Friday, April 2, 2021

எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.


"அப்பா, கொஞ்சம் இங்கே வாங்க."

"ஏண்டா, என்னையா கூப்பிட்ட?"


"ஆமா. உங்களைத்தான். வாங்க."

"ஏண்டா, அரட்டை அடிக்க இன்றைக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? 

சரி, சொல்லு"

"முதல்ல உட்காருங்கள். ஒரு கதை சொல்லப்போறேன்."

"எங்கிட்டையா?"

"ஆமா. உங்க கிட்டதான்."

"சரி. சொல்லு."

"ரோமாபுரியில சிசரோன்னு ஒரு பையன் இருந்தான்.

அவனுக்கு ஒரு நண்பன்.

இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் அதிகமாக நேசித்தார்கள்.

இணை பிரியாத நண்பர்கள்.

ஒருநாள் நண்பன் இறந்துவிட்டான்."

"ஏண்டா, கதையை ஆரம்பிக்கும் போதே ஒருத்தன கொன்னுப்புட்ட?"


"நான் கொல்லல. அவன்தான் இறந்துவிட்டான்.

நண்பனுடைய சொந்தக் காரங்க,
மற்றும் தெரிஞ்சவங்க எல்லோரும் அழுதார்கள்.

சிசரோ மட்டும் அழாமல் எப்போதும் போல மகிழ்ச்சியாக, சிரித்துக் கொண்டேயிருந்தான்.

இறந்த வீட்டில் அவன், இறந்தவனுடைய நெருங்கிய நண்பன், சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மற்றவர்கள்

நண்பனுடைய இறப்பினால் இவன் மன நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தார்கள்.

சிசரோவின் அப்பா அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு போய்,

"உனக்கு என்னடா ஆச்சி? நண்பன் இறந்து கிடக்கிறான். நீ சிரித்துக் கொண்டே இருக்கிற?"

"உண்மையில் உங்க கிட்ட நான்தான் கேள்வி கேட்கணும்.

எனது நண்பன், மிகவும் நல்ல பையன், இறந்து கிடக்கிறான்.

நீங்கள் ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?"

"யாராவது இறந்துவிட்டால் அவனுக்கு வேண்டியவர்கள் அழத்தானே செய்வார்கள்."

"இதென்னப்பா பைத்தியக்காரத்தனம்! நமக்கு வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் அழ வேண்டும் என்கிறீர்கள்?"

"இப்போ உன் நண்பன் மகிழ்ச்சியாகவா இருக்கிறான்? உனக்கு என்னமோ ஆகிவிட்டது."

"எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என் நண்பன் துன்பங்கள் நிறைந்த இந்த உலகத்தைவிட்டு சொர்க்கத்துக்குப் போயிருக்கிறான்.

சொர்க்க இன்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறான்.

நண்பன் மகிழ்ச்சியாக இருப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் நண்பன் மகிழ்ச்சியாக இருப்பது உங்களுக்குப் பிடிக்க வில்லை. அதனால்தான் அழுது கொண்டிருக்கிறீர்கள்."

அவனுடைய அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பேந்த பேந்த விழித்தார்."

"நானும் இப்போது அப்படித்தான் விழிக்கிறேன்.

இப்போ எதற்காக இந்த கதை?"

"இன்று என்ன கிழமை?"

"சனிக்கிழமை."

"நேற்று ?"

"வெள்ளிக்கிழமை."

",நேற்று இயேசு சிலுவையில் மரித்த நாள், நமக்கு துக்க நாளா மகிழ்ச்சிகரமான நாளா?"


"மகிழ்ச்சிகரமான நாள்.

இயேசுவைப் பொறுத்த மட்டில், அவர் எதற்காக மனிதனாகப் பிறந்தாரோ அது நிறைவேறியதால் அவருக்கு மகிழ்ச்சி.

இயேசு மரித்தவுடன் மீட்புக்காக பாதாளத்தில் காத்துக்கொண்டிருந்த அத்தனை பழைய ஏற்பாட்டு நல்ல ஆத்மாக்களும் விண்ணகம் அடைந்ததால் அவர்களுக்கு மகிழ்ச்சி.

இயேசுவின் மரணத்தால் விண்ணக வாசல் திறந்து விட்டதால் 

அங்கே போவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் மகிழ்ச்சி.

இப்போ நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.

இயேசுவின் மரணத்தின் காரணமாக நாம் அழ, வேண்டுமா மகிழ வேண்டுமா?"


",அழவும் வேண்டும், மகிழவும் வேண்டும்.

இயேசுவின் மரணத்திற்குக் காரணமான நமது பாவங்களுக்காக அழ வேண்டும்.

பாவங்களுக்காக அழும்போது அந்த அழுகையிலிருந்தே மகிழ்ச்சி பிறக்கும்.

பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

நாம் நமது பாவங்களுக்காக அழும்போது விண்ணகத்தில் வாழும் அனைவரும் நம் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.


"விண்ணகத்தில்.......
மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக். 15:7)


இயேசுவின் மரணத்திற்கு காரணமான நமது பாவங்களுக்காக அழுவோம், 

மன்னிப்பு பெறுவோம், 

நாம் பெற்ற பாவமன்னிப்பு நமது மகிழ்ச்சியின் ஊற்றாக செயல்படும். 

விண்ணக வாசல் திறந்து விட்டது, நமக்காக.

ஆகவே எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment