Saturday, June 11, 2022

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."(மத். 5:29)

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."
(மத். 5:29)

"ஏங்க, இன்றைக்குச் சீக்கிரம். வீட்டுக்கு வந்துட்டீங்க.

செய்ய வேண்டிய வேலையைச் சீக்கிரம் முடிச்சிட்டீங்களா?"

", இல்லை. வேலையையே முடித்து விட்டேன்."

"என்னங்க சொல்றீங்க?"

", வேலையை resign பண்ணிவிட்டேன்."

"வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் என்ன ஆச்சி."

", ஒன்றும் ஆகி விடக்கூடாது என்பதற்காகத்தான் வேலையை விட்டு விட்டேன்.

இலஞ்சம் வாங்காமல் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டேன்.

இலஞ்சம் வாங்கி நரகத்துக்குப் போவதை விட பட்டினி கிடந்து மோட்சத்துக்குப் போகலாம்."

"நீங்க எடுத்த முடிவு சரிதாங்க. ஆண்டவரே அதைத்தான் சொல்லியிருக்கார்,

"உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு."

இரண்டு கண்களோடு நரகத்துக்குப் போவதைவிட 

ஒற்றைக்கண்ணனாய் மோட்சத்துக்குப் போவது தான் நல்லது."


", என்னடா பேரப்புள்ள, டயரியும் கையுமாய்."

"இதோ, நான் எழுதியிருப்பதைப் பாருங்க."

", எதாவது நாடகம் எழுதப் போறியா?''

"இல்ல, தாத்தா, இன்றைய பைபிள் வசனத்தை வாசித்து விட்டு மனதில் பட்டதை எழுதினேன்."

", பைபிள் வசனத்தின் கருத்து என்ன?"

"பாவம் செய்ய காரணமாக இருப்பவை எதாக இருந்தாலும்,

சந்தரப்பமாக இருந்தாலும், பொருட்களாக இருந்தாலும், ஆட்களாக இருந்தாலும்

அவற்றை விட்டு நாம் விலகி விட வேண்டும்."


", சந்தர்ப்பத்துக்கு ஒரு உதாரணம் கொடு."

"உங்க phoneல you Tube இருக்கா?"

", இருக்கே. எல்லா Smart phone லயும் இருக்குமே."

"சிலர் பொழுது போகாவிட்டால் அதற்குள்ளே போவார்கள்.

உலகத்தில் இருப்பது போலவே அதற்குள் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.

பார்க்கக் கூடியதும் இருக்கும், பார்க்கக் கூடாததும் இருக்கும்.

அதற்குள் பார்வையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் சில காட்சிகள் மனதுக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாய் இருக்கும்.

கலை உணர்வோடு பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அவற்றைப் பார்ப்பவர்களின் மனதை அவை கெடுத்து விடும்.

அவை நமது மனதைத் கெடுப்பதற்காக சாத்தான் விரித்து வைத்திருக்கும் வலைகள்.

அவற்றின் பக்கம் போகாமல் நம்மை நாமே கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பொழுதுபோக்கிற்காகப் போகின்றவர்களுக்கு you Tube பாவ
சந்தர்ப்பம்.

திருப்பலி, பிரசங்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கப் போனால் கண்களை அவற்றை விட்டு வேறு பக்கம் திருப்பக் கூடாது"

", அடிக்கடி சினிமா பார்ப்பது கூட மனதைக் கெடுக்கும்."

"இன்று அரசியல் இருக்கும் நிலையைப் பார்த்தால்,

நேர்மையாக வாழ ஆசைப் படுகிறவர்கள் அதன் பக்கமே போகக்கூடாது.

அரசியல் வாதிகளிடம் கொள்ளும் நட்பு கூட பாவ சந்தர்ப்பமாக மாறும்.

அவர்கள் இலஞ்சம் வாங்குவதற்கு நண்பர்களைப் பயன் படுத்துவார்கள்."

", பாவத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்களை நமது நட்பு வட்டத்திற்குள் சேர்க்கக்கூடாது.

நண்பர்களில் யாராவது நம்மைப் பாவம் செய்யத் தூண்டுவாரானால்

 அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரது நட்பை உடனே விட்டு விட வேண்டும்.

நண்பர்கள் என்பதற்காக குடிகாரர்களோடு சுற்றக் கூடாது.

'நான் குடிக்க மாட்டேன்' என்று சொல்லிப் பயனில்லை.

பாவ சந்தர்ப்பத்துக்குள் நுழையவே கூடாது."

"தாத்தா, பாவிகளால் நிறைந்த உலகம் இது.

நம்மைச் சுற்றி வாழ்வோர் அனைவரும் இறைப் பற்று உள்ளவர்கள் எனக் கூற முடியாது.

அவர்களுக்கும் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் அறிவிக்க வேண்டும்.

அவர்களோடு பழகாமல் எப்படி அவர்களை மனம் திருப்ப முடியும்?"

", வியாதியஸ்தனுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரைப் போல சுய பாதுகாப்புடன் பழகி அவர்களை மனம் திருப்ப வேண்டும்.

செப உதவி மிக அவசியம்.

இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார்.

நாமும் இயேசுவின் துணையோடு பாவிகளை மனம் திருப்பவதற்காக அவர்களைத் தேடிச் செல்லலாம்.

விவேகத்துடனும், சுயகட்டுப் பாட்டுடனும் செயல் புரிய வேண்டும்.

ஆண்டவருடைய உதவியால் ஆகாதது எதுவுமில்லை."

"ஆண்டவர் "உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு." என்று தான் சொல்லியிருக்கிறார்.

கண் நன்மை செய்ய உதவியாய் இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சந்தர்ப்பம்  பாவம் செய்யத் தூண்டினால் அது பாவ சந்தர்ப்பம்.
விலக்கி விட வேண்டும்.

அது பாவிகளை மனம் திருப்ப உதவியாய் இருந்தால்  அதை நற்செய்திப் பணிக்காகப்  பயன்படுத்த வேண்டும்.

உலகோடு நாம் போகாமல் அதை நமது ஆண்டவருடைய வழிக்குக் கொண்டுவருவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment