"மனிதர் பார்க்க வேண்டுமென்று நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத். 6:1)
"தாத்தா, நாம் நற்செயல்கள் செய்யும்போது அவற்றை மற்றவர்கள் பார்க்கும்படியாகச் செய்ய வேண்டுமா, அல்லது பார்க்காதபடி செய்ய வேண்டுமா?"
",நற்செயல் என்றால் என்ன?"
"நமது விசுவாசம் செயல் வடிவம் பெறும் போது அதை நற்செயல் என்கிறோம்."
", கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு."
" இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்டு,
கடவுளை நம் தந்தையாக ஏற்றுக் கொண்டு,
அவருக்காக நமது வாழ்வை முழுவதும் மனதார அர்ப்பணிப்பதே விசுவாசம்.
நமக்குள் இருக்கும் இந்த அர்ப்பணம் சொல்லாக வெளிவரும்போது அதை நற்செய்தி அறிவித்தல் என்கிறோம்.
செயலாக வெளிவரும்போது அதை நற்செயல் என்கிறோம்.
மொத்தத்தையும் சேர்த்து விசுவாச வாழ்வு என்கிறோம்."
", மனதுக்குள் விசுவசிக்கிறோம்.
விசுவசிப்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம்.
நற்செயல்கள் செய்கிறோம்.
சில நற்செயல்களைக் கூறு பார்ப்போம்."
" பசியாய் இருப்பவர்கட்கு உணவு கொடுப்பது.
தாகமாய் இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது.
ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை கொடுப்பது.
நோய்வாய்ப் பட்டவர்களைப் பார்ப்பது,
சிறையில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவது,
படிக்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது
சுருக்கமாக,
தேவைப் படுபவர்களுக்கு உதவுவது."
", மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களுக்குத் தெரியாமல் செய்ய முடியுமா?"
"நான் குறிப்பிட்ட உதவிகளைத் தெரியாமல் செய்ய முடியாது.
ஆனாலும் தெரியாமல் செய்யக் கூடிய உதவிகளும் இருக்கின்றன.
உதாரணத்துக்கு, அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுக்கும்போது,
அனாதைகளுக்கு அது தெரிய வேண்டிய அவசியமில்லை."
",சில உதவிகளை செய்யும்போது பிறருக்கு தெரியும்.
சில உதவிகளை செய்யும்போது தெரியாது.
அது முக்கியமல்ல.
நாம் விசுவாசத்தின் அடிப்படையில் உதவி செய்ய வேண்டும்.
அதாவது நாம் விசுவசிக்கும் கடவுளுக்காக, அவரது மகிமைக்காக செய்ய வேண்டும்.
நமது மகிமைக்காக அல்ல.
"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத். 5:16)
என்று நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்."
"மனிதர் பார்க்க வேண்டுமென்று நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்." என்றும்
ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே."
",நாம் தெருவழியே போகிறோம்.
பிறர் நம்மை பார்க்க வேண்டும் என்று எண்ணி போகிறோமா?
யாரும் பார்க்க கூடாது என்று எண்ணி போகிறோமா?"
''எதையும் எண்ணவில்லை. போக வேண்டியிருக்கிறது, போகிறோம்."
", ஆனால், தலையில் பொருட்களைச் சுமந்து விற்கும் வியாபாரி ?"
"மற்றவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போவான்.
மற்றவர்கள் பார்த்தால்தான் வியாபாரம் நடக்கும்.''
",அதே போல் தான் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது கடவுளுக்காகச் செய்வதால் அவர் பார்த்தாலே போதும்.
மற்றவர்கள் பார்த்தால் நாம் செய்யும் பிறர் சிநேக உதவியைப் பார்த்து இறைவனை மகிமைப் படுத்த வேண்டும்.
நாம் செய்யும் நற்செயல் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,
நமது பெருமைக்காக செய்யப்படக் கூடாது.
நமது நோக்கம் தான் நமது செயலின் தன்மையை தீர்மானிக்கும்.
இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் எல்லா செயல்களும் நற்செயல்கள் தான்.
நமது பெருமைக்காக செய்யப்படும் எந்த செயலும் நற்செயல் அல்ல.
இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அவர் தரும் சன்மானம் நித்திய பேரின்பம்.''
"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவுவைப் படைத்தான் தனை வணங்க"
என்று தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு.
அதன் பொருள் இப்போதுதான் புரிகிறது."
", என்ன புரிகிறது?"
"கடவுள் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்தார். மனிதனைத் தனக்காக, தன்னை வணங்கி வாழப் படைத்தார்.
மனிதன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
அவற்றைக் கடவுளை ஆராதிப்பதற்காகவும், அவரது மகிமைக்காகவும் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மனிதன் நித்திய காலம் வாழ வேண்டியதும் கடவுளோடு தான்."
", நாம் குறுகிய காலம் வாழ கடவுள் தந்த உலகை அவருக்காகப் பயன்படுத்தினால்
அவரோடு நாம் நித்திய காலம் வாழலாம்."
"நாம் அவருக்காக வாழ்ந்தால் அவருக்கு என்ன இலாபம்?"
", கடவுள் பரிபூரணமானவர். அளவில்லாத நன்மைத்தனம் உள்ளவருக்கு நாம் கொடுக்கும் எதுவும் தேவையில்லை.
நம் மீது அவருக்கு இருக்கிற அளவற்ற அன்பின் காரணமாக அவர் நம்மை படைத்தார்.
நாம் அவரோடு நித்திய காலம் வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் படைத்தார்.
நாம் அவருக்காக வாழும்போது நன்மை பெறுவது நாம்தான்.
அவரது மகிமைக்காக நாம் நம் அயலானுக்கு உதவும்போது
நமது அயலானைப் படைத்த அவருக்கும் நமக்கும் நெருக்கம் அதிகம் ஆகும்.
நெருக்கம் அதிகமாக அதிகமாக நமது விண்ணகப் பேரின்பம் அதிகமாகும்.
உண்மையில் நமது விண்ணக வாழ்வுக்காகத்தான் நாம் அவருக்காக வாழ்கிறோம்.
கடவுள் நம்மைப் படைத்ததே நாம் அவரோடு நித்திய காலம் வாழ்வதற்கே.
அவரது மகிமைக்காக வாழும்போது நாம் நமது நித்திய பேரின்ப வாழ்வை உறுதி செய்து கொள்கிறோம்."
"எல்லாம் அவரது அதிமிக மகிமைக்கே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment