Thursday, June 2, 2022

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்.'' (அரு.21.15-19)

 "என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்.'' (அரு.21.15-19)

இறைமகன் இயேசு நித்திய காலமாய் வாழ்பவர்.

அவர் எடுக்கும் முடிவுகளும், தீட்டும் திட்டங்களும் நித்தியமானவ.

ஒரு காலத்தில் கடவுள் மட்டுமே இருந்தார்.

நாம் வாழும் பிரபஞ்சம் (Universe) இல்லை.

கடவுள் அதை எப்போது படைப்பது என்று நித்திய காலமாகத் திட்டமிட்டு, திட்டமிட்ட காலம் வந்ததும் படைத்தார்.

இப்போது கூட அப்படித்தான் படைத்துக் கொண்டிருக்கிறார்.

இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக நியமிக்க அவர் போட்ட திட்டமும் இப்படித்தான்.

பன்னிரண்டு அப்போஸ்தலர்களை நியமிக்க அவர் போட்ட திட்டமும் நித்தியமானதுதான்.

அவர்களில் யூதாஸ் பண ஆசை காரணமாக அவரோடு ஒத்துழைக்கவில்லை.

நாம் ஒரு வீடு கட்ட திட்டமிட்டால் கட்டும்போதே அது மிகச் சிறந்த  வீடாக இருக்கவே திட்டமிடுவோம்.

ஆனால் நற்செய்தி நூல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்வது:

 சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் உள்ள கடவுள் 

 சாதாரண, 
 சிறந்த படிப்பறிவு இல்லாத, பிழைப்பிற்காக ஏதாவது ஒரு தொழிலைச் செய்து கொண்டிருந்த, ,
குறைகள் நிறைந்த
தொழிலாளிகளையே

அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர்கள் தன்னை பார்த்து 
தன்னுடைய அருளின் உதவியினால்,
சுய முயற்சி செய்து,
இயல்பாக ஆன்மீகத்தில் வளர வேண்டும்,
 நிறைவை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

அதற்காகவே அவர்களை மூன்று ஆண்டுகள் இரவும், பகலும் தன்னோடே வைத்திருந்தார்.

ஆனால் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர்களில் 
அநேகர் இயேசுவின் மரணம் வரை திருந்தியதாகத் தெரியவில்லை.

அருளப்பரும், வியாகப்பரும் இயேசுவின் அரசில் உயர் பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு ரத்த வியர்வை வியர்த்துக் கொண்டிருந்தபோது  இராயப்பரும், அருளப்பரும், வியாகப்பரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

இயேசு கைது செய்யப்பட்டபோது
சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.

இராயப்பர் மூன்று முறை இயேசுவைத் தெரியாது என மறுதலித்தார்.  

கடைசியில் அருளப்பர் மட்டும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின் 
சிலுவையடியில் நின்றார்.

இயேசு பலமுறை தான் மரித்த மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதாகச் சொல்லியிருந்தும் யாரும் அதை நம்பியதாகத் தெரியவில்லை.

தோமையார் ஆண்டவர் உயிர்த்துக் காட்சியளித்த பின்   அவருடைய காயங்களில் விரலை விட்டால்தான் நம்புவேன் என்றார்.

சீடர்களின் நிலை இப்படி இருக்க எந்த அடிப்படையில் தன்னை மூன்று முறை மறுதலித்த இராயப்பரை திருச்சபையின் தலைவராக நியமித்தார்?

"ஆண்டவரே, நான் உம்மை  நேசிக்கிறேன்"

சொன்னதினாலா?

எல்லா சீடர்களுமே அவரை நேசிப்பது ஆண்டவருக்குத் தெரியும்.

நமது தகுதியின் அடிப்படையில் நமக்கு ஆண்டவர் ஏதாவது தருவார் என்று எதிர்பார்க்கக்கூடாது.

ஏனென்றால் ஆண்டவரின் அருள் இல்லாமல் நமக்கு எந்த தகுதியும் இருக்க முடியாது. 

ஆண்டவர் அவராகவே நம்மைத் தேர்ந்தெடுப்பது தான் நமது தகுதி.

ஒருவர் குருவானவர் ஆகுவதற்கு தகுதி தேவ அழைத்தல் மட்டுமே.

அப்போஸ்தலர்கள் யாரையும் அவர்களது தகுதியின் அடிப்படையில் ஆண்டவர் தேர்ந்தெடுக்கவில்லை.

யாரைத் தேர்ந்தெடுக்க விரும்பினாரோ அவர்களை தேர்ந்தெடுத்தார்.

இராயப்பரைத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது ஆண்டவரின் சித்தத்தின் காரணமாகத்தான்.

பொதுவாகப் பார்த்தால் அப்போஸ்தலர்கள் எல்லோருமே பயந்தாங்கொள்ளிகள்.

தங்கள் உயிரைத் தியாகம் செய்து திருச்சபையை உலகெங்கும் பரப்ப தைரியம் கொடுத்தவர் பரிசுத்த ஆவியானவர்.

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப். 1:8)

ஆண்டவர் உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணகம் எய்துமுன் அப்போஸ்தலர்களுக்குக் கூறிய வார்த்தைகள் இவை.


இதை விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்:

"சீடர்களே, நான் விண்ணகம் செல்கின்றேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.

பரிசுத்த ஆவி உங்கள் மேல் இறங்கி வருவார்.

நீங்கள் தைரியத்துடன் நற்செய்தியை போதிக்க வேண்டிய வல்லமையை அவர் உங்களுக்குத் தருவார்.

அவர் தரும் வல்லமையின் உதவியுடன் யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நற்செய்தியை அறிவித்து 

என் சாட்சிகளாயிருப்பீர்கள்"

சீடர்கள் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்தது அவர்களது சொந்த தைரியத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்.
 
அப்படியானால் இயேசு அவர்களோடு இருக்கும் போது பரிசுத்த ஆவி இல்லையா?

பரிசுத்த தம திரித்துவத்தின் ஆட்கள் மூவரும் ஒருவருள் ஒருவர் இருப்பவர்கள்.

மகனுள்  தந்தையும், பரிசுத்த ஆவியும் இருக்கிறார்கள்.

கடவுள் ஒருவரே. அவர் எங்கும் இருக்கிறார்.

அப்படியானால்

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது"

என்று ஏன் ஆண்டவர் சொல்கிறார்?

கடவுள் தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நாளைக் குறித்து வைத்திருக்கிறார்.

அப்போஸ்தலர்களுக்குத் தைரியம் கொடுப்பதற்கு பெந்தகோஸ்தே நாளைக் குறித்து வைத்திருந்தார்.

அதன்படி அந்நாளில் அப்போஸ்தலர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார்.

ஏன் அந்த நாளைக் குறித்து வைத்திருந்தார்?

அது அவருடைய சித்தம்.

அவருடைய சித்தப்படி தான் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக நியமித்தார்.

அவரது சித்தத்தை அனைத்து சீடர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

இராயப்பரின் தலைமையில் திருச்சபை உலகெங்கும் பரவியது.

இன்று இராயப்பரின் வாரிசாக இருப்பவர் பாப்பரசர் பிரான்சிஸ்.

இன்றும் திருச்சபையைப் பரிசுத்த ஆவியானவர்தான் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

அன்று அப்போஸ்தலர்களை வழி நடத்திய அதே பரிசுத்த ஆவியானவர் தான்

 இன்று நமது ஆயர்களையும், குருக்களையும்   வழி நடத்திக் கொண்டிருக்கிறார், என்றும் வழி நடத்துவார்.

நாம் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது பரிசுத்த ஆவிக்குதான் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.

திருச்சபையின் சொற்படி நடப்போம்,

உறுதியாக மீட்பு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment