Wednesday, June 29, 2022

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்.16:26)

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்.16:26)

கடவுள் கோடிக்கணக்கான மனிதர்களைப் படைத்திருந்தாலும்
ஒவ்வொருவருக்கும் அவர் முழுமையாகச் சொந்தம்.

கடவுளைப் பங்கு போட முடியாது.

அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் அவருக்கு முழுமையாகச் சொந்தம்.

கடவுள் நமக்கும், நாம் அவருக்கும் முழுமையாகச் சொந்தமாக இருப்பதால்தான்,

அவருக்குச் சொந்தமான அனைத்து மக்களும் நமக்குச் சொந்தம்.

இந்த அடிப்படையில்தான் இறைவன் மேல் உள்ள அன்பும்,
பிறர் மேல் உள்ள அன்பும் பின்னிப் பிணைந்து ஒரே அன்பாக விளங்குகின்றன.

இறைவன் மேல் அன்பு இல்லாத இடத்தில், பிறர் அன்பு இருக்க முடியாது.

பிறர் அன்பு இல்லாத இடத்தில் இறைவன் மீது அன்பு இருக்க முடியாது.

இறைவனை உண்மையாகவே அன்பு செய்பவன், தனது பிறனையும் அன்பு செய்வான்.

இறைவனையும், பிறனையும் அன்பு செய்பவன், தன்னையும் உண்மையாகவே அன்பு செய்வான்.

ஏனென்றால் அவனும் கடவுளுடைய படைப்புதானே.

நம்மீது நாம் கொண்டுள்ள அன்பும், பிறர் மீது நாம் கொண்டுள்ள அன்பும், இறைவன்மீது நாம் கொண்டுள்ள அன்பிற்குள் அடங்கியிருக்கின்றன.

ஆகவேதான் இயேசு "உன்னை நேசிப்பது போல உன் பிறனையும் அன்பு செய்" என்றார்.

கடவுளை நேசிப்பவன் தன்னைக் கட்டாயம் நேசிப்பான்.

நம்மை நாம் நேசிப்பது என்றால் நமது ஆன்மாவை நேசிப்பது.

நமது ஆன்மா இறைவனால் படைக்கப்பட்டது.

இறைவனை நேசிப்பவன்தான் தன்னையும் உண்மையிலேயே அன்பு செய்வான்.

ஏன் "உண்மையிலேயே?"

இறைவனை நேசியாதவன் தன்னை, தனது ஆன்மாவை உண்மையிலேயே அன்பு செய்ய முடியாது.

அப்படியானால் நாத்திகர்கள் தங்களைத் தாங்களே நேசிக்கவில்லையா?

நேசிக்கவிலை.

யாராவது தங்களால் நேசிக்கப் படுபவர்களுக்கு கேடு வர விடுவார்களா?

யாராவது தன் மனைவி, மக்கள் சுகமில்லாதிருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பானா?

மகிழ்ச்சியாக இருந்தால் என்ன அர்த்தம்?

அவன் அவர்களை நேசிக்கவில்லை என்று அர்த்தம்.

அப்படியானால் தனது ஆன்மா பாவ நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும்போது ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால்
என்ன அர்த்தம்?

தனது ஆன்மாவை, அதாவது தன்னை, நேசிக்கவில்லை என்று அர்த்தம்.

கடவுளை நேசியாததே பாவம்.
அந்த பாவம் ஆன்மாவில் இருக்கும்போது  மகிழ்ச்சியாக இருப்பவன் தனது ஆன்மாவை, அதாவது, தன்னை நேசிக்கவில்லை.

அவனுக்குதான் அது பாவம் என்று தெரியாதே என்று சொல்லலாம்.

ஆனால் தான் சுகமில்லாதிருக்கும் போது அதை அறியாதவன் பரிதாபத்துக்கு உரியவன்.

அவன் தன்னை சுகமாக்க முயற்சி எடுக்க மாட்டான்.

தனது அழிவுக்குத் தானே காரணமாக இருப்பவன் பரிதாபத்துக்கு உரியவன்தானே!

இயேசு கொடுத்த இரண்டு அன்புக் கட்டளைகளில் மூவர் வருவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை (1) நேசி.

உன்னை (2) நீ நேசிப்பதுபோல உனது அயலானையும் (3) நேசி.

ஆக அன்பிற்குள் அடங்கியிருப்பவர்கள் : கடவுள், நமது அயலான், நமது ஆன்மா.


கடவுளை நேசிப்பவன்தான் அயலானையும், தனது ஆன்மாவையும் நேசிப்பான்.

தனது ஆன்மாவை நேசிப்பவன் அதைப் பாவத்தில் விழவிட மாட்டான்.

தனது ஆன்மாவைப் பாவத்தில் விழவிடுபவன் தனது நித்திய அழிவிற்குத் தானே காரணமாகிறான்.

ஆண்டவர் கேட்கிறார்:

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?"

ஒருவன் இந்த உலகத்திற்கே அதிபதி ஆகிவிட்டாலும்,

அவனது ஆன்மா பாவ நிலையில் இருந்தால்,

அதாவது நித்திய நரகில் விழக் கூடிய நிலையில் இருந்தால்,

அவன் உலக அதிபதியாய் இருப்பதனால் என்ன பயன்?

கடவுளையும், பிறனையும், தன்னுடைய ஆன்மாவையும் உண்மையிலேயே நேசிப்பவன் தான் நித்திய பேரின்ப வாழ்வுக்கு உரியவன்.

அகில உலக அதிபதியாய் இருப்பதனால் மட்டும் ஒருவன் நித்திய பேரின்ப வாழ்வுக்கு உரியவன் அல்ல.

ஒருவன் அகில உலகுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும்,

உலகில் எந்த பொருளுக்கும் சொந்தக்காரனாக இல்லாவிட்டாலும்,

அவனது ஆன்மா கடவுளுக்கு ஏற்றபடி இருந்தால்தான் அவனுக்கு விண்ணக வாழ்வு கிடைக்கும்.

ஆகவே நமக்கு இந்த உலகம் முக்கியம் அல்ல.

நமது ஆன்மா இறைவனுக்கு ஏற்றபடி வாழ்வதுதான் முக்கியம்.

ஆகவே நமது ஆன்மா பாவத்தில் விழாதபடி பார்த்துக் கொள்வோம்.

இறைவனுக்காக வாழ்வோம்,
இறைவனோடு வாழ்வோம், இவ்வுலகிலும், விண்ணுலகிலும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment