Wednesday, April 28, 2021

"என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."(அரு.12:45)

"என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."
(அரு.12:45)


"இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."


பொதுவாக மேடைப் பேச்சாளர்களுக்கு ஒரு சுபாவம் உண்டு.

அழுத்தமாக சொல்ல வேண்டியதை உரக்க சொல்வார்கள்.

சாதாரண குரலில் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று குரலை உயர்த்தி பேசினால் ஏதோ மிக முக்கியமான கருத்தை சொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம்.

எழுதும்போது முக்கியமான கருத்து வரும்போது கீழ் கோடிட்டு காண்பிக்கலாம்.

பேசும்போது கீழ்க் கோடிட முடியாது.

ஆகவே சொல்லப்போகும் கருத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குரலை உயர்த்தி பேசுவார்கள்.

அவ்வாறே தான் இயேசுவும் "உரக்கக் கூவிச்" சொல்கிறார்:

"என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.
45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்."

உரக்கக் கூவிச் சொல்வதற்கு இவ் வார்த்தைகளில் என்ன விசேஷம் உள்ளது?

இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்.
மக்கள் இயேசுவைத்தான் பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் கண்களில் படுவது அவர்களுக்கு உண்மை.

 ஆனால் இயேசு சொல்கிறார்:

"என்னை காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்."

அனுப்பினவர் தந்தை.

"மகனைக் காண்கிறவன் தந்தையைக் காண்கிறான்" என்றால் என்ன பொருள்?

தந்தையும் மகனும் ஒருவர்தான்.
(ஒரே கடவுள் தான்)

"Father and Son are one God ."

பரிசுத்த தமதிரித்துவத்தின் ரகசியம் நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இயேசு பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த யூத மக்களுக்கு அது புதிய செய்தி.

புதிய செய்தி அவர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு குரலை உயர்த்தி பேசினார்.

 தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்கள், ஒரே கடவுள்.

இன்றைய வசனத்தின்படி சொல்வதானால்:

மகனைக் காண்பவர்கள் தந்தையையும், தூய ஆவியையும் காண்கிறார்கள்.

மகனும், தந்தையும் ஒரே கடவுள் தான்.

மகனும், தூய ஆவியும் ஒரே கடவுள் தான்.

மகனும், தந்தையும், தூய ஆவியும் ஒரே கடவுள் தான். 

இயேசு மக்களுக்கு தெரியாத தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

மக்களைப் பொறுத்தமட்டில் இயேசு பெத்லகேமில் பிறந்து நாசரேத்து ஊரில் வளர்ந்த ஒரு மனிதன்.

தச்சன் மகன்.

ஆனால் உண்மையில் அவர் தச்சன் மகன் அல்ல. இறைமகன்.

தனது புதுமைகளாலும், செயல்களாலும் தான் இறைமகன் என்ற உண்மையை முதலில் வெளிப்படுத்திய இயேசு,

 தொடர்ந்து தனது (கடவுளின்) ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

தமதிரித்துவ ரகசியத்தை இயேசு மக்களுக்கு ஏன் வெளிப்படுத்துகிறார்?

ஏற்கனவே கடவுளைப்பற்றி மக்களுக்கு உள்ள அறிவை அதிகப்படுத்தவா?

 Is it to add to to their knowledge about God?

நிச்சயமாக இல்லை. இயேசு மக்களுக்கு தேவ சாஸ்திர பாடம் எடுக்கவில்லை.

Jesus is not teaching us theology.

இயேசு தன்னை பற்றி வெளிப்படுத்தவில்லை. தன்னை வெளிப்படுத்துகிறார்.


தன்னை பற்றி வெளிப்படுத்துவதற்கும்,

தன்னை வெளிப்படுத்துவதற்கும் பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

இயேசுவைப்பற்றி அறிவதற்கும் இயேசுவை அறிவதற்கும் உள்ள வித்தியாசம்.

இயேசுவை பற்றி அறிவது அவரைப்பற்றிய அறிவை வளர்ப்பது.

இயேசுவை அறிவது அவரை வாழ்வது.

அன்னை மரியாள் கபிரியேல் தூதரிடம் 

"நான் கணவனை அறியேனே"

 என்று சொன்னதை ஞாபகபடுத்தி கொண்டால் வித்தியாசம் புரியும்.

அவளுக்கு சூசையப்பரைப் பற்றி தெரியும், 

ஆனால் சூசையப்பரைத் தெரியாது.

இயேசு தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

எதற்கு? 

அவரை வாழ்வதற்கு.
To experience and enjoy Him.

நாம் இறைவனை அறிவது இறை அனுபவத்திற்காக.

இயேசு நாம் அவரை வாழ்வதற்காக வெளிப்படுத்தினார் என்ற உண்மையின் அடிப்படையில் நமது சிந்தனையை செலுத்தினால் ஒரு மிகப்பெரிய அனுபவ உண்மை வெளிப்படும். 


இயேசு தனது தந்தையை நோக்கி கூறுகிறார்:
"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:

நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்."
(அரு.17:21, 22)

இப்பொழுது புரிந்திருக்கும் இயேசு தன்னை நம்மிடம் ஏன் வெளிப்படுத்துகிறார் என்று.

தந்தையும் மகனும் ஒன்றாய் இருப்பது போல 

நாமும் முதலில் நமக்குள் ஒன்றாய் இருக்க வேண்டும் 
(நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி)

அடுத்து இறைவனுக்குள் அவரோடு ஒன்றாய் இருக்க வேண்டும்.
(அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி)

பரிசுத்த தமதிரித்துவத்தை நாம் அறிவது நமது அனுபவத்திலும், அனுபவிப்பதிலும் நடைபெற வேண்டும்.

We must experience and enjoy Holy Trinity in our life. That is how we are to know Him.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே ஒன்றிப்பு (Union) இருக்கும்.

இயேசுவின் விருப்பப்படி பரிசுத்த தம திரித்துவத்தை நாம் அறிய வேண்டும் 

அதாவது
 வாழவேண்டும் 

அதாவது 
திரித்துவ அன்புடன் ஒன்றித்து வாழ வேண்டும்

 அதாவது 
தம திரித்துவ இறைவனை நாம் அனுபவிக்க வேண்டும்.

"ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்." 

இது கடவுளைப் பற்றிய அறிவு.

இறை அன்பில் ஒன்றித்து வாழ்வது தம திரித்துவ அனுபவம்.

அறிவைவிட அனுபவம் தான் முக்கியம்.

அறிவு தேர்வு எழுதவும் முதல் தர மதிப்பெண் பெறவும் பயன்படும்.

அனுபவம் வாழும்.

மூவொரு இறைவனின் அன்பில் மனிதகுலம் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு தன்னை பற்றிய தமதிரித்துவ ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தினார்.

"உன்னைப்போல் உனது அயலானையும் நேசி.''

 என்ற இயேசுவின் அன்பு கட்டளைகளைக்குள் இந்த ஒன்றிப்பு வாழ்வு அடங்கி இருக்கிறது.

இது இவ்வுலகில் தம் திரித்துவத்தை வாழ்ந்து அனுபவிப்பது.

தம திரித்துவ இறைவன் நம்மை படைத்து தன்னை வெளிப்படுத்தியது இவ்வுலகில் வாழ்வதற்காக மட்டும் அல்ல.

மறு உலகில் தம திரித்துவ இறைவனோடு அன்பில் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் நம்மை படைத்தார்.


"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"

என்ற இயேசுவின் மன்றாட்டு அவருடைய படைப்பு தமதிரித்துவ அன்பிற்குள் மனுக்குலம் ஒன்றித்து வாழ வேண்டும் என்ற அவரது ஆசையை வெளிப்படுத்துகிறது.

இந்த ஒன்றிப்பு இவ்வுலகில் தொடங்கி மறு உலகில் தொடர வேண்டும்.

மறு உலகில் தொடரும் ஒன்றிப்பு வாழ்க்கையை நாம் நிலைவாழ்வு என்று அழைக்கிறோம்.

அதாவது இறைவனோடு ஒன்றித்து நித்திய காலமும் பேரின்பத்தில் வாழும் வாழ்வு.

நிலை வாழ்வின் போது நாம் இறை வாழ்வுடன் பங்கு பெறுகிறோம்.

We share in the divine life of God.


இறைவனோடு ஒன்றித்து அவரை நித்திய காலமும் அனுபவிக்கிறோம்.

We enjoy God for all eternity by living in union with Him.

பரிசுத்த தம திரித்துவத்தின் ரகசியம் நமது நிலை வாழ்வாக மாறிவிடும்.

இப்படி மாற வேண்டும் என்பதற்காகவே இயேசு தன்னைப்பற்றிய ரகசியத்தை வெளியிடுகிறார்.

ஆக இயேசு பரிசுத்த தமதிரித்துவ
ரகசியத்தை நமக்கு வெளிப்படுத்தியது இறைவனைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அல்ல.

இறை அன்பில் ஒன்றித்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் வாழ்வதற்காகத்தான்.

இறைவனை அறிவோம்.

இறைவனை வாழ்வோம்.

அன்பில் ஒன்றித்து வாழ்வோம்.


தந்தை, மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருப்பதுபோல்,

 நாமும் இறைவனுள் ஒன்றாய் இருப்போம், நித்திய காலமும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment