(அரு. 20:23)
வாரத்தின் முதல் நாள் காலையில் உயிர்த்த இயேசு அன்று மாலை அப்போஸ்தலர்களுக்கு காட்சி அளித்தார்.
இயேசுவைக் கொன்ற யூதர்களுக்குப் பயந்து சீடர்கள் அறையின் கதவை சாத்திக்கொண்டு உள்ளே உட்கார்ந்திருந்தார்கள்.
"உங்களுக்குச் சமாதானம்" என்று வாழ்த்திக் கொண்டே அவர்களுக்கு காட்சியளித்த இயேசு
உண்மையான சமாதானத்தை உலகத்தில் நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளித்தார்.
ஆதாம் செய்த பாவம் இறைவனுக்கும் மனிதனுக்கும் இதையே இருந்த சமாதானத்தை கெடுத்தது.
பாவத்திலிருந்து மனிதனை மீட்டு இழந்த சமாதானத்தை பெற்றுத் தருவதற்காகவே தந்தை இறைவன் தனது ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.
அதே நோக்கத்திற்காகத்தான் இறைமகன் இயேசு தனது அப்போஸ்தலர்களை உலகத்திற்குள் அனுப்புகிறார்.
("என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்")
நமது பாவங்களை மன்னிக்கவே இறைமகன் மனிதன் ஆனார்.
நமது பாவங்களை மன்னிக்கவே அப்போஸ்தலர்கள் அவரால் நம்மிடம் அனுப்பப்பட்டார்கள்.
"பின்பு அவர்கள்மேல் ஊதி,
"பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்."
இதே பாவமன்னிப்பை கொடுக்கும் பணியைத்தான் அப்போஸ்தலர்களுக்குப் பின் வந்த அவரது வாரிசுகளாகிய குருக்களும் செய்து வருகிறார்கள்.
குருக்களின் மிக முக்கிய பணிகள்
நமது பாவங்களை மன்னிப்பது,
நமக்காக திருப்பலியை நிறைவேற்றுவது.
திருப்பலியின் ஆன்மீக பலன்களை நாம் பெறவேண்டுமானால் நமது ஆன்மா பாவமில்லாமல் இருக்க வேண்டும்.
பாவ நிலையில் நாம் பங்கு கொள்ளும் திருப்பலியில் நமக்கு எந்த பயனும் இல்லை.
பாவ நிலையோடு திருவிருந்து அருந்தினால் நாம் மற்றொரு பாவம் கட்டிக் கொள்கிறோம்.
குருக்களின் பெருமை தினமும் எத்தனை திருப்பலிகள் நிறைவேற்றுகிறார்கள் என்பதில் அல்ல,
தினமும் எத்தனை பேருக்கு பாவமன்னிப்பு அளிக்கிறார்கள் என்பதில்தான் அடங்கி இருக்கிறது.
வியாபாரிகளில் இரண்டு வகையினர் உண்டு.
ஒரு வகையினர் கடையில் அமர்ந்து கொண்டு வந்தவர்களுக்கு பொருட்களை விற்பார்கள்.
மற்றொரு வகையினர் பொருட்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பார்கள்.
அதேபோல ஆன்மீகப் பணி செய்பவர்களிலும் இரண்டு வகையினர் உண்டு.
ஒரு வகையினர் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்களை தேடி வருபவர்களுக்கு ஆன்மீக ஆலோசனை கொடுப்பார்கள்.
மற்றொரு வகையினர் ஆன்மாக்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் தேடிச்சென்று ஆன்மீக ஆலோசனைகள் கொடுப்பார்கள்.
இரண்டாவது வகையினர் இயேசுவைப் போல செயல்படுகிறார்கள்.
இயேசுவே யூதேயா, கலிலேயா நாடுகளில் ஊர் ஊராகச் சென்று, வீடுகளுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்.
சக்கேயு என்னும் தனி ஆளையும் பிடித்து அவனது வீட்டிற்கும் அவராவே (uninvited) சென்று நற்செய்தி அறிவித்தார்.
நமது குருக்களும் இதே முறையைப் பின்பற்றினால் ஆன்மீக அறுவடை அதிகமாக இருக்கும்.
அதிக பேருடைய பாவங்களை மன்னிக்க முடியும்.
அநேகர் மத்தியில் சமாதானத்தை வளர்க்க முடியும்.
குருக்களின் ஒரே பணி இறை இயேசு விரும்பும் ஆன்மீக சமாதானத்தை மக்களிடையே ஏற்படுத்துவதுதான்.
மனதில் சமாதானத்தை இழந்து சங்கடப்படுவோர் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது இழந்த சமாதானத்தை திரும்பப் பெறுவர்.
"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்."
பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உண்டு.
அந்த அதிகாரத்தை நமது நலன் கருதி குருக்களுக்கு அளித்திருக்கிறார்.
சில அதிகப் பிரசங்கிகள்,
"எங்கள் பாவங்களை கடவுளிடமே நேரடியாக சொல்லிக் கொள்வோம்."
என்று சொல்லுகிறார்கள்.
முதலில் நமது பாவங்களை கடவுளிடம் சொல்லித்தான் அவற்றிற்காக மனஸ்தாபப் படவேண்டும்.
மனஸ்தாபப்பட்ட பிறகுதான் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
ஆகவே கடவுளிடம் சொல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.
இயேசுவின் பிரதிநிதிகளான
நாம் குருக்களிடம் பாவங்களை சங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெறவேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.
இயேசுவின் திட்டத்தை செயல்புரிய விரும்பாதவர்கள்தான்,
ஏதாவது சாக்குப்போக்கு சொல்லுவார்கள்.
நாம் கிறிஸ்தவர்கள் என்று நம்மை நாமே அழைத்துக் கொள்ள வேண்டுமானால்
கிறிஸ்துவின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், அரைகுறையாக அல்ல.
ஆகவே குருக்களும் பாவசங்கீர்த்தனம் கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விசுவாசிகளும் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment