Sunday, April 25, 2021

"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன."(அரு.10:3)

"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன."
(அரு.10:3)

தன்னை நல்ல ஆயனாகவும் தன்னை பின்பற்றுபவர்களை தனது ஆடுகளாகவும் உருவகப்படுத்தும் நமது ஆண்டவர் 

ஆயனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள உறவின் தன்மையை விளக்குவதன்மூலம் 

தனக்கும் தனது சீடர்களுக்கும் இடையில் உள்ள உறவின் தன்மையை விளக்குகிறார்.

ஆடுகளுக்கு தங்கள் ஆயனது குரல் நன்கு தெரியும். ஏனெனில் அவர் எப்பொழுதும் அவைகளோடு இருக்கிறார்.

இருப்பது மட்டுமல்ல அவைகளோடு உரையாடிக்கொண்டே கொண்டே இருக்கிறார்.

உரையாடல் இல்லாவிட்டால் உறவு வளராது. உரையாடும்போது வார்த்தைகள் மட்டுமல்ல, வார்த்தைகளின் பிறப்பிடமாகிய நெஞ்சங்களும் இணைகின்றன.

நெஞ்சங்களின் இணைப்பில் தான் உறவு வளர்கிறது.

நெஞ்சங்களின் இணைப்பின் அளவிற்கு ஏற்ப உறவின் நெருக்கமும் இருக்கும்.

வகுப்பில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நிலையிலுள்ள உரையாடலே பாடம் நடத்துதல்.

வாயைத் திறக்காமலே ஆசிரியர் பாடம் நடத்த முடியுமா?

பேசாமலே ஆசிரியரிடம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க முடியுமா? அல்லது ஆசிரியரது வினாக்களுக்கு பதில் சொல்லத்தான் முடியுமா?

ஆசிரியர் தன் முகத்தை காண்பிக்காவிட்டாலும் அவரது குரலிலிருந்து மாணவர்கள் ஆசிரியரை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

நமது உள்ளத்தில் உறையும் கடவுளோடு எப்போதும் உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இறைவனோடு நாம் செய்யும் உரையாடலுக்குத்தான் ஜெபம் என்று பெயர்.

உரையாடல் என்றாலே இருவர் ஒருவரோடு ஒருவர் கருத்து பறிமாறி கொண்டிருப்பது தான்.

கடவுளை பேச விடாமல் நாம் மட்டும் பேசிக்கொண்டிருப்பது செபம் அல்ல.

கடவுளோடு பேச வார்த்தைகள் தேவையில்லை. எண்ணங்கள் போதும்.

நாம் நமது எண்ணங்களை கடவுளிடம் தெரிவிக்கும்போது அவரும் அவரது எண்ணங்களை உள் உணர்வுகள் மூலம் (Inspirations) நமக்கு தெரிவிப்பார்.

கடவுள் தரும் உள் உணர்வுகளை தியானிக்க ஆரம்பித்தால் கடவுள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார்.

ஒரு நிலைப்பட்ட மனதோடு இறைவனோடு உரையாடும்போது கடவுள் நம்மோடு பேசுவது நமக்கு புரியும்.

 இதைத்தான் நமது ஆண்டவர்
"ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன." என்கிறார்.

ஆயனுடைய குரலை ஆடுகள் தெரிந்துகொள்ளுவது போலவே 

ஆண்டவரது குரலையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

 இதற்கு ஆண்டவரோடு உரையாடுவது தொடர் பழக்கமாக இருக்க வேண்டும்.

எப்படி வகுப்பு உரையாடலில் மாணவர்கள் தங்களது பேச்சைவிட ஆசிரியரது பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ

அதே போல் தான் ஆண்டவரோடு உரையாடும்போது நமது பேச்சைவிட ஆண்டவரது பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நம்மவர்களில் அநேகர் ஆண்டவரை பேசவிடாமல் தாங்களே மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள்  ஆண்டவர் பேசுவதை பற்றி கவலை பட மாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்த மட்டில் ஆண்டவர் அவர்கள்  சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

ஆடுகள் ஆயனது குரலுக்கு செவிமடுப்பது மட்டுமல்ல அதன்படியே நடக்கின்றன.

 நாமும் ஆண்டவரது குரலைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்நாளில் நடக்கவேண்டும்.



"அந்நியனையோ அவைபின்தொடராமல், அவனை விட்டு ஓடிப்போகும். ஏனெனில், அந்நியருடைய குரலை அவை அறிந்துகொள்வதில்லை."
(அரு.10:5)

ஆட்டு மந்தைக்கு சொந்தமான உண்மையான ஆடுகள் அவைகளின் ஆயனைத் தவிர

சம்பந்தமே இல்லாத அந்நியன் வந்து அழைத்தால் அவன் பின்னால் போகாது.

இயேசுவின் உண்மையான சீடர்களுக்கு இயேசுவின் குரலுக்கும் அந்நியர்களின் குரலுக்கும் வித்தியாசம் தெரியும்.

அவர்கள் அந்நியர்களின் பின்னால் போக மாட்டார்கள்.

இயேசுவின் சீடர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் அந்நியரின் பின்னால் சென்றால் அவர்கள் மந்தையின் உண்மையான ஆடுகள் அல்ல.

கத்தோலிக்கர்கள் என்று தங்களையே சொல்லிக்கொள்பவர்கள்

 பிரிவினை சபையார் குரல் கேட்டு அவர்கள் பின்னால் சென்று அவர்கள் சொல்படி நடந்தால் அவர்கள் உண்மையான கத்தோலிக்கர்கள் அல்ல.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலி கண்டுவிட்டு மாலையில் பிரிவினை சபையாரின் ஆவிக்குரிய கூட்டங்களுக்கு செல்பவர்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

உண்மையான கிறிஸ்தவன் இயேசுவின் குரலுக்கு மட்டுமே செவி கொடுப்பான்.

 இயேசுவின் பெயரால் ஏமாற்றுபவர்களின் குரலுக்கு செவி கொடுக்கமாட்டான்.

நமது மந்தைக்கும் நமது ஆயனுக்கும் உண்மை உள்ளவர்களாக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment