"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."
(அரு. 17:18)
"தாத்தா, இயேசு தந்தையிடம் செபிக்கும் போது அவர் தனது சீடர்களை உலகிற்கு அனுபுவதை தந்தை அவரை உலகிற்கு அனுப்புவதோடு ஒப்பிடுகிறாரே,
சீடர்கள் அவர் அளவுக்கு உயர்ந்தவர்களா?"
"உனது கேள்விக்குப் பதில் சொல்லுமுன் சில உண்மைகளைக் கூறவேண்டும்.
கடவுள் அளவு கடந்த அன்பு உள்ளவர்.
அவரது அன்பின் மிகுதியால் தனது அன்பைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுமில்லாமையிலிருந்து மனிதனைப் படைத்தார்.
தான் மனிதனை அன்பு செய்வது போல அவனும் தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை.
மனிதன் தன்னிலே ஒன்றுமில்லாதவன் என்று அவருக்குத் தெரியும்.
ஒன்றுமில்லாமையிலிருந்து ஏன் மனிதனைப் படைத்தார்?
அன்பு செய்ய.
எப்படி அன்பு செய்ய?
அளவு இல்லாத விதமாய்.
மனிதன் அளவு உள்ளவன்.
அளவில்லாத கடவுள் அளவுள்ள மனிதனை அளவில்லாத விதமாய் அன்பு செய்வது எதைக் காட்டுகிறது?
அவரது அளவில்லாத தாராள குணத்தை. (generosity)
.இயேசுவைப் பெற்ற தந்தை மனிதர்களாகிய நம்மைப் பிள்ளை களாக சுவிகரித்துக் கொண்டார்.
நாமும் அவரை உரிமையோடு,
"தந்தையே" என்று அழைக்கிறோம்.
கடவுள் நம்மை நேசிப்பது நாம் உயர்ந்தவர்கள் என்பதற்காக அல்ல.
அவரது தாராளமான, அளவில்லாத அன்பின் காரணமாக.
இந்த உண்மையை மனதில் வைத்துக் கொண்டு நீ கூறிய வசனத்தைத் தியானித்துப் பார், புரியும்."
"தந்தை மனுக்குலத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக அதை பாவத்திலிருந்து மீட்பதற்காக தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
அவரும் அதற்கான நற்செய்தியை அறிவித்துவிட்டு,
பெரிய வியாழன் அன்று இரவு வெள்ளிக்கிழமை தான் பட விருக்கும் பாடுகளுக்காகவும்,
தனது சிலுவைப் பலிக்காகத்
தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அப்போது தந்தையை நோக்கி சொல்லும் செபத்தில்தான்
இந்த வசனம் வருகிறது.
"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."
தன்னை எந்த நோக்கத்திற்காக தந்தை உலகிற்கு அனுப்பினாரோ அதே நோக்கத்திற்காகத்தான் இயேசுவும் சீடர்களை உலகிற்கு அனுப்புகிறார். அதாவது, மனுக்குலத்தின் மீட்பு.
இயேசு தந்தையை நோக்கி செபிக்கிறார் என்றால் என்ன பொருள்?
இயேசு கடவுள். தந்தையும் கடவுள்.
ஒரே கடவுள்.
மகன் தந்தையோடு பேசுகிறார் என்றால் கடவுள் தனக்குள் நினைத்துக் கொள்கிறார் என்றுதான் பொருள்.
தந்தைக்கும் மகனுக்கும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே சித்தம், ஒரே நினைப்பு.
மகன் நினைப்பதைத்தான் தந்தையும் நினைப்பார்.
வியாழன் இரவு இறைமகன் இயேசு தனது சீடர்கள் முன் அவர்களுக்குக் கேட்கும்படி நினைக்கிறார், சீடர்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கரையைக் காண்பிப்பதற்காக.
தான் நற்செய்தி அறிவித்தபோது தனக்கு என்ன கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டனவோ,
என்ன அவமானங்கள் எல்லாம் ஏற்பட்டனவோ அவை அனைத்தும் சீடர்களுக்கும் ஏற்படும் என்று அவருக்கு தெரியும்.
இவை எல்லாம் உடல் ரீதியானவை.
ஆனால் அவர்களுக்கு ஆன்மீக ரீதியாக எந்த கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பது இயேசுவின் ஆசை.
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தைரியமாக அவற்றை ஏற்றுக்கொண்டு நற்செய்தி பணியை தொடர வேண்டும்
பணியில் தளர்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
சாத்தானிடமிருந்து எந்த விதமான ஆன்மீக இடையூரும் அவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பது இயேசுவின் ஆசை.
இந்த ஆசையைத்தான்,
''தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்."
என்ற வார்த்தைகள் மூலம் தன்னுடைய சீடர்களுக்கு தெரிவிக்கிறார்."
",சீடர்கள் அவர் அளவுக்கு உயர்ந்தவர்களா?" என்று கேட்டாயே அதற்கு உன் பதில் என்ன?"
''கடவுள் அளவுக்கு உயர்ந்தவர்களாக யாரும் இருக்க முடியாது.
அளவு இல்லாத அவருக்கு ஈடாக யாரால் இருக்க முடியும்?
அளவு இல்லாத கடவுள் மனிதன் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தன்னைத்தானே தாழ்த்தி மனிதனாகப் பிறந்தார்.
மனிதனாய்ப் பிறந்த கடவுள் மனிதன் படக் கூடிய அத்தனை துன்பங்களையும் அனுபவித்தார்.
ஆனால் அவர் தன்னைத்தானே தாழ்த்தினாலும் அவர் அளவு இல்லாத கடவுள்தான்."
", ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய சீடர்கள்தான்.
அப்படியானால்?"
"தந்தை அவரை அனுப்பியது போல நம்மையும் அவர் அனுப்புகிறார்.
அவரைப்போலவே நாமும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
அவரைப்போலவே நாமும் சிலுவையை சுமக்க வேண்டும்.
அவரைப்போலவே நாமும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்.
ஆன்மீக ரீதியில் கடவுளோடு இணைந்து வாழ வேண்டும்.
உலக மீட்புக்காக நாமும் உழைக்க வேண்டும்.
நம்மைப் பற்றிய இயேசுவின் ஆசை இதுதான்.
நம்மைப் பற்றி கடவுள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment