Sunday, April 4, 2021

எதிர் முனைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.

எதிர் முனைகள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன.


"ஏண்ணே, Service பூராவும் கதை சொல்லி, அதற்காகவே சம்பளம் வாங்குகின்ற வாத்யார் பார்த்திருங்கீங்களா?"

"பார்த்திருக்கேனே, கண்ணாடியில."

"நேர்ல பார்த்ததில்லையோ?"

"நேர்ல பார்த்தா மூஞ்சி தெரியாது."

"ஏண்ணே?"

"என் மூஞ்சி எனக்கு எப்படிடாத் தெரியும்." 

"அப்போ நீங்க Hi-story வாத்யாரா?
அடிக்கடி கதை சொல்லும்போதே நினைத்தேன்.

சரி, இப்போ ஒரு கதை சொல்லுங்க."

"History வாத்யார்னா தெரிஞ்ச கதையைத்தான் திரும்பத்திரும்ப சொல்லுவார்"

"பரவாயில்லை. சொல்லுங்க."

", ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு பையன்."

"அந்த ஊரிலேயே ஒரே ஒரு பையன்தானா?"

"நம்ம கதையில. ஒரே ஒரு பையன்.
வயது 14 இருக்கும். 

ஒரு நாள் அவனுக்கு பயங்கரமான பசி.

ஊர்ல நிறைய ஓட்டல்கள் இருக்கு. ஆனா அவன் கையில பைசா இல்லை. 

துணிந்து ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிட உட்கார்ந்தான். வயிறார சாப்பிட்டான்.

Bill 100 ரூபாய் வந்தது. Cash counterக்கு வந்தான்.
Cashierடம் Billஐக் கொடுத்தான்.

"பைசா?"

"ஒரு பைசா கூட இல்லை சார்."

"பைசா இல்லாமல் ஏன் சாப்பிட்டாய்?"

"பயங்கர பசி."

"இப்போ என்ன செய்ய போற?"

" எங்கிட்ட பைசா இல்லை. நீங்க சொன்னதை செய்கிறேன்."

"100 ரூபாய் தருகிற வரை ஹோட்டலில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறாயா?''

"பார்க்கின்றேன், சார்."

"சம்பளம் கிடையாது. இங்கேயே வேலை பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, இங்கேயே படுத்துக்கொள்ளலாம். 

வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்."

"சரி, சார்."

பையன் அங்கேயே வேலை பார்க்க ஆரம்பித்தான்.

"அப்புறம்?"
 
"அப்புறம் தொடரும்.''

"கதையை ஆரம்பித்தவுடனே தொடரும் என்கிறீர்கள்?"


 ".ஆரம்பிக்காமல் எப்படித் தொடர முடியும்?

 நீ பள்ளிக்கூடத்துக்கு போனது இல்லையா?

ஒரே பிரிவு வேளையில் வரலாறு முழுவதையும் சொல்லிவிட முடியுமா?

அந்த பையனுடைய வரலாற்றில் இது ஒரு சிறு பகுதி.

இப்போது சொன்னதிலிருந்து உனக்கு ஏதாவது பாடம் கற்றுக்கொள்ள முடிகிறதா?"

"வரலாற்றிலிருந்து யாரும் பாடம் கற்றுக் கொண்டதாக வரலாறே இல்லை.

ஆனாலும் நீங்கள் ஆசைப்படுவதால் எனது மனதில் பட்டதைச் சொல்கிறேன்.

அந்த பையனிடம் பைசா எதுவும் இல்லை. ஆனாலும் அவன் அவனிடம்தான் இருக்கிறான்.

ஆகவே அவன் பைசா கொடுக்க முடியாவிட்டாலும் தனது சேவையை இலவசமாக கொடுக்கிறான்.

நாமும் இறைவன் முன் ஒன்றும் இல்லாதவர்கள் தான்.

இறைவன் நமக்கு செய்து வருகிற உதவிகளுக்குப் பதிலாக கொடுக்க நம்மிடம் எதுவே இல்லை.

அதற்காக வருத்தப்பட தேவை இல்லை.

நம்மையே இறைப்பணிக்கு அர்ப்பணித்து விட்டாலே போதும்."

", இறைவனும் நம்மைத்தான் விரும்புகிறார், நம்முடைய பணத்தை அல்ல.

கைநிறைய பணத்தை அள்ளி காணிக்கையாகப் போட்டுவிட்டால் கடவுள் அதற்காக மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார் என்று சொல்ல முடியாது.

நாம் வாழும் பிரபஞ்சமே அவரால் படைக்கப்பட்டது, அவருக்கே சொந்தமானது.

அவருக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய மனம் மட்டும் தான்.

நமது கோவில் விழாக்களில் பிரியும் காணிக்கையின் அளவை வைத்து தான் நாம் திருவிழாவின் சிறப்பை மதிப்பீடு செய்கிறோம்.

 ஆனால் கடவுள் திருவிழாவினால் எத்தனை பேர் பாவமன்னிப்பு பெற்று அவரிடம் திரும்பினார்கள் என்பதை வைத்துதான் விழாவின் சிறப்பை மதிப்பீடு செய்கிறார்.

காணிக்கையாக ஒரு கோடி ரூபாய் பிரிந்து ஒருவர்கூட பாவசங்கீர்த்தனம் செய்திருக்காவிட்டால் திருவிழாவின் மதிப்பீடு zeroதான்!''

"என் மனதில் படும் ஒரு எண்ணத்தை சொல்லலாமா?"

",சொல்லு."

"நமது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயற்கை விதிகளுள் அடிப்படையானது எதிர்முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன.

(Opposite poles attract each other.)

இந்த ஈர்ப்பின் காரணமாத்தான் நட்சத்திரங்களும் கோள்களும் அவ்வவற்றின் பாதையில் பாதை தவறாமல் வலம் வருகின்றன.

இந்த இயற்கை விதியின் அடிப்படையில் உலக வாழ்வையும் ஆன்மீக வாழ்வையும் உற்று நோக்கினால் 

நிறைவும், ஒன்றும் இல்லாமையும் ஒன்றை ஒன்று ஈர்ப்பது புரியும்.

மனிதன் தன்னிலே ஒன்றும் இல்லாதவன்.

அவனது ஆன்மாவும் உடலும்கூட அவனுக்கு உரியன அல்ல.

உலக ரீதியில் அவன் இயங்க அவனுக்கு வெளியே உள்ள பொருட்கள் தான் உதவுகின்றன. ஆகவேதான் அவற்றின் மீது அவனுக்கு ஆசை வருகிறது.

மனிதனின் பண ஆசைக்கு அதுவே காரணம்.

இல்லாமை இருப்பதை ஈர்க்கிறது.

ஆன்மீக ரீதியில் ஆன்மீக வாழ்வில் அவன் இயங்க அவனுக்கு வெளியே இருந்துதான் இறைவனின் அருள் வர வேண்டி இருக்கிறது.

ஆகவேதான் ஆன்மீகவாதி இறை அருள் மீது ஆசை கொள்கிறான்.

பொருளும் சரி, அருளும் சரி அளவான முறையில் எவ்வளவு கிடைத்தாலும் மனிதனுக்கு திருப்தி இருக்காது.

உலக வாழ்வில் இந்த பிரபஞ்சமே ஒருவனுக்கு சொந்தமானாலும் திருப்தி ஏற்படாது. ஏனெனில் முழு பிரபஞ்சமும் அளவு உடையது தான்.

ஆன்மீக வாழ்விலும் ஒன்றும் இல்லாதவனுக்கு நிறைவான இறைவன் கிடைத்தால் மட்டுமே திருப்தி ஏற்படும்.

ஒன்றுமே இல்லாத மனிதன் நிறைவான இறைவனோடு என்று விண்ணகத்தில் இணைகிறானோ அன்றுதான் அவன் முழு திருப்தி அடைகிறான். அதுதான் அவருக்கு பேரானந்தம்.

நிறைவான இறைவனும் ஒன்றுமில்லாமையைத்தான் அதிகமாக நேசிப்பது போல் தெரிகிறது.

ஒன்றுமில்லாமையில் இருந்துதான் பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் படைத்தார்.

நமது ஒன்றுமில்லாமை காரணமாகத்தான் இறைவன் அளவுகடந்த விதமாக நம்மை நேசிக்கிறார்.

நம்மை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்றால்

 ஒன்றுமில்லாத நம்மோடு வாழ்வதற்காக 

நம்மைப்போல் மனிதனாக  வாழ்ந்தார். 

பிறப்பே இல்லாதவர் நம்மை போல மனிதனாகப் பிறந்தார் .

இறப்பே இல்லாத அவர் நம்மைப் போல இறந்தார் .

துன்பமே பட முடியாத அவர் நம்மைப்போல துன்பப்பட்டார்.

இந்த பிரபஞ்சத்திற்கே உரிமையாளரான அவர் மிகவும் ஏழையாகப் பிறந்தார். 

சர்வத்தையும் படைத்த தந்தையின் மகனாகிய அவர் ஒரு ஏழைக் கன்னியின் மகனாகப் பிறந்தார்.

உள்ளவர் இல்லாமையை (poverty) ஏற்றுக் கொண்டார்..

எல்லாவகையிலும் இறைவனும் நாமும் எதிர் முனைகள்.

ஆகவேதான் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறோம்.

இந்த ஈர்ப்புதான் நமது ஆன்மீக வாழ்வு.

இருமுனை ஈர்ப்பு மட்டும் தான் 
நமது உலக வாழ்வையும்,
 ஆன்மீக வாழ்வையும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஈர்ப்பின் காரணமாகத்தான் நம்மால் விண்ணை நோக்கி நடை போட முடிகிறது.

அண்ணே எனது எண்ணம் சரியா? தவறா?"

", எனக்கும் அது சரி எனவே தோன்றுகிறது.

பிறந்த பிள்ளையை யாரும் கவனிக்காமல் அப்படியே போட்டு விட்டால் அந்தப் பிள்ளை தானாக ஒரு மில்லி மீட்டர் கூட வளராது.

இறைவனின் அருள் இல்லாமல் நம்மால் சிறிதுகூட ஆன்மீகத்தில் வளர முடியாது.

இப்போது புரிகிறது. பொருள் மீது 
பற்று இருப்பவனுக்கு அருள் மீது பற்று ஏற்படாது.

அருள் மீது பற்று இருப்பவர்களுக்கு பொருள் மீது பற்று ஏற்படாது.

அருள் வாழ்வு வாழ ஆசை பட வேண்டும் என்றால் முதலில் நம்மை பொருள் பற்றிலிருந்து வெறுமை ஆக்க வேண்டும்.

பொருளாசையை முற்றிலும் நீக்கினால்தான் அருள் ஆசை நமக்குள் ஏற்படும்.

அதனால் தான் "ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது" என்று ஆண்டவர் அன்றே சொன்னார்.

நாம் நம்மிலே ஒன்றும் இல்லாதவர்கள் என்று எப்போது ஏற்றுக் கொள்கிறோமோ 

அப்போதுதான் நிறைவான இறைவனை நோக்கி நடைபோட ஆரம்பிப்போம்.

(The moment we accept our nothingness we start moving towards God.)

. நாம் ஒன்றும் இல்லாதவர்கள் என்பதை உணர்வோம்.

எல்லாம் வல்லவரை நாடுவோம்.

விண்ணகத்தில் அவரோடு இணைவோம்.

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத்.5:48)

என்ற இறைமகன் இயேசுவின் வாக்கு நிறைவேறும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment