைக்க முடியாது.
பரிசுத்தத்தனத்தில் அவருக்கு நிகராக நாம் ஆக முடியாவிட்டாலும்
நம்மைப் பாவ மாசு இல்லாதவர்களாக மாற்ற அவரால் முடியும்.
பாவ மாசு உள்ள யாரும் விண்ணகத்துக்குள் நுழைய முடியாது.
அதற்காகத்தான் உத்தரிக்கிற தலம்.
நாம் இறந்த பின் உத்தரிக்கிற தலத்தில் நமது பாவ மாசைக் கழுவிய பின்னரே விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.
பாவ மாசின்றி படைக்கப்பட்ட ஒரே நபர் அன்னை மரியாள் மட்டும்தான்.
'நீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன் என்று நாம் சொல்லும் போதே அதற்குள் இன்னொரு செபமும் இருக்கிறது.
'எனது ஆன்மாவைக் குணமாக்கி உம்மிடம் வரத் தகுதி உள்ளதாக மாற்றும்' என்ற செபம் அதில் இருக்கிறது."
"நமது ஆன்மாவை குணமாக்குவதற்காகத்தான் ஆண்டவர் பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.
'ஆண்டவரே என் ஆன்மாவைக் குணமாக்க சிலுவைகளைத் தாரும்' என்ற செபமும் அதில் இருக்கிறது என்று நிகைக்கிறேன்."
",நீ கூறுவது உண்மை. நமக்கு வரும் துன்பங்களை பாவப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கலாம்.
நமது அன்னை மரியாள் எந்த பாவமும் செய்யாவிட்டாலும் அவளுக்கும் ஏராளமாக துன்பங்கள் வந்தன.
அவள் அவற்றை நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுத்தாள்.
தாய் என்ற முறையில் பிள்ளைகளாகிய நமக்காக அவள் துன்பங்களை அனுபவித்தாள்.
நமக்காகத்தான் தனது திருமகனை இறைத் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தாள்.
நோயாளி மருத்துவரிடம் சென்று தனது நோயைப் பற்றி பேசினால் அவன் சுகமாக விரும்புகிறான் என்று அர்த்தம்.
ஆன்மீக நோயாளிகளாகிய நாம் ஆன்மீக மருத்துவரிடம் சென்று நம்மைப் பற்றி கூறும்போது நாம் சுகமாக விரும்புகிறோம் என்றுதான் அர்த்தம்.
எத்தனை முறை திவ்ய நற்கருணை உட்கொண்டிருப்போமோ
அத்தனை முறை நாம் சுகமாக விரும்புகிறோம் என்பதை ஆண்டவரிடம் கூறியிருப்போம்.
மருத்துவரை பார்த்தால் மட்டும் போதாது. அவர் கொடுக்கும் மருந்தை சாப்பிட வேண்டும்.
ஆண்டவரிடம் நம் ஆசையைக் கூறிவிட்டு நாம் குணமாக முயற்சி எடுத்திருக்கிறோமா?
நமது துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?
அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?
அல்லது சொல்வதைக் கிளிப்பிள்ளை மாதிரி சொல்கிறோமா?
கிளிப்பிள்ளைக்குத் தான் சொல்வது என்னவென்று தெரியாது."
"உண்மைதான், தாத்தா. இனியாவது புரிந்து சொல்வோம்.
புரிந்து சொன்னால் திவ்ய நற்கருணை வாங்குவதற்கு முன்னால் நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வோம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment