Wednesday, April 7, 2021

"உங்களுக்குச் சமாதானம்." (லூக்.24:36)

"உங்களுக்குச் சமாதானம்." 
(லூக்.24:36)


இயேசு பிறந்த அன்று விண்ணவர் பாடிய கீதம்,

"பூவுலகில் நன் மனதோர்க்கு சமாதானம் உண்டாகுக."

பூவுலகில் சமாதானத்தை உண்டாக்குவதுதான் இயேசு உலகில் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம்.

இறைவனுக்கும் மனிதருக்குமான சமாதான உறவைக் கெடுத்ததே இறைவனுக்கு எதிராக மனிதர் செய்த பாவம்தான்.

அப்பாவத்திலிருந்து மனிதரை மீட்டு, சமாதான உறவை மீண்டும் ஏற்படுத்தவே இயேசு பாடுபட்டு, மரித்து, உயிர்த்தார்.

தனது உயிரைக் கொடுத்து சமாதானத்தை மீட்டதால்தான் உயிர்த்த இயேசு தனது சீடர்களுக்கு காட்சி கொடுத்தபோது,

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக"

என்று வாழ்த்தினார்.

இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் இயேசு காட்டும் வழியில் நடந்தால்தானே அவரது நோக்கம் நம்மில் நிறைவேறும்!

நம்மில் அநேகர் அவர் காட்டும் சமாதான வழியில் நடக்க மாட்டோம் என்று அவருக்கு தெரிந்திருந்ததால்தான் அவர், 

"உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்." என்று சொன்னார்.
(மத்.10:34)

சட்டம் இருப்பதே அதை மீறுவதற்காகத்தான் என்று நினைப்பவர்கள் மத்தியில் இயேசு கொண்டுவந்த சமாதானம் என்ன செய்யும்?

குழந்தை இயேசுவை சூசையப்பரும், மரியாளும் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருந்த சமயத்தில்'

மெசியாவின் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 
சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து,

 "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்: எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான். என்றார்.
( லூக்.2:34)

இயேசுவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவர் எழுச்சியின் காரணமாக இருப்பார்.

ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு?

அவர்களின் வீழ்ச்சிக்கு இயேசுவை ஏற்றுக் கொள்ளாமை காரணமாக இருக்கும்.

சட்டத்தை மீறுபவர்கள் பழியைச் சட்டத்தின் மேல் போடுவது தானே வழக்கம்.

"ஏன் சார் என் பையனை அடித்தீர்கள்?"

"காலையில் எட்டரை மணிக்கு Grammar classக்கு அவன் வரவில்லை."

"பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது காலை ஒன்பதரை மணிக்கு. நீங்கள் ஏன் அவனை எட்டரை மணிக்கு வரச் சொன்னீர்கள்?"

பையனை படிப்பதற்காக சீக்கிரம் வரச் சொன்னால் அதையே தவறு என்று கருதும் பெற்றோர்களுக்கு எப்படி உண்மையை புரியவைக்க முடியும்?

ஒரு முறை ஒரு மாணவனின் தகப்பனார் என்னிடம் வந்து பயங்கரமாக மோதினார்.

"உங்கள் பள்ளி கூடத்திற்கு Centem result வாங்குவதற்காக எங்கள் பிள்ளைகளை பாடாய்ப் படுத்துகிறீர்கள்!"

இத்தகைய மனப்பக்குவம் உள்ளவர்கள் இயேசுவை பார்த்தும் கூறுவார்கள்,

"உமது மோட்சத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக எங்கள் மேல் ஏன் சிலுவையை சுமத்துகிறீர்?"  

இப்படிப்பட்டவர்கள் இயேசு கொண்டுவந்த சமாதானத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

இயேசுவை நேசிப்பவர்கள் அவரோடு சமாதானமாக இருப்பதற்காக பாவத்தை விலக்குவார்கள்.

அயலானை நேசிப்பவர்கள் அவனோடு சமாதானமாக இருப்பதற்காக சண்டை சச்சரவுகளை அகற்றுவார்கள்.

நாம் இயேசுவை நேசிக்க வேண்டும்.

அவரால் நிறுவப்பட்ட தாய் திருச்சபையையும் நேசிக்க வேண்டும்.

திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களையும் நேசிக்க வேண்டும்.

திருச்சபை கிறிஸ்துவின் ஞான சரீரம்.

அதன் உறுப்பினர்களை நேசிப்பவன் இயேசுவையே நேசிக்கிறான். .

சக கிறிஸ்தவர்களோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பவன் இயேசுவோடுதான் சண்டை போடுகிறான்.

சக கிறிஸ்தவர்களோடு சமாதானமாய் இருப்பவன் 
இயேசுவோடும் சமாதானமாய் இருக்கிறான்.

நம்மில் பலருக்கு நேரிலேயோ, தொலைபேசியிலேயோ 

சந்திக்கும்போது Praise the Lord என்று பேச ஆரம்பிக்கும் பழக்கம் இருக்கிறது.

அது நல்ல பழக்கம் தான்.

ஆனாலும் அதைவிட நல்ல பழக்கம்,

"உங்களுக்கு சமாதானம்."

என்று ஆரம்பிப்பது.

உயிர்த்த இயேசுவின் சமாதானம் நம் அனைவரோடும் இருப்பதாக!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment